மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மயிலாடும்பாறை மூத்த தமிழ்க்குடியின் வாளின் காலம்

தேமொழி

May 14, 2022

முன்னுரை:

அண்மைக் கால அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் அறிவியல் காலக்கணிப்புப் பகுப்பாய்வு முடிவுகள் தமிழகத்தின் வரலாற்றை அறிவியல் அடிப்படையில் சான்றுகளுடன் அணுக உதவி வருகின்றன. தமிழர்களின் தமிழி எழுத்துமுறை கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் இருந்ததற்கான சான்றுகளை கீழடி, கொடுமணல் மற்றும் பொருந்தல் அகழாய்வுகள் வழங்கின. இத்தகவல் தமிழகத்தின் வரலாற்றுக் காலம் எது என்பதை அறிவியல் அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வைத்தது.

நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் ஆகியவை கி.மு. 6-ஆம் நூற்றாண்டுக்கு முன்பே பண்டைய தமிழகத்தில் இருந்ததை கொற்கை, அழகன்குளம், கரூர், மோதூர், மாங்காடு, தேரிருவேலி, அரிக்கமேடு, பூம்புகார் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த சான்றுகள் உறுதிப்படுத்தியுள்ளன. அத்துடன், செவ்விலக்கியத் தரவுகள் சுட்டுவது போல, இந்தியக் கண்டத்தின் பிற பகுதிகளுடன் தமிழர்கள் செய்த வணிகத்தையும், கடல்கடந்த வணிகத் தொடர்புகளையும் அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்கள் உறுதிப்படுத்தின.

தமிழ்நாட்டின் சேலம் பகுதி இரும்புத் தாது கிடைக்குமிடம், இங்கு வளர்ந்த இரும்பு தொழில்நுட்ப வளர்ச்சியும் பயன்பாடும் தமிழர்களின் பண்பாட்டு வளர்ச்சிக்கு அடிகோலிட்டது என்று கருதப்பட்டாலும், தமிழகத்தில் இரும்பு பயன்பாட்டிற்கு வந்த காலம் குறித்து மாறுபட்ட கருத்துகள் ஆய்வாளர்களிடம் நிலவி வந்தது. அண்மையில் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்திலுள்ள மாங்காடு, தெலுங்கானூர் ஊர்களில் கிடைத்துள்ளச் சான்றுகள் மூலமும், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் 2021 ஆம் ஆண்டு மேற்கொண்ட அகழாய்வில் கிடைக்கப் பெற்ற தொல்பொருட்களை அறிவியல் காலக் கணக்கீடு ஆய்வுக்கு உட்படுத்தியதில், உறுதியான காலக்குறிப்பிற்கான சான்றுகளுடன் 4200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பு பயன்பாட்டில் இருந்தது என்பதை ‘கதிரியக்க அலகு காலக்கணக்கீடு’ (ரேடியோமெட்ரிக் காலக்கணக்கீடு / Radiometric Dating) மூலம் அறிய முடிகிறது. இந்திய நிலப்பகுதியில் செம்பின் பயன்பாடு ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளிப் பண்பாட்டில் தோன்றிவிட்டதற்கான சான்றுகள் உள்ளன.

Siragu Mayiladumparai map

ஆனால் இந்தியாவின் தொன்மையான சிந்துவெளிப் பண்பாட்டு மக்களிடம் இரும்பின் பயன்பாடு இருந்ததாகத் தெரியவில்லை. அவ்விடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் இந்நாள்வரை இரும்பு பயன்பாடு குறித்த தொல்லியல் தடயங்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

இரும்புக்காலம் குறித்த ஆய்வுகள்:

இரும்பின் பயன்பாடு மனிதகுல வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய ஒரு முக்கியமான தொழில்நுட்பக் கண்டு பிடிப்பு. காடு திருத்தி விளைநிலம் உருவாக்கித் தொடங்கிய வேளாண் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவை இரும்புக் கருவிகளே ஆகும். அதுமுதல் இரும்பாலான வேளாண் கருவிகளின் பயன்பாட்டின் விளைவு, ஒன்று தொட்டு ஒன்றாக வேளாண்மை உற்பத்தி பெருக்கத்தையும், உபரி பொருட்களால் வணிக விரிவாக்கத்தையும், அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியையும், மக்கள் பெருக்கத்தையும், நகர மயமாக்கலையும், நாகரீக பண்பாட்டு வளர்ச்சியையும், அரசு உருவாக்கத்தையும் விரைவுபடுத்தியது.

பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கிடைக்கும் பகுதிகளில் நடைபெறும் அகழாய்வுகளில் சடங்குப் பொருட்களுடன் இரும்புப் பொருட்களும் இணைந்து கிடைக்கின்றன. அதனால் அக்கால மக்களின் வாழ்க்கையில் இரும்பின் பயன்பாடு இருந்துள்ளது என்பது தெரிய வருகிறது. இரும்பின் தோற்றத்திற்குப் பின்னர் கற்கருவிகள் மற்றும் பிற உலோகக் கருவிகளின் பயன்பாடு படிப்படியாகக் குறைந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இரும்புக் கருவிகள் தொழில் நுட்பம் முதலில் தோன்றிய இடம் குறித்த ஆய்வு பலகாலமாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. கருங்கடல் பகுதியில் ஆசியா மைனர், துருக்கி பகுதியில் இரும்பின் தொழில்நுட்பம் தோன்றிப் பரவியது என்று ‘பண்பாட்டுப் பரவல்’ கருதுகோள்களின் அடிப்படையில் முன்னர் வைக்கப்பட்ட ஒரு கருத்து, உலகின் பல இடங்களிலும் ஒரே காலகட்டத்தில் இரும்பின் பயன்பாடு இருந்த தடயங்கள் கிடைத்தபின்னர் வலுவிழந்து போனது. இரும்பினால் ஆன பொருட்கள் மத்திய இந்தியா மற்றும் தென்னிந்தியா ஆகிய பகுதிகளில் அதிக அளவில் கிடைக்கின்ற காரணத்தால் இரும்பைக் கண்டுபிடித்தவர் இந்தியர்கள் என்ற கருத்தும் ஆய்வாளர்களிடம் உண்டு.

இந்தியத் துணைக்கண்டத்தின் இரும்புக்காலம்:

தொல்லியல் ஆய்வாளர்கள் இந்தியப்பகுதியில் இரும்பு பயன்பாட்டிற்கு வந்த காலம் எது என்பதை அறிய தொடர்ந்து ஆய்வு செய்து (1979ஆம் ஆண்டு முதற்கொண்டு) கரிமக் காலக்கணிப்புகள் மூலம் மதிப்பிட்டு வந்துள்ளனர்.

Siragu mayiladumparai excavationராஜஸ்தான் மாநிலம் அஹார் ⁠— கி.மு. 1300
கர்நாடக மாநிலம் புக்காசாகரா⁠— கி.மு. 1530
மத்திய கங்கைப் பள்ளத்தாக்கின் ராய் பூரா ⁠— கி.மு. 1700-1800
உத்தரப் பிரதேச மாநில மல்ஹார் மற்றும் கர்நாடகாவின் பிரம்மகிரி ⁠— கி.மு.2000
போன்ற இடங்கள் முதற்கொண்டு தொடர்ந்து கிடைத்த இரும்புப் பயன்பாட்டுத் தொல்பொருட்களின் சான்றுகளின் சராசரி மையகால அளவீட்டுக் காலம் அடிப்படையில் காலத்தால் முந்தைய இரும்புப் பயன்பாட்டுச் சான்றுகள் கிடைத்த 28 தொல்லியல் பகுதிகளைக் கீழுள்ள அட்டவணையில் காணலாம்.

தமிழ்நாடு (5), கர்நாடகம் (9), உத்திரப்பிரதேசம் (10), மராட்டியம் (1), மத்தியப்பிரதேசம் (1), வங்காளம் (1), ஜார்க்கண்ட் (1) இடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதை இந்த அட்டவணை காட்டுகிறது. ஒப்பீட்டளவில், தமிழ்நாட்டு மயிலாடும்பாறை இரும்புப் பயன்பாடு காலத்தால் முந்தைய இரும்புப் பயன்பாடாக அண்மைய ஆய்வு முடிவு காட்டுகிறது.

