மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெண்ணும், இன்றைய சமுதாயமும்! – மீள்பதிவு

வித்யாசாகர்

May 23, 2015

siragu women-1
இந்த 21 -ம் நூற்றாண்டில், இந்தியா பல முனைகளிலும் முன்னேற்றமடைந்து விட்டது, விரைவில் இந்திய தேசம் பெரிய வல்லரசாகி விடும் என இறுமாப்போடு மார்தட்டிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், தேசத்தின் சரிபாதி மக்களான பெண்களின் நிலை என்ன என்பது கூர்ந்து ஆராயப்பட வேண்டிய ஒன்று.

சமீபத்தில் டிரஸ்ட் லா(Trust Law) என்ற உலகம் தழுவிய பெண்களுக்கான தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய கணிப்பில் ஒட்டு மொத்த உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது (4 வது) இடத்தில் உள்ளது என அறிவித்துள்ளது. இந்த செய்தியை படித்ததும் வேதனை அடைவதா, வெட்கம் கொள்வதா, விரக்தி அடைவதா அல்லது பெரும்பான்மையானோரைப் போல் கண்ணை மூடிக் கொண்டு மறுப்பு தெரிவித்து விடலாமா என தெரியவில்லை. டிரஸ்ட் லா(Trust Law) இந்த முடிவிற்கு வர காரணங்கள், பரவலாக இந்தியாவில் நடக்கும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், கலாச்சார ரீதியாக பெண்கள் ஒடுக்கப்படுவது மற்றும் பெண்கள் கடத்தி விற்கப்படுவது என அறிவித்துள்ளது. மேலோட்டமாக பார்த்தால் இதெல்லாம் கிடையாது என மறுக்க தோன்றும். ஆனால் ஆதாரப்பூர்வமான சான்றுகள் நம்மை திகைக்க வைக்கின்றன.

முன்னால் மத்திய உள் துறை செயலாளர்(union Home Secretary) மதுகர் குப்தா ஓர் அறிக்கையில், 2009 -ம் ஆண்டு மட்டும் கிட்ட தட்ட 10 கோடி பேர், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார். பத்து கோடி பேர்? எண்ணிப் பார்க்கவே மலைப்பாக உள்ளது. கடத்தப்படும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இந்திய மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) 2009 -ம் ஆண்டு இந்தியாவில் 30 இலட்சம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர் என்றும் அவர்களில் 40 சதவிகிதம் பேர் குழந்தைகள் எனவும் தெரிவித்துள்ளது. இவ்வாறான ஆதாரங்கள் கையில் இருந்தும் இந்திய அரசோ, சட்ட ஒழுங்குத் துறையோ இவற்றை பற்றி எல்லாம் கவலைப் படுவதே இல்லை. இவர்களின் போக்கு பெரும்பாலான அரசியல் வாதிகளுக்கும், சட்ட ஒழுங்கு துறையினருக்கும் இதனால் பெரும் லாபம் கிடைக்கிறதோ என நம்மை கேள்வி எழுப்ப வைக்கிறது.

சராசரிப்பெண்:

இவற்றை எல்லாம் செய்திகளிலும், ஊடகங்களிலும் படிக்கும் பொழுது இவையெல்லாம் நாட்டின் எங்கோ ஒரு மூலையில் யாருக்கோ நடக்கிறது என்று உச்சுக் கொட்டி விட்டு நகரும் சராசரி பெண்ணின் நிலை தான் என்ன? பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளை பெண்ணாக இருப்பின் கொன்று விடுமாறு உத்தரவிடும் கணவனை நாடி தொண்டு செய்து அவனுக்கு அடுத்த பிள்ளையும் பெற்றுத் தரும் நிலையில் தான் பெரும்பாலான இந்திய பெண்கள் இன்றும் உள்ளனர். இது ஏதோ கிராமத்தில் எங்கோ நடப்பது, இது பழங்கதை, காலம் மாறிவிட்டது என சப்பைக் கட்டு கட்டுபவர்களுக்காக ஒரு விசயம் சொல்கிறோம்.பெண் ஒருவர் கருத்தரித்து இரண்டாவது பெண் என்று தெரிந்ததும் கணவனின் மிரட்டலால் கட்டாயக் கருக்கலைப்புக்கு உடன்பட்டாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இது நடந்தது இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் இல்லை. படித்து பட்டம் பெற்று ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து, இந்தியாவில் சாதாரண குடிமகன் தன் வாழ் நாள் முழுவதும் உழைத்தாலும் ஈட்ட முடியாத தொகையை, குளிர் சாதன வசதி உள்ள அறையில் அமர்ந்து ஒரே மாதத்தில் ஈட்டும் அமெரிக்க வாழ் இந்திய குடிமகன் தான் இதற்கு காரணம்.

