மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மருத்துவ அறிவியல்

பேரா. ஆ. ஜோசப் சார்லி ஆதாஸ்

Nov 30, 2019

ஒவ்வொரு மனித சமுதாயமும் நலவாழ்வைக் கொண்டியங்குவதில் ஒரு மேம்பட்ட அறிவியல் பூர்வமான செயல்முறைகளைக் கொண்டிருக்கின்றன என அறிகிறோம். மனித சமூகத்தில் ஏற்படும் நோய்களைக் கண்டறிந்து, நோய்களைத் தீர்ப்பதற்கான மருத்துவ முறைகளைப் பார்க்கும்பொழுது நோயும் மருத்துவமும் மனித இனப் பண்பாட்டு வரலாற்றில் பிரிக்க முடியாது.

ஐரோப்பியர்கள் வந்த பிறகு அலோபதி மருத்துவமுறைகள் தமிழர்களின் வாழ்வில் இரண்டறக்கலந்துள்ளது என்றாலும், தமிழர்கள் காலங்காலமாகத் தனித்துவமான மருத்துவ முறைகளைக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை கலை, இலக்கியம், வரலாறு, கல்வெட்டுகள், செப்பேடுகள், வாய்மொழி வழக்காறுகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், போன்றவற்றில் காணமுடிகிறது. இத்தகைய மருத்துவத்தை தமிழர் மருத்துவம் அல்லது தமிழ்மருத்துவம் என்று குறிப்பிடுகின்றனர்.

கிராமப்புற மக்கள் குறித்த வாழ்வியல் வழக்காறுகளை ஆய்வுசெய்யும் அறிஞர்கள், தமிழ் மருத்துவத்தை நாட்டுப்புற மக்களே பெரும்பான்மையாக கையாளுவதால் இதனை நாட்டுப்புற மருத்துவம் என்பர். தமிழகக் கிராமப்புறங்களில் நாட்டு வைத்தியம், கைமருத்துவம், பாட்டி வைத்தியம், மூலிகை மருத்துவம் என்றும் கூறுகின்றனர்.

இன்று வரை அலோபதி மருத்துவர்கள் நோய்க்கு மட்டுமே மருந்து கொடுத்துவருகின்றனர். உள்ளம் மற்றும் உடலுக்கு அவர்கள் மருந்து கொடுப்பதில்லை. ஆனால் தமிழ் மருத்துவம் நோயின் தன்மையையும், உள, உடலின் தன்மையையும், இந்நோய் தோன்றுவதற்கான அகம், குடும்பம், சமூகம் ஆகிய காரணிகளையும் அறிவினால் ஆராய்ந்து அறிந்து, நோயின் மூலத்தை அழித்து பூரண நலவாழ்வை அளிப்பதே தமிழ்மருத்துவமாகும்.

siragu medical2

தமிழ் மருத்துவம் பண்டிதர்களின் ஓலைச்சுவடிகளிலும், மக்களின் வாய்மொழி வழக்காறுகளிலும் இருந்துவந்தன. தமிழர்களின் பல்துறை சார்ந்த அறிவுப்புலமைகள் அனைத்தும் ஓலைச்சுவடிகளிலே இருந்துள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துருக்கள் வடிவம் பெற்ற பிறகு, ஓலைச்சுவடிகளைத் தேடும் முயற்சியும், கண்டுபிடித்து பதிப்பிக்கும் முயற்சியும் நடைபெற்றது. கர்னல் காலின் மெக்கன்சி அவர்கள் 192 ஓலைச்சுவடிகளை கண்டறிந்தார். அவற்றில் 10 சுவடிகள் மருத்துவ சுவடிகள் ஆகும். இத்தகைய மருத்துவச் சுவடிகளைப் படித்தறிந்த ரெவரெண்ட் டபிள்யூடெய்லர் அவர்கள் சுவடிகளில் இருந்த அறிவியல் செய்திகள் அனைத்தும் பாடல்களாகவே இருந்தன என்று குறிப்பிடுகிறார். தமிழர்களின் மருத்துவ அறிவியல் சிந்தனையைப் படித்தறிந்து, தமிழகத்தில் நிலவி வந்த அதன் மருத்துவ அறிவியல் செயல்முறைகள் குறித்து  அருள்திரு சீகன்பால் அவர்கள் பின்வருமாறு பதிவுசெய்துள்ளார். “மருத்துவப் பயிற்சியில்  சுதேசிகள் நல்லமுறையில் பயிற்சியுடையவர்களாயிருக்கிறார்கள்… அவர்களின் மற்ற நூல்களைவிட மருத்துவ நூல்களே சிறப்புத்தன்மையுடையனவாக இருந்தன… மருத்துவ நூல்களில் இடம்பெற்ற முக்கியக் கருத்துகள் பயன்பாட்டு நிலையில் அமைந்திருந்தன.. தாயின் வயிற்றில் உள்ளபோதே மனிதர்களுக்கு மூன்று வகையான நோய்கள் வரக்கூடும் என்றும், மற்ற அனைத்துவகை நோய்களும் இதன் வகையிலே அடங்கும் என்றும் நம்பினர்.

