மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மனித குலத்தை மலர வைக்கும் மாண்புமிகு மரங்கள்

பாமயன்

Mar 14, 2015

செறியிலைக் காயா அஞ்சனம் மலர

முறியிணர்க் கொன்றை நன்பொன காலக்

கோடல் குவிமுகை அங்கை அவிழ

-முல்லைப்பாட்டு

பொதுவாக மரங்கள் எல்லாம் ஆண்டாண்டாய் இருப்பவை. இவை நீடித்து நமக்குப் பலன் கொடுத்துக் கொண்டு இருக்கும். ஆண்டுப் பயிர்களைவிட இவற்றின் வருவாய் நீடித்து கிடைப்பது மட்டுமல்லாது இதற்கு நாம் செய்யும் செலவும் மிகக் குறைவு. புல்வகை மரங்களைப் பின்வரும் தன்மைகள் கொண்டு தேர்வு செய்ய வேண்டும்.

  1. கால்நடைகளுக்குத் தீவனம் கொடுப்பவை.
  2. மட்கு தயாரிக்க தழைகள்,கூளங்களைக் கொடுப்பவை
  3. விறகு கொடுப்பவை.
  4. கட்டுமானப் பொருட்களைக் கொடுப்பவை.
  5. நிழல் கொடுப்பவை.
  6. காய்கனிகளைக் கொடுப்பவை.
  7. வவறட்சியைத் தாங்கக் கூடியவை.
  8. உள்ளுர்ச் சூழலுக்கு ஏற்றவை.

இயற்கை பல்வகைப் பலன்களைக் கொடுக்கும் மரப்பயிர்களைத் தேர்வு செய்து நாம் நமது பண்ணைக்குள் நடவு செய்து கொள்ள வேண்டும். ஒருமுறை நடவு செய்து ஓராண்டு பாதுகாத்து வளர்த்துவிட்டால் போதும். பல ஆண்டுகளுக்கு இவை பயன் கொடுத்துக் கொண்டே இருக்கும். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு செய்தி. இந்த பல்வகை மரங்கள் எல்லா மாதங்களிலும் ஏதாவது ஒருவகைப் பலனைக் கொடுத்துக் கொண்டே வரும். இதனால் நமக்கு மாதந்தோறும் வருவாய் கிட்டும் வாய்ப்பும் உண்டு. மேலே கூறிய ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு பயன்பாட்டுக்கு அது உதவும்.

pamyan 1

பல்வகை மரங்கள் நமது பண்ணையில் ஒரே காலத்தில் துளிர்விட்டு ஒரே காலத்தில் இலைதழைகளைக் கொடுப்பது கிடையாது. எடுத்துக்காட்டாக கோடையில் நமக்குத் தீவனப் பற்றாக்குறை நிலவும். அப்போது கால்நடைகளுக்கு உணவு கிடைப்பது கடினம். ஆனால் அந்த சமயத்தில் வேப்ப மரம் நன்றாக துளிர்விட்டு தழைகளைக் கொடுக்கும். இவற்றை ஆட்டுக்குக் கொடுத்துப் பழக்கிவிட்டால் இவற்றை ஆடுகள் நன்கு உண்ணும். வேப்ப மரத்தைப் பொறுத்த வரையில் தமிழகத்தின் 90 விழுக்காட்டுப் பகுதியில் வளரும். கடும் வறட்சியைத் தாங்கி நிழல் தரும். மழைக்காலத்தில் விதை போட்டாலே போதும். இதற்கு நீர் ஊற்ற வேண்டிய தேவை கூட இல்லை.

இப்படிப்பட்ட மரங்கள் பல உள்ளன. இவற்றை வளர்த்துவிட வேண்டும். வேப்பமர இலைகள் பனிக்காலத்தில் கருகத் தொடங்கும் அப்போது இலவ மரம் நன்கு தழைகள் கொடுக்கும். இப்படி தொடர்ச்சியாக நமக்குத் தழைகள் கிடைக்கும். இத்துடன் ஆடுகளை பல்வகை மரங்கள் ஒரே சமயத்தில் அல்லாமல் பூப்பதும்,காய்ப்பதும், இலை கொடுப்பதும் மாறிமாறி நடப்பதால் நமது பண்ணை ஆண்டுதோறும் பசுமை மாறாமல் இருக்கும். கிச்சி, ஆல், அரசுமூங்கில் போன்றவையும் வேம்பைப் போலகோடையில் நல்ல இலை தழைகளைக் கொடுக்கும். இவை கால்நடைகளுக்கு நல்ல தீவனமாக இருக்கும். வறட்சியில் நமக்கு ஏற்படும் தீவனப் பற்றாக்குறையை இதன் மூலம் தீர்த்துவிட முடியும். இன்று மலைவாழ் பழங்குடி மக்களிடம் இந்தத் திறன் காணப்படுகிறது.

pamayan 2

இப்படியான மரங்களை பண்ணையில் வரப்புகளிலும் வேறு பயிர்கள் இல்லாத வெற்றிடங்களிலும் தரிசுகளிலும் நடலாம். அதுமட்டுமல்லாது 30 அடி இடைவெளியில் இந்த மரங்களை நட்டு 20 அடிக்கு மேல் கிளை பரப்பாமல் வெட்டிக் கொண்டு வந்தால், நாம் பயிர் செய்யும் பரப்பில் நிழல் பரவாமல் பார்த்துக் கொள்ளலாம். அத்துடன் நாம் பருவகாலப் பயிர்களான நெல், சோளம் போன்றவைகளைப் பயிர் செய்யும் போது பசுந்தழைகளாக மர இலைகளை வெட்டிப் போட்டு பயிர் செய்யலாம். இதனால் நிழலும் இருக்காது. மண் வளமும் பெருகும்.

