மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெரியாரின் இந்தி எதிர்ப்பு போரும், அவர் மீது பதியப்பட்ட வழக்கும் !!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Feb 15, 2019

Siragu periyar2

1937 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ராஜகோபாலச்சாரியார் இந்தியை கட்டாயமாக நுழைத்தபோது, தந்தை பெரியார் இதனை எதிர்த்து போர்க்குரல் எழுப்பினார். தமிழறிஞர்களையும் சுயமரியதை இயக்க தொண்டர்களையும் இணைத்து இந்தி எதிர்ப்பு மாநாடுகளை நடத்தினார்.

இந்தி எதிர்ப்பு படை தமிழ்நாடு முழுக்க பயணித்து இந்தி திணிப்பை எதிர்த்தது. இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டு பெண்கள் மாநாடு சென்னை ஒற்றைவாடைத் திரையரங்கில் 13.11.1938 அன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் தான் தந்தை பெரியாருக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இம்மாநாட்டில் தந்தை பெரியார் இந்தி திணிப்பை எதிர்த்து உரையாற்றினார். இந்த உரைக்காக தந்தை பெரியார் மீது சென்னை அரசாங்கத்தாரால் 117-ஆவது 7(1) செக்ஷன் கீழ் கொண்டுவரப்பட்ட வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு 5.02.1938 காலை 11:25 மணிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் போலீஸ் கோர்ட்டு 4 வது நீதிபதி மாதவராவ் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

விசாரணை அன்று தந்தை பெரியார் படுக்கையுடன் நீதிமன்றத்திற்கு வருகின்றார். அய்யா அவர்களின் தனிச் சிறப்பே அவர் என்றும் சிறைக்கு அஞ்சியது இல்லை. தன் மீது போடப்பட்ட வழக்கினை எதிர்த்து வழக்காடியதும் இல்லை. சட்டப்படி என்ன தண்டனை நீதிமன்றம் வழங்குமோ அதனை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டவர் என்பது தான் வரலாறு.newsletter-apr-22-2017-1

அந்த அடிப்படையில் இந்த வழக்கிற்கும் வருகின்றார். வழக்கை கவனிக்க தோழர்கள் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், ஈ .வெ. கிருஷ்ணசாமி, டி. சுந்தரராவ் நாயுடு பி.ஏ .பி.எல், கி.ஆ.பெ. விஸ்வநாதம், எஸ்.வி.ராஜன் பி.ஏ.பி.எல், தாமோதரம் பிள்ளை உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

அரசு தரப்பில் முதல் சாட்சியாக சப்-இன்ஸ்பெக்டர் தோழர் கேசவமேனன் தனது சாட்சியத்தை கூறினார், அவரைத் தொடர்ந்து இரண்டாவது சாட்சியாக சப்-இன்ஸ்பெக்டர் எ.கிருஷ்ணய்யர் விசாரிக்கப்பட்டார். பின் மூன்றாவது சாட்சியாக சுருக்கெழுத்து சப் -இன்ஸ்பெக்டர் தோழர் ரஞ்சித்சிங் விசாரிக்கப்பட்டார். பின் சாட்சிகளின் குறுக்கு விசாரணை நடைபெற்றது.

பின் நீதியரசர் தந்தை பெரியாரிடம் நீங்கள் வாக்குமூலம் தருகின்றீர்களா? என்றார். அதற்கு பெரியார் “சிறிது அவகாசம் தந்தால் சாட்சியங்களைப் பார்த்து தருகிறேன் என்றார். சாட்சிபடிகள் மாலையில் கிடைக்கும் ஆதலால் வழக்கு அடுத்த நாள் 11 மணிக்கு ஒத்தி வைக்கப்படுகின்றது என்றார் நீதியரசர். இந்த விசாரணை முடிந்து தந்தை பெரியார் மதியம் 1:30 மணிக்கு கீழே வரும் வரை ஏராளமான மக்கள் காத்துக்கொண்டிருந்தனர். அய்யா அவர்கள் மகிழுந்தில் ஏறியதும் “தந்தை பெரியார் வாழ்க” என்ற முழக்கம் விண்ணப் பிளந்தது.

