மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மதுரை மீனாட்சி அம்மன் தீ விபத்தும், இந்து சமய அறநிலையத்துறையை அபகரிக்கும் திட்டமும்.!

சுசிலா

Feb 24, 2018

Siragu madurai1

சில வாரங்களுக்கு முன், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து நடந்தது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், முடிவில் மின் கசிவு என்று சொல்லப்படுகிறது. இனி, விசாரணையில் தான் முழு விவரம் தெரிய வரும். அதுவும், நேர்மையான விசாரணையாக இருக்கும் பட்சத்தில் தான். இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவில் தலவிருட்சமான ஆலமரத்தில், தீப்பிடித்து எரிந்தது. அதே போல, தஞ்சை மாவட்டத்திலுள்ள, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், சிவராத்திரி விழாவின் போது, கொடிமரத்தின் அருகே, பால் காய்ச்சிக்கொண்டிருந்த எரிவாயு உருளையிலுள்ள ரப்பர் குழாயில் தீப்பிடித்தது. பெரிய அசம்பாவிதம் ஏதும் நடவாமல், தீ அணைக்கப்பட்டது. இதனை அடுத்து, திருவாரூர் தியாகராஜர் கோவிலில், அம்மனுக்கு சாத்தப்பட்ட துணியில், பக்கத்திலிருந்த அகல்விளக்கின் மூலம் தீப்பிடித்து, உடனே அணைத்தனர். தொடர்ந்து, இது போன்ற செய்திகளை அதாவது தமிழ்நாட்டு கோவில்களில் தீப்பிடிக்கும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராயாமல், பரிகாரங்கள் செய்யவேண்டும் என்ற மூடநம்பிக்கைகள் பரப்பப்படுகின்றன. இன்னும் சில பேர், ஆட்சிக்கு ஆபத்து, நாட்டு மக்களுக்கு ஆபத்து என்ற புரளியை கிளப்பி விடுகின்றனர். இதையெல்லாம் விட, மிகப்பெரிய பாறாங்கல்லை நம் தலையில் தூக்கிபோடுவது போல், ஆரியம் ஒரே விசயத்தை, திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறது.!

இதை வைத்து, இந்து அமைப்பினர், வலது சாரியினர், பாசக, என அனைத்து இந்துத்துவவாதிகளும் மக்கள் மனதில் நஞ்சை விதைக்க முயற்சி செய்கிறார்கள். அது என்னவென்றால், இந்து சமய அறநிலையத்துறையை நீக்க வேண்டும் என்பது தான். அதற்கான, அவர்களுடைய காரணம், ஊழல் மலிந்து விட்டது. லஞ்சம் லாவணியம் மிக சுலபமாக நடந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள். ஒரு துறையில் ஊழல் நிரம்பியிருக்கிறதென்றால், அதனை களைய முற்படுவது தானே அறிவுடைமை. அதைவிட்டு விட்டு, அந்த துறையையே நீக்கிவிடவேண்டுமென்பது எந்த விதத்தில் நியாயம்.?

கல்வித்துறையில் ஊழல் இருக்கிறதென்றால், கல்வித்துறையை நீக்கிவிட முடியுமா?, சுகாதாரத் துறையில் ஊழல் இருக்கிறதென்றால், அந்தத் துறையை நீக்கிவிடலாமா..? அதுபோல, நம் நாட்டில் எல்லாத் துறைகளிலும் ஊழல் மலிந்து தான் இருக்கிறது.

அதற்காக அனைத்துத் துறைகளும் நீக்கிவிடவேண்டும் என்று சொன்னால், எப்படி அறிவுடைமை ஆகாதோ, அதுபோலத் தானே இதுவும்.!

இது ஆரியத்தினால் பின்னப்பட்ட சூழ்ச்சிவலை என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறதல்லவா.!

ஏற்கனவே, நீதித்துறை, வங்கி, கல்வித்துறை, ஆட்சிப்பணித்துறை, ரயில்வே, அஞ்சல்துறை என அனைத்திலும் ஆரிய இந்துத்துவம் நுழைந்து கோலோச்சுகிறது. இப்போது கோயில்களையும் அபகரிக்க திட்டம் தீட்டுகிறது.!

