மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய, மாநில அளவில் நல்லாசிரியர் விருதுபெற்ற தமிழறிஞர் திரு. இ.கோமதி நாயகம் அவர்களின் நேர்காணல்

சித்திர சேனன்

Mar 26, 2016

gomathi-nayagam7

கேள்வி: உங்களது பூர்வீகம், பிறப்பு, படிப்பு பற்றி கூறுங்கள்?

பதில்: என்னுடைய சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவில். நான் பள்ளிக் கல்வி வரை அங்கு உள்ள கோமதி அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் படித்து முடித்தேன். அதன் பிறகு தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாறு என்கிற ஒரு திருத்தலத்தில் உள்ள அரசர் மொழிக் கல்லூரியில் இணைந்து நான்காண்டுகள் படித்து வித்வான் பட்டம் பெற்றேன். 1970ல் வித்வான் பட்டத்தை முடித்த நான் சென்னை வந்து அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரியத் தொடங்கினேன். 2008 முடிய சென்னை கோடம்பாக்கம், வில்லிவாக்கம், ஆவடிக்குப் பக்கத்திலுள்ள தண்டரை போன்ற பள்ளிகளில் ஏறத்தாழ முப்பத்து எட்டு ஆண்டுகள் நான் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, சென்னை பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையில் கௌரவ விரிவுரையாளராக இரண்டரை ஆண்டுகள் பணியாற்றி, 2011வது ஆண்டுடன் என்னுடைய அரசுப்பணி நிறைவு பெற்றது. இது என்னுடைய கல்வி மற்றும் கல்வி சார்ந்த பணிகளைப் பற்றியது.

சித்தர்கள் காட்டும் வாழ்வியல் கல்வி, திருமந்திரம் ஒரு சிறப்பு நோக்கு என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் நான் பெற்றுள்ளேன். மேலும் 1979ம் ஆண்டு முதல் 2003 வரை தமிழக பாடநூல் கழகத்தினுடைய தமிழ் பாடநூல் உருவாக்கக் குழு, பாடத்திட்டக்குழு மற்றும் அது சார்ந்த பணிகளில் ஈடுபட்டு முதல் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ்ப் பாடநூல்களை உருவாக்குகின்ற ஒரு நல்ல வாய்ப்பினை இறைவன் எனக்குத் தந்தான். அதோடுகூட தமிழகக் கல்வித்துறையின் சார்பில் மக்கள்தொகைக் கல்வி, பெண் கல்வி மற்றும் கைவினைக் கல்வி, திறந்தவெளி பள்ளிக் கல்வி, வயது வந்தோர் கல்வி இதுபோன்ற பல்வேறு கல்வி நிலையில் பாடநூல்கள், பயிற்சி நூல்களை உருவாக்குகின்ற பணி தமிழகமெங்கும் தொடக்கப்பள்ளி முதல் ஆசிரியர் கல்வி வரை ஆசிரியர் பெருமக்களுக்கு பணியிடைப் பயிற்சி நடத்துகின்ற ஒரு வாய்ப்பு, B.Ed பயிற்சி பெறுகின்ற கல்லூரிகளிலே சிறப்புப் பயிற்சி கொடுக்கின்ற, சிறப்பு சொற்பொழிவாற்றுகின்ற வாய்ப்பு இவற்றையெல்லாம் நான் செய்தேன். இன்றும் இயன்ற அளவிற்கு செய்துகொண்டிருக்கின்றேன்.

மேலும் 1981ம் ஆண்டு மொரிசியஸ் நாட்டு தமிழர்களுக்கு தமிழ் பாடநூல்களை உருவாக்கினோம் தமிழக அரசின் சார்பில். தொடர்ந்து தென்னாப்பிரிக்கா, கலிஃபோர்னியா, அமெரிக்கன் தமிழ்க் கல்விக் கழகம், தமிழ்நாடு தமிழ் இணைய கல்விக் கழகம் இவற்றின் சார்பில் பாடநூல்களை உருவாக்குகின்ற ஒரு வாய்ப்பினை நான் இறைவன் அருளால் பெற்று அந்தப் பணியிலே தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றேன். இவை என்னுடைய கல்விப்பணி. பிற பணிகள் சார்ந்த செயல்பாடுகள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

கேள்வி: தமிழ் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி உருவானது?

