மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மதச்சார்பின்மையை மறுபரிசீலனை செய்ய முடியுமா?

நவீனன்

Jun 20, 2015

madhachaarpinmai4இந்திய மதச்சார்பின்மை இப்போது விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது. இதொன்றும் புதிதல்ல. காலங்காலமாக நிகழ்ந்து வரும் விஷயம் தான். குறிப்பாக தேர்தலின் போது, மதச்சார்பின்மை அரசியல் கச்சாப் பொருளாகிறது. போலி மதச்சார்பின்மைவாதிகள் என்று பாரதிய ஜனதாக் கட்சி காங்கிரஸ் கட்சியைக் குற்றம் சாட்டுவதும், மதவாதிகள் என்று காங்கிரஸ் பா.ஜ.க-வைச் சாடுவதும் நமக்கொன்றும் புதிதில்லையே.

இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் முகவுரையில் இருக்கும் “மதச்சார்பற்ற, சமதர்ம” என்ற சொற்கள் இப்போதைய விவாதப் பொருளாகியிருக்கின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு விளம்பரங்களில் இருந்த அரசியல் சாசன முகவுரையில் இச்சொற்கள் விடுபட்டுப் போயிருந்தன. பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியிலிருப்பதால் இவ்விடுபடலைப் பற்றி சந்தேகம் எழுவது இயல்பே. 1950ல் இருந்த அரசியல் சாசனப் பதிப்பின் முகவுரையை வெளியிட்டதாக அரசு கூறுகிறது.

1950ல் அமல்படுத்தப்பட்ட அரசியல் சாசனத்தில் இவ்வார்த்தைகள் இல்லை. நாற்பத்திரண்டாவது அரசியல் சாசன திருத்தத்தில் தான் இச்சொற்கள் அரசியல் சாசன முகவுரையில் ஏற்றப்பட்டன. ஆனால் அரசியல் நிர்ணய அவையில் இவ்வார்த்தைகளைப் பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளன.

15.11.1948 அன்று கூடிய அவையில் உறுப்பினரான பேராசிரியர் கே.ட்டி.ஷா மதசார்பற்ற, கூட்டாட்சி முறை கொண்ட, சமதர்ம… என்னும் வார்த்தைகளை முகவுரையில் சேர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தார். அதற்கான வாதங்களையும் முன் வைத்தார். மதச்சார்பற்ற என்னும் வார்த்தையைப் பற்றிய வாதத்தை மட்டும் மொழிபெயர்த்துக் கீழே தருகிறேன்.

“நம் நாடு மதச்சார்பற்ற நாடு என பல நேரங்களில் பல இடங்களில் சொல்லிக் கேட்டிருக்கிறோம். அது உண்மையானால் அவ்வார்த்தை அரசியல் சாசனத்தில் ஏன் இருக்கக் கூடாது? அதன்மூலம் பிற்காலத்தில் தவறான புரிதல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். ‘மதச்சார்பற்ற’ என்னும் வார்த்தை நமது அரசியல் சாசனத்துக்கு மாதிரியாக இருந்த சாசனங்களில் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் எல்லா அரசியல் சாசனங்களும் சம்பந்தப்பட்ட மக்களைப் பின்புலத்தில் கொண்டே எழுதப்பட்டுள்ளன… அதனால்… நம் அரசியல் சாசனத்தில் இவ்வார்த்தையைச் சேர்க்கக் கூடாது என்பதற்கு இதனைக் காரணமாகக் கொள்ள முடியாது.

ஆனால் அம்பேத்கர் இவ்வாதத்தை மறுத்தார். மதச்சார்பற்ற, சமதர்ம முதலிய வார்த்தைகளைச் சேர்ப்பது தேவையற்ற மேற்பூச்சு என்றும், மதச்சார்பின்மையும் சமதர்மமும் அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகளிலும், அரசு நெறிமுறைக் கோட்பாடுகளிலும் வலியுறுத்தப்படுகின்றன என்றார். கே.ட்டி.ஷாவின் தீர்மானம் தோல்வியடைந்தது.

முகவுரை அரசியல் சாசனத்தின் பகுதியா இல்லையா என்ற கேள்வி உச்சநீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ளது. பெருபாரி வழக்கில் (1960) முகவுரை அரசியல் சாசனத்தின் பகுதி அல்ல என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் பின்னர் கேசவானந்த பாரதி வழக்கில் (1973) தனது நிலைப்பாட்டை மாற்றி முகவுரையும் அரசியல் சாசனத்தின் பகுதி என்றது.