அடுத்த நாள் மீண்டும் தந்தை பெரியார் படுக்கையுடன் நீதிமன்றத்திற்கு வந்தடைந்தார். மீண்டும் அரசு தரப்பில் சப்-இன்ஸ்பெக்டர் தோழர் ரசாக் கானை விசாரிக்க வேண்டும் என அனுமதி வழங்கப்பட்டது. அதற்குப் பின் நீதியரசர் தந்தை பெரியாரிடம் தாங்கள் வாக்குமூலம் தரலாம் என்று கூறிவிட்டு, “உங்கள் பெயரில் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது, ஆகையால் வழகிற்குச் சம்மந்தப்பட்ட ஸ்டேட்மென்ட் மட்டுமே கொடுக்க வேண்டும்”, என்றார். அதற்கு தந்தை பெரியார் “நான் சட்ட நிபுணன் அல்ல, சாட்சியங்களைக் காதில் கேட்டேன், பார்த்தேன், பதில் கூறுகிறேன், எனக்கு பதில் அளிக்க உரிமை உண்டு என்றால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் தள்ளிவிடுங்கள். நான் வழக்கிற்குச் சம்பந்தப்பட்டவைகளையே கூறுகிறேன். என்று பதில் அளித்தார். தந்தை பெரியார் தன் வாக்குமூலத்தை படித்தார்கள்.

வாக்குமூலத்தின் சில பகுதிகள்:

நான் சம்பந்தப்பட்டிருக்கும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியானது காங்கிரசிற்கு விரோதமானாது என்றும், காங்கிரசு கட்சியினைக் கவிழ்ப்பதற்காக என்றும், பார்ப்பன துவேஷம் கொண்டதென்றும் கனம் முதல்மந்திரியாரே சட்டசபையிலும் பொதுக்கூட்டங்களிலும் தெரிவித்து இருக்கின்றார்.
இந்தக் கோர்ட்டு காங்கிரசு மந்திரிகள் நிர்வாகத்திற்கு உட்பட்டது. தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர். இதைத் தவிர எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் காங்கிரசு மந்திரிகள் அதிதீவிர உணர்ச்சி கொண்டிருக்கிறார்கள். அதுவிசயத்தில் நியாயம் அநியாயம் பார்க்கவேண்டியது இல்லை என்றும், கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து உபயோகித்து ஒழித்தாக வேண்டும் என்றும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைத் திடீரென்று வந்து புகுந்த திருடற்கு ஒப்பிட்டு முதல்மந்திரி கடற்கரை கூட்டத்தில் பேசியிருக்கிறார். எனவே இந்தி எதிர்ப்பு விசயமாய் மந்திரிகள் எடுத்துக் கொள்ளும், நடவடிக்கைகள் அடக்குமுறையே என்பது எனது கருத்து. அடக்குமுறை காலத்தில் இம்மாதிரி கோர்ட்டுகளில் நியாயம் எதிர்ப்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.

ஆதலால் இந்த கோர்ட் நியாயத்தில் இந்த வழக்கில் எனக்கு நம்பிக்கை இல்லை. இன்று நடக்கும் வழக்கு விசாரணையில் நான் கலந்து கொள்ளப்போவது இல்லை என்று முடிவு செய்து கொண்டேன்.

பொதுமக்கள் தவறுதலாய் கருதாமல் இருப்பதற்கும் தப்பு வழியில் செல்லாமல் இருப்பதற்கும் நான் நிரபராதி என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவும் ஓர் அறிக்கை எழுத்து மூலமாக சமர்ப்பிக்கிறேன். அதனை வழக்கு ஆதாரங்களோடு சேர்த்துக்கொள்ள வேண்டுகிறேன் என்று தொடங்கி நீண்ட தன் வாக்குமூலத்தை படித்தார்.

தன் வாக்குமூலத்தின் இறுதியில், மறுக்க வேண்டியவற்றை மறுத்த பின், கோர்ட்டாரவர்கள் தாங்கள் திருப்தியடையும் வண்ணம் அல்லது மந்திரிமார்கள் திருப்தியடையும் வண்ணம் எவ்வளவு அதிக தண்டனை கொடுக்க முடியுமோ, அவைகளையும் பழிவாங்கும் உணர்ச்சி திருப்தியடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து இவ்வழக்கு விசாரணை நாடகத்தை முடித்து விடும்படி வணக்கமாகக் கேட்டுக்கொள்ளுகிறேன் என்று முடித்தார்.

