மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பொருளாதார விளையாடல்கள்: இறுதிப் பகுதி

T.K.அகிலன்

Apr 9, 2016

முதலாளித்துவம் தோன்றிய சிறிது காலத்திலேயே அது அமைப்பாக உருவெடுத்துவிட்டது என்றே தோன்றுகிறது. முன்பே கூறியவாறு, ஒரு அமைப்பாக முதலாளித்துவத்தின் முக்கியமான பணி உற்பத்திக்குத் தேவையான பொருட்களையும் மனித உழைப்பையும் ஒருங்கிணைத்து நுகர்வுப் பொருட்களை உருவாக்கி, அவற்றை நுகர்வோரிடம் கொண்டு சேர்த்து அதன் மூலம் லாபத்தைப் பெறுவது. அந்த அமைப்பின் உறுப்பினர்கள், உற்பத்திக்குத் தேவையான பண முதலீட்டை அளிப்பவர்களாக இருக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதி. அதைவிட முக்கியமாக கச்சாப் பொருட்களை பெறத் தேவையான அதிகாரமும் உற்பத்தியான நுகர்வுப் பொருட்களை நுகர்வோர்களால் ஏற்றுக்கொள்ள வைப்பதற்குமான அதிகாரமுமே அதன் உண்மையான முதலீடுகள்.

porulaadhaara vilayaadalgal2அத்தகைய அதிகாரத்தை உடையவர்கள் முதலாளித்துவ அமைப்பில் இல்லையெனில் அது விலை கொடுத்து வாங்கப்படும். இங்கு அதிகாரம் என்பது அரசியல் அதிகாரம் மட்டும் அல்ல. அது அறிவால் பெற்ற அதிகாரமாக இருக்கலாம், கல்வியால் பெற்றதாக இருக்கலாம், நட்பால் பெற்றதாக இருக்கலாம். இந்த அதிகாரத்தை அடையும் முயற்சியில், முதலாளித்துவ அமைப்புகளில் பெரும்பாலானவை எல்லா அற உணர்வுகளையும் தியாகம் செய்யவும் தயாராக இருக்கின்றன. பெரும்பாலும் இந்த அறமீறல்கள், அவை அடைந்த அதிகாரத்தின் துணை கொண்டு சட்டப்பூர்வமாக மீறப்படுபவை. இந்த அதிகாரம் எவ்வளவுக்கெவ்வளவு கச்சாப் பொருட்களை குறைந்த விலையில் பெற உதவுகிறதோ எவ்வளவுக்கெவ்வளவு நுகர்வுப் பொருட்களை அதிக விலைக்கு விற்க உதவுகிறதோ அந்த அளவுக்கு அந்த முதலாளித்துவ அமைப்பு வெற்றிகரமாக இயங்கும். பொது வெளியில் உள்ள பணப்புழக்கத்தை தன்னை நோக்கி ஈர்க்கும். முதலாளித்துவ அமைப்பின் நோக்கம், பொதுவெளியில் புழங்கும் பணத்தை தன்னை நோக்கிக் குவிப்பதுதான்.

பெரும்பாலும் முதலாளித்துவத்தைத் தழுவி விட்ட உலகப் பொருளாதாரத்தில், பணம் இவ்வாறு முதலாளித்துவ அமைப்புகளிடம் குவிகிறது. அந்தக் குவிதலின் ஒரு பகுதி உற்பத்தியின் உழைப்புக்காக அளிப்பதன் மூலம் பரவலாக்கப்படுகிறது. இந்தப் பரவலாக்குதல் மொத்த உற்பத்தியின் ஒரு சிறு பகுதியே. தொழில் இயந்திரமயமாக்கப்படுவதன் மூலம் பணத்தின் பரவலாக்கம் மேலும் குறைக்கப்படுகிறது. இயந்திர மனிதர்களை (Robots) பெருமளவில் தொழில்களில் பயன்படுத்துவது தற்போது மிக வேகமாக அதிகரித்துவருகிறது. இதன் மூலம் தொழில்களுக்குத் தேவையான மனித உழைப்பு இன்னும் குறைக்கப்படுகிறது. எனவே பணத்தின் பரவலாக்கமும் குறைக்கப்படுகிறது. தோராயமாக வருமானத்தில் 5% முதல் 30% வரை உழைப்புக்கான செலவாக பரவலாக்கப்படுகிறது. ஆனால் வருமானத்தில் 10% முதல் 50% வரை அந்த முதலாளித்துவ அமைப்பு பணப்புழக்கத்தை தன்னுள் குவிக்கிறது. மீதி கச்சாப் பொருட்களுக்காக செலவிடப்படுகிறது. அவ்வாறு குவிக்கப்பட்ட பணம், அந்த முதலாளித்துவ அமைப்பின் மிகச் சிறிய வட்டத்திற்குள் பகிரப்படுகிறது. மேலும் வருடம்தோறும் அந்த குவிதலின் அளவை அதிகரிப்பதே எந்த ஒரு முதலாளித்துவ அமைப்பின் நோக்கமும். எனில் உற்பத்தி தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். அதற்காக நுகர்வும் அதிகரிக்க வேண்டும்.