நோய்களைக் கண்டறிய மூன்று விதமான நாடிமுறைகளை அறிந்திருந்தனர். இதைப்பற்றிய தகவல்களை பகுதசாஸ்திரம் என்ற நூலில் எழுதியிருந்தனர். இந்த வகையான நாடித் துடிப்புகள் மணிக்கட்டு, கழுத்து, விரல்மூட்டு ஆகிய மூன்று இடங்களிலிருந்து கண்டறியப்பட்டன. பெண்களுக்கு இடது மணிக்கட்டிலிருந்தும், ஆண்களுக்கு வலது மணிகட்டிலிருந்தும் நாடித்துடிப்புகள் கண்டறியப்பட்டன. வாதநாடி தவளை மாதிரியும் பித்தநாடி கோழிமாதிரியும் மயில் மாதிரியும் துடிக்கின்றன… வாதநாடியும் பித்தநாடியும் ஒரே மாதிரி துடித்தால் நோயாளிக்கு தொண்டைப்புண், இருமல், ஜலதோஷம் மற்றும் உடல்சூடு இருப்பதாகக் கருதப்பட்டது. ஐரோப்பியர்களிடம் வழக்கில் இருந்த மாதிரியான சிறுநீர் சோதனையும் இவர்களிடம் வழக்கில் இருந்தது… பாத்திரத்தில்  உள்ள சிறுநீரில் வைக்கோலின் உதவியால் எண்ணெயைத் தெளிக்கும்போது எண்ணெய் மிதந்தால் நோயாளியை காப்பாற்றமுடியும் எனவும் எண்ணெய் மிதக்காவிட்டால் காப்பாற்ற முடியாது எனவும் கருதப்பட்டது”

சீகன்பால்குவின் குறிப்புகள் மூலம் ஓலைச்சுவடிகளில் இருந்து தமிழர்களிடம் இருந்த மரபு சார்ந்த மருத்துவத் தொழில் நுட்பக் குறிப்புகளை சீகன்பால்குவின் கூற்று எடுத்துரைக்கின்றது. தமிழகத்தில் கிடைக்கும் மூலிகைகளைப் பற்றிய விவரங்களையும், அவைகளின் மருத்துவப் பயன்பாட்டையும் முழுமையாக அறிந்து கொண்ட அவர், 1711ஆம் ஆண்டு மலபார் மருந்துகள் பற்றிய குறிப்புகளை ஜெர்மானிய மொழியில் எழுதியதோடு மட்டுமல்லாமல் அவைகளின் மாதிரிகளையும் ஹாலே நகரத்துக்கு அனுப்பி வைத்தார். தமிழர்களின் மருத்துவமுறைகளைப் பற்றி அதிக ஆர்வம் காட்டிய ஜெர்மானியர்கள் 1712ஆம் ஆண்டு கோப்பன் ஹெகனில் தமிழ்மருத்துவத்தைக் கற்பிக்க ஏற்பாடுசெய்தார்(இரா.பாவேந்தன்,தமிழில் அறிவியல் இதழ்கள், பக்-30-31).