மட்டுமல்லாமல், மதச்சார்பின்மை அரசியல் சாசனத்தின் அடிப்படை இயல்புகளில் (basic features) ஒன்று என்றும், அடிப்படை இயல்புகளை அரசியல் சட்ட திருத்தங்களின் மூலம் குலைத்தால் அச்சட்டத் திருத்தங்கள் செல்லாது என்றும் தீர்ப்பளித்தது. இந்த அடிப்படை இயல்புகள் கோட்பாடு அரசியல் சாசனத்தால் நிறுவப்பட்டதல்ல, நீதிமன்றக் கண்டுபிடிப்பு. ஆனால் இந்நீதிமன்றக் கண்டுபிடிப்பு இந்திய அரசியலில் மதச்சார்பின்மையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

madhachaarpinmai3பா.ஜ.கவின் அடிப்படை வாக்கு வங்கி இந்துத்துவ வாக்காளர்கள் தான். அவர்களை பா.ஜ.க திருப்திப்படுத்தியே ஆக வேண்டும். அதே நேரத்தில் நவீன வலதுசாரிக் கட்சியாகவும் தோற்றமளிக்க வேண்டும். இதனால் தான் பல்வேறு குரல்களில் பா.ஜ.க பேசிக் கொண்டிருக்கிறது. இவ்விடயத்தல் பா.ஜ.கவுக்கு எதிர்நிலையில் இருக்கிறது காங்கிரஸ். மதச்சார்பின்மையின் அடையாளமாகவும், சிறுபான்மை மக்களின் காவலனாகவும் தன்மை முன்னிறுத்திக் கொண்டு அதன்மூலம் சிறுபான்மையினரைத் தனது வாக்கு வங்கிகளாக மாற்றுகிறது. ஷாபானு வழக்கில் எடுத்த நிலைப்பாட்டின் மூலம் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தவே முயன்றது. அதைச் சமனப்படுத்த இந்துத்துவர்களையும் அடிக்கடி கொஞ்சிக் கொண்டிருந்தது. இவ்வாக்கு வங்கி அரசியலைத் தேர்தலின் முக்கியமான அங்கமாக இக்கட்சிகள் கருதியதால் மதங்களுக்கிடையே இதனால் ஏற்படும் பகைமையைப் பற்றி கண்டு கொள்ளவில்லை.

மதச்சார்பின்மையைப் பற்றிய குழப்பங்கள் இன்னும் நம்மிடையே நிலவுகின்றன. இந்தியா நேர்மறை மதச்சார்பின்மையைக் கடைபிடித்து வருகிறது. ஆனால் நவீன மதச்சார்பின்மை சிந்தனையின் தாயகமான மேற்கோ, எதிர்மறை மதச்சார்பின்மையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

இவ்வேறுபாட்டுக்கான காரணங்கள் வரலாற்றில் பதிந்திருக்கின்றன. போப்பின் பிடி ஐரோப்பிய அரசர்களை இறுக்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்து விடுபட நல்ல சந்தர்ப்பத்திற்காக அவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். திருச்சபைப் பிளவு அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தியது. சொந்தக் காரணங்களுக்காக கத்தோலிக்க திருச்சபையிலிருந்து தனது தேச சபையை பிரிக்கத் துணிந்தான் எட்டாம் ஹென்றி. அரசும் மதமும் பிரியத் தொடங்கின. இடைவெளி இன்னும் விரிவாகிக் கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் அரசுக்கும் மதங்களுக்கும் மோதல் ஏற்படவில்லை. மதங்களுக்கிடையே தான் மோதல்கள் ஏற்பட்டன. எல்லா மதங்களையும் சமமாகப் பாவிப்பது தான் இதற்கான தீர்வு என்ற அடிப்படையில் இந்திய மதச்சார்பின்மை உருவானது. ஒரே வாக்கியத்தில் சொல்வதானால் – மேற்கத்திய மதச்சார்பின்மை எல்லா மதங்களிலிருந்தும் சமமான தூரத்தில் இருப்பது, இந்திய மதச்சார்பின்மை எல்லா மதங்களோடும் சமமான நெருக்கத்தில் இருப்பது.

இந்திய மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை அன்றாட அரசியலில் கடைபிடிக்க முடியாது என்பது தான் பிரச்சினையே. இந்திய வாக்கு வங்கி அரசியல், மதம், சாதி ஆகியவற்றைச் சார்ந்தே இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அனைத்து மதங்களையும் சமமாகப் பாவிப்பது என்பது வெற்றுப் பேச்சன்றி வேறென்னவாக முடியும்?