porulaadhaara vilayaadalgalமுன்பே கூறியபடி இன்னும் இருபது சதவீதம் மக்கள் உணவுக்கே வழியில்லாத நிலையில் இருக்கிறார்கள். எனில் நுகர்வுப் பொருட்களுக்கானத் தேவை இன்னும் இருந்துக்கொண்டிருக்கிறது என்ற ஊகம் சரியாவே இருக்கும். எனில் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் மிக அதிகம். அதற்குத் தேவை இருக்கும் மக்கள் திரளுக்கு தேவையை அடையும் வழியான உழைப்புக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும், அவ்வளவுதான். ஆனால் முதலாளித்துவத்தினால் அந்த வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியவில்லை. எனவே கடந்த சில வருடங்களாக உலகப் பொருளாதாரம் இறங்கு முகத்தில் உள்ளது. பொருளாதாரம் வளரவில்லை என்றால் அதற்குக் காரணம் நுகர்வுப் பொருட்கள் இதற்கு மேலும் மக்களுக்குத் தேவை இல்லை அல்லது அவற்றை வாங்குவதற்குத் தேவையான பணப்புழக்கம் மக்களிடம் இல்லை. எனில் உணவுக்கும் வழி இல்லாமல் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் இருக்கும் போது, மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமையே பொருளாதார மந்த நிலைக்குக் காரணமாக இருக்க முடியும். அவ்வாறெனில் இரு நூற்றாண்டுகளாக முதலாளித்துவம் மனித சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறது? அதன் பணப்பரவலாக்கம் 20% மக்களிடம், அவர்கள் உழைக்கத் தயாராக இருந்தாலும், இன்னும் ஏன் சென்று சேரவே இல்லை? அது நுகர்வுப் பொருட்களாக மாற்றியமைத்த, முழு மனித சமூகத்துக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் சம உரிமையுள்ள இயற்கையின் வளங்கள்\சக்திகள்\ஆதாரங்கள் எங்கு சென்று ஒளிந்திருக்கின்றன?

நடுத்தர மற்றும் அதற்கு மேற்பட்ட வாழ்க்கைச் சூழல்களில், முதலாளித்துவம் புற வாழ்க்கையை மிகமிக எளிமையாக்கியிருக்கிறது. இன்று நாம் இத்தனை வசதிகளை அனுபவிக்கிறோம் என்றால் அதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அது மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் வறுமையில் இருக்கும் மனிதர்களை, அதிகாரத்தின் எச்சிலைக் கூட தொட இயலாத சமூகத்தை, அது முற்றிலும் புறக்கணித்திருக்கிறது. புறக்கணிப்பது மட்டுமல்ல சுரண்டலுக்கும் உட்படுத்துகிறது. அதற்காக அதிகாரத்தை தன் கையில் எடுக்கிறது. வருங்காலத்தில் அதிகாரம் முற்றிலும் முதலாளித்துவத்தின் கைக்குச் செல்லும் என்றும் கூறப்படுகிறது.

தொழில்புரட்சி தொடங்குவதற்கு முன் மனித இனம் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றையும் இவற்றை உருவாக்குவதற்குத் தேவையான கருவிகளையும் மட்டுமே நுகர்ந்து வந்துள்ளன. மேலதிகமாக சமூகக் கட்டுமானத்தின் பாதுகாப்பு அம்சமான ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களும். காரணம் எளிமையானதுதான். மனித உழைப்பின் பெரும்பகுதி அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே போதுமானதாக இருந்திருக்கும். தொழில் புரட்சியின் காரணமாக, அடிப்படைத்தேவைகள் மிகஎளிதாக அடையப்பட்டன. அதன்பின் மனிதனின் நுகர்வு பொழுதுப்போக்கு மற்றும் ஆடம்பரம் சார்ந்ததாக மாறிவிட்டது.