இன்று நம் நாட்டில் வீட்டிற்கு வெளியே வேலைக்கு சென்று பொருள் ஈட்டும் குடும்பப் பெண் ஒருவரின் நிலையை எண்ணிப் பாருங்கள். வீட்டில் காலை முதல் இரவு வரை வேலைக்கு செல்லாத குடும்பப் பெண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் கவனிப்பது இன்றும் முழுமையாக இவர்கள் பொறுப்புதான். நகரங்களில் ஒரு சிலரால் உதவிக்கு வீட்டு வேலைகளை கவனிப்பதற்கு ஆட்களை நியமித்துக்கொள்ள முடிகிறது என்றாலும் பெரும்பாலான வீடுகளில் பணத்தட்டுப்பாட்டின் காரணமாக இது சாத்தியப்படாது. எத்தனை ஆண்கள் வீட்டில் பெண்களுக்கு ஈடாக வேலைப் பளுவை பகிர்ந்து கொள்ள இறங்கி வருகிறார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.

இந்திய திருநாட்டில் இன்றும் வழக்கத்தில் உள்ள வரதட்சினை முறை, பெண் பார்க்கும் படலம், பெண்ணுக்கு தந்தையின் சொத்தில் சம உரிமை உண்டு என்று சட்டம் இயற்றிய பின் திருமணத்திற்கு முன்பே முத்திரைத் தாள்களில்(legal stamp papers) பெண்ணிடம் கையொப்பம் வாங்கி விடுவது, பள்ளி கல்லூரி மற்றும் வேலை இடங்களில் ஆண்களின் கேலிப் பொருளாக நடத்தப்படுவதை பொறுத்துக் கொள்வது, புகுந்த வீட்டில் அடங்கி ஒடுங்கி நடந்து கொள்வது, புகுந்த வீட்டின் நடைமுறைக்கு ஏற்ப தன் பழக்கவழக்கங்களை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்வது என்று ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் ஏதோ ஒரு கட்டத்தில் அடக்கு முறைக்கு உட்பட்டதாகவே உள்ளது.

இன்று பெண்ணடிமைத்தனம் என்பது நடைமுறையில் இல்லை எனக் கூற துணிவுள்ள ஒவ்வொருவருக்கும் எனது சவால் – இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளில் ஏதாவது ஒன்றை தன் வாழ்வில் எதிர்கொள்ளாத பெண் ஒருவரை அடையாளம் காட்ட கண்டிப்பாக இயலாது.

பாதுகாப்பின்மையும், அதன் பின்விளைவுகளும்:

இன்றும் நம் ஊர்களில் 50 வயது அம்மாவும் 18 வயது அக்காவும் துணைக்கு 8 வயது பையனை அழைத்துச் செல்வது என்பது பொதுவான விடயமாக உள்ளது. இரவில் பெண்ணால் தனியாக வெளியே செல்ல முடிவதில்லை. பகல் நேரங்களிலும் பெண்கள் கூட்ட நெருக்கடி இல்லாத இடங்களுக்கு தனியாக செல்ல அச்சம் கொண்ட நிலையில் தான் உள்ளார்கள். இதனால் பெண்கள் ஆண்களை சார்ந்து வாழும் நிலைக்கு இன்றும் தள்ளப்படுகிறார்கள். ஒன்று வெளி விவகாரங்களை கவனிக்க செல்லும் பொழுது ஒரு ஆண் துணையை நாடுகிறார்கள் அல்லது எதற்கு வம்பு என்று வீட்டிலேயே முடங்கி விடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் நமது கலாச்சார போர்வை என சொல்லவேண்டும்.