மதங்களுக்கும் அரசுக்கும் குறிப்பிடத்தக்க அளவு இடைவெளி இல்லாத இடங்களில் அரசு பெரும்பான்மையினரின் மதத்தினைச் சார்ந்தே நிற்கிறது. மதங்களின் சமாதான சகவாழ்வு என்பது அபத்தக் கதையாடலன்றி வேறில்லை.

இந்து மதம் அனைத்து மதங்களையும் தனக்குள் கரைப்பதன் மூலம் அவற்றை இல்லாமலாக்க முயல்கிறது. மண்ணின் மதங்கள் அனைத்திலும் இத்தன்மை உண்டு. கிறித்தவத்திலும், இசுலாமிலும் அவை தோன்றிய இடங்களில் காணப்படும் மதங்களின் பண்புகளும், அவை பரவிய பிற நாடுகளில் இருந்த மதங்களின் பண்புகளும் படிந்திருக்கின்றன.

சிரிய கிறித்தவர்கள் இந்து மதச் சடங்குகளைப் பின்பற்றி இந்து சமயத்தின் பிரிவுகளில் ஒன்றாக மாறிக் கொண்டிருந்ததை ஏசு சபைப் பாதிரிகள் தான் தடுத்து நிறுத்தினர் என்று தனது The wonder that was India நூலில் குறிப்பிடுகிறார் வரலாற்றறிஞர் ஏ.எல்.பாஷம்.

கிறித்தவமும், இசுலாமும் பிற மதத்தவரைத் தங்கள் மதத்துக்கு மாற்ற முயல்வன. உலகின் ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரை தங்கள் மதத்துக்காரர்கள் தான் இருக்க வேண்டும் என்கிற பேராசை கொண்டன. தங்கள் மதங்கள் மட்டுமே மீட்பின் வழி என்றும் பிற மதங்கள் நாசத்துக்குப் போகும் வழி என்றும் போதிப்பன.

இப்படி முறைத்துக் கொண்டிருக்கும் மதங்களைச் சமமாகப் பாவிப்பது எப்படி சாத்தியமாகும்? நிச்சயமாக மோதல்கள் வரத்தான் செய்யும். இம்மதப் பிரச்சினைகளிலிருந்து அரசு வெளியே நின்று செயல்பட்டால் தான் நடுநிலைமையுடன் செயல்பட முடியும்.

madhachaarpinmai6இந்திய மதச்சார்பின்மை காலத்திற்கேற்ப தன்மை மாற்றிக் கொள்ளவுமில்லை. இறைமறுப்பாளர்களுக்கு இந்திய மதச்சார்பின்மையில் இடமில்லை. அவர்கள் இயல்பாகவே எதிர்மறை மதச்சார்பின்மையை மாற்றாக முன் வைக்கிறார்கள். இந்திய மதச்சார்பின்மை எந்தத் தடைகளுமற்ற மதவாதத்துக்கான ஊற்றாகவே இருந்து வருகிறது. பிறமதங்களைத் தாழ்வாகப் பேசுவது மதங்களின் முக்கியமான பிரச்சார அம்சங்களுள் ஒன்று. நீ தாழ்ந்தவன், நான் உயர்ந்தவன் என்கிற மனப்பாங்கிலிருந்து எழுந்தது. இதிலிருந்தே மதங்களுக்கிடையே பூசல்களும் ஏற்படுகின்றன.

ஐரோப்பிய மதச்சார்பின்மையும் இப்போது விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது. Laicism என்றழைக்கப்படும் ஐரோப்பாவின் எதிர்மறை மதச்சார்பின்மை Laicite என்ற பிரஞ்சுச் சொல்லில் இருந்து தோன்றியது. மதத்துக்கும் பொதுவாழ்க்கைக்குமான முற்றான துண்டிப்பை வலியுறுத்துகிறது. இங்கே பொதுவாழ்க்கை என்பது அரசியல் வாழ்க்கை அல்ல – சமூக வாழ்க்கை. பிரஞ்சு அரசாங்கம் மதச்சின்னங்களை அரசுப் பள்ளிகளில் இருந்து தடை செய்ததை இம்மாதிரியான மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