porulaadhaara vilayaadalgal2தற்போதைய சமூக நிலையில் எல்லாப் பொருளாதாரங்களின் பெரும்பகுதியும், பொழுதுபோக்கு நுகர்வையும் ஆடம்பர நுகர்வையும் நம்பியே இருக்கின்றன. அதன் மறுபக்கமாக மக்களும் இவற்றை அடைவதையே தங்கள் வாழ்வின் நோக்கங்களாகக் கொண்டுள்ளனர். அதாவது மக்கள் எந்த நிலையில் இருந்தாலும், அவர்களை விட பொருளாதாரத்தில் அடுத்த உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் நுகர்வுத் திறனை அடைவதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் மூலம் அடிப்படைத் தேவைகளை அடைந்தபின்னும், தங்கள் உழைப்பின் போதாமையை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே வாழ்க்கை முழுவதையும் இந்தப் போராட்டத்திலேயே கழித்து விடுகிறார்கள். ஒரு வகையில் இது மனித சமூகத்தை தீராத செயல்களின் வலைப்பின்னலில் வைத்து, சமூகத்திற்கு இயங்கு விசையை அளிக்கிறது. மறுபுறத்தில் மனிதர்கள் தங்கள் சுயமதிப்பை அறியாமல், நுகர்வுகளின் மதிப்பையே தங்கள் மதிப்பாகக் கருதி, நுகர்தலையும் அனுபவிக்காமல், பொருளாதாரத்திற்கான போராட்டத்திலேயே நுகர்தலையும் ஒரு போராட்டமாக செய்து முடிக்கிறார்கள். ஒருவேளை நுகர்வுப் பொருட்களை அடைவதற்கான இந்தப் போராட்டம் அவர்களுக்கு மிக அவசியமானதாக இருக்கலாம். இல்லையெனில் சகமனிதர்களுடன் அவர்கள் போர்தொடுத்து சமூக நிலையின்மைக்குக் காரணமாகி விடலாம். அவ்வகையில், முதலாளித்துவப் பொருளாதாரம் சமூக அமைதியை வழங்கியுள்ளதோ?

porulaadhaara vilayaadalgal8நுகர்வுக்கும் எனவே பொருளாதாரத்துக்கும் இன்னொருக்காரணி மக்கள் தொகை. இந்தியாவின் மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக வரும் காலங்களில் மிக வேகமாக பொருளாதார முன்னேற்றத்தை அடையும் என்று கூறப்படுகிறது. தற்போதும் நெருங்கிய எதிர்காலத்திலும் இந்திய மக்கள் தொகையின் பெரும்பகுதி, இளைஞர்களாக இருப்பார்கள். இதன் மூலம் இந்தியாவில் உழைப்பு சக்தியும், நுகர்வு சக்தியும் வேறு எந்த நாடுகளை விடவும் அதிகமாக இருக்கும். பொருளாதாரமும் முன்னேறும் என்று கருதப்படுகிறது. அதாவது இயற்கை வளங்களை நுகர்வுப் பொருட்களாக மாற்றி பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் குவியும் பணத்தின் ஒரு பகுதியை உழைப்புக்காக பரவலாக்கி, அந்தப் பரவலாக்குதல் மேலும் நுகர்வைத் தூண்டி உற்பத்தியைத் தொடர்ந்து வளரச் செய்வது. ஆனால் அந்தப் பொருளாதார முன்னேற்றத்தை அடைய நாம் கொடுக்கப்போகும் விலை, இயற்கை வளங்களின் பெரும்பகுதியை அழித்தொழிப்பதுதான். இந்தப் பொருளாதார வளர்ச்சி மேலோட்டமாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். அதே நேரத்தில் மறைமுகமாக அவர்களை தீராத பொருளாதாரப் போராட்டத்தில் தள்ளி, அகவாழ்க்கையின் தரத்தை அழிக்கும். ஆனால் நம் பொருளாதார மேதைகள், இந்தியாவின் மக்கள் தொகை, பொருளாதாரத்தை மேம்படுத்தப் போகிறது, எனவே மக்களின் வாழ்க்கைத் தரம் உயரப்போகிறது என்று விதந்தோந்துகிறார்கள். மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். மாற்றுக் கருத்து இல்லை. அதற்கு இதுதான் சரியான வழியா?

