மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மணிமேகலைக் காப்பியத்தின் காலமும், அக்காலச் சமயங்களின் பொது அறிமுகமும்

முனைவர் மு.பழனியப்பன்

Nov 28, 2020

siragu manimegalai1
தமிழ் இலக்கியம் பல வகைமைகளை உடையது. குறுங்கவிதை, நெடுங்கவிதை, காவியம், காப்பியம், உரையிடையிட்டப் பாட்டுடைச் செய்யுள் போன்ற கவிதை சார்ந்த இலக்கிய வகைகள் ஒரு திறத்தில் அமைகின்றன. சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை போன்ற உரைநடை சார்ந்த இலக்கிய வகைமைகள் மற்றொரு திறத்தில் அமைகின்றன. இவற்றில் ஒற்றைத் தொடரில் அமையும் பாவிகத்தை பேரிலக்கியமாக வார்த்தெடுக்கும் நிலையில் புனையப்பெறுவது காப்பியம் என்ற இலக்கிய வகைமையாகும். தமிழில் தொடர்ந்து காப்பிய படைப்புகள் எழுந்து வருகின்றன. இக்காப்பிய வகைமை சிலப்பதிகாரம் முதலாகத் தொடங்கி கம்பராமாயணத்தில் வளர்ந்து, ”பாண்டவர் பூமி” என்ற புதுக்கவிதை ஆக்கத்தின் வழியாகவும் வளர்ந்து வருகிறது. காப்பியங்களின் வழியாகத் தமிழிலக்கியம் பேரிலக்கியங்களை உடையது என்ற வல்லமை கிடைக்கப்பெற்றது, இதுதவிர நல்ல கதைக்கோப்புடைய படைப்பாகவும், பண்பாடுகளின் பதிவாகவும் காப்பியங்கள் தமிழில் அமைந்து சிறக்கின்றன. சமணம்,பௌத்தம், இசுலாம், கிறித்துவம் என்ற சமயங்களின் கருத்துகள், கதைகள் சார்ந்தும் காப்பியங்கள் படைக்கப்பெற்றிருப்பது காப்பிய வகைமைக்குக் கிடைத்துள்ள பேரிலக்கிய அங்கீகாரம் ஆகும்.

இக்காப்பியங்களில் சமுதாய மறுமலர்ச்சியும், சமயப் பின்னணியும், எளிமையழகும் கொண்டு படைக்கப்பெற்ற பெருங்காப்பியம் மணிமேகலை ஆகும். இதனைப் படைத்தவர் மதுரை கூலவணிகன் சீத்தலைச் சாத்தனார் ஆவார். மணிமேகலைக் காப்பியம் பொதுவான காப்பிய மரபுகளையும் பல்வேறு தனித்தன்மைகளையும் பெற்ற காப்பியம் ஆகும். இக்காப்பிய மாண்பினைப் பின்வரும் கருத்துகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

மணிமேகலைக் காப்பியத்தின் பாடுபொருள் சிறப்பு

கணிகை குலம் சார்ந்து மணிமேகலை உலகவாழ்க்கை, சிற்றின்பம் ஆகியவற்றை வெறுத்து பசிப்பிணி தீர்க்கும் பேரறத்தைச் செய்கிறாள். அவள் ஞானக்கல்வி கற்று மற்ற சமயத்தாரை வென்று தன் சமயக் கருத்துகளை முன்னிறுத்துகிறாள். இந்நிலையில் மணிமேகலைக் காப்பியத்தின் கதைக் கருவினைச் சுட்ட இயலும். இதன் பாடுபொருள் சிறப்பு பற்றிய அறிஞர்களின் கருத்துகள் பின்வருமாறு.

