மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெண்ணியமும்,பெண் கவிதைகளும் (பாகம் -2) -கட்டுரை

ஆச்சாரி

May 1, 2013

தமிழில் முதன் முதலில் எழுந்த புதினமான வேதநாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ (1879) தொடர்ந்து வந்த மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் (1898) இரண்டும் பெண் கல்வி, விதவை மறுமணம் முதலியவற்றைப் பேசுகின்றன.

பெண் விடுதலை குறித்து எழுந்த சீர்திருத்த இலக்கியங்களில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் பெண் என்பவள் ஆணின் போகப் பொருள் என்பதை மறுத்து ஆணின் பாதி என்பதை மாற்றி ‘பெண்ணினம்’ தன்னை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவி செய்தது. பெரியாரை ‘தமிழ் இலக்கியப் பெண்ணிய முன்னோடி’ எனக் கூறுகிறார்கள்.

சங்க காலத்தையும், இடைக்காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பெண் கல்வியின் சதவீதத்தில் பெரும்பான்மை உடையது தற்காலம் என்றாலும் மற்றொரு புறம் ஒரு சாராரிடம் ஒரு பகுதியினரிடம் விழிப்புணர்வு இல்லை எனலாம்.

கல்வியில்லாத பெண்கள்
களர்நிலம்! அந்நிலத்தில்
புல் விளைந்திடலாம்! நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை   (கு.வி.ப.69)

“கல்வியறிவு கொண்டுள்ள பெண்கள் நன்றாகத் திருத்தம் செய்யப் பெற்ற கழனியை ஒப்பார்”

என்று பாவேந்தர் பெண் கல்வியைச் சிறப்பித்துப் பாடினார்.
பெண் கல்வியைப்பற்றிப் பல கவிஞர்கள் கனவோடு பாடினார்கள். அக்கனவு 50 சதவீதம் நிறைவேறினாலும், 50 சதவீதம் கனவாகவே இருக்கிறது. அதற்குக் காரணம் கிராமப்புறப் பெண்களின் கல்வி நிலையானது, சமுதாயத்தில் மிக மோசமாக உள்ளது. கட்டாந்தரையாகக் கிடக்கின்றது. இக்காலக் கிராமத்துப் பெண்களுக்கு ஆரம்பக் கல்வி சிறப்பாக உள்ளது. உயர்கல்வி எட்டாக் கனியாக உள்ளது.

‘பெண்ணியம்’ என்ற சொல் சமூகத்தில் தவறாகப் புரிந்துகொண்ட நிலையில் வாழ்வியலிலிருந்து விலகிவிடுவதற்கான அபாய நிலை ஏற்படுகிறது. அந்த அபாயத்தைப் போக்கும்படி பல பெண் கவிஞர்கள் தங்களது தெளிவான கருத்துக்களைக் கவிதைகள் மூலம் தடம் பதித்துள்ளன.

பெண்ணுரிமை குறித்த பெண்ணியச் சிந்தனைகள் இன்று உலகமெங்கிலும் பரவி நிற்கின்றன. பெண்ணியத்தைச் செயல் வடிவ மாக்கிட விழையும் பெண் புதுக்கவிஞர்களாக ஏறத்தாழ 60-க்கும் மேற்பட்ட பெண் படைப்பாளர்கள் அடையாளம் காட்டியுள்ளார்கள்.
இன்றைய நிலையில் குடும்பம், சமூகம் போன்றவற்றில் சமத்துவம், விடுதலை, மதிப்பு போன்றவற்றைப் பெற்றுத் தங்கள் வாழ்வைச் சுயமாக நிர்ணயித்துக் கொள்ளும் ஆற்றலை வளர்ப்பதைப் பெண்ணியம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.             .

பெண் கவிஞர்கள் காதல், பெண் சிசுக் கொலை, வேலையில்லாத் திண்டாட்டம், மனிதம், வரதட்சணை, நடப்பியல் கூறுகளைப் படம் பிடித்துக் காட்டுவதில் வல்லவர்களாக உள்ளார்கள்.
‘பெண் என்பவள் மென்மையானவள்’ என்று கூறுவது அவளுக்கு எதிரான ஆயுதம். பெண்களுக்கு எல்லா வகையிலும் உரிமையுள்ளது. தங்கள் கல்வி நிலை, திருமணம், வேலை இவற்றைத் தேர்வு செய்வதில் தெளிவாக இருக்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு தங்களின் கனவுகள், ஆசைகள் நிறைவேறாமல் போகும் போது,

என் பெயரே மறந்து போனேன்
என் மணவிழாவில்
நான் தொலைந்து போனேன்
ஆனாலும் யாருமே என்னை
தேடவேயில்லை.