porulaadhaara vilayaadalgal10முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தோல்வி, இன்று கண்கூடாகத் தெரிகிறது. அதன் வீழ்ச்சி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் தொடங்கியது. இரண்டாவது உலகப் போருக்குப் பின் ஜப்பான் பொருளாதார ஸ்திரத்தன்மையை பெற்றபின் தொண்ணூறுகளின் நடுப்பாகம்வரை உலகத்தின் உற்பத்திக் கேந்திரமாக இருந்துவந்தது. கொரியா, சீனா போன்ற நாடுகள் இந்த காலக்கட்டத்தில் உலகுக்காக உற்பத்தியைத் தொடங்கின. அதன் பின் ஜப்பானின் பொருளாதாரம் மெல்லமெல்ல கீழே விழுந்து விட்டது. 2008-ம் ஆண்டில் நிகழ்ந்த பொருளாதார நிலைகுலைவுக்குப் பின் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பின்பற்றும் கடன்களுக்கான மிகமிகக் குறைந்த வட்டிவிகிதம் (அல்லது வட்டியே இல்லாத கடன்), முதன் முதலில் ஜப்பானில் தொடங்கப்பட்டது. மக்களிடம் பணப்புழக்கத்தை உருவாக்கவும், எனவே அவர்களை மேலும் நுகர்வுப் பொருட்களுக்காக செலவிட வைப்பதுமே இதன் நோக்கம். இதன் மூலம் பொருளாதாரம் மீண்டு வரும் என்று நம்பினார்கள். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பின்னும் ஜப்பானின் பொருளாதாரம் அப்படியேதான் உள்ளது. தற்போது ஜப்பானில், சேமிப்பிற்கு பூஜ்யத்திற்கும் குறைவான வட்டிவிகிதம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாகக் கேள்விப்படுகிறேன். அதாவது மக்கள் தங்கள் பணத்தை வங்கிகளில் வைத்திருக்க வங்கிகளுக்குப் பணம் தர வேண்டும். அவர்களுக்கு வட்டி எதுவும் கிடைக்காது! இதன் மூலம் மக்கள் பணத்தை சேமிப்பதைத் தடைச் செய்கிறார்கள். சேமிக்காமல் இருப்பதன் மூலம் பொருளாதாரம் உயரும் என்று முதலாளித்துவம் நம்புகிறது.

porulaadhaara vilayaadalgal9கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பின், மிக சமீபத்தில்தான் அமெரிக்கா கடன்களுக்கான வட்டியை சற்றே அதிகரித்தது. இந்த நிலையில் அவர்களும் ஜப்பானின் பொருளாதார முயற்சியை பின்பற்றலாம் என்றும் கூறப்படுகிறது. முதலாளித்துவத்திற்கு வேறு வழிகள் இல்லை என்றே தோன்றுகிறது. எனில் அது இறப்பின் மிக அருகில் இருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. அவ்வாறெனில் பொருளாதார இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய இயக்கம் மிக அவசரமாக தோன்றியாக வேண்டும். அவ்வாறுத் தோன்றாவிடில் பெரும் பொருளாதார அழிவுகளுக்கும் எனவே சமூகங்களின் அழிவுகளுக்கும் பிறகுதான் புதிய பொருளாதார இயக்கம் உருவாக முடியும். மனித சமூகம் உண்மையில் நாகரீகத்தை அடைந்திருக்கிறதென்றால், அத்தகைய அழிவுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. உலகின் பொருளாதார நிபுணர்கள் புதிய பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தலாம். அதற்கு பொருளாதார நிபுணர்கள் பொருளாதாரத்தை மட்டும் அறிந்திருப்பது போதாது. முழுமையை அறிந்திருக்க வேண்டும். முழுமையின் அறிவிலிருந்துதான் முழுமையை முன்னெடுத்துச் செல்லும் பொருளாதாரம் வர முடியும். முழுமையை அறியும் பார்வையுள்ள பொருளாதார அறிஞர்கள் சமூகங்களில் தோன்ற வேண்டும்.

