மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மணிமேகலைக் காப்பியத்தின் காலமும், அக்காலச் சமயங்களின் பொது அறிமுகமும் – பாகம்-2

முனைவர் மு.பழனியப்பன்

Dec 12, 2020

siragu manimegalai2சமயப் பிரிவுகள்

இந்தியாவில் தோன்றிய சமயங்களை வைதிக சமயம், அவைதிக சமயம் என்று இருவகையாகப் பிரித்துக் கொள்வது இந்திய தத்துவ மரபாகும். “இந்திய தத்துவஞானிகள் அனைவரையும் இருபெரும் பிரிவினராப் பிரிப்பது வழக்கம். ஒரு பிரிவினர், வேத உபநிடதகங்களில் கூறப்பட்டனவற்றைச் சரியென ஒப்புக் கொள்ளுவோர். மற்ற பிரிவினர், அவற்றைச் சரியென ஒப்புக்கொள்ளாதோர். வேதத்தை ஒப்புக் கொள்வோரை வைதிகர் என்ற சொல்லாலும், ஒப்புக் கொள்ளாதோரை அவைதிகர் என்ற சொல்லாலும் குறிப்பிடும் மரபு உண்டு. உலகாயதர், சமணர், பௌத்தர் ஆகிய மூவருமே அவைதிகர் எனப்படும் பிரிவைச் சேர்ந்தவர். வைதிகருள் சாங்கியர், யோக மதத்தினர், நையாயிகர், மீமாம்சகர், வேதாந்திகள், சித்தாந்திகள் எனப் பல உட்பிரிவினர் இடம் பெறுவர்” என்ற கருத்தின் வழியாக இந்திய சமயங்களின் இருவகைப் பகுப்பினை உறுதி செய்து கொள்ள முடிகின்றது.

மணிமேகலை காலத்தில் இவ்விருவகைப் பகுப்புகள் இருந்துள்ளன. மேலும் 1. அளவை வாதம், 2. சைவவாதம், 3. பிரமவாதம், 4. வைணவவாதம், 5.வேதவாதம், 6. ஆசீவகவாதம், 7. நிகண்டவாதம், 8. சாங்கிய வாதம், 9. வைசேடிக வாதம்,, 10. பூதவாதம் என்ற பத்துவகை சமயங்களும் இருந்துள்ளன. இதனோடு பௌத்தம் என்பதையும் இணைத்துப் பதினோரு சமயங்கள் மணிமேகலை காலத்தில் இருந்துள்ளன. இவற்றை வைதிக, அவைதிகப் பகுப்புக்குள் அடக்கலாம்.

“சாத்தனார் மொழிந்துள்ள பத்து தத்துவங்களையும் வைதிக தரிசனம், அல்லது ஆத்திக தத்துவம் என்றும் அவைதிக தரிசனம், அல்லது நாத்திக தத்துவம் என்னும் இருபெரும் பிரிவிற்குள் அடக்கிக் கூறலாம்.

அசீவகம், நிகண்டவாதம், பூதவாதம், என்ற மூன்றுமே வேதங்களைப் புறக்கணித்த நாத்திக தத்துவங்களாகும். எஞ்சியன ஆத்திகம் சார்ந்தன.“ என்ற கருத்து மணிமேகலை சுட்டும் சமயங்களை இருவகைப்பட்டதாக அமைத்துக்காட்டுகின்றது.

இவற்றோடு பௌத்த சமயமும் வேதநெறியை ஏற்காதது. அவைதிக சமயம் சார்ந்தது என்பதையும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

பின்வரும் பட்டியல் இரு சமயப் பிரிவுகளை வகைமை செய்து காட்டுவதாக உள்ளது. இதனடிப்படையில் இந்திய மெய்யியலில் தோன்றிய சமயங்களின் நிலைப்பாட்டை எளிதாகப் புரிந்து கொள்ள இயலும்.

வைதிக சமயங்கள் அவைதிக சமயங்கள்
அளவைவாதம்,(நையாயிகம், பிரமாணவாதி) ஆசீவகம்
சைவம் நிகண்டவாதம் (சமணப்பிரிவு)
பிரமவாதம் பூதவாதம் (உலகாயதம்)
வைணவம்; பௌத்தம்
வேதவாதம்
சாங்கியம்
வைசேடிகம்

மேற்கண்ட பகுப்பினை மணிமேகலைக் காப்பிய ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரும் ஏற்று மொழிந்துள்ளார். வைதிக மார்க்கம் என்றே தன் நூலில் அவர் குறிப்பிடுகிறார். “வைதிக மார்க்கத்து அளiவாதியை எய்தினள்” என்ற மணிமேகலைக் குறிப்பு மணிமேகலைக் காப்பியக் காலத்தில் வைதிக மார்க்கம், அவைதிக மார்க்கம் என்ற இரு நெறிகள் இருந்தன என்பதைக் காட்டுகின்றது.

இவற்றின் வழியாக மணிமேகலை காலச் சமயங்கள் பதினொன்று என்று அறிந்து: கொள்ள முடிகின்றது. இப்பதினொன்றையும் ஐவகை சமயங்களாகச் சாத்தானர் காட்டுகிறார் என்றாலும் இங்கு விரிவு கருதி பதினோரு வகை சமயங்கள் என்ற நிலையில் இங்கு ஆராய எடுத்துக்கொள்ளப்பெறுகின்றன.

இப்பாகுபாடு பிற்காலத்தில் மிகவும் வளர்ந்து பல்கிப் பெருகியது. புறப்புறச்சமயம், புறச்சமயம், அகப்புறச்சமயம், அகச்சமயம் என்று சமயங்கள் வளர்ச்சி பெற்று வளர்ந்தன. அவை பற்றிய விளக்கங்கள் பின்வருமாறு.

புறப்புறச்சயங்கள் (6)

1. உலோகாயுதம், 2. சௌத்திராந்திகம், 3. யோகாசாரம், 4. மாத்தியமிகம், 5. வைபாடிகம், 6. சமணம்

புறச்சமயங்கள் (6)

1. பூருவமீமாம்சம் 2. சாங்கியம் 3. நையாயிகம் 4. வைசேடிகம் 5. யோகம்
6. ஏகான்மவாதமாகிய உத்தரமீமாம்சம் (பாங்சாராத்திரம்)
அகப்புறச்சமயங்கள் (6)
1. பாசுபதம் 2. மகாவிரதம் 3. காபாலிகம்4. வாமம் 5. பைரவம்
6. ஐக்கிய வாதம் (காஷ்மீர சைவம்)

அகச்சமயம் (6)

1.பாஷாண வாதம் 2. பேத வாதம் 3.ஈசுவர அவிகார வாதம்
4.சிவசம வாதம் 5. சிவசங்கிராந்தவாதம் 6.சிவாத்துவவாதம்

ஆக மொத்தம் இருபத்துநான்கு சமய மரபுகள் தமிழகத்தில் தோன்றியுள்ளன இவை பிற்காலத்தில் வளர்ச்சி பெற்றவை என்பதும் சைவ சமயக் கண்ணோட்டத்தில் வகுக்கப்பெற்றவை என்பதும் இங்குக் கவனித்தற்குரியதாகும்.

மணிமேகலை காப்பிய காலத்தின் சமுதாயச் சூழலும், சமயச் சூழலும்

சிலப்பதிகாரத் தமிழகம் என்ற நூலில் சாமி. சிதம்பரனார் சிலப்பதிகாரத் தமிழகச் சமுதாயச் சூழலைச் சித்தரித்துள்ளார். அது அப்படியே மணிமேகலைக் காலத்திற்கும் பொருந்துவதாக உள்ளது.