“மணிமேகலை தமிழில் தோன்றிய முழுமையான சமூக மறுமலர்ச்சி காப்பியமாகத் திகழ்கிறது. ஆண்- பெண் சமத்துவம், சமூக அமைப்பில் சமத்துவம், சமூகநலமேம்பாட்டுப் பணிகள், நீதி வழங்குவதில் புதுமை எனப் பல மறுமலர்ச்சி கருத்துக்களைக் காப்பிய ஆசிரியர் இதில் எடுத்துரைத்துள்ளார்”  என்று மணிமேகலைக் காப்பியத்தை மறுமலர்ச்சிக் காப்பியமாகக் காண்கிறார் சுயம்பு.

“மணிமேகலை பசிக் கொடுமையைத் தொலைக்கிறாள். சாதுவன் மதுவை ஒழிக்கிறான். ஆபுத்திரன் சாதியைச் சாடுகிறான். இவ்வாறு காப்பியத்துள் பல மாந்தரை உலவவிட்டுத் தம் காப்பியத்தையே ஒரு புரட்சிக்காப்பியமாக அமைத்த ஆசிரியர் திறம் வியக்கற்பாலது”  என்று மணிமேகலைக் காப்பியத்தைப் புரட்சிக்காப்பியமாகக் காண்கிறார் ஜெ.ஸ்ரீ .சந்திரன்.

“பேரரசையும் பெருங்குடி மக்களையுமே காவியத் தலைவராகக் கொண்டு இலக்கியம் இயற்றப்பட்ட அற்றை நாளிலேயே பழித்தும் இழித்தும் கூறப்படும் கணிகை மகள் ஒருத்தியைக் காவியத் தலைவியாகக் கொண்டு ஒப்பற்ற ஒரு பேரிலக்கியம் இயற்றப்பட்டதென்றால் அது ஒரு சாதாரணப் புரட்சி அல்ல! மணிமேகலை கள்ளும், பொய்யும், காமமும், கொலையும் உள்ளக்களவும் கொண்ட பரத்தமைத் தொழிலைக் கடைப்பட்ட வாழ்க்கையெனத் துறந்து புத்தன் அருளிய அருளறத்தை மேற்கொண்டு சீலம் தாங்கித் தானம் தலை நின்று அரிய தவமியற்றியவள்”  என்று மணிமேகலையை விளிம்புநிலை மாந்தர் பற்றிய இலக்கியமாகக் காண்கிறார் துரை. தண்டபாணி.

மேற்கண்ட மேற்கோள்களின் வழியாக மணிமேகலைக் காப்பியம், விளிம்புநிலை மாந்தர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த பழைய மரபுகளை உடைத்து அவர்களை உயர் நிலைக்கு உயர்த்திய மறுமலர்ச்சிக் காப்பியம் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. சமுதாயத்தில் முன்னிலையில் இருந்தவர்களைப் பாடும் நிலை வயப்படாமல் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைக் காப்பியமாக்கிய பெரும்படைப்பு மணிமேகலை என்ற கருத்தினையும் மேற்குறித்த அறிஞர்களின் கருத்துகளின் வழியாகப் பெறமுடிகிறது.

மணிமேகலைக் காப்பியத்தின் நடை நலம்

மணிமேகலைக் காப்பியத்தின் நடை என்பது எளிமையும் அழகும் இயல்புத் தன்மையும் வாய்ந்தது. இக்காப்பியத்தில் ஞானக் கருத்துகள் எளிமையாகப் புரியும் வண்ணம் விளக்கப்பெறுகின்றன. இக்காப்பியத்தின் நடைத்திறன் பற்றிப் பின்வருமாறு கருத்துரைக்கின்றனர் அறிஞர்கள்.

“மணிமேகலைக் காப்பியம் எளிய இனிய நடை கொண்ட இலக்கியச் செல்வம். இலக்கியநயம் மட்டும் மணிமேகலையின் சிறப்பு அல்ல. அதுபாடும் மக்கள் நலம், மனிதநேயம், மணிமேகலைக் காப்பியத்தின் மாண்புயர் கருத்துகளாகும்”  என்று இதன் நடை பற்றிக் கருத்துரைத்துள்ளார் இராம. லட்சுமணன்.

