மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மணிமேகலைக் காலத்திற்குப் பிந்தைய நிலையில் சமயங்களின் வளர்ச்சிப் போக்குகள் (பாகம் -2)

முனைவர் மு.பழனியப்பன்

Mar 6, 2021

siragu manimegalai2வேதவாதம்

வேதவாதம் சைவம், வைணவம், பிரம்ம வாதம் போன்றவற்றை உள்ளடக்கிய பகுதியாக நீலகேசிக்குள் கருதப்பெறுகிறது. பூதிகர் என்பவரின் தலைமையில் ஒரு வேதக்கல்லூரி காகண்டி என்ற இடத்தில் இருந்ததாக நீலகேசியில் குறிப்பிடப்படுகிறது. அங்குச் சென்று, பூதிகரிடம் வாதம் செய்து நீலகேசி வெற்றி பெறுகிறாள். வேதம் ஓதி, உயிர்ப்பலி இடலைத் தவிர்க்க வேண்டும் என்று நீலகேசி அறிவுறுத்துகிறாள். இதன் காரணமாக தூய்மையான வழிபாட்டை நோக்கி பூதிகர் வேத வாதத்தை மாற்றியமைக்க முனைகிறார் என்று குறிக்கிறது நீலகேசி. இவ்வகையில் வேதவாதம் நீலகேசி காப்பிய காலத்தில் வளர்ந்திருப்பதை உணரமுடிகின்றது.

ஆசீவகம்

நீலகேசியில் ஆசீவகக் கருத்துகளை அறிந்தவராகக் காட்டப்பெறுபவர் பூரணர் ஆவார். இவர் குக்குட நகரில் வாழ்கிறார். இவருடன் வாது செய்கிறாள் நீலகேசி. சமணர்களைப் போலவே வாழ்ந்த இயல்புடையவர்களாக ஆசீவகர்களை நீலகேசி காட்டுகிறது. மணிமேகலைக்குப் பின்பு ஆசீவகம் வளர்ச்சி பெற்றிருந்தது என்பதற்கு நீலகேசிக் காப்பிய வாதம் சான்றாகிறது.

சமணம்

பெருங்காப்பியங்களான சீவக சிந்தாமணி, வளையாபதி, ஐங்சிறு காப்பியங்களான உதயண குமார காவியம், யசோதர காவியம், நாக குமார காவியம், சூளாமணி ஆகியன சமண சமயச் சார்பினைப் பெற்றனவாகும். இவற்றின் வழி சமண சமயத்தின் வளர்ச்சியை அறிந்து கொள்ள இயலும்.

சீவகசிந்தாமணி

திருத்தக்க தேவர் எழுதிய சீவக சிந்தாமணி சமண சமயக் காப்பியமாகும். சமண சமயத் துறவியாக விளங்கிய திருத்தக்க தேவர் எழுதிய இந்நூலின் முத்தி இலம்பகப் பகுதி முழுக்க முழுக்க சமண சமயக்கொள்கைகளை எடுத்துரைக்கிறது.

இரு சாரணர்கள் தோன்றி சீவகனுக்கு சமண சமயக் கொள்கைகளை எடுத்துரைக்கின்றனர். மானுடப் பிறப்பின் சிறப்பு, நிலையாமை, நரக கதித்துன்பம், விலங்குக்கதித் துன்பம், மக்கட்கதித்துன்பம், தேவகதித்துன்பம், நற்காட்சி, சீலம், தானம், தானப்பயன், சீலப்பயன், காட்சிப்பயன். வீடுபேறு ஆகியவை பற்றிய சமண சமய விளக்கங்களை இச்சாரணர்கள் வழங்குகின்றனர்.
‘‘கூடிய மும்மையும் சுடர்ந்த கொந்தழல்
நீடிய வினைமரம் நிரைத்துக் கட்டிட
வீடெனப் படும்வினை விடுதல் பெற்றதங்கு
ஆடெழிற் றோளினாய் அநந்த நான்மையே”
என்ற பாடல் வீடுபேற்றின் தன்மையை விளக்குகின்றது. நல்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் ஆகிய மும்மணிகளாகிய பெருஞ்சுடர் இருவினை என்ற மரத்தைச் சுட்டுப் பொசுக்கு நீங்கா இருவினை நீங்கல் வீடுபேறுஆகின்றது என்று குறிக்கிறது சீவகசிந்தாமணி. இக்கருத்துகளை ஏற்றுச் சீவகன் வீடுபேறு அடையும் நிலைக்கு நகர்வது முத்தியிலம்பகமாகும். இவ்விலம்பகத்தின்வழி சமண சமயத்தின் கொள்கைகளை வளர்த்தெடுத்த காப்பியம் சீவக சிந்தாமணி என்பது உறுதியாகின்றது.

