மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெரியார் எப்பொழுது பெரியார் ஆனார்?

தேமொழி

Sep 19, 2020

siragu oru koppai nanju2

மனிதநேயம், சமத்துவம், சமூகநீதி என்ற கொள்கைகளின் அடிப்படையில் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படும் எவருக்காகவும் குரல் கொடுத்துப் போராடிய தமிழ்நாட்டின் விடிவெள்ளியாக விளங்கியவர், அந்தப் பட்டதிற்குத் தகுதியானவர் ஈ. வெ. ராமசாமி பெரியார் மட்டுமே.

சமுதாயத்தில் சமத்துவத்தைக் கொண்டுவரும் நோக்கில் தனது வாழ்க்கைப் பாதையையே போராட்டங்கள் நிறைந்தவையாக மாற்றிக் கொண்டவர் அவர்.

எத்தனை எத்தனைப் போராட்டங்களை முன்னெடுத்தவர் என்பது வியக்கவைக்கிறது… !!!

  • வைக்கம் போராட்டம்
  • சேரன் மாதேவி குருகுலப் போராட்டம்
  • இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
  • இரயில் நிலையங்களில் இந்திப் பெயர் அழிப்புப் போராட்டம்
  • வகுப்புரிமைப் போராட்டம்
  • குலக்கல்வி ஒழிப்புப் போராட்டம்
  • இந்தியத் தேசியக் கொடி எரிப்புப் போராட்டம்
  • சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம்
  • தமிழ்நாடு நீங்கிய இந்தியத் தேசப்பட எரிப்புப் போராட்டம்
  • கருவறை நுழைவுப் போராட்டம்
  • கோவில் நுழைவுப் போராட்டம்
  • இராமன் பட எரிப்புப் போராட்டம்
  • பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம்
  • பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம்
  • சுசீந்திரம் சத்தியாகிரகம்

என நீளுகிறது அவர் நடத்திய போராட்டங்களின் பட்டியல்

அத்தனை போராட்டங்களின் மையக் கருத்து எதுவென நோக்கினால், அவை அனைத்திற்கும் அடிப்படை நோக்கம் ஏதோ ஒரு அடக்குமுறையை எதிர்த்துச் செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களே. மனிதநேயம், சமத்துவம், சமூகநீதி இவை எவருக்கோ எந்தவகையிலோ மறுக்கப்பட்டுள்ளது என்று போராட்டக் களம் இறங்கியிருக்கிறார் பெரியார்.

அவரது தொண்டுகளுக்காகப் பெரியார்.. பெரியார் என்று இவ்வாறு இன்று நாம் போற்றுகிறோமே அவர் எப்பொழுதிலிருந்து அவ்வாறு அழைக்கப்படுகிறார்?

பெரியார் என்று அவரது 49 ஆவது அகவை தொடக்கம், அதாவது ’1928 முதல் அவர் பெரியார்’ அழைக்கப்பட்டுள்ளார் என்பதை “பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்” என்று வே. ஆனைமுத்து அவர்கள் தொகுத்த நூலின் முதல் பாகத்தின் மூலம் அறிய முடிகிறது. அவர் ‘ஈ. வெ. ரா. பெரியார்’ எனத் திராவிட இனத் தலைவர்களாலும் மக்களாலும் அழைக்கப்படலானார் என்ற செய்தி பெரியாரின் வாழ்க்கைக் குறிப்புகள் பகுதியில் காணப்படுகிறது.

இதற்குக் காரணம் என்ன என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஐம்பது அகவையை எட்டிவிடும் பொழுதில், சமூகத் தொண்டின் மூலம் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றிருந்த பெரியார், 1927ம் ஆண்டில் தனது பெயருக்குப் பின்னொட்டாக இருந்து வந்த ‘நாயக்கர்’ என்ற சாதிப்பட்டத்தை நீக்கிவிடுகிறார். தமது “குடிஅரசு” 25-12-1927 இதழ் முதற்கொண்டு ‘ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி’ என்று அறிவித்து சாதிப்பெயரைத் தவிர்த்துவிடுகிறார். பிறகு, 1929இல் பெரியார் சுயமரியாதையை வலியுறுத்தும் விதமாக, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில், தன் பெயரின் பின்வரும் சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்குப் பின்னால் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார்.

