மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மருத்துவ அறிவியல் – பகுதி – 2

பேரா. ஆ. ஜோசப் சார்லி ஆதாஸ்

Dec 7, 2019

siragu iyarkai maruththuvam

உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச் செல்வான் என்று

அப்பால் நாற்கூற்றே மருந்து(950)

அதாவது மருத்துவர் நோயாளியின் உடல் நிலையை கண்டறியவேண்டும். நோயின் தன்மையை அறிந்து அதற்கேற்றார் போல் மருந்து கொடுக்கவேண்டும். மருத்துவன் நோயைப்பற்றிய நுண்ணறிவும், அனுபவமும் பெற்றிருத்தல் வேண்டும். கொடுக்கும் மருந்து நோயைக் குணமாக்காவிட்டாலும் சரி, பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது. நோயாளியின் பிணிஅறிந்து  கவனித்துகொள்ளும் உதவியாளர் இருக்கவேண்டும் என்பன போன்றனவற்றை மருத்துவச் செயல்முறைகளாக வள்ளுவர் குறிப்பிடுகின்றார். பண்டைய மருத்துவர்கள் நோய்க்கு மருந்து மட்டும் தரவில்லை. மேலாக உள, உடல்நோய்க்கு மருந்து கொடுப்பவர்களாகவே இருந்துள்ளனர் என அறியமுடிகிறது.

வாயுறை வாழ்த்து என்னும் அறிவுரை பற்றி  எடுத்தியம்பும், தொல்காப்பியர் கசப்பான மூலிகைகளான வேம்பும், கடுவும் முதலில் வெறுக்கப்பட்டாலும் முடிவில் நலம் பயப்பதால் பெரிதும் விரும்பப்படும் என்பர். இதனை வேம்பும் கடுவும் போல (தொல்காப்பியம், பொருள்-417) என்ற நூற்பாவின் மூலமாகத் தொல்காப்பியர் காலத்தில் வேம்பும் கடுகும் மருந்தாகப் பயன்பட்டிருந்தன என்பதையும் நோயும் அதற்கான மருந்தும் வகுக்கப்பட்டிருந்தன என்பதையும் அறிய முடிகிறது. இச்செய்தி தொல்காப்பியரின் மருத்துவ அறிவை விளங்கிக் கொள்ள முடிகிறது.

எழூஉப் பன்றி நாகன் குமரனார்(138) அவர்கள் எழுதிய அகநானூற்றுப் பாடலில் தலைமகள் களவொழுக்கத்தால் உடல் மெலிவதைக் கண்ட செவிலித்தாய் வேலனை அழைத்து வெறியாட்டு எடுத்தாள்.  அதாவது

 —————- வேம்பின்

வெறிகொள் பாசிலை நீலமொடு சூடி (அகநானூறு-138)

siragu maruththuva ariviyal1

ஐயுற்றவள் வேலனையும் கட்டுவிச்சியையும் வரவழைத்தாள். அவர்களும் (கட்டினானும் கழங்கினானும்) குறிபார்த்து வேம்பினது மணக்கும் பசிய இலைகளை நீலோற்பல மலர்களுடன் சூடிக்கொண்டனர். இப்பாடலில் வேம்புமர இலை மருந்துவக் குணம் கொண்டதாக அறியமுடிகிறது. அதனால் அவர்கள் தலையில் சூடிக்கொண்டனர். வேப்ப இலை தீயசக்திகளை விரட்டும் என்னும் நம்பிக்கை மக்களிடம் உள்ளது. தீய சக்தி என்று சொன்னால் நோய் என்ற பொருளில் நாம் புரிந்துகொள்ளவேண்டும். வேம்பு பற்றி மக்களுக்கு மூட நம்பிக்கை இருந்தாலும், வேம்பு ஒரு அறிவியல் பூர்வமான மருந்துபொருள் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

கலித்தொகைப் பாடலில் முகையின் மலர்ச்சிக்கும் அழிவுக்கும் காலம் காரணமானது போல், இவளுடைய மலர்ச்சிக்கும் அழிவுக்கும் நீயே கூற்றுவன் போன்ற அறிவுரைகள் தலைவனின் மனமாற்றத்திற்குக் காரணமாயின. மருத்துவன் ஊட்டிய மருந்துபோல தோழியின் அறிவுரை தலைவனிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய

மருந்துபோல் மருந்து ஆகி மனன் உவப்ப (கலித்தொகை 17:18-19)

குறிப்பாக தலைவனுக்கு ஏற்பட்ட மனக்குழப்பத்தையும், மனகுழப்பத்திற்கான காரணத்தையும் கண்டறிந்து ஆற்றுப்படுத்துவது தலைவனுக்கு மருத்துவன் ஊட்டிய மருந்துபோல ஆறுதல் அளிப்பதாக எனஅறியமுடிகிறது.

