மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய பா.ச.க அரசு, சமூகநீதிக்கு முற்றிலும் எதிரான அரசு

சுசிலா

Jul 27, 2019

Siragu ida odhukkeedu2

பா.ச.க மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சமூக அநீதி படு வேகமாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெளிவான உண்மை. அதில் எல்லாவற்றையும் விட அதி பயங்கரமானதாக இருக்கிறது. கடந்த ஆட்சியில் பா.ச.க அரசினால் சட்டமாக்கப்பட்ட இந்த பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்கான 10% இடஒதுக்கீடு. நாம் துவக்கத்திலிருந்தே, கூறி வருகிறோம். இட ஒதுக்கீடு என்பது ஒரு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல, அது ஈராயிரம் ஆண்டுகளாக சமூக ரீதியாக, கல்வி ரீதியாக உரிமைகள் மறுக்கப்பட்டு, மிகவும் மோசமாக, இழிநிலையில் ஒடுக்கிவைக்கப்பட்டிருந்த, இந்த மண்ணின் மக்களாகிய நம்முடைய வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தில் எல்லோரும் சமநிலை எய்திடவேண்டும் என்ற காரணத்தாலும், சுதந்திர இந்தியாவில், டாக்டர் அண்ணல் அம்பேத்கார் மற்றும் அப்போதைய பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேரு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதில், பொருளாதார ரீதியாக என்று எதிராக உள்நுழைக்கக் கூடாது என குறிப்பிட்டு வருகிறோம். ஆனால், மத்திய பா.ச.க அரசு இந்த பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு என்ற சட்டத்தை கொண்டுவந்து சமூகநீதியை குழிதோண்டி புதைக்க எத்தனிக்கிறது.

siragu ezhuththar1

சமீபத்தில், ஜூலை 23ந்தேதி, ஸ்டேட் வங்கி நிர்வாகம் நடத்திய எழுத்தர் பணியாளருக்கான முதன்மைத் தேர்வின் முடிவுகள் இணையத்தில் வெளிவந்துள்ளன. எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் பங்கேற்ற தேர்வு நடத்தப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 % இடஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்ட பிறகு நடக்கும் முதல் தேர்வு இது. அதில், தாழ்த்தப்படுத்தப் பட்டோருக்கான கட் ஆப் மதிப்பெண் 61.25, மலைவாழ்பழங்குடியினருக்கான கட் ஆப் மதிப்பெண் 53. 75. ஆனால், உயர்சாதி ஏழைகளுக்கான கட் ஆப் மதிப்பெண் மட்டும் மிக குறைவாக 28.5 என வெளியிட்டுயிருப்பது நம்மிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுப்பிரிவு -61.25
தாழ்த்தப்படுத்தப்பட்டோர் -61.25
பிற்படுத்தப்பட்டோர் -61.25
பழங்குடியினர் – 53.75
உயர்சாதி ஏழைகள் – 28.5

இது மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக வேண்டிய விசயமாக இருக்கிறது. எப்பேர்ப்பட்ட சமூக அநீதி. ஒரு நேர்மையற்ற, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஊழல் நிறைந்த ஒரு செயலை சட்டத்தின் துணைகொண்டே செய்து முடித்திருக்கிறது பா.ச.க அரசு. நம் கண்முன்னே, நம் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்பது மிக கொடுமையான ஒன்று.

ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம் உள்ளவர்கள் ஏழைகள் என்பதே ஒரு பித்தலாட்டம். தற்போது என்னவென்றால், ஆண்டிற்கு ஒரு லட்சம் வருமானம் உள்ள உண்மையான ஏழைகளுக்கு இந்த வங்கித்தேர்வில் கட் ஆப் மதிப்பெண், உயர்சாதி ஏழைக்களை விட இரு மடங்கு அதிகமாக உள்ளது என்பது நியாயமான ஒன்றா?
இதனை கேட்பாரில்லையா?
இடஒதுக்கீட்டை முற்றிலும் அழித்தொழிக்கும் சதித்திட்டமல்லவா இது!

நம் மக்களுக்கான இடஒதுக்கீட்டை, தகுதி, திறமை வைத்து தரம் பார்த்தவர்கள், இப்போது வாயை மூடிக்கொண்டிருப்பதேன்?
இவர்களுக்கு மட்டும் தகுதி, திறமை என்பது 28 மதிப்பெண் எடுப்பது தானா ?
பொதுப் பிரிவினர், தாழ்த்தப்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட பட்டோர் ஆகிய மூன்று பிரிவினர்களுக்கும் ஒரே கட் ஆப் என்பதும் ஏற்புடையதாகுமா, மேலும் இவையெல்லாம் ஒரே கட்ஆப் என்றிருப்பதால் இந்த பிரிவினர் அனைவருக்கும் ஒரே கட்ஆப் மதிப்பெண் என்ற நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற கேள்வியும் எழுகிறது. அதிக மதிப்பெண் எடுத்து ரேங்கில் வருபவர்களை, அவர்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பொதுப் பிரிவில் சேர்க்கப் படவேண்டும் என்பது தான் சட்டம். ஆனால், எல்லா விதிமுறைகளையும் மீறி ஒரு அரசே செயல்படுகிறது என்றால். என்னவொரு அநியாயம்!

தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதை கையில் எடுத்து தீவிரமாக கேள்விகள் எழுப்பி, முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். தவறினால் மிகப் பெரிய படுகுழியில் தள்ளப்பட்டு வீழ்த்தப்பட்ட படுவோம் என்பது உறுதி. நம் தலைவர்கள் பேராடிப் பெற்ற இட ஒதுக்கீடு உரிமையை, சமூகநீதி கோட்பாட்டை எக்காரணம் கொண்டும் பறிப்பதற்கு நாம் இடம் அளித்து விடக் கூடாது என்பது மிக முக்கியம். சாதி, மத அரசியலை ஊக்குவித்து, அதில் ஆதாயம் தேடப் பார்க்கிறது பா.ச.க-வின் மோடி அரசு. மனுதர்ம ஆட்சியை கொண்டுவர துடித்துக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவை அப்படியே செயல்படுத்த மோடியின் பா.ச.க அரசு பயன்படுத்தப் படுகிறது என்பதற்கு இதைவிட வேறெதும் சான்று வேண்டுமா என்ன!

சமூகநீதிக்கு முன்னோடி மாநிலமான தமிழ்நாடு, இதனை எதிர்த்து ஓங்கி குரல்கொடுத்து, முறியடிக்க வேண்டும். இந்த பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். தமிழக அரசு காலம் தாழ்த்தாமல், இதற்கு ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டும். இல்லையென்றால், மக்கள் வீதியில் இறங்கி, போராடி, மாபெரும் புரட்சியை ஆரியத்திற்கு எதிராக உருவாக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பது உறுதி.

சமூக அநீதி வெல்வோம்! சமூகநீதி காப்போம்!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய பா.ச.க அரசு, சமூகநீதிக்கு முற்றிலும் எதிரான அரசு”

அதிகம் படித்தது