இந்த மதச்சார்பின்மைக்கு கிறித்தவத்திலிருந்து பிரச்சினை வரவில்லை. இசுலாமிலிருந்தே வருகிறது. சார்லி ஹெப்டோ மீதான தாக்குதல், முகத்திரையின் மீதான தடைக்கு எதிர்ப்பு என பிரச்சினைகள் அநேகம். இதனால் இசுலாம் தாழ்ந்தது; கிறித்தவம் உயர்ந்தது என்பதல்ல. இரண்டுமே ஒருவழிப் பாதைகள் தான். கிறித்தவம் எந்த அளவிற்கு சகிப்புத்தன்மை அற்றதோ அதே அளவு சகிப்புத்தன்மை அற்றது தான் இசுலாமும். ஆனால் ஐரோப்பா கடந்து வந்த பாதையை இசுலாமிய பிரதேசங்கள் இன்னும் கடந்து வரவில்லை. நவீன விழுமியங்களை இன்னும் அரபு நாடுகள் வந்தடையவில்லை. மாறாக நூற்றுக்கணக்கான ஆண்டுகள் முந்தைய விழுமியங்களிலேயே உறைந்திருக்கின்றன. நவீன விழுமியங்களை முற்றாக நிராகரிக்கும் கிறித்தவமும் இசுலாமும் எப்படி பொதுவாழ்வில் இடம்பெற முடியும்?

பொதுவாழ்வில் இம்மதங்களுக்கு இடம் கொடுப்பதால் தான் இந்தியாவில் மதவாதம் இன்னும் தீராத பிரச்சினையாக இருக்கிறது. இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான உமாசங்கரின் மதப் பரப்புரை பிரச்சினையும் இதன் காரணமாக ஏற்பட்டது தான்.

மதப்பரப்புரை என்பது கிறித்தவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று. இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தால் மதப்பரப்புரை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மதப்பரப்புரையையும் மதமாற்றத்தையும் பொறுத்த வரையில் ரெவ். ஸ்டனிஸ்லாஸ் வழக்கு முக்கியமானது. மதப்பரப்புரைக்கு வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமையை மதம் மாற்றுவதற்கான அடிப்படை உரிமையாகக் கருத முடியாது என்றது உச்ச நீதிமன்றம்.

மதப்பரப்புரையும் மதமாற்றமும் மிகச் சிக்கலான விஷயங்கள். பெரும்பாலான மதப்பரப்புரையாளர்கள் தங்கள் மதத்திலிருக்கும் நல்ல விஷயங்களைப் பற்றி, தங்கள் மதக் கோட்பாடுகளைப் பற்றிப் பேசி மதம் மாற்ற முயல்வதில்லை. பிற மதங்களின் குறைகளை. குறைகளாகத் தாங்கள் கருதுபவற்றை முன்னிறுத்துகின்றனர். பூசல் இங்கிருந்தே ஆரம்பிக்கிறது.

மதப்பிரசாரமானது பல்வேறு ரூபங்களில் பள்ளி, கல்லூரி என மதத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத இடங்களில் எல்லாம் ஆசிரியர் வழியாக, நிர்வாகத்தினர் வழியாக வெளிப்படுகிறது. ஐந்தாம் வகுப்பில் எனக்குச் சமூகவியல் பாடம் எடுத்த ஆசிரியை கேட்டார், “டார்வினுடைய பரிணாமக் கோட்பாடு சரியென்றால் குரங்குகள் மனிதக் குழந்தைகளை ஏன் பெறவில்லை?” பரிணாமவியல் கோட்பாட்டைப் படித்த பின்பு தான் அந்தக் கேள்வி எவ்வளவு அபத்தமானது என்று புரிந்தது.

madhachaarpinmai1கன்னியாகுமரியில் நான் படித்த அனைத்து பள்ளிகளிலுமே வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை ஒரு கிறித்தவ பரப்புரையாளர் வந்து விடுவார். சில பாடல்கள், வசனங்கள், “விஞ்ஞானக் கண்டுபிடிப்பு”களைச் சொல்வார். அமெரிக்காவில் கத்ரினா புயல் வீசிப் போன அடுத்த வாரம் ஒரு கருத்து முத்தை உதிர்த்தார், “அமெரிக்காவில் ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்த கொள்ள அனுமதித்ததால் தான் புயல் வந்தது”. பாலியலைப் பற்றி புரிந்து கொள்வதற்கு முன்பே விஷவிதைகள் தூவப்பட்டால்?

