பொங்கல் சிறப்பு நேர்காணல்: இயற்கை வேளாண் விஞ்ஞானி பாமயன்
சித்திர சேனன்Jan 17, 2015
கேள்வி: தங்களது படிப்பு மற்றும் பூர்வீகம் பற்றி கூறுங்கள்?
பதில்: என்னுடைய சொந்த ஊர் நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர் அருகில் உள்ள சுந்தரேசபுரம். நான் பல ஊர்களில் படித்திருக்கிறேன். நான் எம்.ஏ. சமூகவியல் முதுகலை பின் இதழியல் பட்டயப்படிப்பு முடித்திருக்கிறேன். அதன் பிறகு நான் செய்த வேலைக்கும் படித்ததற்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. இப்பொழுது நான் முழுமையாக இயற்கை வேளாண்மை குறித்த வேலைகளை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன்.
கேள்வி: இயற்கை வேளாண்மையில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் தங்களுக்கு எப்படி வந்தது?
பதில்: நான் அடிப்படையில் சூழலியல் தொடர்பான இயக்கங்களில் ஈடுபட்டிருந்தேன் படித்து முடித்து விட்டு பணி செய்திருக்கும் காலத்தில். குறிப்பாக எனக்கு ஆர்வம் எழுத்தின் மேல் இருந்தது. அந்த காலகட்டத்தில் சென்னையில் நெடுஞ்செழியன் என்கிற நண்பர் மிக ஆர்வமான சூழலியல் தொடர்பான ஒரு வங்கி அதிகாரி. சூழலியல் தொடர்பான சிறு நூல்கள், இயக்கங்கள் எல்லாம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் இணைந்து நாங்கள் வேலை செய்ய ஆரம்பித்தோம். அப்படித்தான் சூழலியல் தொடர்பான அக்கறை வந்த பிறகு தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் இயக்கங்களில் ஈடுபடும் பொழுது எங்களுக்கு என்ன தெரிந்தது என்றால் இந்த சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு அடிப்படைக் காரணம் நம் வாழ்வியல் முறையே மாறிப்போனதுதான் என்று புரிந்துகொண்டோம். அதன் அடிப்படையில் எங்கிருந்து தொடங்குவது என்று பார்க்கும் பொழுது வேளாண்மையிலிருந்து தொடங்கினால்தான் இதற்கு நிரந்தரமாக தீர்வு கிடைக்கும் என்று முடிவு செய்தோம்.
அந்த அடிப்படையில்தான் வேளாண்மை தொடர்பாக வேலை செய்யலாம் என்று பத்து நண்பர்கள் சேர்ந்து இந்த இயக்கத்தை ஆரம்பித்தோம். அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பின்னணி கொண்டவர்கள். ஒருவர் பொறியியல் துறையில் இருந்து வந்தார், என்னைப் போன்றவர்கள் இதழியல் துறையில் இருந்து வந்தோம், சில உழவர்களே நேரடியாக பங்கெடுத்தார்கள், சிலர் இடது சாரி இயக்கத்திலிருந்து வந்தவர்கள். இப்படி பலதரப்பட்ட நண்பர்கள் இணைந்து தொடங்கினோம். தொடங்கும்பொழுது அந்தகாலகட்டத்தில் இயற்கை வேளாண்மை குறித்த பெரிய விழிப்புணர்வு கிடையாது. அதற்கான பயிற்சிகள், வசதி வாய்ப்புகள் கிடையாது, பெரிய தொழில்நுட்பங்கள் வளராத காலம். அப்பொழுது இருக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் மேலைநாடுகளில் மசானபுஃகோகா, பில்மோலிசன் போன்ற முன்னோடிகளின் தொழில்நுட்பங்களை எடுத்து தமிழில் மொழிபெயர்த்து பின் நம் தமிழ்மக்களிடம் இருக்கக்கூடிய பாரம்பரிய உழவர்களிடம் இருக்கக்கூடிய தொழில்நுட்பங்களை எல்லாம் தேடி எடுத்து அதை முறைப்படுத்தி அதை பயிற்சி வடிவமாக மாற்றினோம்.
அதனடிப்படையில் இரண்டு நாள் பயிற்சியை நாங்கள் கொடுக்க ஆரம்பித்தோம் சத்தியமங்கலத்தில். இதனை சுந்தர்ராமன் என்ற இயற்கை உழவரின் பண்ணையில் ஆரம்பித்தோம். இரண்டு நாள் பயிற்சி தொடர்ந்து வெற்றிகரமாக நடந்துகொண்டே இருந்தது. நாங்கள் அதை கட்டணம் வாங்கிதான் செய்ய ஆரம்பித்தோம். அப்படி இருந்தாலுமே உழவர்கள் ஆர்வமாக கலந்துகொண்டார்கள். கலந்துகொண்ட உழவர்கள் என்ன சொன்னார்கள் என்றால் நாங்கள் பயிற்சி எடுக்கும் பொழுது நிறைய செய்திகள் கிடைக்கிறது ஆனால் ஊருக்குச் சென்று பண்ணையில் வேலை தொடங்கும் பொழுது மறந்துவிடுகிறது அதனால் இதனை அச்சு வடிவத்தில் நூலாகக் கொடுங்கள் என்று கேட்டார்கள். அதனடிப்படையில் நாங்கள் 18 நூட்களை வெளியிட்டோம். அதன் பிறகு எங்களுடைய விவசாயிகளே நிறைய கண்டுபிடிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் கண்டுபிடித்ததை நாம் ஏன் வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் அந்த ஆர்வத்தின் காரணமாக நாங்கள் தாழாண்மை என்ற பத்திரிகையைத் தொடங்கினோம். அந்தப் பத்திரிகை 12 ஆண்டுகளாக தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அது விளம்பரமே இல்லாத ஒரு இதழ். அதில் இயற்கை விவசாயியின் அனுபவங்கள், மாற்று வாழ்வியல், கட்டிடம் அது பற்றின செய்திகளைக் கொடுக்கிறோம்.