பதில்: இயல்பாகவே எங்கள் பகுதியிலே எங்கள் காலத்திலே எங்களுக்கு சிவகுருநாதன் என்கிற தமிழாசிரியர் தமிழ் ஆர்வத்தை ஊட்டினார். எல்லா ஆசிரியர்களும் தமிழாசிரியர்கள் மட்டுமல்லாமல், ஆங்கில ஆசிரியராக, வரலாற்று ஆசிரியராக இருந்தவர்கள்கூட தமிழ்க்கல்வியிலே ஆர்வத்தை ஊட்டிய பெருமைக்கு உரியவர்கள். நான் பள்ளி இறுதித் தேர்வு முடித்தவுடன் தமிழிலே சிறந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்தேன். திருவையாறு கல்லூரியைப் பற்றியும், அங்கே கல்வி பயிலுகின்றவர்களுக்கு இலவச கல்வி வாய்ப்பு, இலவசமாக உண்டு, உறைந்து கல்வி பயிலுகின்ற வாய்ப்பு இருப்பதாகக் கேள்விப்பட்டு நான் அங்கே சென்று என்னுடையத் தமிழ்க் கல்வியைத் தொடங்கினேன்.

கேள்வி: தாங்கள் தமிழாசிரியர் பணியாற்றியதில் கிடைத்த அனுபவம் பற்றி கூறுங்கள்?

பதில்: ஒரு ஆசிரியர் என்பவர் படித்து பணியிலே இணைந்ததைவிட பல்வேறு காலக்கட்டங்களிலே அவர் மாணாக்கச் செல்வங்களோடு மொழியறிவை பகிர்ந்துகொண்ட நிலையிலேதான் அவருடைய பட்டறிவு மிகச்சிறப்பாக இருக்கிறது. ஒரு ஆசிரியர் எப்படியெல்லாம் இருக்கவேண்டும், ஒரு மொழியாசிரியர் எப்படிப்பட்ட சிறப்புத் தகைமைகளுக்கு உரியவராக இருக்கவெண்டும், அப்படி இருக்கின்றபொழுது அவர் பெறுகின்ற மனநிறைவு என்ன?, எந்த அளவிற்கு அவர் தன்னை வளப்படுத்திக் கொள்கின்றார், மொழியாலும் பிற துறை சார்ந்த அறிவுகளாலும் தன்னை எந்த அளவிற்கு வளப்படுத்திக்கொள்கிறாரோ அந்த அளவிற்கு அவரும் சிறப்புப் பெறுவார். அவரிடம் வருகின்ற மாணாக்கச் செல்வங்களும் சிறப்புப் பெறும் என்பதற்கு என்னுடைய ஆசிரியர் பணி அனுபவம் எனக்கு பெரிதும் துணை செய்கின்றது. என்னுடைய மாணாக்கச் செல்வர்கள் ஒவ்வொரு துறையிலும் இன்றைக்கு சிறப்பாக இருக்கிறார்கள் என்று எண்ணுகிறபொழுது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

மருத்துவத்துறை, சட்டத்துறை, ஆய்வுத்துறை, கலை மற்றும் இலக்கியத்துறை, நூல்கள் பதிப்பிக்கின்ற படைப்பிக்கின்ற படைக்கின்ற துறை இப்படி பல்வேறு துறையிலே நம்முடைய மாணாக்கச் செல்வங்கள் இருக்கிறார்கள் என்று எண்ணுகிறபொழுது, திருமூலர் சொன்னார், “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே” என்கிற அந்த உணர்வுக்கு நானும் ஆட்பட்டு, என்னைச் சார்ந்தவர்களையும் ஆட்படவைத்தேன் என்பது என்னுடைய ஆசிரியப் பட்டறிவிலே நான் பெற்ற பெரும் மகிழ்ச்சி என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: உங்கள் பார்வையில் ஒரு ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும்?