தமிழ்நாட்டுப் பகுதியில் மிகுந்த இரும்புத் தாதுக்களைக் கொண்ட சேலம் பகுதியில், தெலுங்கானூர் மற்றும் மாங்காடு ஆகிய இடங்களில் உள்ள ஈமச்சின்னங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட இரும்பு மாதிரிகளின் மூலம் கி.மு. 13-ஆம் நூற்றாண்டளவில் அப்பகுதியில் இரும்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என முன்னர் நிறுவப்பட்டுள்ளது. தற்பொழுது கி.மு. 22-ஆம் நூற்றாண்டளவிலேயே அப்பகுதியில் இரும்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டத்திலுள்ள தொகரப்பள்ளி கிராமத்திலிருந்து 3 கி.மீ. மேற்கே உள்ள மலையடிவாரத்தில் அமைந்துள்ள மயிலாடும்பாறையில் நிகழ்த்தப்பட்ட அண்மைய தொல்லியல் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. மயிலாடும்பாறை தொல்பொருள் மாதிரிகளின் மூலம் பெறப்பட்ட காலக்கணிப்பு முடிவு இதை உறுதிசெய்துள்ளது. மயிலாடும்பாறைக்கு அருகில் உள்ள ஐகுந்தம் ஊரில் வணிகக்குழுக் கல்வெட்டொன்றும் கண்டறியப்பட்டுள்ளதால் இவ்வூர் பண்டைய வணிகவழியில் இருந்துள்ளதாக கருதப்படுகிறது. புதியதாகக் கிடைத்த ஆய்வின் முடிவின் அடிப்படையில் மக்களின் பண்பாட்டு வளர்ச்சி கால வரலாறு மறுசீரமைக்கப்பட்டு கீழுள்ளவாறு காலக்கோட்டில் காட்டப்பட்டுள்ளது.

Siragu mayiladumparai excavation timelineதமிழகத்தின் இரும்புக்காலம்:

கருங்கைக் கொல்லன் செம்தீ மாட்டிய
இரும்பு உண்நீரினும் மீட் டற்கு அரிது
(புறம். ⁠— 21)
என்றும்,
இரும்புசெய் கொல்லன் வெவ்வுலை
தெளித்த தோய்மடல் சில்நீர் போல
(நற்றிணை ⁠— 9)
என்றும், இரும்பு, இரும்பின் பயன்பாடு, இரும்பைத் தட்டி ஆயுதமாக்கும் முறை, உலைக்கலன் போன்று பற்பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

எஃகு:

இரும்பு தயாரிப்பில் மேம்பட்ட தொழில்நுட்பமே எஃகு தயாரிக்கும் முறை. எஃகு என்னும் உருக்கு (Steel) ஒரு கலப்பு உலோகம் ஆகும். பண்டைய காலத்தில் தென்னிந்தியா ‘உயர் கரிம எஃகு’ (high carbon crucible) உருவாக்கத் தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்து விளங்கியது. வூட்ஸ் எஃகும், அதனைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட வாள், கத்தி போன்ற படைக்கலன்கள் அவற்றின் தரத்தின் காரணமாக உலகப் புகழ் பெற்றவை. கரிமத்தின் அளவை அதிகரித்தோ அல்லது குறைத்தோ அளவை வேறுபடுத்தி ‘கரிமம் கூட்டுதல்’ (carbonisation), மற்றும் ‘கரிமம் நீக்குதல்’ (decarbonisation) முறைகளின் மூலம் தேவையான பண்பு கொண்ட இரும்பை உருவாக்கும் முறையை பண்டைய நாட்களில் மக்கள் அறிந்திருந்தனர். இரும்புடன் கரிமம் சேர்த்தபின்பு இரும்பின் பண்பு மேம்படுத்தப்பட்டு அதன் வலிமையும் வளையாத தன்மையும் அதிகரிக்கும்.

எஃகுடையிரும்பின் உள்ளமைத்து
(பதிற்றுப்பத்து ⁠— 74:13)
என்றும்,
… … … … … … … … … … … … … … … … … அடுபோர்
எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து
(குறுந்தொகை ⁠— 198)
என்றும்,
ஒளிறு இலைய எஃகு ஏந்தி
(புறநானூறு ⁠— 26)
என்றும், செவ்விலக்கியப் பாடல்களில் எஃகின் வலிமை குறித்த வரிகள் இடம் பெறுகின்றன.