இதைத் தவிர இந்த இயற்கை விவசாயத்தில் ஈடுபடக்கூடிய உழவர்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான ஒரு ஏற்பாட்டை செய்து வைத்திருக்கிறோம். 15 ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தீர்கள் என்றால் நகர் முழுவதும் நல்ல விழிப்புணர்வு வந்திருக்கிறது. என்னவென்றால் இயற்கை வேளாண்மையில் விளைந்த பொருட்களை சாப்பிட்டால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அதனால் இதற்கான ஒரு தேவை அதிகமாகியிருக்கிறது. அந்தத் தேவையை நிறைவு செய்வதற்கான ஒரு பகுதியாக எங்களுடைய உழவர்களுடைய உற்பத்திப் பொருட்களை ஓரளவு நியாயமான விலைக்கு விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்கிறோம். இதுதவிர அரசாங்கத்தின் கொள்கை மாற்றங்களுக்காகவும் தொடர்ந்து போராடுகிறோம், கருத்தரங்கு நடத்துகிறோம், அந்த கருத்தரங்கு மூலமாக அரசாங்கத்திற்கு கோரிக்கைகள் வைக்கிறோம், பரிந்துரைகள் செய்கிறோம். இவையெல்லாம் செய்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை எடுக்கிறோம். குறிப்பாக மரபணு மாற்ற விதைகள் என்று சொல்லக்கூடிய genitically modified seeds விதைகளை எதிர்த்து நடத்தக்கூடிய இயக்கங்களில் பங்கேற்கிறோம். அதைத்தொடர்ந்து உழவர் மத்தியில் விழிப்புணர்வு எற்படுத்தி வருகிறோம். இப்படித்தான் எங்களது வேலைகளை செய்து வருகிறோம்.
கேள்வி: மண்ணையும் பயிரையும் கெடுக்கின்ற ரசாயன உரத்திற்கு மாற்றாக இருக்கும் இயற்கை உரங்கள் எவை? அதன் பயன்பாடு என்ன?
பதில்: பொதுவாக உலகத்தில் எந்தத் தொழில் லாபகரமானது என்று பார்த்தீர்கள் என்றால் வேளாண்மை என்றுதான் நான் சொல்லுவேன். ஆனால் அடிப்படையில் விவசாயிகள் ஏழைகளாக இருக்கின்றார்கள். இது ஒரு முரண்பாடு. ஒரு நெல் போட்டீர்கள் என்றால் ஆயிரம் நெல் வரும். ஆனால் ஒரு கிலோ பிளாஸ்டிக்கை போட்டு நீங்கள் வெளியில் எடுத்தீர்கள் என்றால் ஒரு கிலோ பிளாஸ்டிக் வராது ஒரு கிலோவுக்கும் குறைவாகத்தான் வரும். ஆனால் ஒரு பிளாஸ்டிக் பொருளை உற்பத்தி செய்பவன் லாபகரமாக தன்னுடைய பொருளுக்கு விலை வைக்கிறான். ஆனால் விவசாயி தான் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு விலை வைக்கமுடியாது. ஏனென்றால் இந்தியாவில் இருக்கக்கூடிய விவசாயிகளின் வாழ்க்கைச்சூழல் என்பது அவர்களை ஒரு இக்கட்டான நிலைமைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. குறிப்பாக உழவர்களுடைய சிக்கல்களை நான்கு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். முதலில் விவசாயிகள் தற்சார்பை இழந்துவிட்டார்கள். ஒரு அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உழவர்களுடைய வாழ்க்கை என்பது தற்சார்பு உள்ள வாழ்க்கையாக இருந்தது. சந்தை நோக்கி உற்பத்தி பண்ண மாட்டார்கள். தன்னுடைய வீட்டிற்கு தன்னுடைய சுற்றத்திற்கு, தன்னுடைய ஊருக்கு அதற்குப் பிறகுதான் வெளியே அதனடிப்படையில் தற்சார்புள்ள சமூகமாக இந்த உழவர் சமுதாயம் இருந்தது. ஆனால் எப்பொழுது பசுமைப் புரட்சி இங்கு அறிமுகப்படுத்தப்பட்டதோ அப்பொழுது சந்தையை நோக்கி உற்பத்தி செய்ய வைத்தார்கள். அப்பொழுது சந்தைக்காக உற்பத்தி பண்ணுவது, சந்தை நோக்கி உற்பத்தி பண்ணுவது என்பது அவர்களுடைய தற்சார்வை இழக்க காரணமாகிவிட்டது. அதனால் அவர்கள் முதலில் விதைக்கும் இரசாயன உரங்களுக்கும், தொழில்நுட்பத்திற்கும் பிறரை நம்பி இருக்க வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டது.
குறிப்பாக பாரம்பரிய விதைகள் அல்லது மரபு விதைகள் என்பது வறட்சியைத் தாங்கியிருக்கும், நோய் எதிர்ப்பு கொண்டது. ஆனால் பின்னாளில் பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்திய விதைகளைப் பார்த்தீர்கள் என்றால் அதில் நோய் எதிர்ப்புத் திறன் இருக்காது, பூச்சி எதிர்ப்பு இருக்காது, வறட்சியைத் தாங்காது ஆனால் அதிகமான விளைச்சல் தரும் என்று சொன்னார்கள். ஆனால் நாட்டு ரகங்களில் பாரம்பரிய ரகங்களிலேயே இரண்டு வகை இருக்கிறது. அதிகமான விளைச்சல் தரக்கூடிய ரகங்கள், குறைவான விளைச்சல் தரக்கூடிய ரகங்கள், வறட்சியைத் தாங்கக்கூடிய ரகங்கள் என்று பல பிரிவுகள் உண்டு. ஆனால் இவர்கள் நமக்கு என்ன சொல்லிக்கொடுத்தார்கள் என்றால் சோதா விதைகளை வீரிய விதைகள் என்று அறிமுகப்படுத்தினார்கள் இது ஒரு பக்கம், இந்த விதைகள் முழுக்க முழுக்க இரசாயன உரங்களை நம்பி, அதிகமான தண்ணீரை நம்பி இருக்கக்கூடிய விதைகளாக இருந்தது. இதன் விளைவாக ரசாயன உரங்களை கடைகளில் வாங்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.
