மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மணிமேகலைக் காலத்திற்குப் பிந்தைய நிலையில் சமயங்களின் வளர்ச்சிப் போக்குகள்

முனைவர் மு.பழனியப்பன்

Feb 20, 2021

siragu manimegalai2
மணிமேகலைக் காப்பியம் தமிழக மெய்ப்பொருளியல் வரலாற்றில் ஒரு மையப் புள்ளியாக அமைகிறது. மணிமேகலைக் காப்பியத்திற்கு முன்னான மெய்ப்பொருள் சிந்தனைகளை இது பதிவு செய்துள்ளது. மணிமேகலைக் காப்பியத்திற்குப் பின்பு சமய வாதங்கள், சமயக் கொள்கைகள் பதிவு செய்யப்படவும் இது ஒரு தூண்டுகோலாக இருந்துள்ளது. இக்காப்பியத்தைத் தொடர்ந்து எழுந்த சீவகசிந்தாமணி, வளையாபதி ஆகிய பெருங்காப்பியங்களில் சமண சமயத்தின் வளர்ச்சியை அறிந்து கொள்ள முடிகின்றது. குண்டலகேசியில் பௌத்த சமய வளர்ச்சியை அறிந்து கொள்ளமுடிகின்றது. ஐஞ்சிறு காப்பியங்களில் நீலகேசி தவிர்ந்த மற்ற காப்பியங்களில் சமணசமய வளர்ச்சியை அறிந்து கொள்ளமுடிகின்றது. நீலகேசியில் பௌத்த சமய வளர்ச்சியையும் நீலகேசி மற்ற சமயத்தாரை வாதுக்கு அழைக்கும் நிலையில் பிற சமயக் கருத்துகளையும் வளர்ச்சியையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

இவற்றைத் தொடர்ந்து பக்தி இலக்கிய காலம் தொடர்கிறது. இதில் சைவ, வைணவக் கருத்துகளை பக்தி இலக்கியப் பெரியவர்கள் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து வந்த சைவ சித்தாந்த சாத்திரங்களில் சுபக்கம், பரபக்கம் என்ற நிலைகளில் சமய வாதங்கள் எடுத்துரைக்கப்பெறுகின்றன. ஒட்டக் கூத்தர் எழுதிய காரணை விழுப்புரையான் வளமடல் என்ற சிற்றிலக்கியம் உலகாயுதக் கருத்துகளை முன்வைக்கிறது. அதே நேரத்தில் மற்ற சமயங்களை கருதல் அளவைகளைத் தகர்க்கிறது. குறிப்பாக இம்மைக்கால இன்பத்தை முன்னிறுத்தி இந்நூல் செய்யப்பெற்றுள்ளது. இவ்வாறு தொடர்ந்து தமிழக மெய்யியல் வளர்ச்சி பெற்று வந்துள்ளது.

செவ்வியல் காலம் என்ற அடிப்படையில் காணும்போது ஐஞ்சிறுங்காப்பியங்கள் எழுந்த காலம் வரையான நிலையில் சமயங்களின் வளர்ச்சிநிலையைக் காண்பது என்பது இவ்வாய்வுத்திட்டத்திற்குப் பொருந்துவது என்பதால் அக்கால எல்லைவரை சமய வளர்ச்சி நிலைகளைக் காண்பது என்பது இங்குப் பொருத்தமுடையதாகின்றது,