வயதிற்கு வந்த பெண் ஓர் ஆணுடன் சரளமாக பேசிப் பழக நமது சமுதாயம் அனுமதிப்பதில்லை. அதையும் மீறி நெருங்கி பழகி விட்டால் அவளுக்கு ‘கெட்டுப் போனவள்’ என்ற முத்திரை குத்தப்படுகிறது. அந்த முத்திரையுடன் அவள் வாழ்நாள் முழுவதும் அல்லல் பட வேண்டும். இந்த அவதூறில் இருந்து தம் பெண்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி, கல்லூரி அல்லாமல் வேறு எங்கும் தம் பெண்களை தனியே செல்ல அனுமதிப்பதில்லை. இல்லை என்று மறுப்பவர்கள், எத்தனை பருவப் பெண்கள் வங்கிக்கு சென்று வருவது, தொலைபேசி மற்றும் மின்சார கட்டணங்களை கட்டுவது, பெற்றோரின் வியாபாரத்தை வெளியில் சென்று வார இறுதிநாட்களில் கவனித்துக் கொள்வது, வீட்டில் பழுதடைந்த பொருட்களை கடைக்கு எடுத்துச் சென்று சரி செய்து வருவது போன்ற அன்றாட அடிப்படை வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என எண்ணிப்பார்க்க வேண்டும். இவை அனைத்தும் வீட்டில் பருவம் வந்த ஆண்பிள்ளை இருந்தால் அவனிடம் ஒப்படைக்கப்படும் அன்றாட வேலைகள்.

இதனால் இருதலைக் கொள்ளியாய் பெண் பாதிக்கப்படுகிறாள். ஒருபுறம் அவளது சுதந்திரம் பறிக்கப் படுகிறது. மறுபுறம், இவ்வாறு தொடர்ந்து பல ஆண்டுகளாக பெண் கட்டுப்பெட்டியாக வளர்க்கப்படுவதால் அவள் தன்னம்பிக்கையை இழக்கிறாள். பருவம் அடைந்து, படித்து முடித்து, திருமணம் முடிந்து, தாயுமாகி, ஒரு குடும்பத்தின் தலைவியாய் தலை நிமிர்ந்து நிற்கும் பொழுது, பருவத்தில் அவளுக்கு மறுக்கப்பட்ட சுதந்திர வாசல் ஒருவேளை திறக்கப்பட்டாலும், சுய சந்தேகங்களாலும், தன்னம்பிக்கை இன்மையினாலும் தொழுவில் கட்டிய மாடாய் கிடக்கிறாள். பல்லாண்டுகளாய் பழகிப் போன பழக்கத்தை அவளால் மாற்ற முடிவதில்லை. மேலும், தான் தாங்கியுள்ள ‘நல்ல குடும்பப் பெண்’ என்ற பட்டத்தை துறக்கவும் அவள் தயாராய் இல்லை. மிகவும் சிலரே இந்த வேலிகளை விட்டு வெளியே வருகிறார்கள்.

இவ்வாறு நமது கலாச்சாரத்தில் சிறு வயதில் இருந்தே பெண் என்பவள் தன்னைச் சுற்றியுள்ள ஆண்களை சார்ந்து வாழும்படி வார்க்கப்படுகிறாள். எந்த ஓர் சூழ்நிலையிலும் ஒருவர் மற்றொருவரை வெகு நாட்களாக சார்ந்து வாழும் நிலை ஏற்படும் பொழுது அடக்கு முறை அங்கு வேர்விட்டு விடும். அந்த வேர், நமது இந்திய கலாச்சாரத்தில் இன்று வளர்ந்து விருட்சமாக நிற்கிறது.