gomathi-nayagam10பதில்: ஆசிரியர் என்கிற ஒரு சொல்லானது மிகுந்த ஆழமான, அழுத்தமான பரந்த பொருள் கொண்ட ஒரு சொல். ஆசிரியர் என்பவர் அவருக்குரிய கல்வித்தகுதி B.Ed, M.Ed, M.Phil முனைவர் பட்டங்களைப் பெறுவதினாலே மட்டும் அவர் ஆசிரியர் ஆகிவிட முடியாது. ஆசிரியர் என்பவர் உருவாக்கப்படுவதில்லை, ஆசிரியர் பிறக்கிறார் என்பதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து. எந்த ஒரு செயலுக்கும் தொழில் என்று ஒன்று உண்டு, பண்பு என்று ஒன்று உண்டு. அந்த வகையிலே ஆசிரியர் என்பவர் ஒரு தொழிலால் மேன்மை அடைபவர் அல்ல, அவர் அந்தப் பண்பினாலே சிறப்பிக்கப்படுகின்றார். ஆசிரியர் தொழில் என்பது ஒரு பண்பு. உலகத்தை வாழவைக்க வேண்டும், உலகம் வாழ உயர்ந்த நெறிகளைச் சொல்ல வேண்டும் என்று சொன்னவர்கள் எவரெவரோ. புத்தபெருமான், நம்முடைய காந்தியடிகள், விவேகானந்தர், இயேசுநாதர், நபிகள் நாயகம், சாக்ரடீஸ் இவர்கள் எல்லாம் உலகம் வாழ வழிவகுத்துச் சொன்னவர்கள். இவர்கள் எல்லாம் தகுதி B.Ed, M.Ed படிக்காமல் இருக்கலாம், ஆனால் இவர்களும் ஆசிரியர்களே. இவர்களைப் போல உலகம் வாழ, தன்னை எவரெவர் உருக்கிக் கொள்கிறாரோ, அர்ப்பணிக்கிறாரோ அவரெல்லாம் ஆசிரியர். இதைச் சொல்வதற்குக் காரணம் ஆசிரியர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

கேள்வி: உங்கள் பார்வையில் ஒரு மாணவர் எப்படி இருக்க வேண்டும்?

gomathi-nayagam9பதில்: மாணவர்கள் உலகம் என்பது இளைய தலைமுறைகளின் எழுச்சி, அதனுடைய வடிவம். ஆகவே அவர்களை நாம் குறைசொல்ல முடியாது. களிமண்ணை எடுத்து உணவுப்பொருள் சமைக்கின்ற கரங்களையும் உருவாக்கலாம், விளையாட்டுச் சாமான்களையும் உருவாக்கலாம். அதுபோலதான் மாணவர் உலகம். அவர்களை உருவாக்குகிறவர் எப்படி இருக்கிறார்களோ, அப்படி அவர் உருவாவார். அவர்களை உயர்ந்தவர்களாக உருவாக்க வேண்டியது ஆசிரியருடைய கடமை.

இன்னும் சொல்லப்போனால் ஒரு ஆசிரியருக்கும் மாணவருக்கும் உள்ள தொடர்பு, மாணவர்கள் என்பவர்கள் ஆசிரியர்கள் காணுகின்ற கண்ணாடி. இவர்கள் எப்படி இருக்கிறார்களோ அவர்களை அதைக் காட்டுவார்கள். அந்த வகையில் ஆசிரியர்கள் மாணவர்களை உருவாக்க வேண்டும், ஆசிரியர்கள் சிறப்பாக செயல்புரிந்து இளைய தலைமுறைக்கு எல்லாவகையிலும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களுடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடுகின்றோம். அவர் பெற்ற சிறப்புகளை, அவர் மாணவர்களோடு பெற்றிருந்த அந்த உறவை, உயர்வை நினைத்து நினைத்து எல்லா ஆசிரியர்களும் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரு தாழ்மையான கருத்து.