Siragu puttar

பௌத்த சமய வளர்ச்சி

மணிமேகலைக்குப் பின்பும் பௌத்தசமயம் வளர்ச்சி பெறத் தொடங்கியது. அதன் வளர்ச்சியைக் குண்டலகேசி, நீலகேசி ஆகிய காப்பியங்களின் பதிவுகள் வழி அறியமுடிகின்றது. இவைதவிர வீரசோழியம், சித்தாந்தத் தொகை, மானாவூர்ப்பதிகம், திருப்பதிகம், விம்பசாரன்கதை, அபிதம்மாவதாரம் போன்ற பல நூல்களில் பௌத்தசமய வளர்ச்சிக்கான பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இவை தவிர பெயரளவில் மட்டுமே அறியப்படுகிற பௌத்த நூல்கள் சிலவும் இச்சமய வளர்ச்சியை எடுத்துரைப்பனவாக உள்ளன. ஆசாரிய புத்த தத்த மகோதரர் என்பவர் மதுராத்த விலாசீனி, வினய வினவிச்சயம், உத்தரவினிச்சயம், ஜினலங்காரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஆசாரிய தருமபாலர் என்பவர் பரிமார்த்த மஞ்ஜீஸா, நெட்டிய கரணத்தகதா, பரமார்த்த தீபனீ போன்ற நூல்களை எழுதியுள்ளார். அநுருத்தர் ஆயிரம் மாத்த சங்கிரகம், பரமார்த்தாவினிச்சயம், நாமரூபப் பரிச்சேதம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். காபசதெரர் என்பவர் மோகவிச்சேதனீ, விமதிவிச்சேதனீ, விமதி வினோதினி, அநாகத வம்சதம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவ்வகையில் பௌத்த வளர்ச்சி தமிழக அளவில் இருந்துள்ளது. இவற்றில் செவ்விலக்கிய கால எல்லைக்குட்பட்ட குண்டலகேசி, நீலகேசி ஆகியவற்றில் பதிவு செய்யப்பெற்றுள்ள பௌத்தசமய வளர்ச்சியை இப்பகுதி எடுத்துரைக்கிறது.

குண்டலகேசி

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி பௌத்த சமய நூலாகும். இதனை இயற்றியவர் நாதகுத்தனார் ஆவார். இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. தற்போது ஒரு நூறு பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இக்காவியத்தின் கதை பல திருப்பங்களைக் கொண்டது.

இராச கிருகம் என்ற நகரத்தைத் தலைமையாக வைத்து அரசாண்ட அரசனுக்கு மந்திரி ஒருவர் இருந்தார். அவரின் மகள் பத்திரை ஆவாள். இப்பத்திரை ஆவண நகரத்தில் வாழ்ந்த வணிகரின் மகள் என்ற கருத்தும் உளது. இவள் ஓர் இளைஞனைக் காதலித்தாள். அவன் அரசனால் குற்றவாளியாகக் கருதப்பெற்றவன் என்ற போதிலும் அவனை அக்குற்றத்திலிருந்து விடுவிக்கிறார் அமைச்சர். அதன்பின் அவனைத் தன் மகளுக்குத் திருமணம் செய்துவைக்கிறார். இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் இவர்கள் இருவருக்கும் ஊடல் வந்தது. ஊடல் வளர்ந்து பெரிதாகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிய எண்ணுகின்றனர். இதில் பத்தரை கணவனை முற்றிலும் பிரிந்துவிடும் அளவிற்குச் சென்றுவிடுகிறாள். இதன் காரணமாக அவளுக்கு உலக வாழ்வின்மீது வெறுப்பு தோன்றுகிறது. அவள் சமண சமயத்தில் இணைந்து துறவியாகிறாள். சமண சமயக் கருத்துகளை அவள் பரப்பி வந்தாள். மற்ற சமயத்தாருடன் வாதம் செய்து வெற்றி பெற்றாள்.

பத்தரை தன் தலையை மழித்துக் கொண்ட போதிலும் சுருள் சுருளாக அவளின் தலைமுடி வளர்ந்தது. இதன் காரணமாக அவள் குண்டலகேசி எனப்பட்டாள். குண்டலகேசி என்றால் குண்டலம் போன்று வளைந்து சுண்ட தலைமுடியை உடையவள் என்று பொருள். அதுவே அவளின் பெயராக மக்கள் வழங்கினர். இதுவே காப்பியத்தின் பெயராகவும் ஆனது. இந்நிலையில் ஊர் ஊராகச் சென்று சமண சமயத்தை அவள் பரப்பி வந்தாள்.