எண்ணிப்பாருங்கள் இப்படி நீதிமன்றத்தில் கூற எவ்வளவு நேர்மை வேண்டும்? பெரியாரிடம் அந்த நேர்மை இருந்தது. அதனால் தன் மனதில் பட்டத்தை எந்த மறைவும் இல்லாமல் கூறினார்கள்.

இந்த வாக்குமூலம் படித்து முடிக்க மணி 1:30 ஆகிவிட்ட காரணத்தினால், தீர்ப்பு மாலை 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சரியாக மாலை 3:25 மணிக்கு நீதியரசர் தீர்ப்பை வாசித்தார்.

“இரண்டு பேச்சுகளும் 2 குற்றங்களாகின்றன. ஒரு குற்றத்திற்கு 1 வருட கடுங்காவலும் 1000 ருபாய் அபராதமும், அபராதம் செலுத்த தயங்கினால் மேலும் 6 மாதம் கடுங்காவலும் விதிக்கின்றேன்” என்பது தீர்ப்பு. ஆக இரண்டு குற்றங்களுக்கு 2 வருடம் மற்றும் 2000 ருபாய் அபராதம் அல்லது மேலும் ஒரு வருடம் ஆக 3 வருடம் கடுங்காவல் தண்டனை. பெரியார் அபராதம் கட்ட மறுத்து 3 வருட கடுங்காவல் தண்டனையை ஏற்றுக்கொண்டார். தந்தை பெரியார் கைது செய்யப்பட்டபோது அவருக்கு வயது 59. 05.12.1938 கைது செய்யப்பட்டு, பின் 22.05.1939 சில மாதங்களுக்குள்ளாகவே விடுதலை செய்யப்பட்டார். மூன்று வருட கடுங்காவல் தண்டனை என்றார்கள் சில மாதங்களில் அரசு விடுதலை செய்தது. அதனை குடியரசில் தலையங்கமாக வெளியிட்டிருந்தனர். பெல்லாரி சிறைக்கு முதலில் அனுப்பப்பட்டு பின் மக்கள் எதிர்ப்பின் காரணமாக கோவைக்கு மாற்றப்பட்டு பின் அங்கிருந்தும் விடுதலையானார் பெரியார். ஈரோட்டில் மிகப் பெரிய அளவில் தந்தை பெரியாரின் விடுதலைக்காக பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரியார் மீது பற்றுக்கொண்டோர், தொண்டர்கள் என அனைவருக்கும் விடுதலை மகிழ்ச்சியைத் தர, தந்தை பெரியார் கேட்கின்றார், “வேலை முடியவில்லையே, நான் வெளி வந்து யாது பயன்? எந்தக் காரியத்தின் பொருட்டு சிறை செல்ல வேண்டிவந்ததோ, அது வெற்றிகரமாக முடிந்திருந்து நான் வெளி வந்தாலல்லவா? நீங்களும் நானும் மகிழ்வெய்த முடியும்? என்று இயக்கத் தோழர்களைக் பார்த்து கேட்டார்.

“என் கிளர்ச்சிக்கு மதிப்பு தராது என்னையும் தமிழரையும் வாட்டும் கட்டாய இந்திப் பாடையை ஒழிக்காது என்னை மட்டும் வெளியே அனுப்பினீர்களே ஏன்?” என அரசை கேள்வி கேட்டார்.

“நான் சிறையிலே இறந்து விட்டிருந்தால் இயக்கம் எவ்வளவோ உச்ச நிலைக்கு சென்றிருக்கும்” என்று ஈரோட்டில் தந்தையின் மொழி கேட்டு கலங்கினர் தமிழர்கள்.

மீண்டும் போராட்டம் தொடரும் என்று தந்தை பெரியார் முழங்கினார்.

இப்படி தன் வாழ்நாள் முழுவதும் போராட்டம் என தமிழர்களுக்காக போராடிய தலைவரை, சிறைக்கு அஞ்சா போராட்ட தலைவரை இன்று சில சிலந்திகள் அவர் புகழை வீழ்த்திவிடலாம் என கூடு கட்டுகின்றனர். வரலாறு உண்மைகளை மட்டுமே காத்து நிற்கும் என்பதை அறியாத மூடர்கள்.

ஆதாரம்: நீதிமன்றங்களில் தந்தை பெரியார் நூல் (கி.வீரமணி)


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெரியாரின் இந்தி எதிர்ப்பு போரும், அவர் மீது பதியப்பட்ட வழக்கும் !!”

அதிகம் படித்தது