பிணியுற்றோரது தன்மையையும் பிணியின் இயல்புகளையும் நன்கு ஆராய்ந்து உரிய மருந்துகளைத் தெரிந்து கொடுத்தனர் என நற்றிணைப்பாடல் வழி அறிகின்றோம்.

அரும்பிணி உறுநாக்குவேட்டது கொடாஅது

மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல (நற்றிணை, நற்றங்கொற்றனார் -136:2-3)

என மருத்துவனின் இயல்பு வெளிப்படுத்தப்படுகிறது.

தோள் வளையை யான் விரும்பினேன். அது கிடைக்கப் பெறாமையால் நான்   அழுதேன்.  என் தந்தை தீர்த்தற்கரிய நோயையடைந்தவர். விரும்பியதைக் கொடாமல் ஆராய்ந்து நோயக்குத் தக்கவாறு மருந்து தரும் அறமுடைய மருத்துவனை ஒப்பவர் என தலைவி கூறுகிறாள்.  மருத்துவன் நோயின் தன்மைகளைக் கண்டு நோய்க்கு ஏற்ற மருந்தினை ஆராய்ந்து கொடுக்கவேண்டும். நோயாளியின் விருப்பப்படி மருந்து கொடுக்காமல், மருந்தை ஆராய்ந்து கொடுக்கும் அறவோன் மருத்துவன் ஆவான்.

மரஞ்செடி கொடி முதலியன மக்களுக்கு உணவளித்து உதவியதோடு மருந்தாகவும் பயன்பட்டன.  மருந்துப் பொருள்களை எடுக்கும்போது செடிகளுக்கு ஊறு நேராவண்ணம் எடுத்து மேலும் பலருக்கு பயன்பட அவற்றை அழிக்காது விட்டு வைப்பர். (மரம் சாமருந்தும் கொள்ளார் -நற்றிணை -226-1) நல்ல நெற்றியையுடையவளே! மாந்தர் மருந்து தந்துதவும் மரத்தினின்று மருந்து எடுக்கும்போது அது பட்டுப்போகும் படி முழுவதும் கொள்ளார் எனக் குறிப்பிடுவதன் மூலம் மருந்தின் முக்கியதுவத்தையும், மருத்துக்கான தாவரங்களின் முக்கியத்துவத்தையும் உணரமுடிகிறது.

மருத்துவம் என்பது மக்கள் வாழ்வோடும், வளத்தோடும் இணைத்துக் காணப்பட்டதால் அத்தொழில் செய்யும் மருத்துவர்களைப் பண்டைக்காலந்தொட்டு இன்றுவரைக்கும் சமுதாயம் மதிப்புடனே ஏற்றுக்கொண்டது எனலாம். இச்சான்றோர்களை அறவோன் என்றும், வைத்தியன் என்றும், மருத்துவன் என்றும் குறிப்பிடுகின்றனர். இக்கருத்துகள் நற்றிணை, கலித்தொகைப் பாடல்களில் காணப்படுகின்றன. மக்கள் பெற்ற பிணியைப்போக்க உரிய முறையில் ஆராய்ந்து மருந்தளித்தமையால் அறவோன் எனப்பெயர் பெற்றனர். “அருந்துயர் அவலம் தீர்க்கும் மருந்து” (நற்றிணை – பா.140). என்னும் நற்றிணைப்பாடலின் வாயிலாக உயிர் காப்பது மருந்து அறிய முடிகின்றது.

