மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெண் விடுதலையும், அதன் அரசியலும்

சுசிலா

Jan 7, 2017

siragu-pennukku-edhiraana1

நாடு சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், பெண்களின் நிலைமை முழுதும் சீரடையவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. நாமும் பல ஆண்டுகளாக பெண் விடுதலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம், எழுதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதன் பின்னே, பெண்களை மேலே வரவிடாமல், அழுத்தி, மண்ணுக்குள் புதைக்கும் ஆணாதிக்க அரசியல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.!

அதுவும் சமீபகாலமாக பெண்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது. சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் முதலில் பலியாவது பெண்கள் தான். பெண்களுக்கு படிப்பு ஒரு அரண் என்று சொல்லி படிக்க வைக்கிறோம். ஆனால் அந்த படிப்பு கூட பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முழுமையான விடுதலையைப் பெற்றுத்தரவில்லை என்பது தான் ஒப்புக்கொள்ள வேண்டிய வருந்தத்தக்க உண்மை.!

பள்ளிகளில், கல்லூரிகளில் பணிபுரியும் அலுவலங்களில், பொது இடங்களில், பேருந்துகளில், தொடரிகளில், சமூக வலைத்தளங்களில் என எங்கும் பெண்கள் அச்சத்துடனே வாழ வேண்டிய சூழலைத்தான் நம் சமூகம் பெண்களுக்கு தந்திருக்கிறது. பாலியல் ரீதியான தொந்தரவுகள் அனைத்தும் பெண்களை வளர விடாமல் சோர்வடைய வைத்திருக்கிறது..!

சமீபத்திய சில நிகழ்வுகள் நம்மை மேலும் அச்சத்திற்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்குகின்றன. அதில் இரு நிகழ்வுகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. அனைத்துத் துறைகளிலும் பெண்களை இழிவுப்படுத்த வேண்டுமென்ற ஆணாதிக்க வக்கிரம் எங்கும் நிறைந்து இருக்கிறது. பணமதிப்பு இழப்பு மற்றும் பணமில்லா வர்த்தகத்தை எதிர்த்துப் போராட வந்த Dyfi அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் தாக்கப்பட்டபோது, பெண் தோழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எக்காரணம் கொண்டும் மன்னிக்க முடியாது, ஏற்றுக் கொள்ளமுடியாது. அந்த அளவிற்கு வக்கிரம் பிடித்த ஆண்கள் தமிழக காவல் துறையில் இருக்கின்றனர் என்பது எவ்வளவு வேதனையான ஒன்று.!

siragu-penniyam2

நாமெல்லோருக்கும் தெரிந்த மற்றொரு நிகழ்வு,.. பெங்களுருவில் புத்தாண்டு தின இரவில் நடந்த கொடுமை. தெருவில் நடந்து போகும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் அளவிற்கு இந்த ஆண் வர்க்கத்திற்கு எப்படி இத்தனை துணிவு… அதில் மிகவும் கொடுமை என்னவென்றால், இச்சம்பவம் நிகழும் போது, அவ்விடத்தில் சில மனிதர்கள் பார்த்துக் கொண்டிருந்தது தான்..! பொதுநலம் இல்லாத ஒரு சமூகமாக உருவெடுக்கிறது என்பது அபாயக்குறி தானே… இப்போதும் நாம் விழித்துக்கொள்ளவில்லை என்றால் இன்னும், இதைவிட அதிகக் கொடூரங்கள் நடந்தேறக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. குற்றங்களுக்குத் தக்க தண்டனை கொடுக்கப்படவில்லை என்றால் குற்றங்கள் மென்மேலும் பெருகிக் கொண்டே போகும். இம் மாதிரி குற்றங்களுக்கு பிணையில் வெளியில் வர முடியாதபடி சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.!

நம் இளைய சமூகம் இப்படி புரையோடி இருக்கிறதை பார்த்தோமானால், நம் சமூகம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்ற அச்சத்தைத் தான் தருகிறது. கல்வியை வலியுறுத்திய நாம் பண்பை, பக்குவத்தை, நாகரீகத்தை கற்றுக் கொடுக்க தவறி விட்டோமே என்ற கேள்வி தான் நம் முன்னே எழுகிறது.!

ஆண் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே, பெண்ணைப் பற்றிய, பெண்ணுரிமை, பெண்ணியம் சார்ந்த அறிவை ஊட்டுவது மிகவும் அவசியம். இதனை நாம் வீட்டில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். பெண்களை சக தோழியாய் பார்க்கும் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டும். பாலியல் சமத்துவத்தை போதிக்க வேண்டும். இரு குழந்தைகளுக்கும் எவ்வித வேறுபாடுகள் இன்றி வளர்க்க வேண்டும். பெற்றோர்களின் கடமைகளில் மிக முக்கியமான கடமை இது தான். இந்தப் பார்வையைத் தூண்டிவிட்டாலே போதும், குழந்தைகளுக்கு மனிதநேயமும் சேர்ந்து துளிர்க்க ஆரம்பித்து விடும்.!

puratchi kavignar14

மேலும் பெண்களுக்கு தற்காப்புக் கலை மிகவும் முக்கியம். எந்நிலையிலும் தங்களைத் தாங்களே பாதுகாக்கும் திறனை வளர்த்து விடுவது பெற்றோர்களின் இப்போதைய அத்தியாவசிய கடமை. இந்த ஏற்பாட்டை அரசோ, பள்ளி – கல்லூரி நிர்வாகங்களோ செய்தல் இன்னும் கூடுதல் சிறப்பு. மேலும் சந்தையில் கிடைக்கும் பெப்பர் ஸ்பிரே, சில்லி ஸ்பிரே போன்றவைகளை பெண்கள் தங்கள் பைகளில் வைத்துக் கொள்ளுதல் நல்லது.!

இவ்வளவு காலம் அடக்கி வைக்கப்பட்ட பெண்ணினம் இப்போது தான், கொஞ்சம் தலை நிமிர்ந்து சுயசார்புடைய நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. அதனையும் இப்படி அச்சுறுத்தினால் மேலும் பெண்ணடிமைத்தனம் துளிர்க்க ஆரம்பித்து விடும் ஆபத்து இருக்கிறது. இதற்கான தீர்வு விரைவில் எட்டப்பட வேண்டும்.!

ஒரு நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு மிக முக்கியம். வளர்ந்த நாடுகளில் எல்லாம் பெண்களின் சுதந்திரம், பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பெண் விடுதலை, பெண் பாதுகாப்பு, பெண்களுக்கான சம உரிமை அனைத்தும் சிறப்பாக உள்ளநாடுகளில் முன்னேற்றமும் அதிக அளவில் இருப்பதைக் காணலாம்.!

பெண்ணியம் காப்போம் … புது உலகு படைப்போம்..!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெண் விடுதலையும், அதன் அரசியலும்”

அதிகம் படித்தது