இந்நிலையில் ஓர் ஊருக்குச் சென்றபோது அங்கு சமயவாதம் புரிவதற்காக நாவல் கிளை ஒன்றை நட்டுவிட்டு அவள் தனக்கான உணவைத் தேடி பிச்சைப் பாத்திரம் ஏந்திப்புறப்பட்டாள். அப்போது அவ்வூருக்குப் புத்தர்பிரானும் தன் சீடர்களுடன் வருகை புரிந்து இருந்தார். புத்தரின் சீடர்களுள் ஒருவரான சாரி புத்தர் என்பவர் குண்டலகேசி நட்ட நாவல் மரத்தின் அருகே வந்தார். அங்கு வந்து அங்கிருந்த சிறுவர்களிடம் அந்நாவல் மரத்தைப் பிடுங்கிடச் செய்தார். அந்நேரத்தில் குண்டலகேசி வர சாரி புத்தருக்கும் அவளுக்கும் சமயவாதம் நடைபெற்றது. இவ்வாதத்தில் குண்டலகேசி கேட்ட வினாக்களுக்குச் சாரிபுத்தர் விடைதருகிறார். ஆனால் சாரி புத்தர் வினவிய வினாக்களுக்குக் குண்டலகேசியால் விடையிறுக்க இயலவில்லை. இதன் காரணமாக அவள் சாரிபுத்தரைச் சரண் அடைந்தாள். அதற்குச் சாரி புத்தர் என்னைச் சரணடைய வேண்டாம். புத்தரைச் சரணடைக என்று கூறி அவளைப் புத்தரிடம் அழைத்து வருகிறார். புத்தரை வணங்கிப் பௌத்த மதம் சார்கிறாள் குண்டலகேசி. இதுவே இக்காப்பியக் கதையாகும்.

இக்காப்பியத்தில் பௌத்த சமயக் கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அவையடக்கமாக வரும் பாடலில் புத்தபெருமான் பெருமை எடுத்துரைக்கப்பெற்றுள்ளது.

நோய்க்குற்ற மாந்தர் மருந்தின்சுவை நோக்க கில்லார்
தீக்குற்ற காத லுடையார்புகைத் தீமை யோரார்
போய்க்குற்றமூன்று மறுத்தான்புகழ் கூறு வேற்கென்
வாய்க்குற்றசொல்லின் வழுவும்வழு வல்ல வன்றே

நோயாளிகள் மருந்தின் சுவை பற்றிக் கவலைப்படாது தன் நோய்தீர அதனை உண்பர். குளிரில் நடுங்குபவர்கள் புகையை ஏற்றுக்கொண்டு தீயை வரவேற்பார்கள். அரச வாழ்வைத் துறந்து: மூவகைக் குற்றங்களை நீக்கிய புத்த நீலகேசி ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்றாக அமைவது நீலகேசி ஆகும். இதனை இயற்றியவர் யார் என அறியப்படவில்லை. இது பத்துச் சருக்கங்களை உடையது. 895 பாடல்களை உடையது. இது குண்டலகேசிக்கு எதிராக எழுந்த காப்பியம் என்றே கருதப்படுகிறது. பாஞ்சால நாட்டில் இருந்த சமண முனிவர் முனிச்சந்திரருக்கும் நீலிப் பேய்க்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலே காப்பியமாக படைக்கப்பெற்றுள்ளது. சமண மதமே இதில் வெல்கிறது. இதனுள் குண்டலகேசியின் நூறு பாடல்கள் அறிமுகம் செய்யப்பெறுகின்றன. நூறு பாடல்களின் முதற்குறிப்பு தரப்பெற்று குண்டலகேசியின் வாதங்கள் மறுக்கப்பெறுகின்றன. இதன் காரணமாக குண்டலகேசி மறைந்தாலும் அந்நூலில் இருந்த பௌத்த சமயப்பாடல்கள் இவை என அறிந்துகொள்ள

ஆதிதான் பெரியனாய் அறங்கெடும் அளவுஎல்லாம்
ஊதியமே உணர்ந்தவன் உனுறுதருமமே உரைத்தான்
யாதனையுந் தான்வேண்டான் அயலார்க்கே துன்புற்றான்
போதியான் எம்இpறைவன் பொருந்தினார் உயக்கொள்வான்.
என்ற நிலையில் பௌத்த மதக் கருத்துகளுக்கு இடமளித்துள்ளது நீலகேசி

இதனுள் அமைந்துள்ள குண்டலகேசி வாதச் சருக்கம், அருகச் சந்திர வாதச் சருக்கம், மொக்கல வாதச் சருக்கம், புத்த வாதச் சருக்கம் ஆகியன பௌத்தக் கருத்துகளைக் கொண்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் பௌத்த மத வளர்ச்சியை ஓரளவிற்கு அறிந்து கொள்ளமுடிகின்றது.