கல்லூரியில் மதம் வேறொரு ரூபத்தில் வந்தது. காலையில் ஒன்பது மணிக்கு “விநாயகனே வினை தீர்ப்பவனே” என்று ஒலிபெருக்கி அலறும். கடவுள் வாழ்த்தாம். சமூக வாழ்க்கையின் மதத்தின் வேர்கள் சம்பந்தமில்லாமல் எங்கெகல்லாம் பதிந்திருக்கின்றன என்பதற்கு இவை ஓர் உதாரணம்.

உமா சங்கரின் பிரச்சினை வித்தியாசமானது. அவர் அரசின் அங்கம். அகில இந்திய பணிகளுக்கான நடத்தை விதிகளில் மதமாற்றத்தைப் பற்றி நேரடியாக எதுவும் கொடுக்கப்படாவிட்டாலும், இந்திய அரசு நடத்தை விதி 3 மதமாற்றத்தில் ஈடுபடக்கூடாது எனத் தடை செய்கிறது. அதே நேரத்தில் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றவும், பரப்பவும் சுதந்திரம் அளிக்கிறது. ஆனால் உமாசங்கர் செய்தவை அவரது தனிப்பட்ட செயல்கள் எனக் கொள்ள முடியாது. பரவலான விளம்பரத்துடன் அவர் பங்குபெற்ற பரப்புரைக் கூட்டங்கள் அதிகம். கிறித்தவ ஆலயங்களுள் அவர் பேசியவை தனிப்பட்ட மதச் சுதந்திரம் எனக் கொண்டாலும் பொது ஊடகங்களில் அவர் வெளிப்படுத்தும் கருத்துகளை என்னவென்று சொல்வது?

பொது ஊடகங்களிடம் பேசும் போது ஒரு அரசு அதிகாரி கவனத்துடன் இருக்க வேண்டாமா? அகில இந்தியப் பணிகளுக்கான நடத்தை விதிகளை மட்டுமின்றி ஒரு குடிமகன் பின்பற்ற வேண்டிய அடிப்படைக் கடமைகளையே மீறி, மனிதத்தன்மை கூட இல்லாத கருத்துகளை வலியுறுத்துபவர் எப்படி தொடர்ந்து அரசு அதிகாரியாக நீடிக்கலாம்?

பிரச்சினை உமாசங்கர் அல்ல. பிரதமர் வேற்றுநாடுகளுக்குச் சென்று பகவத் கீதையைப் பரிசளிப்பதை எப்படி மதச்சார்பின்மையாகக் கொள்ள முடியும்? அரசு அலுவலகங்களில் கோவில்கள் இருப்பதை எப்படி மதச்சார்பின்மையாகக் கருத முடியும்? மதத்தின் பெயரால் வாக்கு வங்கி அரசியல் நடப்பதை எப்படி மதச்சார்பின்மை என்று சொல்ல முடியும்? கணபதியின் தலை plastic surgery மூலம் பொருத்தப்பட்டது என்ற பிரதம மந்திரியை விடவுமா உமா சங்கர் அபத்தமாகப் பேசிவிட்டார்?

அவர்களை நிறுத்தச் சொல், நான் நிறுத்துகிறேன் என்று தான் இரு தரப்பினருமே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தங்களுக்கில்லாத சகிப்புத்தன்மை பிறருக்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இப்படி செய்தால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கப் போவதில்லை.

அனைத்து மதங்களையும் அரவணைக்க வேண்டும் என்பதென்னவோ நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் அனைத்து மத மிதவாதிகளை அரவணைக்கப் போகிறீர்களா? அடிப்படைவாதிகளை அரவணைக்கப் போகிறீர்களா? அடிப்படைவாதிகளை எவ்வளவு தான் அரவணைத்தாலும் அவர்கள் அடித்துக் கொள்ளத்தான் போகிறார்கள். அவர்களுக்கு வேண்டுமானால் ஒரு மதச்சண்டை மைதானம் கட்டிக் கொடுத்து விடலாம்.

இருப்பவர்களாவது பிழைக்க வேண்டுமானால் இந்திய மதச்சார்பின்மையில் மாற்றம் வேண்டும். அரசுக்கும் மதங்களுக்கும் இருக்கும் கள்ளத்தொடர்பு முற்றாய் துண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அரசுகள் மதங்களின் வாக்கு வங்கி அரசியலின் கீழ் இருக்கும் வரை இந்த மாற்றங்கள் சாத்தியமில்லை.


நவீனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மதச்சார்பின்மையை மறுபரிசீலனை செய்ய முடியுமா?”

அதிகம் படித்தது