மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மயிலை சிவ முத்துவின் குழந்தைக் கதைகளின் நோக்கும் போக்கும்

முனைவர் மு.பழனியப்பன்

Jul 6, 2019

siragu mayilai sivamuththu1

குழந்தைகளுக்கான கதைகள் குழந்தைகளின் சிக்கல்களை முன்வைத்து அமையவேண்டும். அவர்களுக்கு கதைகள் பெரும்பாலும் ‘‘ஒரு ஊரில் ஒரு பெரியவர் இருந்தார்” என்ற நிலையிலேயே தொடங்கவேண்டும். சிறுகதை போன்று ஏதோ ஒரு இடத்தில் தொடங்கி ஏதோ ஒரு இடத்தில் முடிதலாகச் சிக்கலும் சிடுக்கும் நிறைந்ததாக இருந்துவிடக் கூடாது. மேலும் கதையின் கருப்பொருளும் குழந்தைகளை மையமிட்டு அமைந்திருக்க வேண்டும். குழந்தைகளின் பழக்க வழக்கங்கள், பள்ளி வாழ்வு, பெற்றோரை, பெரியோரை மதித்தல் போன்றனவே கருப்பொருள்களாக அமைதல் வேண்டும். மேலும் படங்கள், பெரிய பெரிய எழுத்துகள், சிறிய சிறிய கதைகள் இவையே குழந்தைகளின் கதை இலக்கியத்திற்கான வரையறையாக இருக்க முடியும். மேலும் நடை என்பது அவர்களுடன் தொடர்புடையதாக அமையவேண்டும். சிறுகதை ஆசிரியரின் இலக்கியப் புலமைக்கு இங்கு இடமிருக்க முடியாது. இவ்வகையில் குழந்தைகளின் கதைகள் தனித்த வாசிப்பு அனுபவம் மிக்கன.

குழந்தைகளுக்கான கதைகளை எழுதிய குழந்தை எழுத்தாளர்களின் குறிக்கத்தக்கவர்களில் ஒருவர் மயிலை சிவ முத்து ஆவார். இவரின் பாடல்கள், கதைகள் குழந்தைகளின் உலகம் சார்ந்தவை. இன்றைய குழந்தைகள், இக்கதைகளை, இக்கவிதைகளை வாசித்து உணர்ந்து அக்கதைகளுடன், கவிதைகளுடன் இணைந்து செல்ல இயலும். அத்தகைய பொது அறக் கதைகளை குழந்தைகளுக்கு வழங்கியவர் மயிலை சிவ முத்து.

இவர் மயிலாப்பூரில் பிறந்தவர். இதன் காரணமாக இவரின் பெயரில் மயிலை என்று அமைந்தது. இவரின் தந்தையார் பெயர் சிவானந்தம் என்பதாகும். எனவே இவர் பெயரில் சிவ என்ற அடுத்து சொற்சேர்க்கை அமைந்தது. இவரின் பெயர் முத்துக்குமார சாமி என்பதாகும். இவர் 1892 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவர் பள்ளிக்கல்வியையும், தொடர்ந்து சிற்பக் கல்வியும் பெற்றார். இருப்பினும் கல்வியைத் தொடர இயலாமல், குடும்பச் சூழல் காரணமாக உயர்நீதிமன்ற அச்சகத்தில்  பணியில் சேர்ந்தார். பணியுடன் படிப்பினையும் தொடர்ந்த இவர் பின்னாளில்  புலவர் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றார்.

மருத்துவர் தருமாம்பாள் என்பவர் நிறுவிய மாணவர் மன்றம் என்ற அமைப்பின் வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்டு மாணவ மாணவியர்க்குத் தமிழறிவு, கலைத்திறன் பெருகப் பல போட்டிகளை நடத்தினார். தற்போதும் இம்மாணவர் மன்றம் தமிழ் வளர்க்க மன்றத் தேர்வுகளை நடத்தி வருகிறது. இவர் எங்கள் பாப்பா, சிவஞானம், தமிழ் திருமணமுறை, திருக்குறள் இனிய எளியஉரை, நம்நாட்டுப் பெண்மணிகள், நல்ல எறும்பு, நல்ல குழந்தை, நாராயணன், நித்திலக் கட்டுரை, பொன் நாணயம், முத்துப்பாடல்கள், வரதன் ஆகியனவற்றைப் படைத்துள்ளார். இவற்றில் முத்துப் பாடல்கள் தேசிய அளவில் விருது பெற்ற படைப்பாகும். சிவஞானம் என்பது சிறுகதைகளின் தொகுப்பாகும். இதில் அஃறிணை உயிரினங்கள் தங்களின் இன்ப, துன்பங்களை வெளிப்படுத்துமாறு கதைகளை மயிலை சிவ முத்து படைத்துள்ளார்.  நல்ல எறும்பு, நல்ல குழந்தை, நாராயணன், பொன் நாணயம், வரதன் ஆகியன  சிறுகதையின் பக்க எல்லையைத் தாண்டிய நிலையில் பெருங்கதைகளாகப் படைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் குழந்தை இலக்கியத்திற்கான கூறுகள் நிறைந்து கிடக்கின்றன. இவற்றை ஆய்ந்து உரைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகின்றது.