காட்டில் வளரும் சந்தன மரம் முழு வளர்ச்சி அடைய சுமார் 40 முதல் 60 ஆண்டுகளாகும். அதே சந்தன மரத்தின் அருகில் அகத்தி மரங்களை வளர்த்த போது 11 ஆண்டுகளில் சந்தன மரங்கள் முழு வளர்ச்சி அடைந்துள்ளதை ஆஸ்திரேலியாவில் உள்ள ஆய்வாளர்கள் நிறுவி உள்ளனர். காட்டுச் சந்தன மரத்தில் இருந்து கிடைக்கும் அதே அளவு நறுமண எண்ணையும் தரமும் உள்ளதாக தெரிவிக்கின்றனர் அந்நாட்டு அறிவியல் அறிஞர்கள்.

கால்நடைத் தீவன மரங்கள்:

அகத்தி, மலை வேம்பு, மலைக் கிளுவை, பூவரசு, முருங்கை, முள் முருங்கை (கல்யாண முருங்கை) ஆபாபுல், உதியன், வாகை அல்லது வாத முடக்கி, துலுக்க வேம்பு போன்றவை.

மட்கு எருத் தழைக்கான மரங்கள்:

சீமைக்கொன்றை (கிளிரிசிடியா) புங்கன்,வேம்பு போன்றவை.

விறகுக்கு:

நொச்சி,மலைப்பூவரசு,சூபாடில்,உசிலை,புளி போன்றவை.

கட்டுமானத்திற்கு:

வாகை, ஈட்டி, சவுக்கு, தேக்கு, தடிசு, முள் இலவு, மூங்கில், ஆய் போன்ற மரங்கள்.

மருத்துவப் பயன் மரங்கள்:

நொச்சி, வேம்பு, சவுக்கு, வில்வம், அத்தி, தேக்கு, சாதிக்காய், மாசிக்காய், கடுக்காய், நெல்லிவேம்பு.

நிழலுக்கு:

ஆல், அரசு, பூவரசு, புங்கன், வேம்பு போன்றவை.

pamayan -3

கனிகள்:

மா, பலா, எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா, நாவல், பப்பாளி என இவை மட்டுமல்ல இன்னும் கணக்கற்ற மரங்களை இயற்கைத்தாய் நமக்கு வழங்கி உள்ளாள். அவற்றை நாம் தெரிந்தெடுத்து சமது பண்ணைக்குள் கொண்டு வர வேண்டும். பொருத்தமான இடத்தில் பொருத்தமான மரங்களை நட்டு இணக்கமான பயிர்களை நடவு செய்து ஆண்டு முழுவதும் பயன் பெறலாம்.

இணக்கப் பயிர்கள் என்றால் வெற்றிலைக்கு அகத்தி, முள் முருங்கை போன்றவற்றையும் மஞ்சளுக்கு அகத்தி, செம்பை, ஆமணக்கு போன்றவற்றையும் கூறலாம். இந்த அறிவுக் களஞ்சியம் இன்னும் வயதான மூத்த தாத்தாபாட்டிகளிடமும் மலைவாழ் பழங்குடி மக்களிடமும் கேட்பாரற்றுக் கிடக்கிறது. இதை நமது ‘அறிவியல்’ உலகம் புறக்கணித்து விட்டது. நாம் இதைத் தேடித் திரட்ட வேண்டும்.

அதிகமான வெயில் உள்ள இடங்களில் நுண்காலநிலையை (microclimate) உருவாக்க இந்த மரப்பயிர் சாகுபடி பயன்படும்பரவலாக மரங்களை நட்டு போதிய நிழற்குடைகளை அமைத்துவிட்டால் செயற்கை நிழல்வலைகளுக்கு நாம் தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டியதில்லை. இந்த நிழல்வலையின் கீழ் தக்காளி, மிளகாய், பாகற்காய், கத்தரி போன்றவற்றை சாகுபடி செய்யலாம். இதன் விளைச்சலும் அதிகமாகும். அதுமட்டுமல்லாது மலைப் பகுதிகளில் மட்டும்தான் வரும் என்று கருதக்கூடிய கேரட்,காப்பி,முள்ளங்கி,பீட்ரூட் போன்ற காய்கறிகளையும் விளைவிக்கமுடியும்.

ஓவ்வொரு மரத்தின் மீதும் மிளகு, வெற்றிலை, சீந்தில், சிறுகுறிஞ்சான் போன்ற கொடிகளைப் படரவிடலாம். இத்துடன் எல்லாப் பருவங்களிலும் நாம் பயிர் செய்ய முடியும். ஆதலால் மனித சமுதாயம் மரங்கள் வளர்க்கும் பணிகளை செய்யாவிட்டாலும் இருக்கும் மரங்களையாவது காத்தல் நாம் மட்டுமல்லாது நமக்குப் பின்பு வரும் தலைமுறைக்கு மாசுபடா வாழ்வைக் கொடுக்க முடியும்.


பாமயன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மனித குலத்தை மலர வைக்கும் மாண்புமிகு மரங்கள்”

அதிகம் படித்தது