“நகரத்திலும் நாட்டிலும் ஒரு புறம் இன்பவாழ்வு குடி கொண்டிருந்தது. மற்றொரு புறம் வறுமையாலான துன்ப வாழ்வு குடிகொண்டிருந்தது. வறுமை காரணமாகப் பலர் உழைத்தும், திருடியும் வாழ வேண்டிய நிலையில் இருந்தனர். பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலைத்திருந்த காரணத்தால் தான் சமுதாயத்திலே இக்குற்றங்கள் குடியேறியிருந்தன…. சிலப்பதிகாரத் தமிழகத்திலே பெரிய செல்வர்கள் இருந்தனர். ஏழை மக்களும் இருந்தனர். பெரிய நிலத் தலைவர்கள் இருந்தனர். நிலமற்ற ஏழை உழவர்களும் இருந்தனர். விபசாரம், பொய், திருட்டு, குடி முதலிய கூடா ஒழுக்கங்கள் இருந்தன. செல்வர்களுக்கு விபசாரப் பெண்கள் தேவையாக இருந்தனர். ஏழை மக்களிலும் இத்தகையவர்கள் இருந்தார்கள்” என்ற குறிப்பும் “சிலப்பதிகாரக் காலத்திலே தமிழ்நாட்டில் பல தெய்வ வணக்கம் குடி கொண்டிருந்தது. தெய்வங்களுக்குப் பூசைகளும், திருவிழாக்களும் நடைபெற்று வந்தன. பெரும்பாலான மக்கள் தெய்வ பக்தியள்ளவர்களாகவே விளங்கினர். எங்கும் அறவுரைகளும், நல்லொழுக்கங்களும் போதிக்கப்பட்டன. ஆயினும் விபசாரம், பொய்,திருட்டு, முதலிய குற்றங்களும் நடந்து கொண்டுதான் இருந்தன’’ என்ற குறிப்பும் தமிழகத்தின் காப்பிய காலச் சமுதாயச் சூழலை எடுத்துக்காட்டுவனவாக விளங்குகின்றன.

இக்குறிப்புகளின் வழியாகப் பல் சமயங்களின் புகலிடமாகத் தமிழகம் இருந்தது என்பது உறுதியாகின்றது. மணிமேகலையில் இந்திரவிழா கொண்டாடும் நிலையில்

“ஒட்டிய சமயத்து உறுபொருள்வாதிகள்
பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்”

என்று உரைக்கின்றது. இதன் வழியாக பல் சமயவாதிகளும் வந்து தம் கருத்தை அறிவிக்கும் பட்டிமண்டப அமைப்பு மணிமேகலை காலத்தில் இருந்தது உறுதியாகின்றது.

இவ்வகையில் பல்வகையான சமயங்களுக்கு இடமளிக்கும் நிலையில் மணிமேகலை காப்பியத்தின் களம் நெகிழ்தன்மையுடன் இருந்துள்ளது என்பது தெரியவருகிறது. இதன் காரணமாக பல் சமயக் கருத்துகளையும் தந்து சமய உலகிலும் ஒரு மறுமலர்ச்சியைச் சீத்தலைச் சாத்தனார் ஏற்படுத்தியுள்ளார்.

மணிமேகலை காப்பிய காலச் சமயங்கள் பொது அறிமுகம்

மணிமேகலை காப்பியத்தின் காலத்தில் பதினோரு சமயங்கள் இருந்தன என்பது முன்னரே குறிக்கப்பெற்றது. அப்பதினோரு சமயங்கள் பற்றிய பொது அறிமுகத்தைத் தருவதாகப் பின்வரும் பகுதி அமைகின்றது.

வைதிக சமயங்கள்

வேத நெறிப்பட்ட சமயங்கள் வைதிக சமயங்கள் எனப்படுகின்றன. இவை வேதச் சார்பினை ஏற்பனவாகும்.

அளவை வாதம் (நையாயிகம்) (பிரமாணவியல்)

அளவை வாதம் என்ற சமயப் பிரிவு பிரமாணவியல், நையாயிகம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. “நியாயம் என்ற சொல் நிய என்ற வேர்ச்சொல்லின் அடியாகத் தோன்றியது. மெய்ப்பொருள் முடிபிற்கு உய்க்கும் வழிகளை ஆராயும் அறிவியல்கலைதான் நியாய சாத்திரம் ஆகும். உண்மைத்தன்மையினை அளக்க உதவும் கருவியினைப் பிரமாணம் என்பார் வடநூலார். இதனை அறவை என்ற அழகிய தமிழில் சாத்தனார் மொழிபெயர்த்துள்ளார். … இந்நெறிக்குத் தனியே தத்துவம், அறிவியல், மதவியல் முதலிய துறைகள் இருப்பினும் அளவையியல் ஒன்றையே ஆழ்ந்து நோக்குவது இதன் சிறப்பியல்பாகும். ஆதலின் சாத்தனார் நையாயிகனின் அளவை இயற்கருத்துகளை மட்டுமே தம் நூலில் ஆராய்ந்துள்ளார்” என்ற கருத்து மணிமேகலைக் காப்பியத்தில் சீ்த்தலைச் சாத்தனாரின் அளவையியல் நோக்கு பற்றி அறிவிப்பதாக உள்ளது. பிரமாணவியல் என்பதைச் சைவ சித்தாந்தம் தன் முக்கிய பகுதியுள் ஒன்றாகக் கொண்டுள்ளதால் இச்சமயம் சைவ மதச் சார்புடைய நிலையில் வளர்ச்சி பெற்றுள்ளது.

மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலை என்ற தலைமைப் பாத்திரம் சமயவாதிகளைச் சந்திக்க முயல்கிறாள். அவ்வகையில் முதன் முதலாக அளவைவாதியைச் சந்தித்து அவர்தம் சமயத்திறத்தை அவள் வினவுகிறாள்.

“வைதிக மார்க்கத்து அளவை வாதியை
எய்தினள் எய்திநின் கடைப்பிடி இயம்புஎன,”
என்பது மணிமேகலையின் கூற்றாகும்.
அளவையியல் என்பது மெய்ப்பொருளை அடைவதற்கு முன்னதான அறிவு சார் இயல் என்பதாகப் புரிந்து கொள்ளப் படவேண்டும். இவ்வளவைகளால் மெய்ப்பொருள் அறிந்து கொள்ளப்பெறும். இதனை அறிந்தவன் அளவைவாதியாவான். அளவைகள் பத்து என்றும், எட்டு என்றும், ஆறு என்றும் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு நிலையில் அமைத்துக்கொள்கின்றன. எனவே அளவை வாதம் அனைத்துச் சமயங்களாலும் எடுத்துக்கொள்ளப்பெறத் தக்க நிலையைப் பெற்றிருந்தது என்பது தெரியவருகிறது.

பிரத்தியட்சம் (காட்சி), அனுமானம் (கருதல்), உவமம், சத்தம் (ஆகமம்), அருத்தாபத்தி, சுபாவம் (இயல்பு), ஐதீகம், அபாவம் (இன்மை), பாரிசேடம் (மீட்சி), சம்பவம் (உள்ள நெறி அளவை) எனப்படும் பத்து அளவைகளை மணிமேகலைக் காப்பியம் காட்டுகிறது. இப்பத்து அளவைகளின் அடிப்படையில் மெய்ப்பொருள் பற்றிய சிந்தனைகளை ஆய்ந்து அறிய வழி வகுக்கிறது அளவைவாதம். இப்பத்தினையும் விரிவாக மணிமேகலைக் காப்பியம் எடுத்துரைத்துள்ளது. இவை மணிமேகலை கால சமயங்கள் என்ற தனித் தலைப்பில் ஆராயப்பெறுகின்றன.

பத்து அளவைகளில் நான்கு அளவைகளின்வழி மெய்ப்பொருள் அறிபவர்கள் நையாயிக சமயத்தார் ஆவர். நையாயிக சமயம் சார்ந்தோர், பிரத்தியக்கம்(காட்சி), அனுமானம்(கருதல்), ஆகமம்(உரை), உவமானம் ஆகிய நான்கு அளவைகளை முக்கியப்படுத்துகின்றனர்.