குண்டலகேசி

நீலகேசி காப்பியத்தில் நீலகேசி தான் அறிந்த சமண சமயக் கருத்துகளுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்று வாதம் செய்கிறாள். அவ்வகையில் பாஞ்சால நாட்டில் குண்டலகேசி என்ற பௌத்த மதக் கொள்கையாளர் இருப்பதை அறிந்து அவளுடன் வாது செய்ய முனைகிறாள். குண்டலகேசிக்கும் நீலகேசிக்கும் நேருக்கு நேரான கருத்து மோதல்கள், தத்துவ விளக்கங்கள் அமைகின்றன. இவ்விவாதத்தில் நீலகேசி வெல்கிறாள் என்றாலும் பௌத்த சமயக் கருத்துகளை அவள் எதிர்கொள்ளும் நிலையில் பௌத்த சமயக் கருத்துகள் வெளிப்படுத்தப்பெற்றுள்ளன.

அருகச் சந்திரர்

குண்டலகேசியை வென்றபின் அருகச்சந்திரர் என்ற பௌத்தரை வாதில் வெல்லச் செல்கிறாள் நீலகேசி. அருகச் சந்திரர் உஜ்ஜயினி என்ற இடத்தில் இருக்கிறார். அங்குச் சென்று அவரை வாதுக்கு அழைக்கிறாள் நீலகேசி. அவருடன் வாது செய்து அவரையும் வெல்கிறாள்.

மொக்கலன்

மொக்கலன் என்பவர் பத்மபுரத்தில் இருந்த பௌத்த ஞானி ஆவார். இவர் சாரிபுத்தருக்கு ஈடான புத்தரின் சீடர். இவருடன் வாதுக்கு நிற்கிறாள் நீலகேசி. பெருத்த வாதம் நடைபெறுகிறது.

புத்தர்

நீலகேசி பௌத்த மதத்தின் பெருவளர்ச்சிக்குக் காரணமான கௌதம புத்தரைக் கபிலபுரத்தில் சென்று சந்திக்கிறாள். அவருடன் வாதுக்கு நிற்கிறாள். ஆன்மா தவத்தின் வழி நன்னெறி பெற இயலும் என்ற நிலையில் நீலகேசியின் கருத்துக்கு உடன்படுவதாக நீலகேசி குறிக்கிறது.
மேற்கண்ட பௌத்த அறிஞர்களை நீலகேசி சந்தித்ததாக நீலகேசி காப்பியம் குறிக்கிறது. இருப்பினும் புத்தரை நீலகேசி சந்தித்த நிகழ்வு புனைவு என்று கொண்டாலும் பௌத்தம் மணிமேகலைக்குப் பின்பு வளர்ச்சி பெற்றிருந்தது என்ற கருத்தை நீலகேசி நான்கு பௌத்த சமய வல்லுநர்களிடம் விவாதம் நடத்த முன்வந்ததிலிருந்து உணரமுடிகின்றது.

மணிமேகலைக் காப்பிய காலத்திற்குப் பின்பு சைவம், வைணவம் ஆகிய சமயங்கள் வளர்ச்சி பெற்றதற்கான அடையாளங்கள் அதிகம் கிடைக்கவில்லை. ஆனால் ஆறாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் வருகைக்குப் பின்னால் சைவம் எழுச்சியுற்றது. இதே காலத்தில் வைணவமும் ஆழ்வார்களால் வளர்ச்சி பெற்றது. எனவே செவ்விலக்கிய கால எல்லையில் மணிமேகலைக் காப்பிய காலத்திற்குப் பின்பு சைவ, வைணவ சமயங்களின் வளர்ச்சி என்பது குறிப்பிடும் அளவிற்கு இல்லை. பிரம்மவாதமும் மணிமேகலைக் காப்பிய காலத்திற்குப் பின் வளர்ச்சி பெற்றதாக அறிய இயலவில்லை. வேதவாதம், ஆசீவகவாதம், நிகண்டவாதம் (சமணம்), சாங்கிய வாதம், வைசேடிகவாதம், பூதவாதம் ஆகியன இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. நீலகேசியில் இச்சமயங்கள் பற்றிய மறுப்புகள் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக இச்சமயங்கள் தமிழகத்தில் வளர்ந்திருந்தன என்பதை உணரமுடிகின்றது.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மணிமேகலைக் காலத்திற்குப் பிந்தைய நிலையில் சமயங்களின் வளர்ச்சிப் போக்குகள்”

அதிகம் படித்தது