முன்பு மாடு வைத்திருந்தார்கள் அந்த மாட்டில் இருந்து வரக்கூடிய சாணத்தை எடுத்து அதை உரமாக மாற்றி எருவாக மாற்றி அதைத் தொடர்ந்து பயன்படுத்தினார்கள். அதன் காரணமாக அவர்கள் வெளியிலிருந்து எந்த காசு கொடுத்தும் உரமோ எதுவோ வாங்கத் தேவையில்லை. ஆனால் ரசாயன உரங்கள் வாங்கவேண்டிய சூழல் வந்த பொழுது இவர்களுடைய வருமானம் முழுவதும் ரசாயன உரத்திற்கும், விதைக்கும், தொழில்நுட்பத்திற்கும் போக ஆரம்பித்தது. தொழில் நுட்பம் கூட பார்த்தீர்கள் என்றால் எந்த நோய் வந்தால் எந்த பூச்சி வந்தால் என்ன செய்யலாம் என்று மக்களிடம் இருந்த அறிவு, இப்பொழுது ஒரு சில அறிவியல் அறிஞர்களிடம் போய் மாட்டிக்கொண்டது. அதன் விளைவாகவும் அவர்கள் தற்சார்பை இழந்தார்கள். இரண்டாவது சிக்கல் பார்த்தீர்கள் என்றால் உழவர்களுடைய வாழ்க்கை என்பது ஓர் உதிரித் தன்மை கொண்டது. இப்பொழுது பார்த்தீர்கள் என்றால் ஆசிரியர்கள் எல்லோரும் சேர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள் ஆனால் அவர்ளைப் பிடித்து சிறையில் போட்டால் கூட பாதிக்கப்படுவது மாணவர்கள். மருத்துவர்கள் எல்லாரும் சேர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் பாதிக்கப்படுவது நோயாளிகள். ஆனால் ஒரு விவசாயி போராட்டத்தில் உழவர்களைப் பிடித்து சிறையில் வைக்கும் பொழுது அவர்களுடைய மாட்டுக்குத் தண்ணீர் வைக்க ஆள் இருக்கமாட்டார்கள், அவர்களுடைய வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச ஆள் இருக்க மாட்டார்கள். அப்பொழுது அவர்கள் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு எந்தவிதமான உத்திரவாதமும் கிடையாது. அப்பொழுது சேர்ந்து போராடினால்தான் ஒரு ஜனநாயகத்தில் ஜெயிக்க முடியும். இப்பொழுது 51 பேர் சேர்ந்து 49 பேரை முட்டாள் என்று சொல்லலாம் அதுதான் ஜனநாயகம் என்று வேடிக்கையாக சொல்வார்கள். அதனடிப்படையில் இவர்கள் சேர்ந்து போராட முடியாத வாழ்க்கைச் சூழல் இருப்பதாலேயே இந்திய ஜனநாயகப் பெருநாடு இந்த உழவர்களுக்கான சட்டத்தையோ திட்டத்தையோ வகுப்பது இல்லை. அதன் விளைவாகத்தான் அவர்கள் மேலும் மேலும் சுரண்டப்படுகிறார்கள்.
அடுத்தது கடைசியான சிக்கல் என்னவென்றால் இந்த உழவர்களுடைய உற்பத்திப் பொருளுக்கான சந்தை அவர்கள் கையில் கிடையாது. மற்ற எல்லா பொருளுக்கும் பார்த்தீர்கள் என்றால் சந்தை என்பது மற்றவர் கையில் இருக்கிறது. ஆனால் உழவர்களுக்கு சந்தை கையில் இல்லை, அரசாங்கத் திட்டங்களும் உழவர்களுக்காக இல்லை. அந்த அடிப்படையில்தான் தற்சார்பான ஒரு தொழில்நுட்பத்தை வேண்டுகிறோம். அந்தத் தொழில்நுட்பத்திற்கு அடிப்படை இயற்கை வழி வேளாண்மை. மாடு கையில் இருந்தால் போதும், ஆடு இருந்தால் போதும், சிறிது கோழி இருந்தால் போதும். அதிலிருந்து வரும் கழிவுகளை எவ்வாறு நாம் சிறந்த உரமாக மாற்றுவது, என்ற அந்தத் தொழில் நுட்பத்தை நாங்கள் சொல்லித் தருகிறோம். அதனடிப்படையில் ஒரே ஒரு மாட்டை வைத்துக்கொண்டு ஐந்து ஏக்கருக்கான உரத்தை எவ்வாறு உற்பத்தி பண்ணுவது என்ற எளிமையான தொழில் நுட்பத்தை சொல்லித் தருகிறோம்.
எடுத்துக்காட்டாக ஒரு மாடு ஒரு நாளைக்கு சராசரியாக பத்து கிலோ சாணம் போடும். அந்த சாணத்தை 1:30 என்ற கணக்கு இருக்கிறது. 1க்கு 30 என்ற கணக்கு இருக்கிறது 1 கிலோ விலங்கு கழிவை சாணம் கோமியத்தை 30 கிலோ தாவரக் கழிவை நீங்கள் மக்கிய உரமாக மாற்றலாம். 1க்கு 30 என்னும் பொழுது 10 கிலோ சாணத்தை ஒரு நாளைக்கு 300 கிலோ தழைகளை நீங்கள் மக்கு உரமாக மாற்றலாம். ஆண்டுக்கு 90,000 கிலோ தழைகளை மக்க வைக்கலாம். அதில் 3ல் 1 பங்கு மக்கு எருவாக நமக்குக் கிடைக்கும் அது 30 டன். ஒரு ஏக்கருக்கு 5 டன் போதுமானது. 30 என்பது நமக்கு உபரியாக இருக்கும். ஒரு ஏக்கர் வைத்துக்கொண்டு 5 டன் பயன்படுத்தினார் என்றால் மீதம் 25 டன்னை சந்தையில் நாம் பண்ணையில் விற்கலாம். அந்த சந்தையின் விலை என்னவென்றால் சராசரியாக 5 ரூபாய்க்குப் போகிறது. கிட்டத்தட்ட 1 ½ லட்சம் ரூபாய் மாட்டுச் சாணத்திலிருந்தே கிடைக்கிறது. கோமியத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் ஒரு லிட்டர் கோமியத்தில் 10 லிட்டர் தண்ணீரை கலந்து தெளிப்பான் மூலம் தெளித்தீர்கள் என்றால் யூரியா போட வேண்டிய தேவை இல்லை. யூரியா என்ற தலைச்சத்து பார்த்தீர்கள் என்றால் காற்றில் 78 சதவிகிதம் இருக்கிறது.