நன்மதிப்பிற்கு உரிய ஒருவரை அக்கால வழக்கப்படி ‘ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர்’ என அழைக்க முடியாமல் போனவர்கள், அவரை பெயர் சொல்லி அழைப்பதைவிட அவர் தகுதியைக் காட்டும் வகையில் ‘பெரியார்’ என அழைப்பதே முறை என்று முடிவெடுக்கிறார்கள். முதன்முதலில் ‘நாயக்கர்’ என்பதற்குப் பதில் ‘பெரியார்’ என்ற பின்னொட்டைச் சேர்த்து “ஈ.வெ.ராமசாமிப் பெரியார்” என அழைக்கத் துவங்கியவர் நாகர்கோவில் வழக்கறிஞர் திரு.பி.சிதம்பரம்பிள்ளை என்பவராவார். தொடர்ந்து ஜூலை 1929 இல் நடைபெற்ற திருநெல்வேலி ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் திருவாளர்கள் எஸ். குமாரசாமி ரெட்டியார், நீதிபதி எம்.கோவிந்தன். டீ.கே. சிதம்பரநாத முதலியார் ஆகியோரும் பெரியார் எனக் குறிப்பிடலாயினர். அதன் பிறகு பரவலாகப் பலர் பலமுறை ஈ.வெ.ராமசாமிப் பெரியார் என்று அழைத்த ஊடகச் சான்றுகளும் கிடைக்கின்றன.

ஆனால் 1928ம் ஆண்டு துவங்கி பற்பலர் பல இடங்களில் அவரை அவ்வாறு அழைத்த பிறகே, சுயமரியாதை இயக்கத் தலைவர் ஈ.வெ.ராமசாமிக்கு, 1938-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி, நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் ’பெரியார்’ என்ற பட்டத்தை அளிக்கிறார் அன்னை மீனாம்பாள் சிவராஜ்.

காந்தியை மகாத்மா என அழைக்கின்றனரே, ஈ.வெ. ராமசாமியைப் பெரியார் என்று அழைப்பதை நாம் தீர்மானமாகக் கொண்டுவரவேண்டும் என்று மீனாம்பாளும், நாராயணி அம்மாள், டாக்டர் தருமாம்பாள் ஆகிய பெண்கள் எண்ணுகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு சென்னை ஒற்றை வாடைத் தியேட்டரில் நவம்பர் 13, 1938 ல் நடைபெற்ற பொழுது அத்திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள். பெண்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு பெரியார் ஆற்றிய பங்களிப்பைச் சிறப்பிக்கும் விதமாகக் கீழ்வரும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

“இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற்போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும் சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவர் அல்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது.”

பெரியார் 1931ம் ஆண்டில் ரஷ்யா சென்றுவந்தபிறகு பொதுவுடைமைக் கொள்கையில் ஏற்பட்ட தீவிர ஈடுபாடு காரணமாக, நவம்பர் 13, 1932ல் குடி அரசு இதழில் பெரியார் இயக்கத்தினர்கள் இனி ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்ளும் பொழுது பெயருக்கு முன்னர் “தோழர்” என்று கூறி அழைக்கும் முறையைப் பின்பற்றுமாறு வேண்டுகோள் வைத்தார். இயக்கத்தின் தளபதியாக விளங்கிய பட்டுக்கோட்டை அழகிரிசாமி மேடையில் பேசும்போது ‘தோழர் ராமசாமி’ என்றுதான் பெரியாரை அழைப்பது வழக்கம். பெரியாரின் வேண்டுகோளை விட பெண்கள் இயற்றிய தீர்மானமே வெற்றிபெற்றதை இன்றைய நாளில் அறிய முடிகிறது.

உதவிய தளங்கள்:

ஈ.வெ.ரா-வுக்கு `பெரியார்’ பட்டம் வழங்கிய பெண் போராளி அன்னை மீனாம்பாள் பிறந்ததினம் இன்று!, டிசம்பர் 25, 2018-விகடன் – https://www.vikatan.com/oddities/miscellaneous/145596-story-about-annai-meenambal-sivaraj

“ஈ.வெ.ராமசாமி “அவர்கள் எப்படி “பெரியார்” ஆனார்? – 6, தமிழ் ஓவியா ஜூன் 10, 2009 – http://thamizhoviya.blogspot.com/2009/06/6.html

பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள், வே. ஆனைமுத்து, முதல் தொகுதி, சிந்தனையாளர் கழகம், 1974 – http://dvkperiyar.com/wp-content/uploads/2015/11/EVRT-VOL-1-part-1.pdf


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெரியார் எப்பொழுது பெரியார் ஆனார்?”

அதிகம் படித்தது