கேள்வி: அன்றைய கல்விமுறை, இன்றைய கல்விமுறையில் எது சிறந்தது உங்கள் பார்வையில்?

பதில்: நாம் அன்றைய கல்விமுறையை குறை சொல்ல முடியாது. ஏனென்றால் அன்றைய காலச்சூழ்நிலைக்கு ஏற்ப கல்வியைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கின்ற உயர்ந்த நோக்கத்திலே ஒரு வழிப் பாதையிலே அந்தக் கல்வி அமைந்திருந்தது. ஒரு காலத்திலே ஆசிரியரை மையமாகக் கொண்டிருந்த கல்வி இன்றைக்கு மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வியாக மறுமலர்ச்சி அடைந்திருக்கிறது. இது ஒரு காலச்சூழல். ஆகவே அன்றைய கல்விமுறை குறைபாடு என்றோ, இன்றைய கல்விமுறை சிறப்பு என்றோ நான் சொல்வதற்கில்லை. காலச்சூழ்நிலைக்கு ஏற்றார்போல, கல்வி, கற்பித்தல், கற்றல், அதற்கான இணை துணை சூழல்கள் எல்லாமே காலத்திற்கு ஏற்றார்போல் விரிவடைந்திருக்கிறது. ஆகவே இன்றைய கல்விமுறை இக்காலத்திலே எதைஎதையெல்லாமோ கற்றுக்கொடுக்க வேண்டும். அன்றைக்கு கல்வி ஆழமாக இருந்தது, இன்றைக்கு கல்வி அகலமாக இருக்கிறது. இதுதான் என்னுடைய கருத்து. கல்வியில் பொதுவாக ஆழமும் வேண்டும், அகலமும் வேண்டும்.

கேள்வி: இன்றைய தனியார் பள்ளிகள் கல்வி வாணிபம் நடத்துவது பற்றி உங்களது கருத்து என்ன?

பதில்: அன்மையிலே ஒரு புதுக்கவிதை படித்தேன். அதனுடைய கருத்து படித்தவர்கள் வகுப்பறையில் பாடம் கற்றுக்கொடுக்கிறார்கள், படிக்காதவர்கள் பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள். எனக்கு அது வேடிக்கையாகவும் இருந்தது. ஆனால் அது காலச்சூழலை பிரதிபலிப்பதாகவும் இருந்தது. கல்வி நிறுவனங்கள் நடத்துகின்றவர்கள் அத்துணைபேர்களும் அந்த வணிக நோக்கோடு மட்டுமே செயல்படுகிறார்கள் என்று சொல்ல முடியாது. சில நிறுவனங்கள் ஏதோ நமக்கு இறைவன் கொடுத்துள்ள அந்த செல்வ வளத்தை கல்விக்கு பயன்படுத்த வேண்டும், கற்போருக்கு உதவ வேண்டும் என்கின்ற அடிப்படையிலே செயல்படுகிறார்கள். இன்றைக்கும்கூட சில கல்லூரியிலே ஏறத்தாழ முப்பது குழந்தைகள் படிக்கிறார்கள் என்று சொன்னால், அதிலே பத்து குழந்தைகளுக்கு அவர்களே பணம் கட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு உண்டு, உறைந்து, உலாவி கல்வி கற்கிற விடுதி வாய்ப்பை அவர்களே பெற்றுத் தந்திருக்கிறார்கள். இப்படி சில நிறுவனங்கள் இருக்கிறார்கள்.

ஆகவே அதுவும் நீங்கள் சொல்வதைப் போல கல்வி நிறுவனங்கள் வணிக நிறுவனங்களாக இருக்கின்ற சூழல் இருக்கின்றது. ஆனால் எல்லோருமே அப்படி இருக்கிறார்கள் என்று பொத்தாம்பொதுவாக குற்றம் சாட்டிவிட முடியாது. எத்தனையோ நாம் பார்க்கிறோம் நல்ல தகுதியும், திறனும் வாய்ந்த குழந்தைகளை ஊக்கமும் ஆக்கமும் படுத்துகின்ற வகையிலே நிறுவனங்களே உதவிசெய்கிறார்கள் என்பதை அறிகிறபொழுது அது மகிழ்ச்சியாக இருக்கிறது. வணிகம் அதுவும் ஒரு பக்கம் வளர்ந்துகொண்டும் இருக்கிறது. இதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அரசைச் சார்ந்தது. கல்வியாளர்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் இருக்க முடியாது. ஆனால் கவலைக்கு மட்டுமே அவர்கள் சொந்தக்காரர்களாக இருப்பார்கள், அது ஒரு கலையாகவே வளர்ந்துகொண்டும் இருக்கிறது.