இந்த பூமி பந்தானது நைட்ரஜன் கடலில் மிதந்து கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். ஒரு ஏக்கர் நிலத்திற்கு மேல் ஒரு 1700 மூட்டை யூரியா அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த யூரியாவை நாம் பயன்படுத்துவதற்கு சொல்லித்தராமல் கடையிலிருந்து வாங்கிப்போடச் சொல்லி நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். காற்றில் இருக்கக்கூடிய தழைச்சத்தான 78 சதவிகிதம் நைட்ரஜனை செடிகளுக்கு ஏற்றமாதிரி எடுத்துத் தருவது மண்ணிலிருக்கக்கூடிய பாக்டீரியாக்கள் நுண்ணுயிர்கள். ரைசோபியம், அசட்டோ பாக்டா இப்படி பல வகையான நுண்ணுயிர்கள் இருக்கிறது. இந்த நுண்ணுயிர்களை மண்ணில் பெருக்க வைக்கவேண்டும். அதை பெருக்குவதற்கு என்ன செய்யவேண்டும் என்றால் தாவரக்கழிவையும் விலங்கு கழிவையும் மண்ணில் சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அது சேர்ப்பதற்கான தொழில் நுட்பங்களை நாம் சொல்கிறோம். மக்கு செய்தல், பலபயிர் சாகுபடி அதாவது ஒரு ஏக்கரில் 20 கிலோ விதை எடுத்து அதை விதைத்து அதை வளர்த்து அறுபது நாள் கழித்து மடக்கி உழுதுவிட்டீர்கள் என்றால் அந்த நிலம் பஞ்சு போல மாறிவிடும். இதிலிருந்து நிறைய நுண்ணுயிர்கள் பெருகும். அந்த நுண்ணுயிர்களை எடுத்துக்கொண்டு அந்த செடி ஆரோக்கியமாக வளரும், நோய் தாக்குதல் குறைவாக இருக்கும். இலைவழி ஊட்டமாக, வேர்வழி ஊட்டமாக கொடுப்பதற்கு சாணம், கோமியம், சர்க்கரை, கழிவான மீன்கள், கழிவான கோழிகள் இப்படி எல்லா கழிவுகளையும் பயனுள்ள மக்காக மாற்றுவதற்கும் கரைசலாக மாற்றுவதற்கும் நாம் சொல்லித்தருகிறோம். அந்த அடிப்படையில் தொடர்ந்து உழவர்கள் வெற்றியை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார்கள். இயற்கை வேளாண்மை என்பது கடினமான காரியம் கிடையாது, எளிமையான காரியம் அதை புரிந்து கொள்வதற்கான அடிப்படை அறிவை அவர்களுக்குக் கொடுத்தாலே போதுமானது. உழவர்கள் நிறைய புதிது புதிதாக நிறைய கண்டுபிடிப்பார்கள்.
கேள்வி: தாங்கள் தொடங்கியிருக்கும் அடிசில் சோலை என்ற இந்த இயற்கை விவசாய பண்ணையில் விவசாயிகளுக்கு விவசாயம் சார்ந்து என்னென்ன பயிற்சிகள் கொடுக்கிறீர்கள்?
பதில்: அடிசில் என்றால் உணவு, சோலை என்றால் காடு அல்லது பூங்கா என்று வைத்துக்கொள்ளலாம். ஆங்கிலத்தில் சொல்லவேண்டும் என்றால் Food Forest என்று சொல்லலாம். இந்த அடிசில் சோலை என்ற சொல் சங்க இலக்கியத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் அடிசில் சோலை என்று பெயர் வைத்தோம். இது தொடங்கி மூன்றாண்டுகளுக்குள் தான் வருகிறது. இருபது ஆண்டுகளாக முள் காடுகளாக இருந்த எந்த விதமான வேளாண்மையும் செய்யப்படாத நிலம். இந்த நிலத்தை எடுத்து முறைப்படுத்தி ஒரு நீடித்த நிலைபெற்ற சாகுபடி என்று சொல்லக்கூடிய முறையை நாங்கள் செயல்படுத்துகிறோம். அங்கு மீன்வளர்ப்பு, கோழிவளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, காய்கறி வளர்ப்பு, டிம்பர் மரங்கள் இதுதவிர அங்கு இருக்கக்கூடிய பூச்செடிகள் இப்படி ஒருங்கிணைந்த பண்ணையைத்தான் நாங்கள் முயற்சி பண்ணிக்கொண்டு இருக்கிறோம். இன்னும் முழுமையாவதற்கு ஓராண்டுகளாகும். இப்பொழுது ஓரளவிற்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். வீட்டுத்தோட்டங்கள் அமைப்பது எப்படி?, இயற்கை வேளாண்மையில் அடிப்படையான தொழில் நுட்பங்கள் எப்படி?, மக்கு வேகமாக செய்வது?, எப்படி கழிவுகளை கரைசல்களாக மாற்றுவது?, எப்படி மாட்டுக்கோமியத்தை வளமூட்டுவது? இப்படி பல்வேறு விதமான தொழில்நுட்பங்களுக்கான பயிற்சி கொடுக்கிறோம். இந்த பயிற்சி மூலமாக நிறைய உழவர்கள் ஆங்காங்கு போய் செய்கிறார்கள். அவர்கள் மறுபடியும் நம்முடன் தொடர்பு கொள்கிறார்கள். இதை எப்படி மேம்படுத்துவது என்று கேட்கிறார்கள். இது ஒரு தொடர்ந்து இயக்கமாக சென்று கொண்டிருக்கிறது.
கேள்வி: இயற்கை விவசாயம் பெருக தாங்கள் கூறும் அறிவுரை என்ன?