“எளிய நடையில் கதை சொல்லும் தன்மையும், பௌத்த சமய உண்மைகளையும் நீதிகளையும் தெளிவாக எடுத்துரைக்கும் இயல்புமே இந்தக் காப்பியத்தின் சிறப்பியல்புகள் எனலாம்”  என்று கருத்துரைக்கிறார் மு.வரதராசனார்.

இவ்விரு மேற்கோள்கள் வழியாக மணிமேகலை எளிய இனிய நடை கொண்டு படைக்கப் பெற்ற காப்பியம் என்பது வெளிப்படுகிறது.

மணிமேகலைக் காப்பியத்தின் பரவலாக்கச் சிறப்பு

மணிமேகலைக் காப்பியம் பௌத்த சமயக் காப்பியம் என்றபோதும் பல அறிஞர்களாலும் பயிலப்பெற்றுள்ளது. பல அறிஞர்களாலும் எடுத்தாளப்பெற்றுள்ளது. இதுவும் இக்காப்பியத்திற்குக் கிடைத்த சிறப்புகளில் ஒன்றாகும்.

“இளம்பூரணர், பேராசிரியர், தெய்வச்சிலையார், நச்சினார்க்கினியர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார், சயம திவாகர வாமன முனிவர், இலக்கணக்கொத்து உரையாசிரியர், திருவொற்றியூர் ஞானப்பிரகாசர், மயிலை நாதர், சங்கர நமச்சிவாயர் முதலிய உரையாசிரியர்களால் எடுத்துக்காட்டப்பெற்ற பிரமாண நூல்களுள் ஒன்று”  என்று மணிமேகலை பலரால் எடுத்தாளப்பெற்ற சிறப்பினைப் பதிவு செய்துள்ளார் உ.வே. சாமிநாதர்.

இவ்வகையில் எளிய, சமய விளக்கமுடைய, இனிய காப்பியம் மணிமேகலை என்பது உறுதியாகின்றது. இது எழுந்த காலம் குறித்துப் பல கருத்துகள் நிலவுகின்றன.

siragu manimegalai2மணிமேகலை – காப்பியத்தின் காலம்

மணிமேகலை காப்பியம் சிலப்பதிகாரத்திற்குப் பிந்தையது என்பது தெளிவு. இருப்பினும் அதன் காலத்தை வரையறுப்பதில் பல்வேறு கருத்துகள் அறிஞர்களால் எடுத்துரைக்கப்பெற்றுள்ளன.

“சிலம்பினை அடியொற்றி எழுந்த மணிமேகலை கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பர் வி. ஆர்.ஆர். தீட்சித், மயிலை சீனி. வேங்கடசாமி, டாக்டர் உ.வே. சா ஆகியோர் “  என்று மணிமேகலை கி.பி. இரண்டாம் நூற்றாண்டு சார்ந்தது என்று அறிஞர்களின் ஒரு சாரார் கருதுகின்றனர்.

மயிலை சீனி. வேங்கடசாமி தன் பௌத்தமும் தமிழும் என்ற நூலில் மணிமேகலை கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பே எழுதப்பெற்றிருக்க வேண்டும் என்று பல்வேறு சான்றுகளை எடுத்துக்காட்டி நிறுவுகிறார். “மணிமேகலை சிலப்பதிகார வரலாற்று நிகழ்ச்சிகள் சேர சோழ பாண்டியர் ஆட்சிக்காலத்தில் (கடைச்சங்க காலத்தில்) நிகழ்ந்தவை. அந்நிகழ்ச்சிகள் நடந்த அண்மைக் காலத்திலேயே இந்நூல்கள் இயற்றப்பட்டவை. ஆகவே இந்நூல்கள் கி.பி 200-க்குள் எழுதப்பட்டவை. கி.பி. 200-க்குப் பிறகு தமிழ்நாட்டைக் களப்பிரர் பிடித்துக் கொண்டு ஏறத்தாழக் கி.பி 575 வரையில் அரசாண்டார்கள். ஆகவே கி.பி 200-க்குப் பின்னர் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் எழுதப்பட்டிருக்க முடியாது. கி.பி இருநூறுக்குள்ளேயே எழுதப்பட்டிருக்க வேண்டும்.”  என்ற கருத்தின் வழியாக மணிமேகலையின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முந்தையது என்ற கருத்து பெறப்படுகின்றது.

