மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மதிய உணவு

முனைவர். ந. அரவிந்த்

Jan 28, 2023

siragu madhiya unavu

காலை உணவு அல்லது நண்பகல் தொடக்க வேளை சிற்றிடை உணவு (Breakfast or snacks) நன்றாக செரிமானமாகி பசியெடுத்த பின்னர் மதிய உணவை உண்ணுங்கள். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு சாப்பிடும் தமிழ் நாட்டு மக்களுக்கு மதிய உணவு மிகவும் முக்கியமான உணவாக உள்ளது. வட இந்தியா மற்றும் அரேபிய நாடுகளில் பெரும்பாலானோர் இரு வேளை மட்டுமே உணவு உண்ணும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

மதிய வேளையில் மிதமான வகை உணவுகளை உண்ணலாம். அசைவம் உண்பவர்கள் தாராளமாக மதிய உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.  ஆனால், அசைவ உணவு வாரத்தின் 7நாட்களும் வேண்டாம். வாரத்திற்கு ஒருநாள் அசைவ உணவு போதுமானது.

இன்றைய காலகட்டத்தில், பிரியாணி கலாச்சாரம் தமிழ் நாட்டின் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பரவி உள்ளது. உங்களுக்கு மிகவும் பிடிக்குமென்றால் என்றாவது ஒருநாள், மாதம் ஒருமுறை பிரியாணி உண்ணுங்கள். அதுவும் வீட்டிலேயே செய்து உண்ணுங்கள். தினமும் வேண்டாம்.

தமிழர்களின் பாரம்பரிய உணவு ‘சம்பா’ அல்லது ‘மட்டை அரிசி’ சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், அவியல் மற்றும் பொரியல் போன்றவைகளே. மட்டை அரிசியானது ‘பாலக்காடு மட்டை அரிசி’ அல்லது ‘சிவப்பு அரிசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இது, கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் விளையும் நெல் வகை ஆகும். இது இட்லி, ஆப்பம் மற்றும் அரிசி சாதம் என பல வகைகளில் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு அரிசி மிகவும் வாசனையானது. எனவே, அசைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் ருசியாக இருக்கும். சைவ உணவு உண்பவர்களுக்கும் மிக நல்ல உணவாகும். மறுநாள் காலையில் கஞ்சி அல்லது பழைய சாதம் உண்பவர்களுக்கு இது வரப்பிரசாதம். இதனை உணவாக பயன்படுத்துபவர்கள் வெள்ளை அரிசியை உண்ண மாட்டார்கள். சிவப்பு அரிசி அவ்வளவு ருசியானது மற்றும் சத்தானது. வெள்ளை அரிசியும் உடலிற்கு நன்மை தரக்கூடியதுதான். ஆனால், அது ஆறு மாதத்தில் அறுவடைக்கு வரும் நாட்டு அரிசியாக இருக்க வேண்டும். மூன்று மாதத்தில் அறுவடைக்கு வரும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி வேண்டாம்.  அதுபோல், தீட்டப்பட்ட அரிசியும் வேண்டாம். தீட்டப்பட்ட அரிசியில் நார்ச்சத்து இருக்காது. இது மலச்சிக்கலை உண்டு பண்ணும். வெள்ளை அரிசி எளிதில் செரிமானமாகிவிடும். எனவே, முதியோர்கள் மற்றும் உடல் நலம் இல்லாதவர்கள் வெள்ளை அரிசியில் செய்த உணவை உண்ணலாம். மட்டை அரிசி வரலாற்றுப் புகழ்மிக்கது. நம் அண்டை மாநிலமான கேரளாவில் பெரும்பாலானோர் இந்த மட்டை அரிசியைதான் மதிய உணவிற்காக பயன்படுத்துகின்றனர். இன்றும் தென் தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பலரும் மட்டை அரிசியை மதிய உணவிற்காக பயன்படுத்துகின்றனர். முற்காலத்தில், தமிழ்நாட்டில் இது அரச உணவாக கருதப்பட்டது. இந்த அரிசி மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு கலந்த நிறத்துடன், வெளிப்புறம் சிவந்த நிறக்கோடுகளுடன் காணப்படுகிறது. இது உணவிற்கு தனித்துவமான சுவையை அளிக்கிறது. அனைத்து பழுப்பு மற்றும் புழுங்கல் அரிசிகளைப் போல சிவப்பு மட்டை அரிசியும் வேகவைப்பதற்கு அதிகமான நேரம் மற்றும் அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. பச்சரிசியில் உணவு சமைக்க வேண்டாம். புழுங்கல் அரிசியை பயன்படுத்துங்கள்.