காட்சி, கருதல், உரை, உவமானம் ஆகிய நான்கையும் நையாயிகர் அடிப்படைகளாகக் கருதுகின்றனர். ஆனால் இவ்வளவைகளை அளந்து, பகுத்துத் தொகுத்து அறிவதற்கு ஒவ்வொரு உயிருக்கும் அறிவாற்றல் தேவை என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை. உயிரில் அறிவாற்றல் செயல்படவில்லையெனில் ஐம்பொறிகளும் செயல்பாடது. உயிருக்குக் கருவியாகச் செயல்படுவது அதன் அறிவாற்றலாகும். எனவே நையாயிகர் கொள்ளும் நான்கும் முடிவான அளவைகளாக ஏற்கப்படவில்லை.

சைவ வாதம்

அளவைவாத சமயத்திற்குப் பின் மணிமேகலை சைவவாதியைச் சந்திக்கச் செல்கிறாள். அவரின் வாதங்களைக் கேட்டறிகிறாள். இதன்வழி சைவசமயக் கருத்துகள் மணிமேகலைக் காப்பியத்தில் காட்டப்பட களம் அமைந்தது.
இவையே இப்போது இயன்றுள அளவைகள்
என்றவன் தன்னைவிட்டு, இறைவன் ஈசன்என
நின்ற சைவ வாதிநேர் படுதலும்
பரசுநின் தெய்வம் எப்படித்து என்ன’’
என்பது சைவவாதியை மணிமேகலை என்ற பாத்திரம் வினவிய முறையாகும்.

“சிவபெருமானை ஆன்மாக்கள் அடைந்து உய்வதற்குரிய பரிசுத்தம் , அறிவு, அருள் முதலியவற்றை அங்கங்களாகக் கொண்டு பேரின்பத்தைத் தருவதாகிய சமயம் சைவ சமயம் எனப்படும்…. சைவம் என்பதற்குச் சிவபெருமானை உயிர்கள் உய்வதற்குரிய வழிகளைக் காட்டும் சமயம் என்பது பொருள்.” என்று சைவ சமயம் குறித்து விளக்கம் தரப்பெறுகிறது.

“சிவம் என்னும் நாமம் தமக்கேயுடைய செம்மேனி எம்மானைப் பரம்பொருளாகக்கொண்டு வணங்கும் நெறியைச் சைவம் என்றும் சிவபரம்பொருளை வணங்குபவர்களைச் சைவர் என்றும் கூறுதல் வெள்ளிடைமலை” என்று சைவ சமயம் குறித்தும் சைவர் குறித்தும் விளக்கம் தருகிறார் வை. இரத்தினசபாபதி
மேற்கண்ட விளக்கங்கள் வழியாகச் சைவ சமயம் பற்றிய பொது அறிமுகத்தை அறிந்து கொள்ள முடிகின்றது.

இந்த சைவ சமயம் தனக்கென சைவ சித்தாந்தத் தத்துவத்தைப் பின்னாளில் வளர்த்தெடுத்தது. “சிவ வழிபாடு தொன்மையுடையதெனினும், சைவத் தத்துவம் பிற்காலத்தில்தான் வடிவம் பெற்றது” என்ற கருத்தின் வழியாக சைவசித்தாந்தம் என்பது பின்னாளில்தான் உருவானது என்பதை உறுதிப்படுத்த முடியும்.

“சித்தாந்தம் என்பதற்கு முடிந்த முடிபு என்பது பொருளாகும். ஆகவே சைவ சித்தாந்தம் என்பதற்கு உயிர்கள் சிவபெருமானை அடைந்து உய்வதற்கு வழிகாட்டும் எல்லாச் சமயங்களிலும் சிறந்ததும், எல்லாச் சமயங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதுமான சமயம் என்பது பொருளாம். சித்தாந்தம் என்பதற்குச் சித்திக்கப்பெற்ற அல்லது கைவரப்பெற்ற முடிந்த முடிபு என்று பொருள் கொள்ளலாம்” என்று சித்தாந்தத் தத்துவ வளர்ச்சியின் இயல்பினை சமய ஆராய்ச்சியாளர்கள் காட்டுகின்றனர்.

“சைவத்தில் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மை மிக விளக்கமாக பேசப்படுகிறது. இவற்றை இறை, உயிர், தளை எனவுங் கூறுவர். இவை மூன்றும் வேறுவேறாக என்றும் நிலைபெற்று உள்ளவை என்றும் கூறுவர்” என்ற கருத்தின் வழியாக சைவ சித்தாந்தந்தின் முப்பொருள் உண்மைகளை அறிந்து கொள்ள முடிகின்றது.

இதன் மணிமேகலைக் கால நிலையைச் சீத்தலைச் சாத்தனார் தன் காப்பியத்தில் எடுத்தியம்பியுள்ளார். இவை பின் இயல்களில் விவரிக்கப்பெறுகின்றன.

பிரம்ம வாதம்

பிரம்மவாதம் என்ற சமயம் உபநிடதச் சார்புடையது. உபநிடதங்கள் என்பவை வேதங்களின் உட்பிரிவுகளின் ஒரு பகுதியாக அமைந்தனவாகும். “மந்திரம், பிரமாணம், உபநிடதம் ஆகிய மூன்றையும் சேர்த்து வேதம் என்ற பெயராலே வழங்குவது மரபு” என்ற கருத்தின் அடிப்படையில் வேதத்தின் உட்பிரிவாக விளங்குவது உபநிடதங்கள் என்பது உறுதியாகின்றது. “ஈசாவாசியம், கேனம், முண்டகம், மாண்டூக்கியம், பிரச்சினம், பிருக தாரணியகம், சாந்தோக்கியம், சுவேதாசுவதரம், தைத்திரீயம், கைவல்லியம், கௌஷீதகி, அதர்வசிரம், அதர்வசிகை முதலியவை சில முக்கிய உபநிடதங்கள். இவை பல கருத்துகளைக் கொண்டுள்ளன. இவற்றின் பொருள்நிலையை ஆராய்ந்து ஒழுங்குபட எழுந்த நூலே பிரம்ம சூத்தி;ரம் எனப்படும் நூல். .. பிரம்ம சூத்திரம் பிரம்ம ஞானத்தை வற்புறுத்துகிறது. முடிந்த பொருள் ஒன்றே என்று கூறுகிறது. இந்நூல் பற்றி எழுந்த மதங்கள் அனைத்தும் ஏகான்ம வாதம் ( ஓரே ஆன்மாதான் உள்ளது என்னும் பேச்சு) உடையன எனக் கொள்ளப்படுகிறது.” என்ற கருத்தின் வழி பிரம்ம வாதத்தின் இயல்பினை அறிந்து கொள்ள முடிகின்றது.

மேலும் பிரம்ம வாதம் பிரம்ம சூத்திரம் என்ற நூலுக்கு செய்யப் பட்ட உரை காரணமாக நான்கு பிரிவுகளாக அமைகின்றது. ‘‘சத்தப் பிரம்ம வாதம், மாயாவாதம், பாற்கரிய வாதம், கீரிடாப் பிரம்ம வாதம் என்னும் நான்கு பிரிவுகளாக பிரம்மவாதம் அமைந்துள்ளது’’ என்றும் கருதப்படுகிறது.

இச்சமயம் பற்றிய ஈரடிகளில் மணிமேகலை குறிக்கிறது. “பேர் உலகு எல்லாம் பிரமவாதி ஓர் தேவன் இட்ட முட்டை என்றனன்“ என்ற நிலையில் பிரம்மவாத மதம் மணிமேகலையில் குறிக்கப்படுகிறது. பேர் உலகங்கள் எல்லாம் பிரம்மன் உருவாக்கியது என்பது இதன் வழி பெறப்படும் கருத்தாகும்.

வைணவ வாதம்

மணிமேகலைக் காப்பியத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள வைணவ வாதம் பின்னாளில் தத்துவச் செழுமை பெற்று மேலோங்கியது. வைணவவாதியிடமும் மணிமேகலைப் பாத்திரம் அவர்தம் தத்துவ முறைமை பற்றிக் கேட்டறிகிறது.

திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயம் வைணவம் ஆகும். இதனைப் பின்பற்றுபவர்கள் வைணவர்கள் எனப்படுகின்றனர். வேதம், ஆகமம், இதிகாசம், புராணங்கள் ஆகியன இச்சமயத்தின் மூல ஊற்றுக்களாகக் கருதப்பெறுகின்றன. பகவத்கீதை, உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் ஆகிய மூன்றும் இச்சமயத்தின் மிக முக்கியமான பனுவல்கள் ஆகும். விட்ணுபுராணம், பாகவதம் ஆகியனவும் இவ்வரிசையில் வைத்து எண்ணப்படும்.

வைணவ ஆகமங்கள் இருவகைப்படுகின்றன. 1.பாஞ்சராத்திரம், 2. வைகானசம் என்பன அவை இரண்டும் ஆகும். பாஞ்சராத்திரம் என்பது கடவுளால் உபதேசிக்கப்பெற்ற வழிபாட்டு முறையாகும். இம்முறை எளிமையானது. தந்திர முறைகள் அதிகம் உடையதாகும். வைகானசம் என்ற ஆகமம் முனிவர்களின் மூலமாக உபதேசிக்கப்பெற்றது. இதில் பூசை முறைகள் மிகக் கவனமாக செய்யத்தக்கனவாக அமைக்கப்பெற்றுள்ளன. மந்திரங்களும் அதிகமாகக் கொண்ட பூசை முறை இதுவாகும்.

தத்துவங்களுக்கு முற்பட்ட தொன்மை சார் வைணவத்தில் முப்பொருள்கள் சுட்டப்பெறுகின்றன. ஈஸ்வரன், சித்து, அசித்து என்பன அம்மூன்றும் ஆகும். அவை பற்றிய விளக்கங்கள் பின்வருமாறு.

“சித்து என்றது ஆன்மாவை. அவ்வாத்மா, தேகேந்திரி யமநப் பிராணப் புத்தி விலட்சணமாய்,அசடமாய், ஆநந்தரூபமாய், நித்யமாய், அணுவாய், அவ்யக்தமாய், அசித்தியமாய், ஞானாச்ரயமாய், ஈச்வரனுக்கு நியாயம்யமாய், தார்யமாய், சேஷமாய் இருக்கும்” என்ற கருத்தின்படி சித்து என்பதைப் பற்றி விளங்கிக்கொள்ள முடிகின்றது. சித்து என்பது ஆன்மாவைக் குறிக்கும் சொல் ஆகும். இது உடலுடன் தொடர்புடையது. ஆனந்த வடிவமானது. அழியாதது. அணுக்களால் இணைந்தது. ஈசுவரனுடன் இணையத்தக்கது போன்ற இயல்புகளை உடையது சித்து ஆகும்.

“அசித்து ஞான சூன்யமாய் விகாராஸ்பதமாய் இருக்கும். இது சுத்த சத்வம். மிச்ர சத்வம், சத்வ சூன்யம் என்று மூன்றுவிதம்” என்று அறிவற்ற பொருளாக அசித்து கொள்ளப்படுகிறது.

“ஈசுவரன் அகிலஹேய பரத்யநீகாநந்த, ஞாநாநந்த சொரூபனாய் ஞானசக்தியாகி கல்யாண குண விபூஷிதனாய், சகல ஜகசிருட்டி ஸ்திதி, சம்மார கர்த்தாவாய், ஆர்த்தோ, ஜிஞ்ஞாஸு, ராதார்தீ, ஜ்ஞானி என்கிற சதுர்வித புருஷர்களுக்கும் ஆச்ரயணீயனாய்,தர்மார்த்த காமமோட்சம் என்னும் சதுர்வித பலப்பிரதனாய் விலகட்சண விக்ரஹயுக்தனாய், லட்சுமி, பூமி நீளா நாயகனாய் இருப்பான்” என்று ஈசுவரனாக நாராயணமூர்த்தியைக் காட்டுகிறது வைணவம். ஈஸ்வரனே பரம்பொருள். அவரே அறிவின் வடிவம். இலட்சுமி, பூமி, நீளா ஆகியோரின் நாயகனாக விளங்குபவர்.

இவ்வாறு வைணவ முப்பொருள்களை விளங்கிக் கொள்ளலாம். இவ்வைணவ சமயத்தில் ஐந்து குறிகள் உள்ளதாகக் காட்டப்படுகிறது. அவை தாடம், புண்டரம், நாமம், மந்திரம், அர்ச்சனம் ஆகியனவாகும். வைணவத்தில் பஞ்சகம் என்றும் ஐந்து முக்கியப் பொருள்கள் காட்டப்பெறுகின்றன. அவை அடைபவன், அடையப்படுவது, பயன், உபாயம், இடையூறு என்பன அவ்வைந்தும் ஆகும். இவ்வகையில் திருமாலை முன்னிறுத்தி முக்தி வழி பரம்பொருளை அடைவது வைணவ சமயம் ஆகின்றது. இச்சமயம் பற்றிய மணிமேகலையின் கருத்துகள் தொடர்ந்த இயல்களில் சுட்டப்பெற்றுள்ளன.

வேதவாதம்

‘வேதம் என்பதற்கு அறிவு என்று பொருள். பழைமை விரும்பிகளுக்கு அது மிகவும் மேலான அறிவு. புனிதமானது. வெளிப்படுத்தப்பட்டது” என்று வேதத்திற்குப் பொருள்விளக்கம் செய்யப்படுகிறது. “தெய்வீகமான கருத்துகளைத் தன்னுள் அடக்கி மறைத்து வைத்திருப்பதால் அது மறையெனப் பெயர்பெற்றது. ஆசிரியரனிடம் கேட்டுத் தெளிவுறவேண்டிய நூலாதலால் இதனைச் சுருதி எனவும் கூறுவர்” என்றும் வேதம் என்பதற்கு விளக்கம் தரப்பெறுகிறது. “இது இருக்கு, எஜஸ், சாமம், அதர்வணம் என்று நான்கு பிரிவுகளையுடையது. இது ஞான காண்ட, கர்ம காண்ட வகையால் ஈசுவரனையும், அவனை உபாசிக்கும் யஞ்ஞாதிகளையும் கூறும்… இது சிக்சை, வியாகரணம், நிருத்தம், சந்தஸ், சோதிஷம், கல்பம் என்ற ஆறு அங்கங்களை உடையது” என்ற கருத்து வேதங்களின் பகுப்புகள் பற்றி அறிவிக்கின்றது.

நான்கு வேதங்கள்

“இருக்கு” என்பதற்கு துதித்தல் அல்லது வழிபடல் என்பது பொருள். இறைவனை வழிபடுவதற்கான பாடல்களை உடைய தொகுப்பு “இருக்கு” வேதமாகும். இது பத்து உட்பிரிவுகளாகிய மண்டலகங்களைக் கொண்டுள்ளது. முதல் ஏழு மண்டலங்களில் இறைவனாக தீ கொள்ளப்படுகிறது. பத்தாவது மண்டலத்தில் பிரமன், இந்திரன் ஆகிய இறைவர்கள் குறிக்கப்படுகின்றனர்.

யஜுர் என்ற சொல்லுக்கு யாகம் என்பது பொருள். யாகம், பலி, தானம் முதலிய கிரியைகளைச் செய்யும் முறைகளை யஜுர் வேதத் தொகுப்பு விளக்குகிறது. ருத்ரம் என்பது இதனுள் அமைந்த முக்கியமான பகுதியாகும்.

ஸாமம் என்னும் இன்னிசையால் பாடப்பட்டது சாமவேதம் ஆகும். இதில் பரமேசுவரன் அக்கினி, இந்திரன் ஆகிய தெய்வங்களால் பாடப்பெற்றுள்ளனர். பாபம் நீங்கி நற்பலன்களைத் தரும் வேதத்தொகுப்பாக இது அமைகிறது.

அனுட்டானங்கள், மந்திரங்களை உச்சரிக்கும் முறைகள், எதிரிகளை வெல்லும் மந்திர முறைகள் ஆகிய கொண்ட வேதத்தொகுப்பு அதர்வண வேதமாகும்.