siragu medical1

மேலைநாட்டார் வருகைக்குப்பிறகு அவர்கள் ஆங்கிலக் கல்வியையும், ஆங்கில மருத்துவத்தையும் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தினர். அவர்கள் அறிமுகப்படுத்திய காலத்தில் காலரா நோய் தமிழகத்தில் பரவியிருந்தது. ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தனர். ஆகவே மக்களிடத்தில் காலரா நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, 1818ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காலாரா நோயின் தன்மையையும், இந்நோயிலிருந்து மக்கள் தங்களை எவ்வாறு காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பது குறித்த செய்திகளையும் துண்டறிக்கைகளில் வெளியிட்டனர். இந்நோய்க்கான மருந்தை ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து மக்களுக்கு கொடுத்து மக்களைக் காப்பாற்றினர். இதனால் மக்களுக்கு பாரம்பரிய தமிழ் மருத்துவத்திலிருந்து நம்பிக்கை குறைந்து ஆங்கில மருத்துவத்தின் மீது, இயல்பான தற்பாதுகாப்பு நம்பிக்கை ஏற்பட்டது.

இச்சூழலில் ஐரோப்பியர்களும் சரி, தமிழக ஆட்சியாளர்களும் சரி தமிழ் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆங்கில மருத்துவத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தனர். மேலும் ஆங்கில மருத்துவக்கல்வியைக் கற்பித்தனர். இலங்கையில் மேலைநாட்டு மருத்துவர் ஃபிஷ்றின் அவர்கள் ஆங்கிலத்தில் இருந்த உடலியல் குறித்த மருத்துவ முறைகளை தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தார். மேலும் கண், காது, கை, கால், தோல், வாய், வாந்தி, பேதி மற்றும் காலரா நோய்களுக்கான உதவிக்குறிப்புகள் கொண்ட துண்டறிக்கைகள், சிறுநூல்கள் போன்றவற்றை தமிழில் வெளியிட்டார். அதன் பிறகு ஆங்கிலமருத்துவமே தமிழ்நாட்டில் நிலைநிறுத்தப்பட்டு அதிகாரம் செலுத்தி வருகின்றது. ஆங்கில மருத்துவத்தின் இந்த அதிகாரம் நாளடைவில் தமிழ்மருத்துவத்தை நம்பிக்கை சார்ந்த ஒன்றாகவும், மூடநம்பிக்கை சார்ந்த ஒன்றாகவும் மக்களிடத்தில் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துகள்

தமிழர் உலகத்தின் ஆதிமக்கள் என்றும் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருந்திய நாகரீகமும் செவ்விய ஆட்சிமுறையும் கொண்ட மக்களாக இருந்தனர் என வரலற்று ஆசிரியர்கள் பி.டி.சீனிவாச ஐயங்கார் அவர்களும், எஸ்.லியாங் அவர்களும் குறிப்பிடுகின்றனர்.