ஆணாதிக்க சமூகத்தில் தொலைந்து போகும் பெண்ணின் அவலத்தைக் கவிஞர் தாமரை அழுத்தமாகக் கூறியுள்ளார்.

நீந்த தெரியாவிட்டால் என்ன?
வெள்ளம் சொல்லித்தரும்
வா!

என்று ஆணாதிக்க அடிமைகளால் ஒடுக்கப்பட்ட பெண்களின் கைவிலங்குகளை உடைத்தெறியும் சப்தமாக உள்ளது கவிஞர் தாமரையின் கவிதை.                                 .

மௌனம்தான் பெண்; அவளது சிக்கல்களும் சிந்தனைகளும் மொழியின் அடி ஆழத்தில் மௌனமாய் உறைந்து கிடக்கின்றன. உதடுகள் பிரிந்து பேச முடியாமல் மனதில் கட்டுண்டு கிடக்கும் பெண்ணின் உணர்வுகள் மொழியில் தங்களைப் பதிவு செய்துகொள்ளும் உரிமையை இழந்து நிற்கின்றன. ஒரு ஆணுக்குப் பெண் தொண்டு செய்வது என்பது கடமை. ஆனால் அடிமைகளாக வளர்த்தெடுக்கப்படுவதை ‘தேடல்’ என்ற கவிதையில்,

அர்த்த நாரீஸ்வரனின்
அழகிய பாதியாய்
அமர்ந்திருப்பவள்
அவனுள் அடங்கிப்போனது
போல்தான் நாமும்
ஏற்றி வைக்கப்பட்டதென்னவோ
உச்சாணிக் கொம்பில்
உள்ளதென்னவோ துணை மந்திரியாய்

 

இப்படிப் பெருமை பாராட்டப்பட்டுச் சிறுமைப்படுத்தப்படும் பெண் குடும்ப அமைப்பில் இவ்வாறாக இருப்பதைக் கவிஞர் கனிமொழி கவிதையிலிருந்து அறியலாம்.                       .

இன்றைய சூழ்நிலையில் பல குடும்பங்களில் பெண்களைப் பெரும் சுமையாகக் கருதும் போக்கே  நிலவுகின்றன. இதன் இறுதிக் கட்ட நிகழ்வே, நமது மானுடத்தை உலுக்கி எடுத்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் பெண் சிசுக் கொலை என்ற சமுதாய சீர்கேடு ஆகும். இச்சீர்கேட்டின் தாக்கம்பற்றிக் கனிமொழி குறிப்பிடுகையில்,
பெண் குழந்தைகள் இருந்தால், நாளை அவர்களுக்குத் திருமணம், செய்யவேண்டிய சீர், வரதட்சணை இவற்றால் ஏற்படப் போகும் பொருளாதார நெருக்கடிகள் போன்றவற்றை நினைத்தே நமது குடும்பங்களும் பெண் குழந்தை என்றாலே நிராகரிக்கின்றன.

கருவின் இனப் பரிசோதனை செய்து, அதைக் கலைக்கவும் செய்யும் சில மையங்கள். இதை 50 ரூபாய் முதலீடு செய்யுங்கள் 50,000 ரூபாய் மிச்சப் படுத்துங்கள் என்று அறிவுபூர்வமான தொழில் முதலீடு போல விளம்பரம் செய்கின்றனர்.                     .

அகிம்சா மூர்த்திகளையும், வீதிக்கு ஆயிரம் பெண் தெய்வங்களையும் கொண்ட நம் அன்னை இந்தியாவில்தான் பெண் குழந்தையா? கொன்று போடு என்ற நிலை நிலவுகின்றதையும் மன வேதனையுடன் வெளிப்படுத்துகிறார்.

இந்நிலையில் நம் சமூகம் இருந்தால், மக்கள் தொகையில் எண்ணிக்கை குறைக்கப்பட்டு ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புண்டு. இரண்டு ஆண்களுக்கு ஒரு பெண் என்ற நிலையில் பெண்ணுக்காகப் போட்டி அதிகமாகி, அவளது நிலையும் மதிப்பும் உயரலாம். எனவே இச்சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்ணினத்தை மதித்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது தெளிவாகிறது.                      .