Siragu madurai2

முந்தைய காலத்தில், கோவிலுக்கென்று சொத்துக்கள் இருந்ததில்லை. எளிய முறையில் ஒரு வழிபாட்டு இடம் இருக்கும். அங்கு பூசாரிகள் இருப்பர். அவர்கள் தான் வழிபாடு முறைகளை செய்வார்கள் என்பது நம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சில வழிபட்டுத் தலங்கள் செல்வ செழிப்பாக இருந்திருக்கின்றன. அவைகள் மடங்களாக, பின்பு அறக்கட்டளைகளாகவும் செயல்பட்டு வந்திருக்கின்றன. ஐந்தாம் நூற்றாண்டிற்குப்பிறகு, பல்லவர், பிற்கால சோழர்கள் ஆட்சிக்குப் பிறகு தான் கோயில்கள் பல மடங்கு பெருகி இருக்கின்றன. அச்சமயம் தான், அங்கே ஆரியர்கள் உட்புகுந்திருக்கிறார்கள். அதன் பிறகு தான் கோயில்களுக்கு சொத்துக்கள் பெருகியுள்ளன. மன்னர்கள் எழுதிவைத்த நிலம், நகைகள், உடைமைகள் கோவிலின் சொத்துக்களாக பார்க்கப்பட்டிருக்கிறது. நம் தமிழ்நாட்டில், சைவ கோவில்களும், வைணவ கோவில்களும் நிறைய இருக்கின்றன. ஏற்கனவே, இந்த கோயில் நிர்வாகம் என்பதெல்லாம் முழுதும் அவர்களிடம் தான் இருந்தது. கோயில்களுக்கு நிலம், கட்டுவதற்கான பொருள், பணம், ஊழியர்கள் என அனைத்தும் உழைக்கும் நம் மக்களுடையது. ஆனால், கட்டி முடிக்கப்பட்டவுடன், எந்த உரிமையும் நமக்கில்லை. கருவறைக்குள் சென்று பூசை போடுவதும் சரி, நிர்வாகமும் சரி, எல்லாமுமே அவர்களிடத்தில் தான் இருந்தது.

நாம் வெளியில் நின்று வழிபட வேண்டும் என்ற நிலை மட்டுமே தான் 90 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. மன்னராட்சி காலத்தில், கோவில்களை சுற்றியுள்ள நிலங்கள், மிகப்பெரிய நிலப்பரப்பு, அதுபற்றிய நிர்வாகங்கள் எல்லாமே பிராமணர்கள் என்று சொல்லப்படும் உயர்சாதியினரிடையே ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதைப்பற்றி யாருக்கும் கேள்விகேட்க உரிமையில்லாமல் தான் இருந்தது. இதனால், பார்பனரல்லாதவர்களுக்கு அவ்வப்போது அதிருப்திகள், பிரச்சனைகள் வந்த வண்ணம் இருந்தன, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், இந்த பிரச்சினை மீண்டும் தலை தூக்கியது. அப்போதிருந்த ஆங்கில அரசு, மதம் சம்பந்தப்பட்ட விசயங்களில் தலையிடுவதில்லை என்ற ஒரு கொள்கையை கடைப்பிடித்து வந்தது. இருப்பினும், பக்தர்கள் சார்பில், கோவில் நிதிகள் சரிவர நிர்வகிக்கப்படவில்லை, மோசடிகள் நடக்கின்றன என்ற ஒரு காரணத்தால், 1907-ஆம் ஆண்டு, இந்து சமயத்தை சேர்ந்தவர்கள், ‘தரும இரட்சண சபை’ என்ற ஒன்றை உருவாக்கி, நிதி மோசடிகளை ஆய்வு செய்ய தலைப்பட்டனர். குற்றம் செய்தவர்களையும், குற்றங்களையும் கூட கண்டறிந்தனர். அவர்களுக்கு தண்டனை பெற்று தரவேண்டுமென்றும், அப்போது தான் குற்றம் நடவாமல் தடுக்க முடியும் என்றும் கூறி, கோரிக்கைகளை வைக்க ஆரம்பித்தனர். ஆயினும், நிலைமை ஒன்றும் சீர்படவில்லை என்று தான் கூறவேண்டும். ஆனால், கோவில் நிர்வாக சீர்கேடு என்ற ஒரு சந்தேகம் வரத் தொடங்கியதற்கான துவக்கப்புள்ளி இது தான்.

சமூகநீதிக்காக உருவாக்கப்பட்ட நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த சமயம் தான், இதற்கு ஒரு தீர்வு கிடைத்தது என்று சொலல் வேண்டும். இவர்களின் மோசமான இந்த சூழ்நிலை தொடர்ந்து வந்த காரணமாக மக்கள் அரசை நிர்பந்திக்கத் தொடங்கினர். அப்போது தான், நீதிக்கட்சியின் ஆட்சியில், 1920-1923, 1923- 1926 என் இரு அமைச்சரவைகள், கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டுமென்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தன. இந்த தீர்மானம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. செயல்படவும் தொடங்கியது. இதற்குப் பிறகும், சில குளறுபடிகள் இருந்த காரணத்தினால், தந்தை பெரியாரின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, 1959 – ஆம் ஆண்டு முதலமைச்சர் திரு. காமராசர் அவர்கள் ஆட்சியில், இப்போதுள்ள, ‘இந்து சமய அறநிலையத்துறையாக’ துவக்கப்பட்டது.