பாலின சமத்துவமின்மை

இன்று பாலின சமத்துவமின்மை(Gender inequality) அனைத்துத் துறைகளிலும் காணப்படும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று. பொருளாதாரத்தில் இந்தியாவை விட பின்தங்கிய நிலையில் இருக்கும் நாடுகள் பலவற்றிலும் இந்த நிலை கிடையாது. 2010 -ம் ஆண்டு உலக வங்கி ‘மொத்த உள்நாட்டு உற்பத்தி’(GDP) அடிப்படையில் வெளியிட்ட உலக நாடுகளின் தர வரிசையில் இந்தியா 7 -வது இடத்தில் உள்ளது. இது நாம் மகிழ்ச்சி அடைய வேண்டிய ஒரு விசயம் தான். ஆனால், அதேசமயம் 2010 -ம் ஆண்டு ஐ.நா.-வின் மனித உரிமை வளர்ச்சிப்பிரிவு வெளியிட்ட பாலின சமத்துவமின்மை(Gender inequality) அறிக்கையில் மொத்தம் 138 நாடுகள் உள்ளடங்கிய தர வரிசையில் இந்தியா 122 -ம் இடம் பெற்றுள்ளது. என்ன ஒரு வெட்கக் கேடான நிலை.

இந்த தகவல் இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் சமுதாய அக்கறையுள்ள எவருக்குமே வருத்தத்தையளிக்கும் ஆனால் நிச்சயமாக வியப்பாய் இருக்காது. தினக்கூலி வேலையில் ஆரம்பித்து, உயர் அலுவலகங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் வரை அனைவருக்கும் இது பொருந்தும். கூலி வேலை பார்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரே விதமான உடல் உழைப்பிற்கு ஆணுக்கு, சராசரியாக பெண்ணைவிட 33% அதிக கூலி வழங்கப்படுகிறது. படித்து பட்டம் பெற்று உயரிய வேலைகளில் தனியார் நிறுவனங்களிலும், அரசு நிறுவனங்களிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் இந்த பிரச்சினையை வேறு விதமாக சந்திக்கிறார்கள். இந்த நிறுவனங்கள் சம பதவிக்கு சம ஊதியம் வழங்கினாலும், பதவி உயர்வு என்று வரும் பொழுது பெண்கள் அமுக்கப்படுகிறார்கள். இன்று ஐ.டி. துறை மற்றும் வங்கிகள் அரசு நிறுவனங்களில் உயர் பதவியில் உள்ள உங்களுக்கு தெரிந்த பெண்களிடம் பேசிப் பாருங்கள். ஒரு பெண் இதை மறுத்தாலும் நான் என் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறேன். ஏன், பிரபலமான திரைப்பட நடிகைகள் மற்றும் நடிகர்களின் சம்பளத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். எங்கும் இதே ஏற்றத் தாழ்வுதான்.

பாலின சமத்துவமின்மை பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக வெளிப்படுகிறது. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் மக்கள் தங்கள் பெண் பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கும் ஆண் பிள்ளைகளை தனியார் பள்ளிக்கும் அனுப்புவது, நடுத்தர வர்க்கத்தினர் தம் பெண்களை கலைக் கல்லூரிகளுக்கும் ஆண் பிள்ளைகளை   பொறியியல் கல்லூரிகளுக்கும் அனுப்புவது, பெண் சிசுக்கொலை, வீட்டு வேலைகளில் சிறு வயதில் இருந்தே பெண் பிள்ளைகளை மட்டும் ஈடுபடுத்துவது என பல முனைகளிலும் இதனைக் காணலாம்.

உங்களுக்கோர்விண்ணப்பம்

அந்த வானத்தின் கருமையை எடுத்து இன்றைய பெண்ணின் நிலையினை விவரிக்க விவரிக்க விரைவில் அந்த வானமும் வெளிறிப் போகும்! போனவை போகட்டும், இனியேனும் நாம் விடியலை நோக்கி பயணம் செய்வோம். மேலும் இது பெண்ணின் பிரச்சினை மட்டும் அல்ல. ஒரு சமுதாயத்தின் ஒரு பாதி இப்படி அடக்கி ஒடுக்கப்படுவது ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் நல்லதல்ல. நாம் சரிபாதி மருத்துவர்களை இழக்கின்றோம், விஞ்ஞானிகளை இழக்கின்றோம், வழக்கறிஞர்களை இழக்கின்றோம், இலக்கியவாதிகளை இழக்கின்றோம், மொத்தத்தில் நாட்டின் சரிபாதி வளர்ச்சியை இழக்கின்றோம்.