நோய்கள் குறித்த செய்திகள்

தமிழர்கள் நோய் என்பதை இரண்டு நிலைகளில் பகுத்து அதற்கேற்றார்போல் மருந்து உண்டு

நல வாழ்வைப் பேணியுள்ளனர். ஒன்று மன நோய், இரண்டு புண் ஆகும். நோய்  உடல் மற்றும்

உள்ளம் இரண்டையும் சார்ந்து பாதிப்பிற்கு உள்ளாக்குவதே என கண்டறிந்துள்ளனர். தொல்காப்பியர் “பையுளும் சிறுமையும் நோயின் பொருள்”  என்று குறிப்பிடும் தொல்காப்பியர், நோய் என்பது முதலில் உள்ளத்தையும் உடலையும் பாதிக்கும் என்றும், இத்தகைய பாதிப்பைத்தான் பையுள் என்றும் சிறுமை என்றும் சுட்டி இதனை புத்திதடுமாற்றம் என்று குறிப்பிடுகின்றார். மேலும் உடல்பிணி பற்றி நற்றிணை 136வது பாடலும், கலித்தொகை நெய்தற்கலியின் 22வது பாடலும் மனநோய் பற்றிக் குறிப்பிடுகிறது.

சிறுபஞ்சமூலம் என்பது சிறுமை + பஞ்சம் + மூலம். பஞ்சம் என்றால் ஐந்து மூலம்  என்றால் ஐந்து வேர்களால் ஆன ஒரு மருந்திற்குப் பஞ்சமூலம் என்பது பெயர். சிறுமல்லிவேர், பெருமல்லிவேர், சிறுவழுதுணைவேர், கண்டங்கத்திரிவேர், நெருஞ்சில்வேர் இவற்றால் ஆன மருந்து உடல் நோயைப்போக்கும். அதுபோல இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடல்களிலும் கூறப்படும் ஐந்து ஐந்து கருத்துகள் படிப்பவர் உள்ளத்தில் உள்ள அறியாமையைப் போக்கும் என்பது உவமையாகக் கூறப்பட்டுள்ளது. சிறுபஞ்சமூலத்தில் தலைவலி, பைத்தியம், காசநோய், மூலம் போன்ற பிணிகளை பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. சிறுபாணாற்றுப்படை  “சிக்கர் சிதடர் சிதலை போல வாயுடையார்”(சிறுபாணாற்றுப்படை, பாடல் -74) என்னும் பாடல் வரி வாய்ப்புண் பற்றிக் குறிப்பிடுகிறது.

ஏலாதி  ஏலம் + ஆதி ஏலம் முதலான பொருள்களால் ஆகிய மருந்து என்பது இந்தொடரின் பொருள். ஏலம், இலவங்கப்பட்டை, நாகசேகரம், சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருள்களால் ஆகிய மருந்து உடல் நோயை போக்கும் அதுபோல இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஆறு கருத்துகள் கற்பவர் உள்ளத்தில் அறியாமையைப் போக்கும் என்பதால் இந்நூல் இப்பெயர் பெற்றது. ஏலாதி பாடல் ஒன்றில் கருஞ்சிரங்கு, சிறுநீரகக்கல் வலி, கழலைக்கட்டி வாதம்  போன்ற பிணிகளைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடன்படான் கொல்லானுடன்றார் நோய் தீர்ந்து

மடம்படான் மாண்டார்நூன் மாண்ட – இடம்பட

நோக்கும்வாய் நோக்கி நுழைவானேன் மற்றவனை

யாக்குமவர் யாக்கு மணைந்து(ஏலாதி-8)

பிறர் கொலை செய்தற்கு உடன்படாமல் தானும் ஓருயிரைக் கொல்லாமல், பிணிபட்டு வருந்துகின்றவர்களின் நோயை, மருந்து முதலியன உதவி நீக்கி அறியாமையில் மயங்கானாய் செயல்படுதல்.