பதில்: பொதுவாக இயற்கை விவசாயம் என்பதை எப்படி புரிந்துகொள்வது என்றால் இதை நம்முடைய பண்டைய வேளாண்மை முறையிலிருந்து இன்று இருக்கக்கூடிய பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புக் கூறுகளை இணைத்து ஒரு கட்டமாக போவதுதான் நவீன இயற்கை வேளாண்மை Modern Organic Formic என்று சொல்லலாம். பாரம்பரியமான அறிவு நமக்கு அதிகம். ஆறாயிரம் ஆண்டு பழமையான வேளாண்மை முறை நம்மிடம் இருந்தது. இங்கு வந்துதான் எப்படி அணை கட்டவேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கற்றுக்கொண்டனர். 1863 வரையிலும் ஓடுகிற தண்ணீரில் அணைகட்டத் தெரியாது, கரிகாலன் கட்டிய கல்லணையைப் பார்த்துத்தான் எப்படி அணை கட்டவேண்டும் என்று கற்றுக்கொண்டார்கள். அந்த மாதிரி பல தொழில் நுட்பங்கள் நம்மிடம் இருந்தது. “தொய்யாது வித்திய துளர்படு துடவை” என்று சொல்வார்கள் சங்க ஏற்பாடுகளில் குறிஞ்சி நிலத்தில் சொல்கிறார்கள். தொய்யாது என்றால் உழாது, வித்திய என்றால் விதைத்த, துளர்படு துடவை என்றால் இந்த மாதிரி வயல்கள் இருந்த இடம் குறிஞ்சி நிலம் என்று பதிவு இருக்கிறது நமக்கு. இன்று மசானாஃபுகோகா என்ற ஜப்பான் விஞ்ஞானி ஒன்றும் செய்யா வேளாண்மை (do nothing for me) என்று சொல்கிறார். அந்த வேளாண்மை முறையை நம்முடைய முன்னோர்கள் மிக எளிமையாக செய்திருக்கிறார்கள். அதேபோல் மீனும் நெல்லும் சேர்த்து வளர்க்கிற முறை, தாதறு மன்றங்கள் composed yard அது நம்மிடம் இருந்திருக்கிறது. இந்த மாதிரி பல தொழில் நுட்பங்கள் நம்முடைய முன்னோர்கள் கையில் இருந்தது. அதை நாம் எடுத்துக்கொண்டு இன்றைக்கு இருக்கிற அறிவியல் கூறுகளை இணைத்துக்கொண்டு செல்கிறோம். ஆனால் இதன் அடிப்படை என்னவென்றால் தற்சார்பை நோக்கி போவது.
ரசாயன வேளாண்மை எடுத்துக்கொண்டால் அதிலிருக்கக்கூடிய அடிப்படை கூறுகள் ரசாயன உரங்கள், வீரிய விதைகள் இவையெல்லாமே ஒரு விவசாயியை தற்சார்பு இல்லாதவனாக மாற்றுவது. இந்த வேளாண்மையின் அடிப்படை கூறுகள் என்றால் தற்சார்பு உள்ளவர்களாக உழவர்களை மாற்றுவது. அதன் மூலமாக அவர்கள் சொந்தக் காலில் நிற்க சொல்லித்தருகிறோம். இதைத்தான் நாங்கள் தாழாண்மை என்று சொல்கிறோம். தாழ் என்பது கால், ஆண்மை என்பது Management தாழாண்மை என்பது சொந்தக் காலில் நிற்பது. தாழாண்மை இல்லாதார் வேளாண்மை வாளாண்மை போலக் கெடும் என்று வள்ளுவர் சொல்கிறார். தற்சார்பு இல்லாமல் ஒருவர் விவசாயம் செய்யப்போவது சண்டைபோடத் தெரியாதவன் வாளெடுத்து சண்டைபோடுவது மாதிரி. எதிரி அந்த வாளைப் பிடுங்கி நம்மை வெட்டிப்போட்டுவிடுவான். அதனால் தாழாண்மையோடு நீங்கள் விவசாயம் செய்யும் பொழுது நாம் வெற்றி ஈட்டலாம்.
கேள்வி: சிறுதானியத்தை விளையவைத்து சந்தைப்படுத்துகிறீர்கள், சிறுதானியங்களை விளைவிக்க முக்கிய நோக்கம் என்ன? அதனை பயன்படுத்துவதனால் நமக்கு எந்த மாதிரியான பயன்கள் உண்டாகிறது?
பதில்: சிறுதானியங்கள் என்று சொல்வதை விட இதனை அறுந்தானியம் என்று சொல்லவேண்டும். இதனை ஆங்கிலத்தில் Miner millet என்று சொல்கிறார்கள். மாங்குடி கிழார் என்கிற புலவர் புறநானூற்றில் ஒரு இடத்தில் சொல்கிறார், உணவெல்லாம் எது? தெய்வங்கள் எல்லாம் எது? என்று சொல்லும் போது நடுகற்கள்தான் சிறந்த தெய்வம் என்று இருங்கால் வறகே, கருங்கால் திணை, பொறிகிளார் அவரை என்று முக்கியமாக மூன்றை சொல்கிறார். திணை, வரகு இந்த இரண்டும்தான் சங்க இலக்கியங்களில் பெரும்பாலான இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இதன் துணையாக குதிரைவாலி, பனிவரகு, சாமை இப்படி சிறிய சிறிய தவசங்கள் நம்மிடம் இருந்தது. இந்த தவசங்களின் சிறப்பு என்னவென்றால் இன்றைக்கு புவி வெப்பமாகிவிட்டது என்று சொல்கிறோம். அதற்கான காரணம் என்னவென்றால் மாசுபாடு அடைந்துவிட்டது, அதிகமான நீரை சுரண்டிவிட்டோம், பெரிய நீராதாரங்கள் எல்லாம் அழிந்துவிட்டது. இதற்கெல்லாம் மாற்று எங்கு உள்ளது என்றால் இந்த சிறுதானியங்கள் என்று சொல்லக்கூடிய அறுந்தானியங்களில்தான்.
நெல் விளைவிப்பதை விட சிறுதானியங்களுக்கு கிட்டத்தட்ட 18ல் 1 சதவிகிதம் தண்ணீர் போதுமானது. அதன் பிறகு இவை மானாவாரியாக வந்துவிடும். இதற்கு எந்த விதமான ரசாயனமும் தேவையில்லை, களையெடுப்பது கூட தேவையில்லை. களையெடுக்காமல் கூட சிறுதானியங்களை விளைவிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் இதில் இருக்கக்கூடிய சத்துக்கள் என்று எடுத்துக்கொண்டீர்கள் என்றால் குதிரைவாலியில் கோதுமையை விட நார்ச்சத்து ஆறுமடங்கு இருக்கிறது. தினை என்று எடுத்துக்கொண்டால், சோயா பீன்சுக்கு இணையாக தினையில் இருக்கக்கூடிய புரதத்தை சொல்லலாம். அதனால்தான் நம் முன்னோர்கள் தேனும் தினையும் முருகனின் படையலாக வைத்தார்கள். ஏனென்றால் குழந்தைகளுக்கு உடம்பில் ஊட்டச்சத்து இருக்க வேண்டும். உலகம் முழுவதும் இந்தியாவில் 46 சதவிகிதம் குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் எடுத்துக்கொண்டால் 26 சதவிகித குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால் நம்முடைய உணவு முறை மாறிவிட்டது.