அதன் பிறகு, 1991- ஆம் ஆண்டு, திமுக ஆட்சியின் போது முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சியில், மேலும் சில மாற்றங்கள் செய்து, முழுவதும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அங்கு பணிபுரிபவர்கள் இந்துக்கள், இருப்பினும், இட ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த துறையின் பணிகள் என்னவென்றால், கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள், வேறு விதமான சொத்துக்கள் இருந்தால், அவைகளை குத்தகைக்கு விடுவது, வாடகைக்கு விடும் பணங்கள் சரியான முறையில் வசூல் செய்வது, வங்கிக்கணக்குகள் சரியானபடி இருக்கிறதா என்று வரவு, செலவு பார்ப்பது போன்ற வேலைகள் தான். மேலும், திருவிழா, சிறப்பு பண்டிகை நாட்களில், தனியாக, அருகில் சென்று தரிசனம் செய்வதற்கு பணம் வசூலிக்கப்பட்டதைத் தடுக்கும் விதமாக, சிறப்பு கட்டணம் மூலம் சிறப்பு தரிசனம் என்ற முறையும் ஏற்படுத்தப்பட்டது.

Siragu madurai3

மேலும், இதன் மூலம், அரசாங்கத்திற்கு நேர்மையான முறையில் வருவாய் கிடைக்கத் தொடங்கியது. இப்போதிருக்கும், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், 36,000 கோவில்களுக்கு மேல் இருக்கின்றன. இந்த கோவில்களுக்கு 4,78,348 ஏக்கர் நிலங்கள் இருப்பதாக ஆவணங்கள் சொல்கின்றன. குத்தகைக்கு விட்டு, இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு, ரூ. 58.68 கோடி ரூபாய் வருமானமாகக் கிடைக்கிறது என்று அரசு சார்பில் சொல்லப்படுகிறது. பிராமணர்கள் கட்டுப்பாட்டின் கீழ் வருமேயானால், வருமானம் முழுதும் அவர்கள் பையில் தான் போய் சேரும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதனால் தான் தற்போது இந்து அமைப்பினர், இந்து பக்தர்கள் சார்பில் கேட்பதாக ஒரு போலி ஏமாற்று வேலையைத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு சில மடாதிபதிகளும் உடன்படுகிறார்கள் என்பது தான் வேதனைக்குரிய ஒன்று. இந்த பேராபத்தை மக்கள் உணர வேண்டும். இந்த துறை ஆரியத்திடமோ அல்லது அவர்களை துதிபாடும் அடிவருடிகளிடமோ போய்ச் சேர்ந்து விடுமேயானால், இந்த 36,000 கோயில்கள் எல்லாமே ஆரியமயமாகி விடும், சமஸ்கிருதமயமாகி விடும், நம் உள்ளூர் பூசாரிகள் ஓரங்கட்டப்படுவர். இதற்கான சூழ்ச்சி தான் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தந்தை பெரியார் அவர்களின் கடைசி விருப்பமாக, ஆலயத்தின் கருவறைக்குள் சாதி உடைக்கப்படவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில், கலைஞர் ஆட்சியின் போது அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் சட்டம் இயற்றப்பட்டு, அதற்கான தீர்ப்பும் வந்துள்ள நிலையில், தற்போதுள்ள அதிமுக அரசு அதனை பணி நியமனம் செய்யப்படாமல் வைத்திருக்கிறது. இந்நிலையில், இந்த துறை இந்து பக்தர்கள் என்ற பெயரில், இந்து அமைப்பினரிடம் சென்றுவிட்டால், மீண்டும் பழையநிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் என்பதை நாம் உணர வேண்டிய முக்கிய காலகட்டாயத்தில் இருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே தங்கள் வசம்வைத்திருந்த, இந்த ஆலய கருவறையை மீட்க வேண்டும் என்று போராடி, மீட்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த துறையையே கபளீகரம் செய்ய துடித்துக்கொண்டிருக்கிறது ஆரியம்.!

இதன் பின்னணியில் இருக்கும் சூழ்ச்சியை நாம் உணர்ந்து, தற்போது செயல்பட தவறினோமானால், வருங்காலத்தில் நம் சந்ததியினர் மேலும் அடிமைகளாக்கப் படுவார்கள், மதம், சாதி மூலம் இருக்கும் ஏற்றத்தாழ்வு மென்மேலும் தீவிரமாக்கப்பட்டு கல்வி மறுக்கப்பட்டு, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, மீண்டும் அடிநிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை அறிதியிட்டுக் கூறுலாம். இதை பற்றிய தெளிவை, மக்களிடையே ஏற்படுத்துவது தற்போதைய அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, நம் உரிமைகளை எக்காரணம் கொண்டும் இழக்க மாட்டோம் என்று உறுதி எடுப்போம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மதுரை மீனாட்சி அம்மன் தீ விபத்தும், இந்து சமய அறநிலையத்துறையை அபகரிக்கும் திட்டமும்.!”

அதிகம் படித்தது