அரிசியையும், காய்கறிகளையும் நன்கு கழுவிய பின்னர்தான் சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அரிசி பளபளப்பாக இருக்க வேண்டுமென்பதற்காக அதனுடன் வெள்ளை நிற பொடியை கலக்கின்றனர். அது மட்டுமின்றி, அவைகளை விளைவிப்பதற்காக பூச்சிக்கொல்லி மருந்துகளையும், செயற்கை உரங்களையும் பயன்படுத்துகிறார்கள். இது நல்லதல்ல. பூச்சிகளை கொல்லும் பூச்சிக்கொல்லி மருந்துகள் நம்மையும் சில காலங்களில் கொல்லும் தன்மை வாய்ந்தது. எனவே, காய்கறிகளை உப்பு மற்றும் மஞ்சள் பொடி கலந்த நீரினில் குறைந்தது இருபது நிமிடங்களாவது ஊற வைத்து, அதன் பின்னர் நல்ல நீரினால் கழுவி சமையலுக்கு பயன்படுத்துங்கள்.

அடுத்து, சமையலிற்கு புளியை பயன்படுத்தாதீர்கள். புளி விஷத்தன்மை கொண்டது. காட்டில் புலியும் வீட்டில் புளியும் மனிதர்களை கொல்லும் என்பது பழமொழி. புளிப்பு சுவைக்காக காய்ந்த எலுமிச்சை, மாங்காய் அல்லது குடம்புளியை பயன்படுத்துங்கள். குடம்புளி சமையலில் பொதுவாக சுவையினை கூட்டுவதற்கும், செரிமானத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த குடம்புளி பழத்தோலினின்று தயாரிக்கப்படும் சாறு வாதம் மற்றும் வயிறு உபாதைகளுக்கு சிறந்த மருந்தாகும். கேரளாவில் குடம்புளியை சமையலில் பயன்படுத்துகிறார்கள்.

சாம்பார், ரசம், மோர் என முறையே சோற்றினில் ஊற்றி உண்டால் உடல் சமநிலை அடையும். பருப்பு வகைகள் வாயுவை உண்டு பண்ணும். மிளகு ரசம் வாயு கோளாறுகளை சரி செய்யும். எனவே, பருப்பு சாம்பார் உண்ட பின்னர் மிளகு ரசம் சாப்பிடுகிறோம். மிளகு ரசம் காரமானது. இதனால் குடல் புண்கள் வராமல் தடுக்க கடைசியில் மோர் ஊற்றி உணவு உண்கிறோம்.

சமைப்பதற்கு கடல் உப்பினை பயன்படுத்துங்கள். தொழிற்சாலை கழிவில் இருந்து தயாரிக்கப்பட்டு, அதில் அயோடின் கலக்கப்பட்டு விற்கப்படும் உப்பினை பயன்படுத்தாதீர்கள். இவ்வகை உப்பு முன்கழுத்துக் கழலை நோயினை உண்டு பண்ணும். கூடுமானவரை அதிக நாட்கள் உப்பில் ஊற வைத்து பயன்படுத்தப்படும் ஊறுகாய்களை தவிர்த்திடுங்கள். இவைகள் உடலிற்கு நல்லதல்ல.

மதிய உணவு உண்ட பின்னர் 10 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை குட்டி தூக்கம் தூங்கலாம். தவறில்லை. ஆனால், மணிக்கணக்கில் மதியம் தூங்க வேண்டாம். நல்லதல்ல. After lunch sleep a while, after dinner walk a mile என்பது ஆங்கில பழமொழி. இதன் தமிழாக்கம் யாதெனில், ‘மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரம் தூங்கி, இரவு உணவுக்குப் பிறகு ஒரு மைல் நடக்கவும்’. மதிய உணவுக்குப் பின் படுத்து உறங்கக் கூடாது. நாற்காலியில் உட்கார்ந்து சாய்ந்துகொண்டு குட்டி தூக்கம் தூங்கலாம். படுத்து உறங்கினால், உண்ட உணவு மேல் நோக்கி வர வாய்ப்புள்ளது.

வாரத்திற்கு ஒருநாள் நாள் முழுவதும் விரதம் இருப்பது உடலிற்கும், குடலிற்கும் மிகவும் நல்லது. தாகம் எடுக்கும்போது தண்ணீர் மட்டும் குடியுங்கள். ஆரம்ப காலத்தில் ஒரு வேளை மட்டும் விரதம் இருங்கள். பழக்கத்திற்கு பின்னர் மூன்று வேளையும் விரதம் இருங்கள். விரதம் இருந்து முடிக்கும்போது எழுமிச்சை பழச்சாறு அல்லது ஏதாவது ஒரு பழச்சாறு குடித்து முடியுங்கள். தண்ணீர் விரதம் இருக்கும்போது நீங்கள் மிகவும் சோர்வாக உணர்ந்தீர்கள் என்றால் பழச்சாறு அருந்துங்கள். அதனால் உடலிற்குத் தேவையான சக்தி கிடைக்கும்.


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மதிய உணவு”

அதிகம் படித்தது