நல்ல குழந்தை

ஞானசம்பந்தரின் வாழ்வினைக் குழந்தைகளுக்கு ஏற்ற நிலையில் படங்கள், எளிய தொடர்கள், சுவையான நிகழ்வுக் கோர்வை ஆகியவற்றுடன்  மயிலை சிவ முத்து படைத்தளித்துள்ளார்.

நல்ல எறும்பு

ஓர் எறும்பு ஒரு சிறுவனின் வீட்டில் இருந்து, கிளம்பி பள்ளி சென்று அங்கிருக்கும் நல்ல குழந்தைகளுக்கு நன்மையையும், தீய வழக்கமுடைய குழந்தைகளுக்குக் கடித்தல் என்ற தண்டனையையும் வழங்குகிறது. எறும்பு பற்றிய நல்ல கற்பனைக் கதை இதுவாகும். கோபாலன் என்பவன் மிகச் சிறந்த பழக்க வழக்கமுடையவன். பள்ளியிலும் வீட்டிலும் அவன் அனைவருக்கும் பணிந்து  நடப்பவன் ஆவான். அவன் தம்பி கோதண்டம், பக்கத்துவீட்டுச் சிறுவன் கோவிந்தன் ஆகியோர் நல்ல பழக்க வழக்கம் இல்லாதவர்கள்.  பள்ளியிலும், வீட்டிலும் அவர்கள் சரிவர நடப்பதில்லை. இதன் காரணமாக இவர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஓர் எறும்பு அவர்களுடன் இரு நாட்களைக் கழிக்கிறது. அப்போது கோவிந்தன், கோதண்டம் ஆகியோர்களை நேரம் பார்த்துக் கடித்துத் துன்புறுத்துகிறது. கோபாலனை  அவன் நல்ல ஒழுக்கம் கருதி அவனைத் தேள் கொட்ட இருந்த நேரத்தில் அவனைக் காப்பாற்றுகிறது. இவ்வாறு நல்லவர்களை வாழ்த்தவும் தீயவர்களைத் திருத்தவும் முனையும் இவ்வெறும்பின் கதை குழந்தைகளுக்கு உரிய நல்ல கதையாகும்.  இந்தக் கதையின் ஒரு பகுதி பின்வருமாறு. “எறும்பு எப்படி பள்ளிக் கூடம் போகும் என்று நீங்கள் கேட்கலாம். அதையும் சொல்லுகிறேன்.. கோதண்டன் தன் சட்டைகளைப் பெட்டியில் பத்திராமாய் வைப்பதில்லை. அவைகளை அவன் நினைத்த இடத்தில் கழற்றிப் போட்டுவிடுவான். அந்த எறும்பு அதிகாலையில் எழுந்து அவன் சட்டைப் பைக்குள் புகுந்து கொண்டது” (ப. 4-5) என்ற நிலையில் கற்பனை எறும்பினை, கதைக்குள் உண்மையாக பள்ளிக்குச் செல்ல ஏற்பாடு செய்கிறார் மயிலை சிவ முத்து.

நாராயணன்

இதுவும் பள்ளிச் சூழல் சார்ந்த கதையாகும். நாராயணன் வலுவும், கல்வி அறிவும் மிக்க மாணவன். அவனுடன்  படிக்கும் மாணிக்கம், கோபாலன், கோவிந்தன், முருகன் போன்றோர் நாராயணன் மீது குற்றம் சுமத்த, அவனை தகுதி குறைவானவனாக ஆக்கத் திட்டமிடுகின்றனர். ஒரு நாள் பள்ளியில் இருந்த மாமரத்தில் இருந்து ஒரு மாம்பழத்தை பறிப்பதில் போட்டி இந்நண்பர்களிடையே ஏற்பட்டு விடுகிறது. இப்போட்டியில் கட்டாயமாக நாராயணன் கலந்துகொள்ளச் செய்யப்பெறுகிறான். அவன் கல் குறிபார்த்து எறிய  அது மாம்பழத்தைப் பெற்றுத் தந்துவிடுகிறது. விழுந்த மாம்பழத்தை ஆசிரியரிடம் தந்துவிடவேண்டும் என்பது நாராயணன் வாதம். ஆனால் பங்கு போட்டுத் தின்றுவிடலாம் என்பது நண்பர்களின் வாதம். நாராயணன் பங்குப் போட்டுத் தின்பதை விரும்பாமல் அகன்றுவிட இன்னும் சில மாம்பழங்களை இந்நண்பர் குழு பறித்துத் தின்றுவிடுகிறது. இதனை அறிந்த ஆசிரியர் அடுத்தநாள் நடந்து என்ன என்று வினவ நாராயணன்தான் மாம்பழத்தைத் தந்தாக மாணிக்கம் பொய் சொல்கிறான். நாராயணனுக்கு அவப்பெயர் ஏற்பட்டாலும் ஆசிரியருக்கு நாராயணன் நல்ல  சிறுவன் என்பதில் ஐயம் ஏற்படவில்லை.