வளையாபதி

வளையாபதி காப்பியம் முழுவதுமாய்க் கிடைக்கவில்லை. இதன் கதையாகக் கூறப்படும் நவகோடி நாராயணனின் கதை சமண நிலையில் ஏற்கத்தக்கதாய் இல்லை. இருப்பினும் இக்காப்பியப் பாடல்களாகக் கிடைத்துள்ளவற்றில் இருந்து சமணச் செய்திகளைப் பெறமுடிகின்றது. யாக்கை, செல்வம், இளமை நிலையாமை பற்றிய பல செய்திகள் உடையனவாக இந்நூல் பாடல்கள் உள்ளன. இதனுள் இடம்பெற்றுள்ள சாது சரணம், அருக சரணம் ஆகியன சமண சமயம் சார்ந்தனவாகும். சாது சரணத்தில் ‘‘நிக்கந்த வேடத்து இருடி கணங்களை” வணங்குவதாக ஒரு குறிப்பு இந்நூலில் காணப்படுகிறது. இதன்வழி சமண இருடி கணங்கள் வழிபடும் நிலையில் இருந்தமை தெரியவருகிறது. இவ்வகையில் வளையாபதி காப்பிய காலத்தில் சமண சமயம் வளர்ச்சி பெற்றிருந்ததை உணரமுடிகின்றது.

நீலகேசி

நீலகேசி காப்பியம் சமண சமயக் காப்பியமாகும். இதனுள் இடம்பெறும் முனிசந்திரர் சமணசமயக் கருத்துகளை வெளிப்படத்துகிறார். நீலகேசியின் முதல்பகுதியான தருமஉரைப் பகுதி சமண சமயத் தத்துவ நெறிகளை விளக்கி நிற்கிறது.

காளி என்ற தேவதைக்கும் சமணத்திற்கும் இடையே நிகழும் முரண்பாடாக இந்நீலகேசி புனையப்பெற்றுள்ளது. உயிர்க்கொலை தவிர்த்தல் என்ற சமண சமய அடிப்படையே இக்காப்பியத்தின் மூலமாகும். வினைகளில் இருந்து விடுபடல் என்ற நிலையில் மகிழ்வைப் பெறமுடியும் என்ற கருத்தை முனிச் சந்திரர் குறிப்பிடுகிறார். இவரின் அறவுரைகளை ஏற்றே நீலகேசி மற்ற சமயத்தாரை வாதிற்கு அழைத்து வெல்கிறாள். முனிச்சந்திரர் பாஞ்சால தேசத்தில் இருப்பதாக நீலகேசி தெரிவிக்கிறது.

நீலகேசி காப்பியத்தின்வழி மணிமேகலைக் காப்பியத்திற்குப் பின்காலத்தில் சமணசமயம் உயர்நிலையைப் பெற்றிருந்தது என்பது விளங்குகிறது.

உதயண குமார காவியம்

உதயணன் கதையைக் காவியமாக்கும் இவ்விலக்கியத்தில் துறவுக்காண்டம் என்ற பகுதி சமணத் தத்துவங்களை விளக்குவதாக உள்ளது. இதனுள் முனிவர் ஒருவர் சமண சமயக் கருத்துகளை உதயணனுக்கு வழங்குகிறார்.