படைப்பின் வரலாறு என்ற நூலில் ‘லெமூரியா மனித இனத்தின் தொட்டில்’ என ஹெகல் அவர்களும், உலக வரலாறு என்று நூலில் ‘பெருவெள்ளத்துக்குப்பின் இந்தியாவில் மனித இனம் முதன் முதலாகத் தோன்றியது’ என  ராலே அவர்களும், ‘தென்னாசியாவின் மிகப்பழமையான பகுதி தென்னிந்தியாதான்’ என டோபினார்டு அவர்களும், ‘மனிதன் தென்னிந்தியாவில்தான் தனது தோற்றத்தையும் வளர்ச்சியையும் பெற்றான்’ என சர்ஜான் எட்வன்ஸ் அவர்களும், மறைந்த லெமூரியா என்னும் நூலிலும் ‘மனிதனின் மிக மிகப் பழமையான நாகரீகம் தென்னிந்தியாவில்தான் இருந்தது. அதன் விரிவான நிலப்பகுதிதான் கடலினுள் மூழ்கிய லெமூரியா’ என ஸ்காட் எலியாட் அவர்களும், பெரிய இந்தியாவின் மக்கள் என்னும் நூலில் ‘இந்தியாவின் தீபகற்பப் பகுதியில் தென்னகத்தில் திகழ்ந்த நாகரீகம் மிகப் பழைமையானதும், பெருமைபெற்றதும்’ என சர்.டி.டபிள்யூ ஹோல்டர்னெஸ் அவர்களும் தமிழர்களின் வாழ்விடத்தையும் அதன் தொன்மை நாகரீகத்தையும்  சுட்டிக்காட்டியுள்ளனர்(கோ.செல்வமூர்த்தி, அறியப்படாத தமிழ்மருத்துவ வரலாறு,பக்.55-56). மேலும் சிந்துசமவெளி அகழாய்வுகள் சிந்துசமவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் என்று மெய்பித்துள்ளது. அன்று முதல் தமிழர்களின்  கணிதம், தாவரவியல், விலங்கியல்;, வேதியியல் மருந்தியல் தொடர்பான தொழில் நுட்பத்தில் தேர்ந்த அறிவும், பயிற்சியும் கொண்டிருந்ததை அறியமுடிகிறது. குறிப்பாக நோயைக் கண்டறிவதிலும், நோயக்கான மருந்தைக் கண்டறிவதிலும் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஹிப்போகிரட்ஸ் ஆவார். இவர் கிரேக்கத்தில் புகழ்பெற்ற மருத்துவர் என்றும், நவீன மருத்துவத்தின் தந்தை என்றும்  போற்றப்படுபவர். இவர் இந்திய மருத்துவ முறைகளையும்,  மருந்து வகைகளையும்  பயன்படுத்திவந்தார் என்றும், மிளகை இந்திய மருத்துவம் என்றே குறிப்பிட்டார் என்றும் பேராசிரியர் கே.கே.பிள்ளை அவர்கள் குறிப்பிடுகின்றார். பண்டைய தமிழர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பொருள்களில்  இலவங்கம், மிளகு  முக்கியப்பொருள்களில் ஒன்றாக இருந்துள்ளது என மருத்துவர் கோமான் பதிவுசெய்கிறார். தமிழர்களின் சித்த மருத்துவம்  நலவாழ்வுக்கு அதிகத் திறன்மிக்க மருத்துவ முறையாகும் என சர்.தாமஸ் புரோவ்னி என்ற வரலாற்றாசிரியர் எடுத்துரைக்கின்றார். இந்திய மருத்துவர்கள் உற்றறிதலாலும், நீண்ட அனுபவத்தினாலும், வெளிநாட்டு மருத்துவர்களைவிட சிறப்பாக மருத்துவம் செய்து வந்துள்ளனர் என்றும், அவர்கள் தட்ப வெப்பத்திற்கு ஏற்ப மருத்துவ முறைகளை செய்துவந்துள்ளனர் என பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த சார்லஸ் டெல்லான் குறிப்பிடுகின்றார்(கோ.செல்வமூர்த்தி,அறியப்படாத தமிழ்மருத்துவ வரலாறு,பக்.56).

தமிழ் இலக்கியங்களில் மருத்துவ சிந்தனைகள்

siragu uyiriyal5

தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமுறைகள் பற்றிய ஓலைச் சுவடிகள், கல்வெட்டுகள் இல்லை. அதேசமயத்தில் தமிழர்களின் வாய்மொழி வழக்காறுகளில் தமிழர்களின் மருத்துவ குறிப்புகள் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு வந்துள்ளதை அறியமுடிகிறது. திருமூலரின் மருத்துவ குறிப்புகள் அவர் எழுதிய திருமந்திரத்தில் கிடைக்கின்றது. சித்தர்களின் மருத்துவ குறிப்புகள் கி.பி. 11ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளில் கிடைக்கின்றன. கி.பி.11ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழர்களின் மருத்துவமுறைகள் எப்படிப்பட்டதாக இருந்தது என்று அறியவேண்டுமானால் நமக்கு சங்கஇலக்கியங்கள், அறஇலக்கியங்கள், காப்பியங்கள், பக்திஇலக்கியங்கள் போன்றவைகளே சான்றுகளாக உள்ளன.