சில நாள்களில் ஆசிரியரின் பேனா, கடிகாரம் ஆகியன காணாமல் போக அவற்றில் பேனா நாராயணன் பையில் இருக்க மேலும் நாராயணனுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இதனை ஏற்படுத்தியவன், பொருள்களைத் திருடியவன் மாணிக்கம் என்பது கதையின் முடிவில் தெரியவருகிறது. நாராயணன் மாணிக்கத்தின் தவறைத் திருத்திக் கொள்ளச் செய்து அவனைத் தன் நண்பனாக ஆக்கிக் கொள்வதாக கதை நிறைவடைகிறது.

அதற்குள் மாணிக்கம் ‘‘அடே, நாராயணா, நீ இதை இவ்வளவோடு நிறுத்திவிட்டால் பிழைத்தாய். நாங்கள் உனக்கும் இந்தப் பழத்தில் ஒரு பங்கு தருவோம். அப்படியல்லாமல் இதை ஆசிரியரிடம் சொல்லுவதாய் இருந்தாய் நாங்கள் எல்லோரும் சேர்ந்து உன் மீதே பழியைப் போட்டு விடுவோம். எச்சரிக்கை” என்றான். அப்போது அருகே இருந்த சிறுவர்களில் சிலர் ‘ஆம்! அப்படியே  செய்வோம். அடே எச்சரிக்கை” என்றார்கள்.

நாராயணன் சிறிது நேரம் ஒன்றும் தோன்றாமல் விழித்தான்.

‘தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற

தீயோர் சொல் கேட்பதும் தீதே –தீயார்

குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு

இணங்கி இருப்பதுவும் தீது.

என்னும் பாட்டின் பொருள் அவனுக்கு அப்போதுதான் நன்றாக விளங்கிற்று.” (ப. 10) என்ற நிலையில், நாரயாணனின் நற்பண்புகளும், மாணிக்கத்தின் தீப்பண்புகளும்  மயிலை சிவ முத்து அவர்களால் எடுத்துரைக்கப்பெற்றுள்ளது.

பொன் நாணயம்

குப்புசாமி என்ற பெரியவர் சின்னக் குழந்தைகளிடம் அன்பாகப் பழகுவார். பல கதைகளை அவர்களுக்குச் சொல்லிக் காட்டுவார். அவ்வாறு அவர் தன் இளமை வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கதை போலக் கூறினார்.

அவர் இளம் வயதில் பள்ளி செல்ல இயலாத நிலையில் ஒரு எஜமானரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அவருக்கு எடுபிடி வேலைகள்  செய்தல், மாடு மேய்த்தல் போன்ற வேலைகள் தரப்பெற்றன. இதற்குக் கூலி எதுவும் தரப்படுவதில்லை. வயிறு நிறைய உணவு, உழைப்பு இவையே அவர் கண்டனவாகும்.

இந்நிலையில்  இவருக்கு ஒரு பொன் நாணயம் கிடைத்துவிடுகிறது. அதனைப் பார்த்ததும் அவருக்கு ஏற்பட்ட நிலையை மயிலை சிவ முத்து பின்வருமாறு எழுதுகிறார்.

“பிள்ளைகளே நான்  அந்த நாணயத்தைக் கண்டதும் – ஆ! என்ன சந்தோஷம் அடைந்தேன். நான் அதைக் கையில் வைத்து மூடிக்கொண்டு கூத்தாடினேன். உயரத்தில் போட்டுப் பிடித்தேன். கல்லின் மேல் போட்டுத் தட்டிப் பார்த்தேன். கையில் வைத்துக்கொண்டு அழகு பார்த்தேன். கண்களில் ஒற்றிக் கொண்டேன். அதற்கு நான் முத்தமும் பல கொடுத்தேன்.” (ப.11)  என்ற நிலையில் குப்புசாமிக்கு பொற்காசு பெற்ற நிலையைக் காட்டுகிறார் மயிலை சிவ முத்து.

ஆனால் இந்த நாணயம் வந்தபின் குப்புசாமி வாழ்க்கையில் துன்பமே அதிகமானது. யாராவது பார்த்துவிடுவார்களோ, எங்கே பொற்காசை வைப்பது, இது யாருடைய  காசு, காவலர்கள் வருவார்களோ என்றெல்லாம்  குப்புசாமியின் மனதில் எண்ணங்கள் ஓடின.