இந்நான்கு பிரிவுகள் தவிர ஆறு அங்கங்களை உடையதாக வேதங்கள் அமைகின்றன. ஆறு அங்கங்களுக்கான விளக்கத்தைப் பின்வருமாறு உ.வே.சா. குறிப்பிடுகிறார். “உலகியற் சொல்லையொழித்து வைதிகச் சொல்லை ஆராயும் நிருத்தமும், அவ்விரண்டையும் உடனாராய்ந்த ஐந்திரத் தொடக்கத்து வியாகரணமும், போதயானீயம், பாரத்துவாசம், ஆபத்தம்பம், ஆத்திரேயம் முதலிய கற்பங்களும், நாராயணீயம் வராராகம் முதலிய கணிதங்களும், எழுத்து ஆராய்ச்சியாகிய பிரமமும், செய்யுள் இலக்கணமாகிய சந்தமும் ஆம்” என்ற முறையில் வேதங்களின் ஆறு அங்கங்களாக நிருத்தம், வியாகரணம், போயானீயம், பாரத்துவாசம், ஆபத்தம்பம், ஆத்திரேயம் ஆகியன விளங்குகின்றன.

வேதப் பொருள்

வேதங்கள் முக்கியமான நான்கு அடிப்படைக் கருத்துகளைக் கொண்டுள்ளதாக கி. லட்சுமணன் கருதுகிறார். மூலகாரணம், காரண காரியத்தொடர்பு, ஒழுங்கும் ஒழுக்கமும், ஒரு தெய்வவாதம் ஆகிய நான்கு கருத்துகளை வேதங்கள் வலியுறுத்துகின்றன என்பது அவர் கருத்தாகும்.

மூலகாரணம்

இயற்கையின் நியதி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தெய்வமே மூல காரணம் என்ற கொள்கை வேதத்தின் காட்டப்படும் மூலகாரணக் கொள்கையாகும்.

காரண காரியத் தொடர்பு

இந்த உலகில் நிகழும் ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு என்று காரண காரியப் படுத்தும் முறையும் வேதங்களின் அடிப்படையாக விளங்குகிறது.

ஒழுங்கும் ஒழுக்கமும்

உலக நிகழ்வுகள் அனைத்தும் காரண காரியத் தொடர்புடையவை என்றால் அக்காரண காரியத் தொடர்பு ஏற்படுவதற்கு ஓர் ஒழுங்குமுறை அவசியமாகின்றது. இவ்வொழுங்குமுறையை வரையறுக்கும் தெய்வத் தலைமைக்கு ஒழுக்கம் அவசியமாகின்றது. இவ்வகையில் இதனை வலியுறுத்தும் நிலையில் வேதங்கள் அமைகின்றன.

ஒரு தெய்வம்

வேதங்களில் பல கடவுளர் பெயர்கள், குறிப்புகள் இடம்பெற்றாலும் எல்லாம் வல்ல ஒருவனே அனைத்தையும் இயக்குகிறான் என்ற அடிக்கருத்து வலுவுடையதாக உள்ளது.

இவ்வகையில் வேதச்சார்புடைய கருத்துகளை எடுத்துரைக்கும் சமய முறை வேதவாதம் எனப்படுகிறது. இச்சமயக் கருத்துகளுக்கும் மணிமேகலை இடம் தந்துள்ளது. வேதம் பற்றிய அறிமுகச் செய்திகள் மட்டுமே இங்குக் காட்டப்பெற்றுள்ளன. இவை அடுத்தடுத்து வரும் இயல்களில் விளக்கப்படுகின்றன.

சாங்கிய வாதம்

உபநிடத கொள்கைகளைப் பின்பற்றி சில சமயக் கருத்துகள் உருவாயின. அவை நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், மீமாஞ்சை, வேதாந்தம் என்னும் ஆறு தரிசனங்களாக வளர்ந்தன. இவ்வாறினையும் எட்டு தரிசனங்கள் (ஷட் தரிசனங்கள்) என்று அழைக்கும் முறை உண்டு. இவ்வாறில் பழைமையானது சாங்கியம் ஆகும். இவ்வாறில் சாங்கியம், வைசேடிகம் ஆகியன பற்றிய குறிப்புகள் மணிமேகலையில் காணப்படுகின்றன.

“சாங்கியம் என்ற சொல்லுக்குப் பொருள் பூரண அறிவு என்று பெயர்” என்ற பொருள் விளக்கம் தரப்பெறுகிறது, ““சங்க்யா” என்ற தாதுவிலிருந்து சாங்கியம் என்னும் சொல் தோன்றியது. இத் தாதுவிற்குப் பகுத்தறிதல், எண்ணுதல் எனப் பல பொருள்கள் உண்டு. உலகத் தோற்றத்தில் காணப்படும் கூறுகளைச் சிந்தித்து தெளிந்து பலவகை மூலப்பொருள்களாகப் பிரித்து, கண்டறிந்ததத்துவங்கள் என்று எண்ணுதலால் சாங்கியம் என்ற பெயர் வருகிறது” என்றும் சாங்கிய சமயத்திற்கான பொருள் விளக்கம் தரப்பெறுகிறது.

‘‘சாங்கியத்தை உருவாக்கியவர் கபிலர் என்ற கருத்து உண்டு. இருப்பினும் இவருக்கு முன்னதாக சாங்கியக் கருத்துகள் உதயம் பெற்று இவரால் வரையறுக்கப்பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தும் இங்குக் கொள்ளத்தக்கது. உலகத்தை இறைவன் படைத்தான் என்ற கொள்கையைச் சாங்கியம் ஏற்கவில்லை. மாறாக பிரகிருதியாகிய ஒரே மூலத்தினின்று உலகம் இயல்பாகவே பரிணாமம் எய்தியது எனச் சாங்கியம் கருதுகிறது. இதன் காரணமாக இதற்குப் பரிணாமவாதம், சுபாவவாதம் என்ற பெயர்களும் உண்டு’’ என்று கருதுகிறார் சோ.ந. கந்தசாமி.

சாங்கியம் பிரகிருதி, புருடன் ஆகிய இரண்டினைத் தத்துவ உலகிற்கு வழங்கியது. எல்லாப்பொருள்களும் தோன்றுவதற்கு மூலகாரணமாக அமைவது பிரகிருதி ஆகும். இதிலிருந்து தோன்றுவன எல்லாம் விகுதிகள் ஆகும். இது அசேதனமாக இருப்பது. எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருப்பது. முக்குணங்களை உடையது. புறமாக இருப்பது. குருட்டுத் தன்மை வாய்ந்தது.

புருட தத்துவம் என்பது பொருளின் பரிணாமத்திற்கு இடம் தருவது. எல்லா உடல்களிலும் பரவி இருப்பது. அழியாதது. உள்ளத்தின் உணர்வாக அமைவது. சேதனமாக அமைவது. சலனமில்லாமல் இருப்பது. முக்குணங்கள் இல்லாதது. அகமாக இருப்பது. முடத்தன்மை வாய்ந்தது.

இச்சமயம் ஆன்மாக்கள் பல என்ற கொள்கை உடையது. பிரகிருதி என்ற மூலப்பகுதியையும், புருடனையும் பிரித்து உணரும் விவேக உணர்வு ஒன்றே வீடு தருவது என்ற கொள்கையினர் ஆவர்.

இதனைத் தொட்டுத் தொடர்வது யோகம் எனப்படும் மற்றொரு சமயப் பிரிவாகும். பிரகிருதி தொடர்பில் இருந்து புருடன் பிரிதலுக்கான ஒரு வழிமுறை யோகத்தால் அமையும் என்பதால் இச்சமயம் சாங்கியத்துடன் பெரிதும் ஒத்துப்போகிறது. அதனைத் தொடர்கிறது. இருப்பினும் யோகம் இறைவன் என்ற கொள்கையை ஏற்கிறது. ஆனால் இறைவன் என்ற கொள்கையை ஏற்காதது சாங்கியம் ஆகும்.

