மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெற்றோர்கள்

முனைவர் மு.பழனியப்பன்

Jan 7, 2023

siragu petrorgal
பெற்றோர்கள் பிள்ளைகளைப் பேணி வளர்க்கிறார்கள். எதிர்காலத்தில் அவர்கள் நம்மைப் பேணி வளர்ப்பார்கள் என்ற எண்ணத்துடன் அவர்கள் வளர்ப்பதில்லை.  எதையும் எதிர் பார்க்காத அன்புடன் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களைச் செய்ந்நன்றி மறவாமல் அன்போடு பேணி வளர்த்திடுதல் இன்றியமையாத கடமை ஆகும்.

தாயிற் சிறந்த தொரு கோயிலும் இல்லை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. தாய் போன்று தாயிடத்தில் வைத்து மதிக்கத்தக்கவர் இன்னும் பலர் இருக்கிறார்கள். தந்தையோடு  ஒப்பு வைத்து மதிக்கத்தக்கவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை ஒரு தனிப்பாடல் எடுத்துரைக்கிறது.

தாயை நேசிப்பதைப் போல, தந்தையை நேசிப்பதைப் போல அவர்களையும் நேசித்தல் என்பது சமுதாயத்திற்கு நன்மை பயக்கும். தாயரை தந்தையரை நேசிப்போம்.

    தன்னை அளித்தாள், தமையன் மனை, குருவின்
பன்னி, அரசன் பயில் தேவி – தன்மனைவியைப்
பெற்றாள்  இவரையே பேசில் எவருக்கும்
நற்றாயர் என்று நவில்

என்பது ஒரு பழம் பாடல்.  தன்னைப் பெற்றவள் ஒப்பற்ற தாய்.  அண்ணனின் மனைவி தாயைப் போன்றவள். குருவின் மனைவியும் தாய்க்கு ஒப்பானவள். அரசன் மனைவியும் தாய்க்கு நேரானவள். தன் மனைவியைப் பெற்ற மாமியாரும் தாயோடு ஒப்பு வைக்கத் தக்கவள்.   இவ்வாறு ஒரு மனிதருக்குப் பெற்ற தாய் ஒருத்தியானாலும்,  தாய்க்கு ஒப்பாகப் போற்றத்தக்கவர்கள் ஐவராக விளங்குகின்றனர். குறிப்பாக தன்மனைவியின் தாயைத் தன் தாயாக மதிக்கும் ஆண்மகன் சிறந்தவன் ஆகின்றான்.

ஒரு மனிதன் தந்தையையும் போற்ற வேண்டும். தந்தைக்கு ஒப்பானவரும் ஐவராக விளங்குகின்றனர். அவர்களையம் தந்தையாக ஒரு மனிதன் போற்றுதல் வேண்டும். இதற்கும் ஒரு தனிப் பாடல்  இயற்றப்பெற்றுள்ளது.

பிறப்பித்தோன், வித்தைதனைப் பேணிக் கொடுத்தோன்
சிறப்பின் உபதேசம் செய்தோன் – அறப்பெரிய
பஞ்சத்தில் அன்னம் பகர்ந்தோன் பயந்தீர்ந்தோன்
எஞ்சாத பிதாக்கள் என எண்
என்பது தந்தைக்கு ஒப்பாக ஐவரைக் காட்டும் தனிப்பாடலாகும்.

ஒரு மனிதன் தன்னைப் பெற்ற தந்தைக்கு முதல் மதிப்பும் மரியாதையும் தரவேண்டும். அவரைப் பேணிக் காக்கவேண்டும். அதன் பின் தனக்கு வித்தைகளைச் சொல்லித் தந்த ஆசிரியரைத் தந்தையாகக் காணவேண்டும். பிள்ளைகளுக்கு ஞானத்தை வழங்குகின்றது மெய்ஞ்ஞானியும்  தந்தை என்ற நிலையில் கொள்ளுதல் வேண்டும். கொடிய பஞ்சம் வந்த காலத்தில் தன் கைப்பணத்தில் உணவளிக்கும் அருள்மனம் உடையவர்களும் தந்தைக்கு ஒப்பாக எண்ணத்தக்கவர்கள். ஒரு மனிதன் தனக்கு உண்டான அச்சத்தை நீக்குபவரையும் தந்தையாகக் கொள்ளவேண்டும். இவ்வாறு நால்வரைத் தந்தைக்கு ஒப்பாகக் கொள்கிறது இத்தனிப்பாடல்.

தந்தையாக அண்ணனையும், தன் மனைவியைப் பெற்றவரையும் கொள்ளும் நிலைப்பாட்டை மேற்பாடலில் இருந்து எடுத்துக்கொள்ளலாம். அன்னம் அளிப்பவர் சமுதாயத்திற்கே தந்தை ஆகிறார். பயம் நீக்குபவர் உண்மையில் தந்தையின் நிலையில் வைத்துப் போற்றப்படுபவர் ஆவார்.

சமுதாயம் மேம்பட தாயரை, தந்தையரைப் போற்றித் தொழுதல் வேண்டும். தாய், தந்தை இடத்தில் இருப்பவர்கள் வழிகாட்டிகள். முன்னோர்கள். அவர்களின் மொழி அமுதம்.  மூத்தோர் சொல் அமுதம். எனவே இந்த மூத்தோர்களை அணுகி அவர்களின் அனுபவ மொழிகளைக் கேட்பின் நல்வழி பிறக்கும் என்பதில் ஐயமில்லை.

   ஆசாரக் கோவை
‘‘ அரசன் உவாத்தியான் தாய் தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவரிவரைத்
தேவரைப் போலத் தொழுக என்பதே
யாவருங் கண்ட நெறி”
என்று இன்னும் ஐவரைச் சுட்டுகிறது. இவ்வைவரில் தாய், தந்தை என்ற இருவர் பொதுவாக எல்லாக் கவிதைகளும் குறித்தவை. ஆசிரியர், ஆசிரியர் மனைவி இருவரும் தந்தை தாய்க்கு ஒப்பானவர்கள். தன்முன் பிறந்த அண்ணன் அவரின் துணை அண்ணி ஆகியோரும்  தந்தை தாய்க்கு ஒப்பானவர்கள் என்று கருதுகிறது ஆசாரக் கோவை.

ஆசாரக் கோவையின் வழியில் தனிப்பாடல்கள் நின்றுள்ளன என்பது இந்த மூன்று பாடல்களையும் தெளிவாக உணரும் போது தெரியவருகிறது. இவர்தம் உரைகளை இகந்து செய்யலாகது என்றும் ஆசாரக் கோவை காட்டுகின்றது.

ஒரு மனிதனுக்கு அவனுக்கு முன்னவர்கள் அனைவரும் பெற்ற தாய் தந்தைக்கு சமம் என்பதை உணர்ந்து கொள்ளமுடிகின்றது. இந்த முன்னவர்களைத் தொழுது அவர்களைப் பின்பற்றி வாழ்வதன் வழியாக நன்மை அடைய முடியும் என்பதை உணரமுடிகின்றது.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெற்றோர்கள்”

அதிகம் படித்தது