நாக குமார காவியம்

நாககுமாரனின் கதையை அறிவிக்கும் இச்சிறுகாப்பியம் நாககுமாரன் நிறைவில் துறவடையும்போது சமண சமயக் கருத்துகளுக்கு இடமளித்துள்ளது. இக்காப்பியத்தின் முன்பகுதியில் மகாவீரரைச் சந்திப்பதாகவும், அவரின் சீடரான கௌதம கணதரர் என்பவரைப் பணிந்து நல்லுரைகள் சொல்லப்படுவதாகவும் சில குறிப்புகள் காணப்படுகின்றன. இவற்றிலும் சமணசமயக் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

யசோதரகாவியம்

வெண்நாவலுடையார்வேள் என்பவர் எழுதிய யசோதர காவியம் யசோதரனின் வரலாற்றை அறிவிப்பது ஆகும். உயிர்ப்பலியிடுவதற்காக இணையர் இருவரைத் தேடும் நிலையில் சமண இரட்டையர் அபயருசி, அபயமதி என்பவர்கள் கிட்டுகின்றனர். இவர்கள் சமண சமய சான்றோர் ஆன சுதத்தாச்சார்யார் சீடர்கள் ஆவர். இவர்களை உயிர்பலியிட நினைக்கும்போது அவர்கள் புன்சிரிப்புடன் மன்னர் உயிர்ப்பலி விட்டு இவ்வுலகம் காத்து வாழ்க என்று குறிப்பிடுகின்றனர். இந்நேரத்திலும் சிரிக்கும் அவர்களின் மன உறுதியைக் கண்டு அவர்களைப் பற்றி மன்னன் அறிந்து கொள்கிறான்.அவர்களின் சமயக் கொள்கையை அறிந்து கொள்கிறான். அவ்வகையில் சமணசமயக் கொள்கைகள் இதனுள் இடம்பெறுகின்றன.

சூளாமணி

தோலாமொழித்தேவரால் எழுதப்பெற்ற இக்காப்பியம் தன் நிறைவு நிலையில் தவம் செய்கிறபோது சமண சமயக் கருத்துகளை அறிவிப்பதாக உள்ளது, இவை தவிர அவிநயம், யாப்பருங்கம், யாப்பருங்கலக்காரிகை, நேமிநாதம், வச்சணந்தி மாலை, நன்னூல்,நம்பியகப்பொருள் ஆகிய இலக்கண நூல்கள், திவாகர நிகண்டு, பிங்கலந்தை நிகண்டு, உரிச்சொல் நிகண்டு, சூடாமணி நிகண்டு, அகராதி நிகண்டு, கைலாச நிகண்டு, பொருட்தொகை நிகண்டு, பொதிகை நிகண்டு போன்ற நிகண்டு நூல்களும், ஸ்ரீபுராணம், மல்லிநாதர் புராணம், சாந்தி புராணம், மாபுராணம், மேருமந்திரபுராணம் போன்ற புராணங்களும், திருநூற்றந்தாதி, திருக்கலம்பகம், ஆதிநாதர் பிள்ளைத்தமிழ் போன்றனவும் சமணச் சார்பின. சமண சமயம் தமிழகத்தில் உயர்வான இடத்தில் இருந்தமைக்கான இலக்கியச் சான்றுகள் இவையாகும்.

சாங்கியம்

மணிமேகலைக் காப்பியகாலத்திற்குப் பின்பு நீலகேசி பெருங்கதை போன்ற காப்பியங்களில் சாங்கிய சமய வளர்ச்சி எடுத்துரைக்கப்பெற்றுள்ளது. பெருங்கதையில் சாங்கியத்தாய் என்ற பாத்திரம் உதயணனுக்கு சாங்கிய சமயக் கருத்துகளை அறிவிப்பவளாக அமைகிறாள்.

நீலகேசியில் அஸ்தினாபுரத்தில் பராசரர் என்பவர் சாங்கிய சமய வல்லுநராகத் திகழ்ந்ததாகக் குறிக்கப்படுகிறது. இவரையும் நீலகேசி வாதில் வெல்கிறாள். இதன் காரணமாக சாங்கிய சமயம் தமிழகத்தில் வளர்ந்திருந்ததை அறியமுடிகிறது.

வைசேடிக வாதம்

நீலகேசி வழியாக உலோக சித்து என்பவர் வைசேடிக வல்லுநராக இருந்தவர் என்பது தெரியவருகிறது. இவரிடம் வாதிட்டு நீலகேசி வெல்கிறாள்.அவரின் கொள்கைகளைக் கேட்டு அவற்றை முழுக்கக் கற்பனை என்று குறித்து மறுக்கிறாள் நீலகேசி. இவ்வகையில் வைசேடிகவாதம் நீலகேசி காப்பிய காலத்தில் வளர்ந்திருந்ததை அறியமுடிகிறது.