வைசேடிக வாதம்

“விசேடம் என்ற சொல்லின் அடியாகத் தோன்றியது வைசேடிகம். குறிப்பிட்ட ஒரு பொருள் ஏனைய பொருள்களினின்றும் வேறுபடுதற்குரிய விசேட இயல்புகள் அல்லது சிறப்புத்தன்மைகள் பற்றி ஆராய்தலின் இத்தத்துவம் வைசேடிகம் எனப்பெயர் பெற்றது” என்று வைசேடிக சமயத்திற்கான பெயர் பொருள் விளக்கத்தைத் தருகிறார் சோ. ந. கந்தசாமி.

நையாயியர் என்ற அளவைவாதிகள் (நியாயவாதிகள்) வைசேடிக சமயத்துடன் நெருங்கிய கருத்து ஒற்றுமை உடையவர்கள் ஆவர். எனவே நியாய வைசேடிகம் என்று இரு மதங்களையும் இணைத்துக் கூறும் மரபும் உண்டு.

“இந்த உலகும், உலகிலுள்ள பொருட்களும் ஒரு பொய்த் தோற்றம் அல்ல. உலகும் உண்மை. அவ்வுலகில் உள்ள பொருள்களும் உண்மை என்று வைசேடியர் கருதினர்” என்று வைசேடிக சமயக் கருத்தினை அறிவிக்கிறார் கி.லட்சுமணன்.

வைசேடிகர்கள் ஒன்பது திரவியங்களை தம் சமய அடிப்படைகளாகக் கொண்டனர். நிலம், நீர், நெருப்பு, காற்று, காலம், இடம், ஆத்மா, மனம் போன்றன வைசேடியருக்கு அடிப்படைப் பொருள்களாகும். இவ்வொன்பது பொருள்களே உருவாவதற்கும், பிரிந்து அழிவதற்கும் காரணமாகும் என்பதும் இவர்தம் கருத்தாகும்.

இச்சமயத்தின் முதல் நூலாக கணாதரின் வைசேடிக சூத்திரம் அமைகிறது. இந்நூலுக்குப் பிரசத்தபாதர் என்பவர் உரை வரைந்துள்ளார். இவ்வுரை நூல் முதன்மைநூல் போன்ற பெருமை பெற்றது. இதன் பெயர் பதார்த்த தருமசங்கிரகம் என்பதாகும்.

“ஆன்மா என்றென்றும் விளங்கும் பொருளாகவும் எங்கும் நிறைகின்ற பொருளாகவும் விளங்குகின்றது. அறிதல், விரும்புதல், வெறுத்தல்,செயற்படுதல், இன்பம், துன்பம், நன்மை, தீமை, அல்லது புண்ணியம், பாவம் ஆகிய பண்புகளை இது உடையது ஆகும்” என்று ஆன்மாவிற்கு வைசேடிக நிலையில் விளக்கம் தரப்பெறுகின்றது.

“ஆன்மாக்களுக்குள் தலைசிறந்த ஆன்மாவாகக் கடவுள் இருப்பவர். கடவுள் ஒருவரே. பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபேறு, அழிவு ஆகியவற்றிற்குக் காரணமாக இறைவன் வரம்பில்லாத ஆற்றலோடும் எல்லையில்லாத அறிவோடும் விளங்குகிறான். இப்பிரபஞ்சமானது இன்மையினின்றும் இறைவனால் தோற்றுவிக்கப்பெறுவதில்லை என்றும் நிலைத்துள்ளனவாகிய திசை, காலம், ஆகாயம், மனங்கள், ஆன்மாக்கள் ஆகியவற்றினின்றும் இப்பிரபஞ்சமானது இறைவனால் தோற்றுவிக்கப்பெறுகிறது. இறைவன் இந்தச் சட உலகத்திற்கு முதல் காரணர் அல்லர். அவர் நிமித்தகாரணர் ஆவார்” என்பது வைசேடிகம் தரும் கடவுள் கொள்கை ஆகும்.

இவ்வாறு மணிமேகலை காலத்தில் அளவைவாதம், சைவம், வைணவம், வேதவாதம், பிரம்மவாதம், சாங்கியம், வைசேடிசம் ஆகிய ஏழு சமயப் பிரிவகள் வைதிக நிலையில் வளர்ச்சி பெற்றிருந்தன என்பதை அறியமுடிகின்றது.

அவைதிக சமயங்கள்

மணிமேகலை காலத்தில் அவைதிக சமயங்களான ஆசீவகம், நிகண்டவாதம் (சமணப் பிரிவில் ஒன்று) பௌத்தம், பூதவாதம் ஆகியன வளர்ச்சி பெற்றிருந்தன. அவை பற்றிய பொது அறிமுகங்கள் பின்வருமாறு.

ஆசீவக வாதம்

அசீவகம் என்ற சொல்லுக்குப் பல நிலைகளில் பொருள் கொள்ளப்படுகிறது. ““ஜீவிக்கிறவன் மதம் அசீவகம் என்றும்”, “பிறர் தயவில் ஐயமேற்று வாழும் துறவி”, “ஜீவனை உண்ணாதவர்” என்றும், “இல்லறத்தவரும், துறவறத்தவரும் வாழும் முறைமையை உரைப்பது” என்று பொருள் கொள்ளப்படுகிறது. இந்நான்கு பொருள்களையும் ஒன்றாய் வைத்து ஆராய்கையில் அவற்றின் மையம் ஒன்றினை நோக்கி அமைவதை உணரமுடிகின்றது. ஜீவனை வருத்தாது வாழ்வது என்பதே அசீவகத்தின் அடிப்படைக் கொள்கை என்பது அறியத்தக்கதாகின்றது.
இச்சமயத்தின் தொடக்குநர்களாக விளங்குபவர்கள் பூரணகாசிபர், மர்கலி கோசாலர், பகுத கச்சானர் ஆகியோர் ஆவர். இவர்கள் மூவரும் மூன்று ஆசீவகக் கொள்கைகளை முன்மொழிந்தவர்கள் ஆவர். இவர்களில் பூரண காசிபர் அகிரியாவாதம் என்பதையும் மர்கலி நியதிக் கொள்கை என்பதையும், பகுதகச்சானர்க்கு அணுக்கொள்கை என்பதையும் விரிவுபடுத்தினர்.

ஆசீவகர்கள் என்பவர்கள் காட்சிப் பொருள் உண்மைவாதிகள் ஆவர். இவர்கள் உலகில் காணப்படும் எவ்வகைப் பொருள்களையும் அணுச்செறிவால் ஆனவை என்றும் அவை ஐவகைப்படும் என்றும் கண்டனர். நுண்பொருள் ஐந்து, அணு ஐந்து என்று இவ்வைம்பொருள்கள் அழைக்கப்படுகின்றன. நிலவணு, நீரணு, தீயணு, காற்றணு என்ற நால்வகைப் பூதங்களும் உயிரணு என்னும் அறிவுடை பொருளும் ஆக அணு ஐந்து என்கிறது ஆசீவகம். வானம் என்ற பூதத்தை ஆசீவகர்கள் ஏற்பதில்லை. ஆசீவக சமயத்தின் குறிக்கத்தக்க சில அடிப்படைக் கருத்துகள் பின்வருமாறு.

“பொருளின் ஆக்கத்திற்குக் காரணம் என்பது வேண்டாம். காலம் என்பது ஒரு பொருளன்று. அணுக்களால் ஆகிய ஐவகைப் பொருள்களே உண்மை. பொருள்கள் யாவும் ஆழ்தல், மிதத்தல் என்னும் நிகழ்வுகள் உடையவை. பொருள்களுக்குக் குணம், இயல்பு, பால் பகுப்பு உண்டு. நால்வகை நியதிக் கொள்கை ஒட்டிய சமயம் ஆசீவகம்” ஆகியன இச்சமயத்தின் இயல்புகள் ஆகும் என்பன இச்சமயத்தின் அடிப்படைக் கருத்துகளாக விளங்குகின்றன.

இவ்வகையில் அணுக்கொள்கை என்பது ஆசீவகத்தின் அடிப்படைக் கொள்கையாக அமைந்துள்ளது. இச்சமயம் பற்றியும் சீத்தலைச் சாத்தனார் தன் மணிமேகலைக் காப்பியத்தில் குறித்துள்ளார். அச்செய்திகள் பின்வரும் இயல்களில் விவரிக்கப்பெறுகின்றன.