Siragu mayiladumparai excavation2உலைக்கலன் உதவியுடன் தேனிரும்புடன் கரிமம் சேர்க்கப்பட்டும் வார்ப்பிரும்பிலிருந்து கரிமம் நீக்கப்பட்டும் எஃகு தயாரிக்கும் முறை கையாளப்பட்டது. இரும்பில் 1.5 ⁠— 2.0 % அளவில் கரிமம் கொண்டது உயர் தரக் கரிம எஃகு என்று கருதப்படுகிறது. இரும்பைப் புடமிடும் கலன் கொண்ட உலைகள் கொடுமணல் மற்றும் மேல்சிறுவலூர் தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்துள்ளன. கொடுமணலில் கண்டறியப்பட்ட இரும்பானது உயர் கரிமம் கொண்ட எஃகு என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொடுமணலின் புடமிடும் கலத்துடன் கூடிய உலைக்கலன் கரிமக் காலக்கணிப்பு அடிப்படையில் கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று முன்னர் கண்டறியப்பட்டது. மேலும் இவற்றுடன் 500க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கொடுமணலில் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

மயிலாடும்பாறை தொல்லியல் ஆய்வு:

தொகரப்பள்ளி, மயிலாடும்பாறை ஆகிய ஊர்கள் அடங்கிய பகுதியானது நுண்கற்காலம் முதல் தொடக்க வரலாற்றுக்காலம் வரையிலான தனித்துவமான பண்பாட்டு அடுக்குகளைப் பொதிந்து வைத்துள்ளதாகவும், நுண்கற்காலம் முதல் தொடக்க வரலாற்றுக்காலம் வரை தொடர்ச்சியான குடியேற்றத்திற்கு ஏற்ற வகையில் இப்பகுதி இருந்துள்ளதாகவும் தொல்லியல் ஆய்வாளர்களால் சான்றுகளின் அடிப்படையிலும், வாழ்வாதாரத்திற்கு உதவிடும் நில அமைப்புகள் அடிப்படையிலும் அடையாளம் காணப்படுகிறது. இப்பகுதியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் மட்கலன்கள், இரும்புப்பொருட்கள், பாறை ஓவியங்கள், நடுகற்கள், கல்வெட்டுகள் மூலம் 1. நுண்கற்காலம், 2. புதிய கற்காலம், 3. இரும்புக்காலம், 4. தொடக்க வரலாற்றுக் காலம், 5. வரலாற்றுக் காலம் ஆகிய ஐந்து பண்பாட்டுத் தொடர்ச்சியின் சான்றுகள் மயிலாடும்பாறையில் கண்டறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கச் சிறப்பு எனலாம்.

தமிழ் நாடு அரசுத் தொல்லியல் துறையின் முன்னெடுப்பில் 2021-ஆம் ஆண்டு பேராசிரியர் கா.இராஜன், பேராசிரியர் சாந்தி பப்பு ஆய்வுக் குழுவினர் மேற்கொண்ட கள ஆய்வில், வட்ட வடிவ இடுதுளைகளுடன் மேற்கு மற்றும் கிழக்கு நோக்கிய ஈமச்சின்னங்களிலும், கற்பதுக்கைகளிலும் எண்ணற்ற கருப்பு-சிவப்பு வண்ண மட்கலன்கள், கருப்பு பூச்சுப்பெற்ற மட்கலன்கள் மற்றும் சிவப்பு வண்ண மட்கலன்கள் ஆகிய ஈமச்சின்னப் பொருட்களுடன் வைக்கப்பட்டிருந்த இரும்புப் பொருட்களும் கிடைத்தன. இரும்புப் பொருட்களில் பெரும்பாலானவை சிறிய அளவிலான கத்திகள், குவியலாக கிடைத்த வளைந்த மற்றும் நேரான அம்புமுனைகள், வாள், கோடாரி போன்றவற்றின் வகையைச் சேர்ந்தவை. இரும்புக்கால ஈமக்காட்டில், ஈமச்சின்னத்தின் அறையில் இரும்புக் கத்திகள், அம்புமுனைகள், குட்டையான மற்றும் நீளமான வாள்கள், வேல் மற்றும் கோடாரிகள் ஆகியனவும், மற்றுமொரு ஈமச்சின்னத்தில் 87 செ.மீ. நீளமுள்ள ஒரு நீண்ட வாளும் ஆய்வாளர்களால் சேகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இங்கு ஒரு பானையின் வெளிப்புறத் தோள் பகுதியில் “சா த” என்ற தமிழி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானையோடும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துப் பொறிப்பு தடயத்தால் இப்பகுதி இரும்புக் காலத்திலிருந்து தொடக்க வரலாற்றுக் காலத்திற்கு மாற்றம் பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Siragu mayiladumparai excavation artifactsSiragu mayiladumparai excavation betalab