அதே போல வரகை எடுத்துக்கொண்டால் நீரிழிவு நோய்க்கு மிகச்சிறந்த அறுமருந்தாக வரகுதான் இன்று சொல்லப்படுகிறது. மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அதனாலேயே அதற்கு ஒரு பெரிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் சாமை இதில் குறிப்பாக வெறும் புரோட்டீன், கார்போஹைட்ரேட் என்றில்லாமல் நிறைய தாது உப்புக்கள் இருக்கிறது, நிறைய என்சைம்கள் இருக்கிறது, நொதிநீர்கள் இருக்கிறது. இது எல்லாமே உடம்பில் நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கக்கூடியது. ஆக தண்ணீர் செலவு குறைவு, சாதாரண விவசாயிகள் உற்பத்தி செய்யலாம், இரண்டாவது இதில் சத்துக்கள் அதிகம், இப்படி எந்த வகையில் பார்த்தாலும் சரி இந்த சிறுதானியங்கள் என்று சொல்லக்கூடிய அறுந்தானியங்கள் மக்களுக்கு மிக மிக ஏற்றது.
இந்த சிறுதானியங்கள் 500 ஏக்கர், 1000 ஏக்கர் என்ற பெரும் பண்ணைகளுக்குத் தேவையில்லாதது. சாதாரணமாக 2 ஏக்கர் 1 ஏக்கர் வைத்திருக்கக்கூடிய மானாவாரி விவசாயிகளுக்கு வளமூட்டக்கூடிய ஒரு வகையான தவசம். அந்த அடிப்படையில்தான் இதனை எடுத்து பரப்பவேண்டும் என்று நினைத்தோம். 2007 மற்றும் 2008ல் இதனைப் பற்றிய புரிதலே இல்லாமல் இருந்தது தமிழகத்தில். தொடர்ந்து நாம் பத்திரிகையில் எழுதுவது, கூட்டங்கள் போடுவது, விழிப்புணர்வை எற்படுத்துவது இவையெல்லாம் செய்த பிறகு இன்றைக்கு மிகப்பெரிய சந்தை ஏற்பட்டிருக்கிறது. இன்று எங்கு பார்த்தாலும் சிறுதானியம் சிறுதானியம் என்கிற பேச்சு அடிபடுகிறது. இதனை வளர்த்ததில் நம்முடைய பங்கு முக்கியமானது அதனை நாம் மறுக்க முடியாது. அதன் அடிப்படையில்தான் இந்த சிறுதானியங்களைத்தான் வேகமாக எடுத்துக்கொண்டு செல்லவேண்டும் என்று சொல்கிறோம்.
கேள்வி: மரபணு காய்கறிகளும் பழங்களும் பெருகிவிட்ட இந்த சூழலில் இவை மரபணு காய்கறிதான், மரபணு பழம்தான் என்று எப்படி அதனை அடையாளம் கண்டுகொள்வது? அதனை உண்பதால் எவ்வகையான பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படுகிறது?
பதில்: மரபணு என்ற சொல்லே தப்பான சொல். என்னவென்றால் மரபீனி அது. ஜீன் என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். ஜீன் என்கிற சொல் தமிழ்ச்சொல் எப்படியென்றால் ய-என்பது ஜ-வாக மாறும், பிரெஞ்சுக்கு போகும் பொழுது கிரேக்கத்திற்குப் போகும் பொழுது மாறும். யீன்றால் பசிகான்பராயினும் யீனுதன் என்றால் இனம் அந்த சொல்தான் அங்கு ஜீனாக மாறியிருக்கிறது. ஈன் என்பதுதான் அந்த சொல். மரபுக் கூறுகளை ஈனுவதால் அதனை மரபீனி என்று சொல்கிறோம். மரபணு என்று சொல்லும் பொழுது ஆட்டமாகிவிடும். அணு என்றால் ஆட்டம், இது வேறு ஜீன் வேறு. இதன் அடிப்படையை நாம் புரிந்துகொள்ளவேண்டும் ஒன்று.
இரண்டாவது இந்த மரபணு மாற்றப் பயிர்கள், மரபணு மாற்ற விதைகள் என்கிற தொழில் நுட்பம் மான்சோன்டா போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் இதனை ஊக்குவிக்கிறார்கள். ஏனென்றால் இதனுடைய அடிப்படை என்னவென்றால் உலகத்திலேயே மிகப்பெரிய சந்தை உணவுக்கு, அடுத்து இருப்பது விதைதான். இந்த விதைச்சந்தையை நீங்கள் கைப்பற்றிக்கொண்டீர்கள் என்றால் ஒரு நாட்டினுடைய வேளாண்மையைத் தீர்மானிக்கிற அளவிற்கு ஆற்றல் வரும். எடுத்துக்காட்டாக இந்த விதைகளை தன்னுடைய தொழில்நுட்பமாக கையில் வைத்துக்கொண்டு Intellectual Property right என்று ஒன்று இருக்கிறது அதாவது அறிவுச் சொத்துரிமை. அந்த சட்டத்தின் கீழாக யாரும் இந்தத் தொழில் நுட்பத்தைத் தெரிந்துகொள்ளமுடியாது.
எடுத்துக்காட்டாக இந்தியாவில் தக்காளி விளைவிக்க வேண்டும், மக்களுக்கு தக்காளி கொடுக்க வேண்டும் என்றால் இந்தத் தக்காளி விதை அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இந்தத் தக்காளி விதையை இந்தியாவிற்குத் தரமாட்டேன் பிரேசிலுக்குத்தான் கொடுப்பேன், பிரேசிலில் தக்காளி விளையட்டும், இந்தியாவில் கத்தரி விளையட்டும் என்று முடிவு செய்தார்கள் என்று அந்த நிறுவனம் நினைத்தால் நடத்தலாம். எனவே நம் விதை இறையாண்மை என்பது நம்மை விட்டு போய்விடும். இந்த மரபீனி மாற்றப்பட்ட விதைகள் எந்த வகையான உடல் நலக்கேடுகளை உருவாக்குகிறது என்பதற்கு பல அறிக்கைகள் வந்திருக்கிறது. இதனை எலிக்குக் கொடுத்துப் பார்த்திருக்கிறார்கள், அது பல்வேறு நோய்களுக்கு இலக்காகியிருக்கிறது. ஆந்திராவில் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட இலைகளை சாப்பிட்ட ஆடுகளுக்கு நோய் வந்திருக்கிறது, அது இறந்தும் போயிருக்கிறது. இதெல்லாம் கணக்கில் எடுக்கவில்லை.