கேள்வி: ஆங்கில மோகம் அதிகரித்து வருகின்ற இந்த காலகட்ட சூழலில் தமிழ் மெல்ல இனி சாகும் என்ற வார்த்தை உண்மையா?

tharkaalak kalvi murai3பதில்:“மெல்ல தமிழ் இனி சாகும் அந்த மேற்குமொழிகள் புவிமிசை ஓங்கும்” என்கிற மகாகவி பாரதியினுடைய உள்ளக்குமுறல் அன்றையச் சூழலிலே அப்படி இருந்தது. ஆனால் இன்றைக்கு நான் கருதுகிவது, தமிழுக்கு அழிவே இல்லை. ஏனென்று சொன்னால் எனக்குத் தெரிந்த நல்ல எடுத்துக்காட்டுகளாக தமிழக அரசினுடைய தமிழ் இணைய கல்விக்கழகத்தின் சார்பில் தொண்ணூறு நாடுகளிலே தமிழ் படித்துக்கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகளிலே தொண்ணூறு நாடுகளிலே தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்கள், தேர்வு எழுதுகிறார்கள், அடிப்படைக் கல்வி தமிழ்கல்வி பயிலுகிறார்கள், உயர் கல்வி பெறுகிறார்கள், பட்டக் கல்வியும் பெறுகிறார்கள். இணைய கல்விக்கழகம் அதற்கான வாய்ப்பைத் தந்துகொண்டிருக்கிறது. அதேபோல தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பிலே தமிழ்க்களம் என்கின்ற ஒரு அமைப்பை உருவாக்கி இணையம் வழியாக தமிழ் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு அதில் சிறு தொய்வு ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் அதைத் தொடங்கி அதை செயல்படுத்தினார்கள்.

இன்றைக்கு உலகநாடுகளிலே நான் கேள்விப்பட்ட அளவிலே அமெரிக்காவிலே கலிஃபோர்னியா தமிழ்க் கல்விக் கழகம், வட அமெரிக்கா தமிழ்க் கல்விக் கழகம், சுவிட்சர்லாந்திலே உலக தமிழ்ப்பண்பாட்டு மையம், ஆஸ்திரேலியாவிலே தமிழ் பண்பாட்டு மையம், கனடாவிலே தமிழ் பண்பாட்டு மையம், தென்னாப்பிரிக்காவிலே தமிழ் பண்பாட்டு மையம் இவர்கள் எல்லோரும் தமிழைக் கற்பதற்கான சிந்தனையைத் தந்து ஆங்காங்கே தமிழ் கற்றுக்கொடுக்கிறார்கள். அவர்களே தமிழ்ப் பாடநூல்களை உருவாக்குவதற்கான வாய்ப்பினை செய்துகொண்டிருக்கிறார்கள். நான் இரண்டாண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவிலே கல்விப்பணிக்காக சென்றிருந்த பொழுது இந்தக் காட்சிகளையெல்லாம் காண முடிந்தது.

tharkaalak kalvi murai fiசுவிட்சர்லாந்திலே யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பொன்னம்பலம் முருகவேல் என்பவரும், அவருடைய துணைவியார் காமினி என்கிற அம்மையாரும் திருவள்ளுவர் பாடசாலையை ஏற்படுத்தி அங்கே தமிழ் கற்றுக் கொடுக்கிறார்கள். அவர் சொன்னார், சுவிட்சர்லாந்தை சிறிது காலத்தில் வணக்கம் நாடு என்று நான் மாற்றிவிடுவேன், யாரைப்பார்த்தாலும் நான் வணக்கம் என்று சொல்கிறேன், அவர்களை வணக்கம் என்று சொல்ல வைக்கிறேன் என்று அவர் சொல்லுகிறார். அதேபோல ஆஸ்திரியாவிலே சுகுமார் என்பவர் பாடசாலை அமைத்து பாடநூல் உருவாக்கி தமிழ் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