இதுவரை நம் சகோதரிகள் சிந்திய கண்ணீர் துளிகள் போதும். இனிவரும் பெண் சமுதாயத்தின் தளைகளை களைய போராடுவோம்.

  • மேல்தட்டுப் பெண்களுக்கோர் வேண்டுகோள். பணத்தட்டுப்பாட்டின் காரணமாக உயர் கல்வி கற்க இயலாமல் போகும் நமது சகோதரிகளை கண்டெடுத்து, அவர்கள் படிப்பிற்கு உதவுங்கள். இது அவர்களை மட்டும் அல்லாது அவர்களது வருங்கால சந்ததியினரும் மேன்மையடைய வழிவகுக்கும்.
  • வெளியுலகத்தை அறிந்து, வீட்டிலும் வெளியிலும் போராடி தன் உரிமைகளை தக்க வைத்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு ஓர் வேண்டுகோள். தங்கள் அளவிற்கு உலக அறிவும், போராட்ட குணமும் வாய்க்கப்பெறாத தங்களை சுற்றியுள்ள பெண்களுக்கு வழிகாட்டியாய் செயல்படுங்கள். அவர்களது அறிவுரையாளராக (mentor) செயல்பட்டு அவர்கள் உரிமைகளை பெற உதவுங்கள்.
  • அடக்கு முறையை அழிக்கத் துடிக்கும் ஆண்களுக்கு ஓர் வேண்டுகோள். தங்கள் நல்லொழுக்கத்தையும், உயர்ந்த கொள்கையையும் தங்கள் ஆண் நண்பர்களுக்கு தவறாமல் பரப்புங்கள். அவர்கள் எண்ணம் செயல் இரண்டிலும் நல் மாற்றத்தை ஏற்படுத்த முயலுங்கள்.
  • இதைப் பற்றி பெரிதான கருத்து ஒன்றும் இல்லாத ஆண்களுக்கு ஓர் வேண்டுகோள். தங்களை சுற்றி உள்ள பெண்களை சற்று கூர்ந்து கவனியுங்கள். தங்களையும் அறியாமல் கலாச்சார போர்வையில் நீங்கள் வீட்டிலும் வெளியிலும் நடந்து கொள்ளும் முறைகளை மறுபரிசீலனை செய்யுங்கள். தங்களை சுற்றி உள்ள அன்பான பெண் உள்ளங்கள் உரிய உரிமையும் வாய்ப்பும் பெற வழிவகை செய்யுங்கள்.
  • ஒட்டு மொத்த பெண் சமுதாயத்திற்கு ஓர் வேண்டுகோள். பல இடங்களில் பெண்ணே பெண்ணுக்கு எதிரியாய் இருக்கிறாள். இந்த நிலை மாற வரட்டு கெளரவம், பிடிவாதம், பொறாமை, புறம் பேசுதல் தவிர்த்து பெண் சமுதாயம் மறுமலர்ச்சியடைய வழிவகுப்போம்.
  • ஒட்டு மொத்த ஆண் சமுதாயத்திற்கு ஓர் வேண்டுகோள். பல்லாயிரங்காலங்களாக புரையோடிப் போயிருக்கும் ஆணாதிக்க எண்ணத்தை எப்படி நம் மனத்தில் இருந்து அகற்றுவது என சுய பரிசீலனை செய்து பாருங்கள். எந்த ஒரு இடத்திலும் பாலின வேறுபாட்டினால் ஒருவருக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை மறுக்க மாட்டேன் என்று உறுதி பூணுங்கள்.

அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒருங்கிணைந்த மேன்மையான சமுதாயத்தை படைப்போம்!

 


வித்யாசாகர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெண்ணும், இன்றைய சமுதாயமும்! – மீள்பதிவு”

அதிகம் படித்தது