தமிழர்களின் நலவாழ்வுக்கு அடிப்படையாக அமைவது உணவும், உணவு பழக்கவழக்கமும், தனிமனித ஒழுக்கமும் ஆகும். தமிழர்களின் பாரம்பரிய உணவு பழக்கவழக்கங்கள் குறித்து மருத்துவர் கோ.செல்வமூர்த்தி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “நம் உடலானது பஞ்சபூதங்களின் கூட்டுறவால் 7உடற் தாதுகளான சாரம். செந்;நீர், ஊண், கொழுப்பு, என்பு, மூளை, சுக்கிலம்-நாதம், இவைகளால் ஆக்கப்பெற்றதாகும். ஏழு உடல் தாதுகளில் ஏற்படும் நோய்கள் மூன்று உயிர்த்தாதுகளில் மாறுபாட்டை ஏற்படுத்தி குற்றங்களாக மாறி வாதம், பித்தம், கபம் ஆகிய நாடிகளின் வாயிலாகப் பிரதிபலிக்கும். இவ்வாறாக உடலில் உள்ள ஏழு உடற்தாதுக்களையும் மூன்று உயிர்த் தாதுக்களையும் போசித்து வளர்ப்பது உணவேயாகும்”(கோ.செல்வமூர்த்தி, அறியப்படாத தமிழ்மருத்துவ வரலாறு,பக்.99) எனக்குறிப்பிடுகிறார்.

உணவு அதிகமாக உண்ணுவதாலும் குறைவாக உண்ணுவதாலும் ஏற்படும் விளைவுகளை திருக்குறள் பின்வருமாறு எடுத்துரைக்கின்றது.

மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்

வளிமுதலா வெண்ணிய மூன்று (941)

வாதம், பித்தம், கபம்  ஆகியவை உடலில் எவை மிகுந்திருந்தாலும், குறைந்தாலும் நோய் ஏற்படும். சம உணவான மாவுப்பொருள், புரதம், கொழுப்பு ஆகிய தாது உப்புகளும், நீரும் தன்மையிலும் அளவிலும் மிகாமலும் குறையாமலும் அமைந்திருக்கவேண்டும். இன்றைய அலோபதி மருத்துவர்கள் கூறுகின்ற மருத்துவ ஆலோசனைகளை அன்றே திருவள்ளுவர் கூறியிருப்பது, பண்டைய தமிழர்களின் மருத்துவத் தொழில்நுட்ப அறிவை வெளிப்படுத்துவதாக உள்ளது. மேலும் வள்ளுவர் அளவோடு உண்ணவேண்டும் என்றும், செரித்தபின் உண்ணவேண்டும் என்றும், பசிக்கும்போது உண்ணவேண்டும் என்றும், நல்ல உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும் என்றும், குறைவாக உண்ணவேண்டும் என்றும், பசியின் அளவு அறிந்து உண்ணவேண்டும் என்றும் சுட்டிக்காட்டுவதோடு வள்ளுவர், நோய் ஏற்படுவதற்கும், நோய் ஏற்படாமல் இருப்பதற்கும் உணவும், உணவு பழக்கவழக்கங்களுமே காரணம் என்று குறிப்பிடுகின்றார்.

மேலும் பிணியுற்றவரின் உடலை என்ன நோய் தாக்கியுள்ளது? நோய் ஏற்படுவதற்கான காரணம் என்ன? அந்நோய்க்கான மருந்து எது?  என்று ஆராய்ந்து அறிந்து பிழையின்றி செய்யவேண்டும் என்றும், நோயின் தன்மையையும், நோயின் நிலையையும், மருத்துவம் செய்வதற்கான ஏற்ற காலத்தையும் அறிந்து நோயாளிக்கு மருத்துவம் மேற்கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

(தொடரும்)


பேரா. ஆ. ஜோசப் சார்லி ஆதாஸ்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மருத்துவ அறிவியல்”

அதிகம் படித்தது