நிகண்டவாதம்

நிகண்டவாதம் என்பது சமண சமயப் பிரிவுகளுள் ஒன்றாகும். மணிமேகலை காலத்தில் சமண சமயத்தின் ஒரு பிரிவான நிகண்டவாதம் தமிழகத்தில் பரவி இருந்துள்ளது. எனவே அதனைச் சீத்தலைச் சாத்தனார் தன் மணிமேகலைக் காப்பியத்தில் குறித்துள்ளார்.

“சமணக் கடவுள் பற்றற்றவர். ஆதலின் நிர்கந்தர் . . . அல்லது நிகண்டர் எனப்பட்டார். அது பற்றிச் சமணசமயம் நிகண்டமதம் எனப் பெயர் பெற்றது” என்று நிகண்டவாத சமணத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார் மயிலை சீனி. வேங்கடசாமி சமண சமயம் பல பெயர்களால் அழைக்கப்பெற்று வந்துள்ளது. “ஜைனம், ஆருகதம், நிகண்டவாதம், அநேகாந்தவாதம், கியாத்வாதமதம்” என்பன இச்சமயத்திற்கான வேறுபெயர்கள் ஆகும்.

புலன்களை அடக்கி வெற்றிகண்டவர் என்ற நிலையில் ஜீனர் – வெற்றி கண்டவர் என்ற அடிப்படையில் இம்மதம் ஜைனம் எனப்பட்டது. அருகக்கடவுளை வணங்குவதால் ஆருகதம் எனவும் அழைக்கப்பட்டது. இச்சமயம் பல முடிபுகளை உடையதாகையால் அநேகாந்தவாதம் எனப்படுகிறது. கியாத்வாதம் என்பதும் அநேகாந்த வாதத்தைக் குறிக்கும் மற்றொரு சொல் ஆகும். இவ்வாறு இச்சமயம் பல பெயர்கள் குறிக்கப்பெறுகின்றது.

மணிமேகலையில் குறிக்கப்படுவது நிகண்டவாதம் என்ற சமணசமயத்தின் ஒரு பிரிவு என்பதை உ.வே.சாமிநாதையர் தெளிவாகத் தான் மணிமேகலைக் காப்பியத்தின் குறிப்புரையில் குறிப்பிடுகிறார். “நிகண்டவாதி சமணர் இரு திறத்தாரில் ஒருவகையான், இவன் நிர்கந்தவாதியென்றும், திகம்பரவாதி என்றுங் கூறப்படுவான்” என்ற குறிப்பின்வழி நிகண்டவாதம் என்பது சமணத்தின் ஒரு பிரிவு என்பதும் அதுவே மணிமேகலை காலத்தில் தமிழகத்தில் இருந்தது என்பதும் பெறப்படுகிறது.

பொதுவாக சமணம், சமணர் என்ற சொற்களுக்குத் துறவு, துறவியர் என்று பொருள். துறவு நிலை பெற்றவர்களே வீடுபேறு அடைய இயலும் என்பது இச்சமயத்தின் கருத்தாகும். துறவு நிலையின் வழியில் வீடுபேற்றை அடையச் செய்யும் சமயம் சமணம் ஆகின்றது.

சமணசமயக் கருத்துகளைப் பரப்புவதற்காக உலகம் வந்த பெரியோர்களைத் தீர்த்தங்கரர்கள் என்று அழைப்பர். அவ்வகையில் சமண சமயத் தீர்த்தங்கரர்களாக இதுவரை இருபத்துநான்கு பெரியோர்களை அடையாளம் காட்டுகிறது சமண சமயம். இதில் வர்த்தமான மகாவீரர் என்பவர் இருபத்துநான்காவது தீர்த்தங்கரர் ஆவார்.

சமண சமயம் தன் வளர்ச்சியில் மூன்று பிரிவுகளாக வளர்ந்தது. “அவை சுவேதாம்பர சமணம், திகம்பர சமணம், ஸ்தானகவாசி சமணம் என்பனவாகும். சுவேதாம்பர் சமணத் துறவிகள் வெண்ணிற ஆடை அணிவர். இவர்களின் ஆலயங்ளில் உள்ள தீர்த்தங்கரர் திருவுருவங்களுக்கு வெண்ணிற ஆடை உடுத்துவர். சுவேதாம்பரம் என்பதற்கு வெண்ணிற ஆடை என்பது பொருள். திகம்பர சமணத் துறவிகள் ஆடை அணியமாட்டார்கள். …திகம்பரம் என்றால் திசைகளை ஆடையாக உடுத்தவர் என்பது பொருள் . . . இவர்களின் கோயில்களில் உள்ள தீர்த்தங்கரர் திருவுருவங்களுக்கு ஆடையுடுத்தப்பெறாமல் திகம்பரமாகவே இருக்கும். சுவேதாம்பர சமணரும், திகம்பர சமணரும் உருவவழிபாட்டினர். ஸ்தானவாசி சமணருக்கு உருவ வழிபாடு உடன்பாடு அன்று. அவர்கள் தம் கோயில்களில் சமண ஆகம நூல்களை வைத்து அவற்றையே தீர்த்தங்கரர்களாகவும்,அருகக் கடவுளாகவும் பாவித்து வணங்குவர்’’ என்று சமண சமயப் பிரிவுகள் பற்றிய அறிமுகத்தைத் தருகிறார் மயிலை சீனி வேங்கடசாமி.

இவ்வாறு மணிமேகலை காலத்தில் நிகண்டவாதம் என்ற நிலையில் தமிழகத்தில் சமண சமயம் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.இச்சமயம் குறித்து மணிமேகலைக் காப்பியம் தரும் செய்திகள் பின்வரும் இயல்களில் விவரிக்கப்பெறுகின்றன.

பூதவாதம்

பூதவாதம் என்பது அவைதிக சமயங்களில் ஒன்றாகும். உலகாயுதம் என்ற நிலையிலும் இதனை அறிந்து கொள்ள இயலும்.
பூதங்கள் ஐந்து எனக் கொள்வது பூதவாதிகளின் முடிபாகும். மற்ற சமயங்கள் வானம் என்ற பூதத்தைத் தவிர்க்க இவ்வாதம் வானத்தையும் ஏற்று ஐந்து பூதங்களின் இயல்பால் உலகம் நடைபெறுகிறது என்று உரைக்கின்றது. “பிருதிவி முதலிய ஐந்து தத்துவங்களின் சமவாயத்தில் அறிவு உதிக்கும்” என்று பூத வாத சமயத்தின் இயல்பு மொழியப்பெறுகிறது. ஐந்து தத்துவங்களின் இயல்பினால் அறிவு விளக்கம் பெறும் என்பது பூதவாத சமயத்தின் அடிப்படையாகும். பூத வாத கொள்கைகள் பற்றி நீலகேசி விரிவாக உரைக்கின்றது. ஐம்பூதங்களும் என்றும் உள்ள மெய்ப்பொருள், அவற்றிற்கு அழிவே கிடையாது, அவற்றின் கலப்பே உலகம். உலகிற்குப் படைப்பு, அழிவு எதுவும் கிடையாது என்பன இவ்வாதத்தின் அடிப்படைக் கொள்கைகள் ஆகும்.

மேற்சுட்டியவை அனைத்தும் மணிமேகலை அறிந்து கொண்ட, அல்லது மறுக்க முயன்ற மெய்ப்பொருள் கொள்கைகள் ஆகும். இவற்றைப் பற்றி சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதை என்ற காதை வழி அறிந்து கொள்ள முடிகின்றது. பௌத்த சமயம் பற்றிய கருத்துகளை மணிமேகலை பரவலாக காப்பியந்தோறும் காணமுடிகின்றது. எனவே பௌத்த சமயம் பற்றிய அடிப்படை செய்திகள் இதன் பின்னிலையில் எடுத்துரைக்கப்பெறுகின்றன.