மேலும், அகழாய்வுத் தளத்தில் நான்காம் பகுதியில் இடப்பட்ட அகழாய்வுக் குழிகளிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளின் வாயிலாக முக்கியமான இரண்டு பகுப்பாய்வு காலக்கணிப்புகள் (**Accelerator Mass Spectrometry ⁠— AMS) பெறப்பட்டுள்ளன. காலக்கணக்கீட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இவ்விரண்டு மாதிரிகளும் முறையே 104 செ.மீ மற்றும் 130 செ.மீ ஆழத்திலிருந்து பெறப்பட்டவை. இவற்றின் ‘மைய அளவீட்டுக்காலம்’ (Mid-range calibrated dates) முறையே கி.மு 1615 மற்றும் கி.மு 2172 ஆகும். இக்காலக்கணிப்புத் தரவுகள் மூலம் 4200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது தெரிய வருகிறது.

முடிவுரை:

இரண்டு அறிவியல் அடிப்படையிலான காலக்கணிப்புகள் மூலம் தமிழகத்தில் இரும்பின் காலம் 4200 ஆண்டுகள் என்பதையும், புதிய கற்காலம் இதற்கும் முந்தையது என்பதையும் அரசு வெளியிட்ட மயிலாடும்பாறை அறிக்கையால் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்தக் காலக்கணிப்பு முடிவுகள் இரும்புக் காலத்தின் துவக்கம் மற்றும் புதிய கற்காலத்தின் பிற்பகுதியிலிருந்து இரும்புக் காலத்திற்கு மாறியதற்கான சான்றுகள் ஆகும். ஆகவே, புதிய கற்காலப் பண்பாட்டுக் காலத்தின் பிற்பகுதி கி.மு 2200 என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், கருப்பு-சிவப்பு பானை வகைகள் இரும்புக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என நிலவியிருந்த நம்பிக்கைக்கு மாறாக கருப்பு-சிவப்பு பானை வகைகள் புதிய கற்காலத்தின் பிற்பகுதியிலே அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் இந்த அகழாய்வு முடிவுகளின் மூலம் அறிய முடிகிறது.

குறிப்பு:

** ஆக்சலரேட்டார் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி காலக்கணக்கீட்டு முறை (Accelerator Mass Spectrometry / AMS Dating):
இந்தக் காலக் கணக்கீட்டு முறையில் அயனிகள் உயர் இயக்க ஆற்றல்களுக்கு அதிவிரைவு படுத்தப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படும். இந்தப் பகுப்பாய்வு முறை அதிகத் துல்லியமானது மட்டுமின்றி குறைந்த அளவு ஆய்வுக்குரிய மாதிரி இருந்தாலே போதுமானது, அதை இந்த ஆய்வுக்கு உட்படுத்த இயலும் என்பதே இக்காலக் கணக்கீட்டு முறையின் சிறப்பு. மயிலாடும்பாறையில் கிடைத்த தொல்லியல் சான்றுகள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் (Beta Analytic Accelerator Mass Spectrometry Facility in Miami, Florida) காலக்கணக்கீட்டுப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன.
___________________

பார்வை நூல்:

“மயிலாடும்பாறை”
- வேளாண் சமூகத்தின் தொடக்கம்
/ தமிழகத்தில் 4200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரும்புக்காலப் பண்பாடு
[தொல்லியல் துறை வெளியீடு எண் : 333; முதல் பதிப்பு : 2022]
பதிப்பாசிரியர்கள்: பேராசிரியர் கா. ராஜன், முனைவர் இரா.சிவானந்தம், க. சக்திவேல், சீ.பரந்தாமன், கி.பாக்கியலட்சுமி
வெளியீட்டாளர்: தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு, சென்னை – 600 008

https://www.tnarch.gov.in/


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மயிலாடும்பாறை மூத்த தமிழ்க்குடியின் வாளின் காலம்”

அதிகம் படித்தது