வையாபுரிப்பிள்ளை மணிமேகலைக் காப்பியம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு அளவில் தோன்றியது என்று உரைக்கிறார். இவரின் கருத்துகளை மா. ராசமாணிக்கனார் கால ஆராய்ச்சி என்ற தம் நூலில் எடுத்துக்காட்டித் தக்க நிலையில் அக்கருத்துகளுக்குப் பதில் சொல்லும் நிலையில் மணிமேகலையின் காலத்தை கி.பி. இரண்டாம் நூற்றாண்டு சார்ந்தது என்றே நிறுவுகிறார். ‘‘மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் நெடுஞ்செழியன் காலத்தவர் என்பது உண்மையே. அவர் பாடிய பாடல் எதுவும் தொகை நூல்களில் இல்லை. எனினும், அது கொண்டு அவர் காலத்தால் பிற்பட்டவர் என்பது எங்ஙனம் பொருந்தும்? சாத்தனார் காலத்தவன் நெடுஞ்செழியன் என்ற பாண்டியன். அவன் பேராசிரியர் குறிப்பிட்டபடி அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன் மட்டும் அல்லன், வட ஆரியர் படை கடந்த நெடுஞ்செழியன் என்றும் பெயர் பெற்றவன் என்று இளங்கோவடிகளே மதுரைக் காண்டத்தின் இறுதிக் கட்டுரையில் தெளிவாய்க் கூறியுள்ளார். இந்த ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் “உற்றுழி உதவியும்” என்று தொடங்கும் கல்வியின் மேம்பாடு பற்றிய செய்யுளொன்றைப் பாடியுள்ளான். அப்பாடல் புறநானூற்றில் (183) இடம் பெற்றுள்ளது. உண்மை இங்ஙனம் இருப்ப, இவன் கற்பனை அரசன் என்று பேராசிரியர் அவர்கள் எங்ஙனம் கூறத் துணிந்தார்களோ தெரியவில்லை’’  என்பது மா. ராசமாணிக்கனார் கருத்தாகும்.

இக்கருத்துகளின் அடிப்படையில் மணிமேகலைக் காப்பியம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு அளவில் எழுதப்பெற்றது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடிகின்றது.

மணிமேகலை காப்பியமும் சமயப் பின்புலமும்

சமய நிலையில் குறிக்கத்தக்க ஒரு காப்பியம் மணிமேகலை ஆகும். மதுரை கூலவணிகன் சீத்தலைச் சாத்தனார் காப்பியக் கதையை “மாவண் தமிழ்த்திறம் கொண்டு”  தெளிவுற நடத்திச் செல்கிறார். அவர் காப்பியக் கதைப்பின்னலில், கட்டமைப்பில் நெகிழ்வு ஏற்பட்டுவிடாமல் தன்கால சமய நிலையை மணிமேகலைக் காப்பியத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இதனை உ.வே.சாமிநாதையர் பின்வரும் நிலையில் விளக்குகிறார். “இக்காலத்தில் வேறொருவகையாலும் விளங்காதனவாகிய சில தெய்வங்களுடைய பெயர்களையும், அத்தெய்வங்களை வழிபடு முறைமையையும், சில சாதியாரையும், அவர்களுடைய நடை முதலியவற்றையும். சில நகரங்கள், தீவுகள், மலைகள், வனங்கள், தோட்டங்கள், அறச்சாலைகள், மன்றங்கள் முதலியவற்றையும். அவைகள் இன்ன, இன்ன வண்ணமாக இருந்தனவென்பதையும், இன்ன இன்ன சமயங்கள் இன்ன இன்ன இடத்தில் பரவியிருந்ததனவென்பதையும், அவற்றின் இலக்கணங்களையும், சில அரசர் சில முனிவர் முதலியோருடைய சரித்திரங்களையும், பிறவற்றையும் இந்நூலால் விளங்க அறிந்து கொள்ளலாம்”  என்ற உ. வே. சாமிநாதையரின் கருத்து சமுதாயம், சமயம் சார்ந்த பதிவுகளை உள்ளடக்கியது மணிமேகலைக் காப்பியம் என்பதை மெய்ப்பிக்கின்றது.