குப்புசாமி சரிவர வேலைகளைச் செய்ய மனம்  இல்லை. மேலும் பொற்காசு நினைவே எப்போதும் இருந்ததால் சரிவர உண்ணவில்லை. மற்றவர்களிடம் பேசவில்லை. நோயுற்றவன் போல அவன் ஆனான். இதனைக் கேட்கும் குழந்தைகள் நிச்சயம் உழைக்காமல் வந்த பணத்தால் துன்பம் என்பதை உணர்ந்துவிடுவார்கள். அந்த அளவிற்கு அழுத்தம் தந்து இக்கதைப் பாத்திரத்தைப் படைத்துள்ளார் மயிலை சிவ முத்து.

இந்நிலையில் கணக்குப் பிள்ளை தன் கணக்கில் ஒரு பொற்காசு குறைவதாகச் சொல்ல அதனைத் தான்தான் வைத்திருப்பதாகக் கொண்டு போய் தந்து விடுகிறான் குப்புசாமி. இதன் காரணமாக எஜமானர் பெரும் பொருள் தந்து அவனுக்கு விருப்பமானதை வாங்கிக்கொள்ளச் சொல்கிறார். மேலும் அவனைத் தன் நம்பிக்கைக்கு உரிய வேலைக்காரனாக, குடும்பத்தில் ஒருவனாக அன்று முதல் அவர் அவனை அமைத்துக்கொண்டார். இதன்பின் அவருக்கு வாரிசு, சொந்தம் எவரும் இல்லா நிலையில் அனைத்துச் சொத்துக்களையும் அவனுக்கு எஜமானர் எழுதி வைத்துவிடுகிறார். தற்போது பெரும் பணக்காரானாகத் தான் இருப்பதாகக் குப்புசாமி தன் கதையை முடிக்கிறார்.

 இக்கதை பொன்மேல் ஆசை, பணத்தின் மேல் ஆசை, உழைக்காமல் வந்த பணத்தின்  துயரம் போன்றன குறித்துப் பல அறக் கருத்துகளைத் தெரிவிக்கிறது. இக்கருத்துகள் குழந்தைகள் மனதில் பதிய வேண்டும்.

வரதன்

இதுவும் ஒரு பள்ளிச் சிறுவன் பற்றிய கதையாகும். வேடிக்கை பார்ப்பதே தன் தொழில் கொண்டுக் கடமைகளைச் சரிவரச் செய்யாத சிறுவன் வரதன் ஆவான்.  இவன் ஒரு முறை பள்ளிக்கு வராமல் வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்னை நகரத்தின் புறநகர்ப் பகுதிக்கு வந்துவிட, அங்கு வந்த ஒரு திருடன் இவனுக்கு இனிப்புகள் வாங்கித் தந்து நகைகளை கழற்றிக்கொள்ளப் பார்த்தான். சிறுவன் சத்தம் போட்டதும் மற்றவர்கள் வர திருடன் ஓடிவிடுகிறான்.

வரதனைத் தேடி எல்லோரும் வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் மெல்ல வரதனைக் கண்டுபிடிக்கிறார்கள். குடும்பம் மகிழ்கிறது. வரதன் வேடிக்கை பார்க்கும் குணத்தை விட்டுவிடுகிறான்.

இவ்வளவில் இக்கதை குழந்தைகளுக்கு இருக்கும் வேடிக்கை பார்க்கும் தன்மையின் கெடுநிலையை எடுத்துரைக்கிறது.

மயிலை சிவ முத்துவின் கதைகளில் ஒரு சிக்கல் மையமாகக் கொள்ளப்பெற்று அம்மையச் சிக்கல் மெல்ல துன்பமில்லாமல் அவிழ்க்கப்படுகிறது. மேலும் கதை மாந்தர்கள் பெரும்பாலும் பள்ளிக் குழந்தைகளாக உள்ளனர். மயிலை சிவ முத்து பள்ளிகளில் பணியாற்றியவர் என்பதால் குழந்தைகளின் மனநிலையைக் கருத்தில் கொண்டு இக்கதைகளைப் படைத்தளித்துள்ளார்.

இவரின் இக்கதைகள் இணையத்தில் கிடைக்கின்றன. என்றாலும் மறு பதிப்புகள் வரவேண்டும். இவரின் அறக்கருத்துகள் தற்கால இளம் குழந்தைகளின் மனதில் பதியவேண்டும் என்பது குழந்தை இலக்கிய மறுமலர்ச்சிக்கு ஆக்கம் தரும்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மயிலை சிவ முத்துவின் குழந்தைக் கதைகளின் நோக்கும் போக்கும்”

அதிகம் படித்தது