பிணிபிறப்பு    மூப்பொடு   சாக்காடு துன்பம்

தணிவி            னிரப்பிவை  தாழா      -அணியின்

அரங்கின்மே   லாடுநர்போ  லாகாம  னன்றாம்

நிரம்புமேல்      வீட்டு      நெறி (ஏலாதி-24)

கருஞ்சிரங்கு வெண்டொழுநோய் கல்வழி சயம் (ஏலாதி-56)

சங்க இலக்கியங்கள் பலவகையான உடலில் பட்ட புண்களை பற்றி குறிப்பிடுகின்றது.  நற்றிணைப்பாடல் “இரும்பான் ஒக்கல் தலைவன் பெரும்புண்(300) என்று இரத்தம் வடிந்துகொண்டிருக்கும் புண் பற்றியும்,  புறநானூறு மிடற்றுப்புண் பற்றியும், கலித்தொகை நெய்தற்கலி பாடல்(20) தீப்புண் பற்றியும், பதிவுசெய்துள்ளது. மேலும் கலித்தொகை குறிஞ்சிக்கலி 29வது பாடலில்  தொழுநோயால்  கைவிரல்கள், கால்விரல்கள் கருகி குறைந்துள்ளமையைச் சுட்டுகிறது.  இதன் மூலம் சங்ககாலச் மருத்துவர்கள் உடலில் ஏற்படும் புண்களைப் பற்றியும், அதற்கான மருத்துவ முறைகளைப் பற்றியும் ஆழ்ந்த அறிவு கொண்டிருந்தனர் என்பதையும் அறியமுடிகிறது.

அறுவை மருத்துவம்

siragu maruththuva ariviyal2

தமிழர்கள் போர்க்கருவிகளாக வாள், வேல், ஈட்டி போன்ற இரும்பாலான ஆயுதங்களைக் கொண்டிருந்த பழக்கத்தால் போரில் ஏற்பட்ட ரணங்களையும்(புண்) எலும்பு முறிவுகளையும் அறுவைச் சிகிச்சையின் மூலம் மருத்துவம் செய்துள்ளனர் என அறியமுடிகிறது.

இரும்புச் சுவை கொண்ட விழுப்புண் நோய்த் தீர்த்து

மருந்துகொல் மரத்தின் வாள்மடு மயங்கி(புறநானூறு-180)

உடம்பில் பட்ட புண்களை ஊசி கொண்டு தைத்துக் குணப்படுத்தும் முறையும் இருந்தது. ஒரு வீரனது மார்பின் புண்ணை ஆற்றுவதற்குத் தைத்த தழும்பைப் பதிற்றுப்பத்துப் பாடலில் குறிப்பிடுகிறது.

……………………..முன்நாள்

கூறி வந்த மாமுது வேந்தர்க்கு

……………………………………..

……………….. உழக்கிக் குருதி ஓட்டி

கதுவாய் போகிய துதிவாய் எஃகமொடு

பஞ்சியும் களையாப் புண்ணர்

அஞ்சுதகவு உடையர் இவள் தன்னை மாரே (புறநானூறு- 353,10-17)

இதற்கு முன்நாட்களில் மகட்கொடை வேண்டி வந்த பெரிய முதிய வேந்தர்க்கு…….. மிதித்து, குருதியை ஆறாக ஓடச்செய்து, வாய்மடித்து வடுப்பட்ட கூரிய வாயை உடைய வேலுடனே, நெய்த்துணி நீக்கப் பெறாத புண்ணை உடையராய் அஞ்சத்தக்க தகுதிப் பாட்டினை உடையராய் நிற்போர், இவளுடைய தமையன்மார். மேற்குறித்த கூற்றில் அறுவை மருத்துவம் பழைய காலத்தில் இருந்திருக்கின்றது என்றும். அடிக்கடிப்போர் நடந்ததால் புண்பட்டோருக்கு அறுவை மருத்துவம் நடந்திருக்கிறது என்றும், புண்பட்ட பகுதியில் மருந்திட்டுப் பஞ்சு போட்டு கட்டும் வழக்கம் இருந்திருக்கின்றது எனறும் அறியலாம்.

போர் நடைபெறும் காலங்களில் மார்பில் ஏற்பட்ட விழுப்புண்ணை ஊசிகொண்டு தைத்துள்ளனர் என்ற குறிப்பும் காணப்படுகிறது. இரத்தத்தின் உள்ளாக ஊசியை நுழைத்து வாங்குதலை மீன்கொத்தி நீரில் மூழ்கி எழுதலுக்கு ஒப்புக் கூறுகிறார்.