கனடாவிலே மூன்றரை லட்சம் தமிழர்கள் இருப்பதாகவும் அங்கே 11 தமிழ்ப் பள்ளிகளை தானே நடத்துவதாகவும் சுப்பிரமணியம் இராசரத்தினம் என்பவர் என்னிடத்தில் நேரிலே சொன்னார். அவர் பாடநூல்களை உருவாக்கியிருக்கிறார். அங்கே தமிழ்க் கல்வி நடைபெற்று வருகிறது. இன்னும் சுருக்கமாகச் சொன்னால் நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது ஈழத் தமிழர்கள் இருக்கிற வரை தமிழுக்கு அழிவே இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. ஏனென்று சொன்னால் இன்றைக்கு உலகம் முழுவதும் அவர்கள் பரவி நிற்கிறார்கள். எங்கெங்கு போனாலும் தங்களுடைய தமிழ்ப் பண்பாட்டை, தமிழ்க் கல்வியை, தமிழ் மொழி அறிவை, தமிழ்க் கலாச்சாரத்தை அவர்கள் மறக்கவே விரும்பவில்லை. மாறாக அதை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் என்னுடைய பணிவான கருத்து.

கேள்வி: ஆசிரியர் பணி தவிர்த்து தாங்கள் மேற்கொண்ட தமிழ்ப்பணிகள் என்ன?

பதில்: நிறைய தமிழ் நூல்கள் படித்திருக்கிறேன். பாடநூல்களை உருவாக்கியிருக்கிறேன், பயிற்சி நூல்கள், ஆசிரியர்களுக்கான கையேடுகள், வழிகாட்டி நூல்கள், என்னுடைய கல்வி ஆய்வு அதாவது சித்தர்கள் காட்டும் வாழ்வியல் கல்வி அதுபற்றி ஆய்வு செய்த நூல்களை எழுதியிருக்கின்றேன். என்னுடைய கவிதைகள் பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன, மலர்களில் இடம் பெற்றுள்ளன. நான் எழுதிய கட்டுரைகள் பாடநூல்களிலும், இதழ்களில் முப்பது கட்டுரைகளுக்கு மேல் வெளியிடப் பெற்றுள்ளன. இப்படி வாய்ப்பு கிடைக்கிறபொழுதெல்லாம் நான் தமிழ்ப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். தமிழை படைத்துக்கொண்டிருக்கிறேன்.

கேள்வி: நீங்கள் வாங்கிய விருதுகள், நல்லாசிரியர் விருது இவைகள் பற்றியான அனுபவம், அதை எப்படிப் பெற்றீர்கள் என்பதைக் கூறுங்கள்?

gomathi-nayagam6பதில்:1981ல் அன்றைய முதல்வர் மாண்புமிகு திரு.எம்.ஜி.இராமச்சந்திரன். அவர்கள் காலத்திலே ஒரு கல்விப் பணியிலே அவர்களுடைய வருகையை அந்த நிகழ்ச்சிக்கு வரவேற்று ஒரு வரவேற்பு கவிதை படைத்திருந்தேன். அதை நானே படித்து அவர்களிடத்திலே தருகின்ற வாய்ப்பை கல்வித்துறை இயக்குனர் எனக்குத் தந்திருந்தார். அந்தக் கவிதையைப் பாராட்டி எனக்கு மிகப்பெரிய அன்பை, அதுவே நான் பெற்ற முதல் களம் என்று சொல்வேன். அப்படி எனக்கு அவர் தந்தார். அதற்கும் முன்னாலே கல்வித்துறையின் சார்பிலே நிகழ்ந்த பயிற்சிப் பட்டறைகளிலே அப்போது இருந்த பிரபுதாஸ் பட்வாரி என்கிற கவர்னர் கையினாலே நான் முதன் முதலிலே அந்த விருதைப் பெற்றேன். அதன் பிறகு 1994ம் ஆண்டு சென்னையிலே பன்னாட்டு தடகளப்போட்டி என்கிற ஒரு நிகழ்ச்சி நடந்தது.

