மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெண்களுக்கு நாம் காட்டுகின்ற வழி என்ன?

தேமொழி

Mar 16, 2019

siragu pengalukku1

பொள்ளாச்சி நிகழ்வு ….அதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிப்பு என்றால் …. ஏன்?

இதுதான் இந்த நிகழ்வில் அதிர்ச்சி தரும் ஓர் உண்மை.

தன்மீது நிகழ்த்தப்பட்ட கொடுமையான வன்முறை இது. இதற்காக குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும், தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் இத்தனை பெண்களுக்குத் தோன்றவில்லை.

இது காலம் காலமாக பாலியல் குற்றம் நிகழ்ந்தால் அது பெண்ணின் தவறு என்று குற்றம் சாட்டுவதால் வரும் விளைவு.

இது காலம் காலமாக பாலியல் குற்றம் நிகழ்ந்தால் ஆண்கள் கண்டிக்கப்படாமல் தண்டிக்கப்படாமல் விட்டதால் வரும் விளைவு.

இது காலம் காலமாக பாலியல் குற்றம் நிகழ்ந்தால் அதற்கான தண்டனையை பெண்களின் வாழ்வு பாதிக்கப்படுவதன் மூலம் சமூகம் கட்டமைத்து வைத்துவிட்டதால் வரும் விளைவு.

மீண்டும் மீண்டும் பெண்களின் தோற்றம் நடத்தை இவை காரணம் எனக் கூறுபவர்கள், மீண்டும் மீண்டும் பெண்கள் எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறத் தயங்காதவர்கள் தங்கள் பொறுப்பு குறித்தும், அவர்களுக்கு சமூகத்தில் உள்ள கடமை குறித்தும் என்னதான் நினைக்கிறார்கள்?

இதை அரசியல் நோக்கில் எப்படி வாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணும் நோக்கை முதலில் அரசியல்வாதிகளும் கைவிட வேண்டும்.

siragu pengalukku4

அது போன்றே பெண்களை ஆணாதிக்க எண்ணம் கொண்டோர் இதை வாய்ப்பாக எடுத்துக் கொண்டு அறிவுரை கூறத் துவங்குவதும் நிலைமையை சீர்திருத்த உதவப் போவதில்லை.

“பெண்களை கட்டுப்பாட்டுடன் வளர்க்கும் பெற்றோர், தங்கள் மகன்களின் போக்கு குறித்து அக்கறை காட்டுவதில்லை. பெண்களை வளர்ப்பது போலவே ஆண்களையும் கட்டுப்பாட்டுடன் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்,” என்று ஒரு நாட்டின் சுதந்திர தின நாளில் இந்திய பிரதமர் இது குறித்து மக்களுக்கு நினைவூட்டத் தேவையான அளவில் இந்தியா உள்ளது என்பது வெட்கத்திற்குரிய நிலை.

பெண்களை தமக்குச் சமமாக நோக்காமல் கற்கால மனிதர்கள் போலபாலின வேட்கைக்கு வடிகாலாக நினைப்பதுதான் இந்திய கலாச்சாரம் என்றால் அயல்நாட்டில் பல்கலைக்கழகங்கள் இந்திய ஆண்களின் விண்ணப்பங்களை அதே கோணத்துடன் பரிசீலிக்கும் பொழுது ஏன் நமக்குக் கசக்கிறது?

அந்நிய மாநிலத்துப் பெண்ணும் தமிழகத்தில் தனியே செல்ல முடியாத நிலை,

தமிழகத்துப் பெண்களுமே கணக்கு வழக்கின்றி பாதிக்கப்படும் நிலை,

மாற்றுத்திறனாளி குழந்தையையும் விட்டு வைக்காத நிலை,

ஒடுக்கப்பட்ட இனப்பெண்கள் என்றாலோ எளிதான இலக்குக்கள் என்ற மனப்பான்மை தமிழகத்தில் இருந்தால்…

இதன் காரணம் தமிழக ஆண்களுக்கும் பெண்களுக்கும் பள்ளியில் பாலியல் குறித்த பாடங்கள் சொல்லிக் கொடுக்காத குற்றம் என்றுதான் தெரிகிறது.

பாலியல் குறித்து இனி மறைத்து மறைத்துப் பேசும் நிலை மாறவேண்டும். எது மக்களுக்கு நிலைமையின் தீவிரத்தைப் புரிய வைக்கும்? பெண்களும் மனித இனம்தான் என்பதை ஆண்களுக்கு உணர்த்தும் வகையில் மீம்ஸ் தயாரித்து வாட்சப்பில் பகிர்ந்து உண்மையான தமிழனாக இருந்தால் பகிரவும் என்று சொல்ல வேண்டும் நிலை வரவேண்டுமோ எனத் தெரியவில்லை.

இதை மாற்ற என்ன திட்டம் உள்ளது மக்களிடம்? இளைய தலைமுறையை எப்படி வழி நடத்தப் போகிறார்கள்?

உலக அளவில் பெண்கள் வரவே அஞ்சும் இடமாக இந்தியா கருதப்படாமல் இருக்க அரசிடம்தான் என்ன திட்டம் உள்ளது?

அடுத்த கட்டத்தை நோக்கி ஆக்கப்பூர்வமாக இதுவரை எதுவும் நடந்ததாகத் தெரியாமல் இருப்பதும் ஒரு வேதனை.

இதனைக் கண்டிக்கிறேன் என்று நம்மில் பலர் கூறிக்கொண்டிருப்பதற்கும் மேலாக வேறேதேனும் செய்ய வேண்டும் என்பது மட்டும் நிச்சயம்.

பெண்களுக்கு நாம் காட்டுகின்ற வழி என்ன?

தேமொழி

செயலாளர் தமிழ் மரபு அறக்கட்டளை


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெண்களுக்கு நாம் காட்டுகின்ற வழி என்ன?”

அதிகம் படித்தது