இதுவரையில் பொதுவாக எப்படி விதைகளை பரிமாற்றம் செய்கிறோம் என்றால் இதனை கலப்பின விதைகள் என்று சொல்வார்கள். வளமான இடத்தில், தண்ணீர் நிறைய இருக்கக்கூடிய இடங்களிலிருந்து விதையை எடுத்து வருவார்கள், கடுமையான வறட்சியில் விளையக்கூடிய விதைகளை எடுத்து வருவார்கள், இதனை கலப்பினம் செய்து வறட்சியைத் தாங்கக்கூடிய விளைச்சல் அதிகமாகத் தரக்கூடிய விதையை உருவாக்குவார்கள். எடுத்துக்காட்டாக மாமரத்துக்குள்ளேயே நடக்கும் இந்த ஒட்டு, நெல்லுக்குள்ளேயே நடக்கும், ஆனால் Genetic Seeds என்பது BTBacillus thuringiensis என்று சொல்லக்கூடிய நுண்ணுயிரியிலிருந்து எடுக்கக்கூடிய மரபீனியை பருத்திக்குள்ளே செலுத்துகிறார்கள், கத்தரிக்குள் செலுத்துகிறார்கள். இதன் மூலமாக ஒட்டு மொத்த செடியையுமே அவர்கள் நஞ்சாக்குகிறார்கள். அதை சாப்பிடக்கூடிய புழுக்கள் சாகிறது என்று சொல்கிறார்கள். அப்படி அந்தப் புழுக்கள் சாகும் பொழுது அடுத்த கட்டமாக அந்த புழுக்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வீரியமிக்கதாக மாறும். எப்படி பூச்சிக்கொல்லிகளை தாங்கு திறன் பெற்றதோ பூச்சிகள் அது போல இந்த மரபீனி மாற்றம் செய்யப்பட்ட பருத்தியையோ கத்திரி செடியையோ தொடர்ந்து சாப்பிடும் பொழுது அந்த பூச்சிகள் தாங்கு திறன் பெற்றுக்கொண்டே வரும். அந்த அடிப்படையில்தான் கிரிஸ்டல் 1 என்ற ஒன்றைக் கொண்டுவந்தார்கள், இப்பொழுது கிரிஸ்டல் 2 என்பதை கொண்டுவந்திருக்கிறார்கள். இது ஒரு கட்டத்தில் மிக வேகமா பூச்சியினுடைய எதிர்ப்பாற்றலை வளர்த்துக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் பூச்சி எல்லாரையும் சாப்பிட்டுவிடும். நாம் ஆங்கிலத்திரைப்படத்தில் வருவது போல ஒரு மிகப்பெரிய சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். உடல்நல ரீதியாக நம்முடைய விதை இறையாண்மை ரீதியாக, சூழலியல் ரீதியாக பார்த்தீர்கள் என்றால் எல்லா வகையிலுமே மரபீனி மாற்றப்பட்ட விதைகள் என்பவை மிக மிக ஆபத்தானவை. அதனால்தான் அதை நாம் தொடர்ந்து எதிர்க்கிறோம்.
மரபீனி மாற்றப்பட்ட காய்கறிகளையோ பழங்களையோ கண்டுபிடிக்கவும் முடியாது. பெரிய சிக்கல் என்னவென்றால் இரண்டு கத்தரிக்காயும் ஒரே மாதிரிதான் இருக்கும். மரபீனி மாற்றம் செய்யப்பட்டதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள முடியாது. நாம் சாப்பிடுகிற உணவு பாதுகாப்பான உணவா என்பது நமக்கே தெரியாது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் இன்னும் பருத்திக்கு மட்டும்தான் அனுமதித்திருக்கிறார்கள். மற்ற பயிர்களுக்கு அனுமதிக்கவில்லை. ஆனால் பருத்தியே பார்த்தீர்கள் என்றால் பருத்திப்பால் குடிப்பது, பருத்தி கொட்டையை மாட்டுக்கு வைப்பது இதெல்லாமே உணவுப்பொருட்கள் தான் ஒருவகையில். இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் பருத்தி என்பது உணவு வகை அல்ல அதனால்தான் நாங்கள் அனுமதித்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள் ஆனால் அது உண்மையல்ல. அதுவும் ஒரு உணவுப் பயிர்தான் ஒரு வகையில், மறைமுக உணவுப் பயிர்தான். இப்பொழுது கத்தரிக்காய்க்கும் மற்ற உணவுப் பயிருக்கும் நாங்கள் கள ஆய்வுக்கு கதவு திறந்துவிடப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் இது மிக மிக ஆபத்தானது. பல ஐரோப்பிய நாடுகளில் இதை தடை செய்திருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய பல நாடுகள் மட்டும்தான் இதை அனுமதித்திருக்கிறார்கள். அதனால் இன்னும் நம்முடைய வேளாண்மையும் நம்முடைய விதையும் பன்னாட்டு நிறுவனம் கையில் போகாமல் இருப்பதற்கு நாம் தொடர்ந்து போராடியாக வேண்டியிருக்கிறது.
கேள்வி: இறுதியாக தமிழக விவசாயிகளுக்கு தாங்கள் கூறும் அறிவுரை என்ன?
பதில்: இனிமேல் வழக்கமாக நாம் செய்யும் வேளாண்மை முறை வெற்றி பெறாது. ஏனென்றால் எல்லா வகையிலும் நம்முடைய வேளாண்மையை சிதைத்திருக்கிறார்கள். புதிய பார்வை நமக்கு தேவையிருக்கிறது. குறிப்பாக வேளாண்மை என்பது பருவத்திற்காக மட்டும் (seasonal work)இருக்க முடியாது. ஆண்டு முழுவதும் நமது பண்ணையில் வேலை நடக்க வேண்டும். வெறும் விவசாயமாக இல்லாமல் அதை பண்ணையமாக மாற்றவேண்டும். 365 நாட்களும் தொடர்ந்து நமது பண்ணையில் வேலை நடக்க வேண்டும். ஆடு வளர்க்கவேண்டும், கோழி வளர்க்கவேண்டும், மாடு வைத்துக்கொள்ள வேண்டும், அங்கு இருக்கும் கழிவுகளை மக்கு உரமாக மாற்றவேண்டும், அதை எடுத்து காய்கறிக்குப் போடவேண்டும். விளையும் காய்கறிகளை எடுத்து நீங்களே சந்தைப்படுத்தவேண்டும், சந்தைப் படுத்துவதும் நம் கையில் வரவேண்டும். பெரிய சந்தை நாம் பண்ண முடியாது, அண்டை சந்தைகளை நோக்கி போக வேண்டும். குறிப்பாகப் பார்த்தீர்கள் என்றால் ஒரு சிறு விவசாய பண்ணை.