பூதவாதம்

நீலகேசி பிசாசகர் என்பவர் பூதவாத ஆசிரியர் என்று குறிக்கிறது. அவருடன் நீலகேசி வாதம் புரிகிறாள். இவர் மதனஜித் என்ற அரசரின் அவையில் சமய அறிஞராக விளங்குபவர். அவரிடத்திற்கே சென்று அவரின் பூதவாதக் கொள்கைகளை மறுக்கிறாள் நீலகேசி. பூதவாதியிடம் ஆன்மா, ஒப்பற்ற உலகம், சமய அடிப்படையில் கட்டுப்பாடு போன்றன குறித்த கருத்துகளை ஏற்கவேண்டும் என்று அச்சுறுத்தி அவ்வாசிரியரைப் பணிய வைக்கிறாள் நீலகேசி. எனவே நீலகேசி காலத்தில் பூதவாதம் வளர்ச்சி பெற்றிருந்ததை அறியமுடிகிறது. இவ்வாறு மணிமேகலைக் காப்பியத்திற்குப் பின்பு இந்திய மெய்ப்பொருளியல் சார்ந்த சமயங்களின் வளர்ச்சி என்பது தொடர்ந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. தற்காலத்தில் சாங்கியம், வைசேடிகம், அசீவகம் போன்ற சமயங்கள் தேய்வுற்ற நிலையை அறியும்போது இவற்றின் தேய்வுக்கான காரணங்கள் பற்றிய ஆராய வேண்டியிருக்கிறது. இந்திய, தமிழக மெய்ப்பொருளியல் வரலாறு கூர்மையுடன் ஆராயப்படவேண்டிய நிலைப்பாடு உடையது என்பதை மட்டும் உணரமுடிகின்றது.

தொகுப்புரை

இந்திய தமிழக மெய்ப்பொருளியல் வரலாற்றில் மணிமேகலைக் காப்பியத்திற்குக் குறிக்கத்தக்க இடம் உண்டு. இக்காப்பியத்திற்கு முன்னும் பின்னும் இந்திய தமிழக மெய்ப்பொருளியல் வளர்ச்சியில் மணிமேகலையின் பதிவுகளும் தாக்கங்களும் குறிக்கத்தக்க நிலைத்த தன்மையை உருவாக்கியுள்ளன என்பது கருதத்தக்கது. மணிமேகலைக்குப் பின்னான மெய்ப்பொருள் வளர்ச்சியை குண்டலகேசி, நீலகேசி, சிவஞானசித்தியார் பரபக்கம் போன்றவற்றின் வழி அறியமுடிகின்றது.

நீலகேசி மற்ற சமயத்தாரைச் சந்திக்கிறாள் என்றபோதும் அச்சமயத்தாரின் பெயர்கள் புனைவுகளாக இருப்பது ஏன், அவர்கள் வாழும் இடம் தமிழகத்தில் இருந்து வேறான இடமாக இருப்பது ஏன் என்ற ஒரு கேள்வி எழுகிறது. ஒரு சமயத்தை வெல்ல மற்றொரு நாட்டுக்குச் செல்வது என்பது படைப்பாளனுக்குப் பாதுகாப்பினைத் தரும் என்ற எண்ணத்தால் இவ்வாறு களம் நகர்த்தப்பெற்றிருக்கலாம் என முடிய முடிகின்றது.
இருப்பினும் நீலகேசி தமிழ்க்காப்பியம். அதில் தமிழக சமயச் சூழல் பதிவாக்கப்பெற்றுள்ளது என்ற நிலையில் தமிழக மெய்யியல் சமய வளர்ச்சியை அறிந்து கொள்ள அது வாய்ப்பளிக்கிறது என்று முடியலாம்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மணிமேகலைக் காலத்திற்குப் பிந்தைய நிலையில் சமயங்களின் வளர்ச்சிப் போக்குகள் (பாகம் -2)”

அதிகம் படித்தது