‘‘மணிமேகலை காப்பியத்தில்தான் முதன் முதலில் சமயம் என்ற சொல் பயின்று வந்துள்ளது’’  என்று கு. சுந்தரமூர்த்தி அவர்கள் குறிப்பிடுகிறார். இதன் காரணமாக தமிழ் இலக்கிய வரலாற்றி்ல் சமயம் பற்றிய தொடக்கத்தைத் தெளிவாக அறிவிப்பது மணிமேகலைக் காப்பியம் என்பதை உணரமுடிகின்றது. மணிமேகலைக் காப்பியத்தில் பின்வரும் இடங்களில் சமயம் என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

மணிமேகலையின் இடம்பெறும் இருபத்தேழாம் காதைக்குச் சமயக் சமணக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை என்றே பெயரிடப்பெற்றுள்ளது. இவைதவிர பல இடங்களில் சமயம் என்ற சொல் மணிமேகலைக் காப்பியத்தில் பயின்று வந்துள்ளது.

“மூதூர் அகத்தே அல்லவர் சமயத்து அறிபொருள் கேட்டு”  என்ற இடத்திலும், “ஐவகைச் சமயமும் அறிந்தனன்”  என்ற இடத்திலும். “நூற்றுறைச் சமய நுண்பொருள் கேட்டே அவ்வுரு வென்ன ஐவகைச் சமயமும்     செவ்விது அன்மையிற் சிந்தையின் வைத்திலேன்  என்ற இடத்திலும் மணிமேகலைக் காப்பியத்தில் சமயம் என்ற சொல் பயின்றுவந்துள்ளது. சாத்தானர் காலத்தில் சமயங்கள் ஐவகையாக இருந்தன என்பதும் இவ்வடிகளின் வழியாகத் தெரியவருகிறது. மணிமேகலைக் காப்பியம் தன் கால சமயங்கள் பற்றிய பொது அறிமுகத்தைத் தருவதுடன் பல்வேறு சமய உட்பொருள்களைப் பதிவு செய்து வெளிப்படுத்தும் காப்பியமாகவும் விளங்குகின்றது.

மதம் என்ற சொல்லும் மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெற்றுள்ளது. இது சாங்கிய மதம் என்று எடுத்து உரைப்போன்’’  என்ற இடத்தில் மதம் என்ற சொல் உள்ளது. இவ்வகையில் சமயம் சார்ந்த பல செய்திகளுக்கு இடமளிப்பது மணிமேகலை என்பதை உணரமுடிகின்றது.

மணிமேகலைக் காப்பியம், தன் காலத்தில் இருந்த சமயங்களின் கருத்துகளைச், சடங்குகளை, வழிபாடுகளை, தத்துவங்களை வெளிப்படுத்தி நிற்கும் காப்பியம் ஆகும். மணிமேகலைக் காப்பியம் அடிப்படையில் பௌத்த சமய சார்புடைய நூல் ஆகும். இந்நூல்வழி தமிழகத்துப் பௌத்த சமய நிலையைத் தெள்ளிதின் அறிந்து கொள்ள முடிகின்றது.

மணிமேகலைக் காப்பியமும் பௌத்த சமயச் சார்பும்

மணிமேகலைக் காப்பியம் பல் சமயக் கருத்துகளை உள்ளடக்கியது என்றாலும் அது அச்சமயங்களைப் பௌத்த கண்ணோட்டத்தில் கண்டுள்ளது என்பது குறிக்கத்தக்கது. மணிமேகலை பௌத்த சமயச் சார்புடையது என்பதை அக்காப்பிய வழி தெளிவாக அறிந்து கொள்ள இயலும். அறிஞர்களும் இக்கருத்தினை வழி மொழிகின்றனர்.