ஒரு இளைஞர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வருகிறார் என்றால் ஒரு 2 ஏக்கரோ 3 ஏக்கரோ நிலம் இருக்கிறது என்றால், அந்த 3 ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியில் 25 சென்ட்டில் காய்கறி போட்டுக்கொள்ள வேண்டும். 10 சென்டில் பண்ணைக்குட்டை வெட்டிக்கொள்ளவேண்டும் அந்த பண்ணைக்குட்டையில் மீன் வளர்த்துக்கொள்ள வேண்டும். அந்த மீன் தண்ணீரை எடுத்து கொண்டுவந்து நேரடியாக காய்கறிக்கோ மரப்பயிர்களுக்கோ பாய்ச்ச வேண்டும். 10 ஆடு வைத்துக்கொள்ள வேண்டும், 2 மாடு வைத்துக்கொள்ள வேண்டும், பிறகு 500 கோழி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கோழியிலிருந்து மட்டுமே ஆண்டுக்கு 1000 ரூபாய் கிடைக்கும். ஒரு ஆட்டிலிருந்து மாதத்திற்கு 500 ரூபாய் வருமானம் ஈட்டலாம். ஒரு மாட்டிலிருந்து குறைந்த பட்சம் 500 ரூபாய் ஈட்டலாம். இதனை எங்கு கொண்டு போய் விற்பது என்று பார்த்தீர்கள் என்றால் நம்மை நோக்கி வந்துவிடுவார்கள். நாம் பண்ணையை சரியாக கவனித்துக்கொண்டால் வாங்கி சாப்பிடக்கூடிய நம் அண்டை, அயலார்கள் கட்டாயமாக வந்துவிடுவார்கள். முதலில் நம் வீட்டை நோக்கித்தான் உற்பத்தி செய்யவேண்டும். அதன்பிறகு தான் சந்தையை நோக்கி உற்பத்தி செய்யவேண்டும். நமக்கு நம்முடைய நண்பர்களுக்கு நம்முடைய சுற்றத்திற்கு நம்முடைய ஊருக்கு அதன் பிறகுதான் வெளியே. இப்பொழுது இந்த சந்தை முறை அப்படி இல்லை. ஏனென்றால் இந்த உலகமயமாதலின் அடிப்படை என்னவென்றால் எங்கு உற்பத்தியான பொருளும் அங்கு நுகரப்படக்கூடாது. அதாவது நியூயார்க்கில் விளையக்கூடிய ஆப்பிள் நம் திருமங்கலத்தில் விற்கவேண்டும். அதுதான் அவர்களுடைய நோக்கம். அப்பொழுதுதான் வர்த்தகம் நடக்கும். வர்த்தகம் நடந்தால்தான் அவர்களுக்கு லாபம் கிடைக்கும். உலகமயமாதலுக்கு மாற்றாக நாம் சொல்லக்கூடிய உள்ளூர் மயமாதல் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். எனவே அதை நோக்கி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இளைஞர்கள் புதிதாக உள்ளே வரவேண்டும். அதற்கான தொழில்நுட்பங்கள் கையில் வசதியாக இருக்கிறது. அதை செய்யவேண்டும்.
அரசைப் பொறுத்த வரை அரசு என்ன செய்யவேண்டும் என்றால் இரசாயன உரத்திற்கு எவ்வளவு ஆதரவு கொடுக்கிறார்களோ அதற்கு இணையாக இயற்கை விவசாயத்திற்கும் கொடுக்க வேண்டும். 1 லட்சத்து முப்பதாயிரம் கோடியிலிருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் ஆண்டுக்கு இரசாயன உரத்திற்கு மட்டுமே மானியம் கொடுக்கிறார்கள். நாம் என்ன கேட்கிறோம் என்றால் அதற்கு இணையாக இயற்கை வேளாண்மைக்குக் கொடுங்கள். இரண்டையுமே ஓடவிடுங்கள் ஓட்டபந்தயத்தில். எது வெற்றியடைகிறதோ அதை எடுத்துக்கொள்ளலாம். இரசாயன விவசாயம் வெற்றி பெற்றால் அதைப்பற்றி பேசுவோம், இல்லை இயற்கை வேளாண்மை வெற்றியடைந்தது என்றால் அதை எடுத்துப் பேசுவோம். அது இல்லாமல் இயற்கை வேளாண்மைக்கு எந்த உதவியும் செய்ய மாட்டேன் இரசாயன உரத்திற்கே செய்வேன், அதுதான் சிறந்தது என்று சொல்லிக்கொண்டிருந்தால் ஒரு சரியான போக்கல்ல. அதனால் அரசுகளும் அரசுக்கொள்கைகளை மாற்றவேண்டும். அடுத்த கட்டமாக நுகர்வோர் மத்தியிலும் பெரிய விழிப்புணர்வு வரவேண்டும். என்னவென்றால் நாம் கொடுக்கக்கூடிய பணமானது யார் கைக்குப் போகிறது ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு போகிறதா அல்லது ஒரு சாதாரண உழவருக்குப் போகிறதா என்று பார்க்க வேண்டும். நீங்கள் கோலா வாங்கிக் குடிக்கிறீர்கள் அதற்குப் பதிலாக ஒரு இழநீர் வாங்கிக் குடித்தீர்கள் என்றால் அந்த இளநீரை உற்பத்தி செய்கிற விவசாயிக்கு பணம் போகும். ஆனால் கோலா வாங்கிக் குடித்தீர்கள் என்றால் பன்னாட்டு நிறுவனத்திற்கு பணம் போகும். இதை மனதில் வைத்து பார்க்கவேண்டும். நுகர்வோர் மத்தியிலும் விழிப்புணர்வு இருக்க வேண்டும், உழவர் மத்தியிலும் விழிப்புணர்வு வரவேண்டும், அரசிடமும் உண்மையான விழிப்புணர்வு வரவேண்டும். அப்படி வந்தால்தான் இதற்கு ஒரு தீர்வாக இருக்க முடியும்.
சித்திர சேனன்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “பொங்கல் சிறப்பு நேர்காணல்: இயற்கை வேளாண் விஞ்ஞானி பாமயன்”