பௌத்தம்

பௌத்த மத எழுச்சிக்கு முக்கியக் காரணமாக அமைபவர் கௌதம புத்தர் ஆவார். இவருக்கு முன்பாக பல புத்தர்கள் இருந்ததாகவும், அவர்கள் பௌத்த மத அடிக்கருத்துகளை உணர்த்தியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. இவ்வரிசையில் இருபத்து நான்காவது புத்தராகக் கௌதம புத்தர் தோன்றினார். அவரின் ஞானத் தேடல் பௌத்த சமயத்திற்கு மேலும் வலுவூட்டியது.

பௌத்த சமயம் அவைதிக சமயமாகும். இது காட்சி, அனுமானம் என்ற இரு அளவைகளை அடிப்படையாகக் கொண்டது. வேதவாக்கியம் என்ற அளவையை ஏற்காதது. இதன் காரணமாக வேதம் சார்ந்த கொள்கைகளுக்கு முரணாக பௌத்தம் அமைந்தது.

புத்தருக்குப் பின்னால் அவரின் மாணவர்கள் புத்தரின் உபதேசங்களை பதிவு செய்தனர். புத்தரின் காலத்திலேயே சங்கம் உருவானது. இச்சங்கம் புத்தக் கருத்துகளைப் பரப்பியது. சீடர்களை உருவாக்கியது. புத்தரின் கருத்துகள் சுத்த பிடகம், அபிதம்மபிடகம், விநய பிடகம் என்ற தொகுப்புகளாகப் புத்தரின் அறிவுரைகள் தொகுக்கப்பெற்றன. புத்தருக்குப் பின்பு அவரின் கருத்துகள் இருவகை நெறிகளாகப் பரவின. ஈனயானம், மகாயானம் என்பன அவை இரண்டுமாகும். இவற்றை முறையே சிறுவழி, பெருவழி என்றும் அழைக்கலாம்.

பெருவழியும் இருவகைப் பிரிவாக வளர்ந்தது. அவை மாத்துமிகம், யோகாசாரம் என்பனவாகும். சௌத்திராந்திகம், வைபாடிகம், ஆகியன சிறுவழிப் பிரிவுகளாகும். பெருவழிப் பிரிவுகள் சீனா, ஜப்பான், திபெத் போன்ற நாடுகளுக்குப் பரவின. சிறுவழிப் பிரிவுகள் தென்னிந்தியாவில், பர்மாவில், இலங்கையில் பரவின.

துக்கம், துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்ற நான்கும் பௌத்த சமயத்தின் உயர் வாய்மைகள் ஆகும். துக்க நிவாரணமே நிர்வாணம் எனப்படும் நிறைநிலை ஆகின்றது. துக்க நிவாரணத்திற்கு எட்டு வழிகளைப் பௌத்தம் காட்டுகிறது. நற்காட்சி, நற்கருத்து, நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கொள்கை, நல்லமைதி ஆகிய இவ்வெட்டும் துக்க நிவாரணத்திற்கான வழிகள் ஆகும்.

பௌத்த சமயத்தில் ஐவகை நெறிகள் கடைபிடிக்க நெறிப்படுத்தப்படுகிறது. அவை கொல்லாமை, கள்ளாமை, காமமின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை, விலக்கப்பட்ட காலங்களில் உண்ணாமை, ஆடல் பாடல் கூத்துகளை நாடாமை, ஒப்பனை செய்யாமை, அதனுடன் இருக்கைகளைப் பயன்படுத்தாமை ஆகியனவாகும்.

புத்தம், தர்மம், சங்கம் ஆகிய மூன்றும் பௌத்த சமய வளர்ச்சிக்கு உதவிய திரிரத்தினங்கள் ஆகும். இவற்றின் வளர்ச்சியால் பௌத்த சமயம் உலகு தழுவிய சமயமாக உயர்ந்தது. இச்சமயம் குறித்த பல தகவல்களை மணிமேகலைக் காப்பியம் அளிக்கின்றது. அவையும் பின்வரும் இயல்களில் விவரிக்கப்பெறுகின்றன.

இவ்வாறு பொதுவான அறிமுக நிலையில் மணிமேகலை காலச் சமயநிலை இவ்வியலில் எடுத்துரைக்கப்பெற்றுள்ளது.

தொகுப்புரை

மணிமேகலை காப்பியம் பௌத்த சமய சார்புடைய நூல் என்ற போதிலும் அதனுள் மற்ற சமயக் கருத்துகளுக்கு இடம் தரும் நிலையில் காப்பியப் போக்கு அமைக்கப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தென்னிந்தியாவில் எழுந்த மெய்ப்பொருள் கொள்கைகள் பற்றியும் அவற்றின் நிலை பற்றியும் அறிந்துகொள்ள முடிகின்றது. மணிமேகலை தென்னிந்திய மெய்ப்பொருளியல் தேடலில் புதிய பாதையைத் தோற்றுவித்துள்ளது. தன் சமயத்தின் நன்மைகளைக் கூறுவோர் மற்ற சமயங்களைப் பற்றியும் அவற்றின் கொள்கைகள் பற்றியும் அறிந்துகொள்வது அவசியம் என்ற நிலையை மணிமேகலைக் காப்பியம் வழங்கியுள்ளது.

சுபக்கம், பரபக்கம் என்ற மரபினை மணிமேகலை துவங்கி வைக்கிறது. இந்தத் துவக்கம் பின்னாளில் அனைத்துச் சமயவாதிகளும் மற்ற சமயக் கருத்துகளைத் தம் சமயக் கருத்துகளோடு ஒப்பிட்டு உரசிப் பார்த்துக் கொள்ள வழி வகுத்துள்ளது.

உலக நாடுகளில் தோன்றிய மெய்ப்பொருள் பற்றிய தேடல், தத்துவம், கொள்கை போன்ற இந்தியாவிலும் இருந்தது என்பதை மெய்ப்பிக்கும் முக்கிய இலக்கியச் சான்றாக மணிமேகலைக் காப்பியம் விளங்குகின்றது.

மணிமேகலை காட்டும் இந்தியத் தத்துவ மரபுகளை வேதச் சார்புடையது (வைதிகம்), வேதச் சார்பற்றது (அவைதிகம்) என்ற இரு நிலைகளில் காணமுடிகின்றது. அளவைவாதம், சைவவாதம், பிரமவாதம், வைணவவாதம், வேதவாதம், சாங்கிய வாதம், வைசேக வாதம் ஆகியன வைதிக சமயங்கள் ஆகும். அசீவகம், நிகண்டவாதம் (சமணப்பிரிவு), பூதவாதம், பௌத்தம் ஆகியன வேதங்களை மறுத்த அவைதிக சமயங்கள் ஆகும். அவைதிக நிலை சார்ந்த சமணமும், பௌத்தமும் இந்தியாவில் ஆதி சமயங்களாக, வளர்ச்சி கண்ட சமயங்களாகக் கொள்ளத்தக்கனவாகும்.

ஒவ்வொரு சமயமும் தனக்கான அளவைகள் பிரமாணங்களின் வாயிலாக வேறுபடுத்த பெற்றுள்ளன. குறிப்பாக வேத வாக்கியம் என்பது ஓர் அனுமானம். இந்த அனுமானத்தின்படி வேதங்கள் சொன்ன கருத்துகளை ஏற்ற சமயங்கள் வைதிக சமயங்கள் ஆகின்றன. வேத வாக்கினை ஏற்காத சமயங்கள் அவைதிக சமயங்கள் ஆகின்றன. வேதங்கள் கடவுள் உண்டு என்றன. அவைதிக சமயங்கள் கடவுள் என்றொருவர் இல்லை என்றன. இருப்பினும் இவ்விரு நெறிகளும் மனித குலத்திற்குத் தக்கவகையில் ஆன்மிக பலத்தை நல்கி வந்திருக்கின்றன என்பது உறுதி.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மணிமேகலைக் காப்பியத்தின் காலமும், அக்காலச் சமயங்களின் பொது அறிமுகமும் – பாகம்-2”

அதிகம் படித்தது