முதலாளித்துவப் பொருளாதாரத்தைக் குறித்து எவ்வளவு எதிர்மறையாக விமர்சித்தாலும், இன்று புறவாழ்க்கையில் மனித சமூகம் அடைந்திருக்கும் வசதிகளின் பெரும்பகுதி, முதலாளித்துவத்தால்தான் சாத்தியமாகியுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். முதாலாளித்துவத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும், அது அளித்திருக்கும் வசதிகளின் மேல், தொழில்நுட்பங்களின் மேல் இருந்துகொண்டுதான் செயல்படுகிறார்கள். முதலாளித்துவம் வசதிகளை அளிக்கிறது என்பதால் அதை முழுமையாக, அதன் எதிர்மறை இயக்கங்களுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லையே. முதலாளித்துவம் அதன் ஆதிக்கத்தைத் தொடங்கியதிலிருந்து அதன் எதிர் விசையாக கம்யூனிசம் இருந்து வந்துள்ளது. ஆனால் கம்யூனிசம் அடைந்த அதிகாரம் ஐனநாயகத் தன்மையை முற்றிலும் இல்லாமல் செய்ததால், கிட்டத்தட்ட எங்கும் அது இல்லாமல் ஆகிவிட்டது. இருக்கும் இடங்களிலும் அதுவும் முதலாளித்துவ உற்பத்தி முறையைப் பின்பற்றும் இயக்கமாக மாறிவிட்டது. தற்போது உலகெங்கும் முதலாளித்துவத்தை எதிர்ப்வர்கள், அதிகாரம் கையில் இல்லாத கம்யூனிஸ்டுகள் மட்டும்தான். கூடவே சில சூழலியலாளர்களும் இருக்கலாம். எனவே முதலாளித்துவத்திற்கு குறிப்பிடத்தக்க எதிர்விசைகள் எங்கும் இல்லை. எதிர்விசை இல்லாத முதலாளித்துவம் அழிவு சக்தியாக மாறிவிடவும் கூடும்.

porulaadhaara-vilayaadalgal11முதலாளித்துவத்தின் நிறைப்பண்புகளை தன்னுள் எடுத்துக் கொண்டும், குறைப்பண்புகளை களைந்து கொண்டும் ஒரு புதிய பொருளாதார இயக்கத்தை முன்னெடுக்கும் சாத்தியம் உள்ளதா? உலக வரலாற்றில் பெரும்பாலான சமூக மாற்றங்கள், சமூகத்தின் நடைமுறைகளை எதிர்த்த போராட்டங்களுடனும் அதனுடன் இணைந்த பெரும் களப்பலிகளுடனும்தான் நிகழ்ந்துள்ளன. மனித சமூகம் நிச்சயமாக நாகரீகத்தில் முன்னெப்போதையும் விட முன்னேறிய நிலையில்தான் தற்போது உள்ளது. எனில் களப்பலிகள் இல்லாமல், அல்லது குறைந்தப்பட்ச களப்பலிகளுடன், பொருளாதாரத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியுமா? தற்போது அதற்கு சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது.

தற்போது இருக்கும் எல்லாப் பொருளாதார நிபுணர்களும், முதலாளித்துவத்துக்காக முதலாளித்துவமே உற்பத்திச் செய்த\செய்யும் பொருளாதார நிபுணர்கள். அவர்களால் முதலாளித்துவத்துக்கு மாற்றான பொருளாதாரக் கொள்கைகளை முன்வைக்க முடியாது. சமூகமும் முதலாளித்துவம் வழங்கிய வசதிகளிலும், அளவற்ற நுகர்வுப் பொருட்களை அடையும் போராட்டத்திலும், நுகர்வு அளிக்கும் பொழுதுபோக்குகளிலும் அதன் எதிர்மறைத்தன்மைகளை மறந்து விடுகிறது. எனவே பொது சமூகத்திலிருந்தும் முதலாளித்துவத்துக்கு எதிரான இயக்கங்கள் வர சாத்தியம் இல்லை. ஆனால் இயற்கை பெரும்கருணை உடையது. எங்கெல்லாம் தேவை எழுகிறதோ அங்கெல்லாம் தேவையை நிறைவேற்றும் இயக்கத்தையும் இயற்கை வழங்குகிறது. அந்த வகையில் சமூகத்தில் மாற்றுப் பொருளாதார இயக்கங்கள் தோன்றலாம். இல்லையெனில் பூமியின் உயிர்ப்பன்மைத் தன்மையை தங்கள் நுகர்வுக்காக அழிக்கத் தலைப்படும், எனவே பூமியின் இருப்பையை கேள்விக்குள்ளாக்கும் மனித சமூகத்தை, பூமியின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் இயக்கம் அழித்துவிடக் கூடும். ஏனெனில் இயற்கை உணர்ச்சிகள் (Emotions) இல்லாதது.


T.K.அகிலன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பொருளாதார விளையாடல்கள்: இறுதிப் பகுதி”

அதிகம் படித்தது