gomathi-nayagam3ஏறத்தாழ அறுபது நாடுகள் அந்த விளையாட்டுப் போட்டியிலே பங்கெடுத்தார்கள். அப்பொழுது முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அப்பொழுது உலக விளையாட்டு வீரர்களை வரவேற்று, உலக நிகழ்விலே விளையாட்டையும் சிறப்பிப்பதைப் போல பாடல்கள் வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். பலரும் படைத்திருந்தார்கள். என்னுடைய பாடலை அன்றைய முதல்வர் அவர்கள் தேர்ந்தெடுத்து அதற்காக ரொக்கப்பரிசு ரூபாய் ஐம்பதாயிரமும், ஒரு வெள்ளிப் பேழையும் அவர்கள் எனக்குத் தந்தார்கள், 1994 டிசம்பர். அது மிகச் சிறப்புப் பெற்றது. அந்தப் பாடலை இசையமைத்தவர், ஏ.ஆர். ரகுமான் அவர்கள், அந்தப் பாடலைப் பாடியவர்கள் திருமதி சித்ரா அம்மையார் அவர்கள். அந்தப் பாடலின் வரிகள் சில, “ஓ ஓ தோழர்களே! ஒன்றாய் கூடி வாருங்கள், பாரத நாட்டு தடகளப் போட்டியை பைந்தமிழ்நாட்டில் ஆடுங்கள்” என்று அந்தப் பல்லவி அமைத்திருந்தேன்.

gomathi-nayagam4அதற்குப் பிறகு 1995ம் ஆண்டு தஞ்சாவூரிலே எட்டாம் உலகத் தமிழ் மாநாடு நிகழ்ந்தது. அந்த மாநாட்டிலே உலகத் தமிழ் அறிஞர்களை, தமிழ் ஆய்வாளர்களை வரவேற்பது போலவும், மாநாட்டினுடைய நோக்கத்தைச் சொல்லுவது போலவும் பாடல் எழுதும்படி எனக்கு அன்றைய அமைப்பாளர்கள் முதல்வர் உள்ளிட்ட அவர்கள் எனக்கு ஆணையும் அனுமதியும் வழங்கியிருந்தார்கள். அதற்கும் நான் பாடல் எழுதியிருந்தேன். அதற்கும் இசையமைத்தவர் ஏ.ஆர். ரகுமான். மூவாயிரம் குழந்தைகள் அந்தப் பாடலுக்கு நாட்டியம் நடத்தினார்கள். அந்தப் பாடலின் சில வரிகள், “தமிழின் பேரால் கூடும் தமிழ் மாநாடு என்ன செய்யும், தமிழர் தமிழ் போல் வாழ தகுந்த ஆய்வுகள் செய்யும் ஆய்வுகள் செய்யும்” என்கிற முறையிலே அந்தப்பாடல்கள் அமைந்திருந்தது. அதற்கும் இருபத்தைந்தாயிரம் ரூபாய் முதல்வர் அவர்களாலே பரிசு பெற்றேன். பரிசை வழங்கி நேரில் அழைத்து என்னைப் பாராட்டினார்கள் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.

gomathi-nayagam52001ல் இதுபோன்ற பல்வேறு கல்விப் பணிகளின் சிறப்புக்காக எனக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது மாநில நல்லாசிரியர் விருது எனக்கு வழங்கி என்னைப் பெருமைப்படுத்தினார்கள்.