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு குறிக்கோள் இருத்தல் என்பது அவசியமாகிறது. பெண்கள் இச்சமூகத்தில் தங்கள் காலில் நிற்பது என்பதுதான் அவர்களின் எதிர்காலத்தில் ஏற்பு உடையது. அதன்படி பெண்கள் கல்வியில் உயர்ந்தாலும்

இலக்கிலாமல்
அம்புகளை
எய்து
இற்று விழுந்தன
நம்பிக்கைகள்

வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படுவதையும், அம்சப் பிரியா விளக்கியுள்ளார்.
பெண்களாகப் பிறந்துவிட்டு பெண்களிடமே வரதட்சணை வாங்குவது என்பது வேடிக்கையான ஒன்று.

ரோஜாக்களே
இதழ்களைக் கொட்டி
தேய்ந்து போவதைவிட
இதழ்களோடு காய்ந்து
போவது மேல்

 

பணமாக அல்லாமல்
மணமாக முடிக்கும்
ஆண்களை மட்டும்
பெற்றெடுங்கள்
பெண்களே

என்று கவிஞர் தீபா வரதட்சணையால் பெண்களுக்கு ஏற்படும் அவலத்தைச் சுட்டிக் காட்டுகிறார். மேலும் வரதட்சணை வாங்குதல் குற்றம், கொடுப்பது குற்றம் என்று சட்டம் பிறப்பித்து, தகுந்த தண்டனையை அளித்தால் மட்டுமே பெண்களைக் காப்பாற்ற முடியும். அதற்கான அரசு சட்டம் பிறப்பிக்க வேண்டும்.                        .

புதுக்கவிதை கட்டமைப்பைப் பெற்றுக் கொண்டு பெண் கவிஞர்களின் கவிதைகளின் கருத்துக்கள் புது வெள்ளமாய்ப் பொங்கி வருகிறது. பழம் மரபுகள், சடங்குகள் வாழ்வியல் முறைகளை விளக்கும் புதிய புரட்சியுடன் கவிதைகள் அமைந்துள்ளன. இருப்பினும் பெண் கவிஞர்களின் கவிதையில் அவ நம்பிக்கையின் குரலே ஒலிக்கிறது.
பெண் பொருளாதாரச் சுதந்திரம் பெற்றால் பெண்ணுரிமை சாத்தியம், அதற்குப் பெண் எல்லாமாக மாற வேண்டும். அதே போல் பெண் ‘பேதை’ மென்மையானவள் என்று சில வேளைகளில்தான் ஈடுபட முடியும் என்ற எண்ணங்களை மாற்ற வேண்டும்.
பெண் முன்னேற்றத்திற்கு சமூகம் தடையாக இல்லாமல் அவர்கள் வளர்ச்சியை பெருமையோடு வரவேற்க வேண்டும்.‘பெண்ணியம்’ என்பது ஆண்களை எதிர்ப்பதும், வீட்டு வேலை செய்யாமல் இருப்பதும், ஆண்களை விட மேலோங்கி இருப்பதும், என்று எப்படி, எப்படியோ புரிந்துகொள்கிறார்கள்.

மேலும் ஆண், பெண் இருவரும் சமம் என்பதும் தவறான கருத்து, ஆண், பெண் இருவரும் தங்களது சுதந்திர உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் சுதந்திரமாக அவரவர் எண்ணங்களுக்குத் தகுந்தாற்போல சமூகப் பிரச்சினைகளுக்காகத் தீர்வு காண்பதற்குப் போராட வேண்டும். சமூக நலனுக்காக என்ன செய்ய வேண்டும்? என்பதில் ஆணுக்கு ஒரு பெண் தூண்டுகோலாக இருக்க வேண்டும்.

பெண்ணடிமை தீரும் மட்டும்
பேசுந் திரு நாட்டில்
மண்ணடிமை தீர்தல் முயற்கொம்பேஎன்ற பாவேந்தரின் கூற்றை நினைவில்கொண்டு பெண்ணடிமை நீக்கிப் பெண்களைக் காப்போமாக.

Create a smartphone contract smartphone monitoring creates friction when the an imaginative read teen feels like they can’t do anything right, when they don’t understand the rules, and when they feel like they don’t know what is and is not allowed

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “பெண்ணியமும்,பெண் கவிதைகளும் (பாகம் -2) -கட்டுரை”
  1. susila durai says:

    All women like to live with freedom. But someone else get that liberty, many of them couldn’t get it, that’s true in our country. But I think, in future all women will get that opportunity

    Thankyou,.

அதிகம் படித்தது