“இந்நூல் பௌத்த சமயச் சார்பினளாகிய மணிமேகலையின் சரித்திரமாதலின் இதில் அச்சமயக் கொள்கைகளைப் பரக்கக் காணலாம்”  என்று மணிமேகலைக் காப்பியத்தினைப் பௌத்த சமயக் கொள்கைகள் சார்ந்த நூலாக உ.வே.சாமிநாதையர் காண்கிறார். மேலும் அவர் ‘‘எடுத்துக்கொண்ட நூற்கேற்ற கொள்கைகளைச் சிறப்பித்தல் ஆசிரியரது கடப்பாடாதலின், பௌத்த சமயத்தைப் பாராட்டிக் கூறும் இந்நூலில் சுதமதியின் வரலாற்றால் சமணரையும், ஆபுத்திரனது வரலாற்றால் வேள்வியையும் குறைகூறுதல் அறிதற்குரியது”  என்றும் குறிப்பிடுகிறார். இக்கருத்தின்படி பௌத்த சமயக் கருத்துகளுக்கு ஏற்றம் தந்து மற்ற சமயக் கருத்துகளுக்கு தடை காட்டுவது மணிமேகலைக் காப்பியம் என்பதை உணரமுடிகின்றது.

மணிமேகலை ஈனயான புத்த சமயச் சார்புடையதாக விளங்குகிறது. மகாயான சமயத்தின் துவக்கநிலை சார் புத்த சமயக் கருத்துகளும் மணிமேகலையில் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் பல்லவ காலத்தில் இருந்த பௌத்த சயமநிலையைச் சுட்டுவது மணிமேகலை என்றும் அதன் கற்பு பற்றிய கோட்பாடு உறுதியானது என்றும் பீட்டர்ஸ்கால்க் குறிப்பிடுகிறார்.

“சுபக்கமாகிய தம் நெறியினை நிறுவுதற்குமுன் மாற்றுச் சமய தத்துவ தருக்கங்களை முறையாகப் பயின்று பரபக்கமாகச் சிறுநூல் யாத்தவர். தம் காப்பியப் பெருநூலில். மூன்று சிறு நூல்களை இணைத்துப் பிணைத்துள்ளார். அவைதாம், சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதை, தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை, பவத்திறம் அறுகெனப் பாவை நோற்றகாதை என்பன. இவை முறையே புறச் சமயக்கோவை, பௌத்த தருக்கம், பௌத்த தத்துவம் பற்றியன. அண்ட அமைப்பியல் பற்றிய பகுதி நூலாகச் சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதையினை அமைத்துள்ளார்”  என்று மணிமேகலைக் காப்பியத்தின் சுபக்க, பரபக்கத் தன்மையை எடுத்துரைக்கிறார் சோ .ந . கந்தசாமி,. மேலும் சமயக் கணக்கர் தம் திறம்கேட்ட காதை- புறச் சமயக்கோவை – பரபக்கக் கருத்தடங்கியது.தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை – பௌத்த தருக்கச் செய்திகள் அடங்கியது. பவத்திறம் அறுகென பாவை நோற்ற காதை- பௌத்த தத்துவச் செய்திகள் அடங்கியது என்ற சோ. ந. கந்தசாமியின் கருத்து சமய ஆய்வில் குறிக்கத்தக்க விளைகவுகளைத் தரக் கூடியக் கருத்தாகும். . இதன் காரணமாக, சமயங்கள் பற்றிய முழுமையான புரிதலை மணிமேகலைக் காப்பியம் முன்னிலைப் படுத்தி அதன் காலத்திற்கு முன்பும் பின்புமான சமய வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாகப் படைக்கப்பெற்றுள்ளது என்பதை அறி்ந்து கொள்ள முடிகின்றது.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மணிமேகலைக் காப்பியத்தின் காலமும், அக்காலச் சமயங்களின் பொது அறிமுகமும்”

அதிகம் படித்தது