gomathi-nayagam1இதனுடைய பல்வேறு செயல்பாடுகளின் காரணமாக 2006ம் ஆண்டு அப்பொழுது குடியரசுத் தலைவராக இருந்த மாண்புமிகு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களிடத்திலே தேசிய நல்லாசிரியர் விருதும் பெறுகின்ற வாய்ப்பை எனக்கு இறைவனும் அரசும் தந்தது. இப்படி பல்வேறு பாராட்டுக்கள். என்னுடைய தமிழ்ப்பணியைப் பாராட்டி ரா.பி. சேதுப்பிள்ளை விருது, திருக்குறள் ஞாயிறு விருது இதுபோன்ற பல விருதுகளை தமிழ் உலகம் எனக்குத் தந்திருக்கிறது. தொடர்ந்து என்னால் ஆன தமிழ்ப்பணிகளை நான் செய்யவேண்டும் என்பதே எனக்குள்ள உளக்கிடங்கையாக இருக்கிறது. விருதுகளும், பாராட்டுக்களும், பரிசும் வருகின்ற நேரத்திலே வரட்டும். இன்னும் பெறுவேன் என்கின்ற ஒரு எண்ணமும் இருக்கின்றது. ஆசையால் அல்ல, ஒரு எண்ணம், உள்ளத்தினுடைய வெளிப்பாடு என்கின்ற நிலையும் எனக்கு இருக்கிறது என்பதை நான் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

கேள்வி: மற்ற தமிழாசிரியர்களுக்கும், தமிழர்களுக்கும் தாங்கள் கூற விரும்பும் அறிவுரை என்ன?

பதில்: தமிழ் ஆசிரியர்கள் என்று எடுத்துக்கொண்டால் இன்றைக்கு பாடத்திட்டங்களை மட்டுமே படித்து மொழியாசிரியர் என்ற நிலை இல்லாமல் நம்முடைய தமிழ் மொழி எந்த அளவிற்கு இலக்கண வளமும், இலக்கிய செழிவும், செறிவும், செரிப்பும் பெற்றிருக்கிறது என்பதை உணர்ந்து அந்த தமிழ் வளத்தை நுகருகின்ற ஒரு தமிழ் மாணவராக தமிழாசிரியர்கள் இருக்க வேண்டும். அப்படி நுகர்ந்த அந்த மொழியறிவை வஞ்சனை இல்லாமல் எல்லாருக்கும் வாரி வழங்க வேண்டும் என்பது நான் மொழியாசிரியர்களுக்கு விடுக்கின்ற அன்பான வேண்டுகோள். அதேபோல இந்த தமிழ் சமுதாயம் நாம் பெற்றிருக்கிற இந்த மொழி எவ்வளவு சிறப்பானது, நாம் பெற்றிருக்கிற நம்முடைய மொழி சார்ந்த இலக்கண, இலக்கிய பெருமைகள் எவ்வளவு உயர்ந்தது, நம்முடைய பண்பாடு உலகத்திற்கு எந்த அளவிற்கு உயர்வையும், ஒளிர்வையும் தருகின்றது என்பதை உணர்ந்து நாம் எங்கெங்கு சென்றாலும், எந்தெந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும் நம்முடைய மொழிக்கு, நம்முடைய இனத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். இயலாவிட்டாலும்கூட இழுக்கு சேர்க்காமலாவது இருக்கவேண்டும் என்பது என்னுடைய பணிவான வேண்டுகோள். நன்றி.

ஆசிரியர் குறிப்பு:

பெயர்:        இ.கோமதிநாயகம்

பிறந்த நாள்:  05.06.1949

கல்வித் தகுதி:எம்.ஏ., எம்.எட்., பி.எச்.டி

பணி:                முதுகலைத் தமிழாசிரியர் மற்றும் சென்னைப்

பல்கலைக்கழக கல்வியியல்துறை சிறப்பு விரிவுரையாளர்

பணிக்காலம்:  36 ஆண்டுகள்

சிறப்புத் தகுதிகள்:    பேச்சாற்றல், எழுத்தாற்றல். கவிதை படைப்பாற்றல்


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய, மாநில அளவில் நல்லாசிரியர் விருதுபெற்ற தமிழறிஞர் திரு. இ.கோமதி நாயகம் அவர்களின் நேர்காணல்”

அதிகம் படித்தது