இரும்பனம் புடையில் ஈகை வான்கழல்

மீன் தேர் கொட்பின் பனிக்காயம் மூழ்கிச்

சிரல் பெயர்ந்தனன் நெடுவாள் ஊhசி

நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்  (பதிற்று- 42:1-4)

அறுவை வைத்தியம் இருந்ததைக் குறிப்பிடுகிறது. நின் படை வீரர் இரையின் பொருட்டு மீனை      ஆராயும் சுழற்சியால் குளிர்ச்சியை   உடைய குளத்தில் மூழ்கி மீன் கொத்திப் பறவை மேலே எழுந்தாற் போன்று நெடிய வெள்ளிய ஊசியானது நீண்ட கூர்மை தைத்ததனால் பரவிய தழும்பு மார்பினையும் உடைய செங்குட்டுவனே! என்று பரணர் குறிப்பிடுகின்றார். மேற்கண்ட கூற்றில் பண்டைய மருத்துவர்கள் வெட்டுப் புண்களை ஊசிகொண்டு தைத்துள்ளனர் என அறியமுடிகிறது.

முடிவுரை

siragu maruththuva ariviyal3

மனித சமூகத்தில் ஏற்படும் நோய்களைக் கண்டறிந்து, நோய்களைத் தீர்ப்பதற்கான மருத்துவ முறைகளைப் பார்க்கும்பொழுது நோயும் மருத்துவமும் மனித இனப் பண்பாட்டு வரலாற்றில் பிரிக்க முடியாது.

பண்டைய மருத்துவர்கள் நோய்க்கு மருந்து மட்டும் தரவில்லை. மேலாக உள, உடல்நோய்க்கு மருந்து கொடுப்பவர்களாகவே இருந்துள்ளனர் என அறியமுடிகிறது.

தொல்காப்பியர் கசப்பான மூலிகைகளான வேம்பும், கடுவும் முதலில் வெறுக்கப்பட்டாலும் முடிவில் நலம் பயப்பதால் பெரிதும் விரும்பப்படும் என்பர்.

மருத்துவம் என்பது மக்கள் வாழ்வோடும், வளத்தோடும் இணைத்துக் காணப்பட்டதால் அத்தொழில் செய்யும் மருத்துவர்களைப் பண்டைக்காலந்தொட்டு இன்றுவரைக்கும் சமுதாயம் மதிப்புடனே ஏற்றுக்கொண்டது எனலாம். இச்சான்றோர்களை அறவோன் என்றும், வைத்தியன் என்றும், மருத்துவன் என்றும் குறிப்பிடுகின்றனர்.

தமிழர்கள் நோய் என்பதை இரண்டு நிலைகளில் பகுத்து அதற்கேற்றார்போல் மருந்து உண்டு. நல வாழ்வைப் பேணியுள்ளனர். ஒன்று: மன நோய் இரண்டு: புண் ஆகும். நோய்  உடல் மற்றும்

உள்ளம் இரண்டையும் சார்ந்து பாதிப்பிற்கு உள்ளாக்குவதே நோய் என கண்டறிந்துள்ளனர். தொல்காப்பியர், நோய் என்பது முதலில் உள்ளத்தையும் உடலையும் பாதிப்பதைப் புத்திதடுமாற்றம் என்று குறிப்பிடுகின்றார்.

சங்க இலக்கியங்கள் பலவகையான உடலில் பட்ட புண்களை பற்றி குறிப்பிடுகின்றது.  சங்ககால மருத்துவர்கள் உடல் ஏற்படும் புண்களைப் பற்றியும், அதற்கான மருத்துவ முறைகளையும் பற்றி ஆழ்ந்த அறிவு கொண்டிருந்தனர் என்பதையும் அறியமுடிகிறது.

தமிழர்கள் போர்க்கருவிகளாக வாள், வேல், ஈட்டி போன்ற இரும்பாலான ஆயுதங்களைக் கொண்டிருந்த பழக்கத்தால் போரில் ஏற்பட்ட ரணங்களையும்(புண்) எலும்பு முறிவுகளையும் அறுவைச் சிகிச்சையின் மூலம் மருத்துவம் செய்துள்ளனர் என அறியமுடிகிறது.


பேரா. ஆ. ஜோசப் சார்லி ஆதாஸ்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மருத்துவ அறிவியல் – பகுதி – 2”

அதிகம் படித்தது