மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மறக்க முடியுமா? அறிஞர் அண்ணா !!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jan 28, 2017

Siragu annaa1

அறிஞர் அண்ணா – பிற மொழி ஆதிக்கத்தால் தமிழ் நாடு இருள் சூழ்ந்த நிலையில் இருந்தபோது தன் தமிழ் மொழியின் ஆற்றலால் தமிழ் மக்களை தன் பக்கம் இழுத்தவர். சோர்ந்து கிடந்த தமிழ் உள்ளத்தில் மொழி கொண்டு உணர்வை ஊட்டிய பேச்சாற்றல் மிக்கவர். அவரின் பேச்சாற்றல் குறித்த சில தகவல்களை பார்க்கலாம்.

ஒருமுறை விழுப்புரத்தில் அண்ணா பேச சென்றிருந்தார். தேர்தல் நேரம் என்பதால் பல கூட்டங்களில் பேசிவிட்டு இரவு பத்து மணிக்குத்தான் அங்கு அவரால் வரமுடிந்தது. மக்கள் கண்களில் தூக்கம் குடிகொண்டிருந்தது.

மேடையேறிய அண்ணா இப்படி பேசினார்,

” மாதமோ சித்திரை!
மணியோ பத்தரை!
மக்களுக்கோ நித்திரை!
வழங்குவீர் உதய சூரியனில்
உங்கள் முத்திரை!”

என்றவுடன் மக்களின் தூக்கம் கலைந்து, எழுந்த கையொலி அடங்க வெகு நேரம் ஆயிற்று.

இதேபோல் தென்மாவட்டத்தில் ஒரு கூட்டத்திற்கு அண்ணா பேச வந்தார். அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரசு, அண்ணா பேசும் மேடைக்கு எதிரே ஒரு பெண் கையில் விளக்குமாறு வைத்திருப்பதாக உள்ள படத்தை மாட்டியிருந்தனர். அதைக்கண்ட தி மு க தொண்டர்கள் ஆத்திரப்பட்டனர். அவர்களை அமைதிப்படுத்தி அண்ணா இப்படி சொன்னார். அவர்கள் ஒன்றும் தவறாக வைக்கவில்லை! அவர்கள் செய்யும் ஊழல்களை என்னை நன்கு விளக்குமாறு பணித்திருக்கிறார்கள்! என்றார். காங்கிரசு தொண்டர்கள் வெட்கி தலை குனிந்தனர்.

Siragu anna2

தமிழ் எழுத்தாளர் இரண்டாவது மாநாடு, எழுத்தாளர் நலனையும், தமிழ்ச் சீர்த்திருத்தத்தையும் நோக்கமாகக் கொண்டு எழுத்தாளர் பெ.தூரன் தலைமையில் ஒற்றைவாடைத் திரையங்கில் 1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14, 15 தேதிகளில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் அறிஞர் அண்ணா பேசிய உரையின் சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளது.

“வ.ரா.சொன்னார், காதல் இல்லாவிட்டால் கதையே இல்லை என்று. அவரது கருத்து காதல் அதிகம் வரக் கூடாது என்பது. அதுவல்ல உண்மை; பழைய புராணிகர்களிலிருந்து இன்றைய மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் வரை காதலைப் பற்றி எழுதுகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் இவர்களுக்கும் ஒரு வித்தியாசம்.

அன்றிருந்தவர் ஆரத்தழுவாயோ என்று ஆரம்பித்தார். தழுவல் காதலிலே பிறக்கிறது. ஆரத் தழுவாயோ என்று ஆரம்பித்தால் உலகை மாயையாக்கும் வைதீகக் கூட்டங்கள் அடிக்க வந்துவிடுமே என்று பயந்தார். அரங்கனே என்று முடித்தார். (கரவொலி)

இன்று பகுத்தறிவு ஆக்கம் பெற்றுவிட்டது. எழுத்தாளர்கள் பகிரங்கமாகக் காதலைப்பற்றி எழுதுகிறார்கள். ஆனால் அதில் பழமை வாடை வீசுகிறது.
கமலா விதவை- பிராமணப் பெண், நாராயணன் அழகன்- முதலியார் பையன் – இருவரும் காதலித்தார்கள் கல்யாணம் செய்துகொண்டார்கள். சாதிக் கட்டுப்பாடுகள் உறுமின; தகர்த்தெறிந்தார்கள், என்று முடியுங்கள் கதையை (கரவொலி) பெயருக்குப் பின்னால் வரும் சாதி வால்களை அறுத்தெரியுங்கள்.

உலகம் மாயை என்பவர்கள் உங்கள் பார்வையிலே விழட்டும். உலகம் மாயையல்ல. மாய உலகத்தில் மந்திரிகள் இருக்கமாட்டார்கள். (கரவொலி) மாய உலகத்திலே நாமக்கல் கவிஞர்கள் இருக்கமாட்டார்கள். மாய உலகத்திலே காதல் இருக்காது. மாய உலகத்திலே நீங்களும் நானும் இருக்கமாட்டோம்!

இறுதியாக ஒன்று கூறுகின்றேன் வீழ்ந்திருக்கும் சமுதாயம் வீறு கொண்டெழ, சுரண்டுவோர் ஒழி சமத்துவம் நிலவ, உங்கள் பேனாமுனை, வாள் முனையாகட்டும். (கரவொலி )”

அறிஞர் அண்ணா தமிழ் மொழியில் மட்டுமல்லாது, ஆங்கில மொழியிலும் புலமை பெற்றவர். அந்த வகையில்

ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் ‘பிகாஸ்’ (Because) என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார் – “NO SENTENCE ENDS WITH BECAUSE BECAUSE ‘BECAUSE’ IS A CONJUNCTION”

Siragu annaa3

அறிஞர் அண்ணா ஒரு முறை அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து ‘தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?’ எனக் கேட்டார்.

உடனடியாக விடையளித்தார் அறிஞர் அண்ணா. ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார் அவர். நூறை ஆங்கிலத்தில் சொன்னால் அதில் ’D’ என்னும் எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது ‘STOP’ எனக் கூறி நிறைவு செய்தார். இது தான் அண்ணாவின் அறிவின் சிறப்பு!!

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “தி சாட்டர்டே ஈவினிங் போஸ்ட்” (The Saturday Evening Post) என்ற பத்திரிக்கைக்கான நிருபர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை கேள்விப்பட்டதும், அவரை சோதித்துப் பார்க்க நினைத்திருந்தார்.

அப்போது அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் அடங்கிய மத்திய அரசின்கூட்டம் ஒன்று தில்லியில் நடந்தது. அப்போது தில்லி விமான நிலையத்திலேயே அண்ணாவை மடக்கிப் பேட்டிக் கண்டார்.

. “டூ யு நோ யுனொ? என நிருபர் கேட்டதும், சுவற்றில் அடித்த பந்தாகப் பட்டென்று பதில் வந்தது .

“ஐ நோ யுனொ.
யு நோ யுனொ.
ஐ நோ யு நோ யுனொ
பட் ஐ நோ யுனொ பெட்டெர் தேன் யு நோ யுனொ”

கேள்வி கேட்ட நிருபர் திகைத்து, எக்ஸ்கியூஸ் மீ. சற்று விளக்கமாகக் கூறுங்கள் என்றார். அண்ணா கூறினார்,
“I know UNO (United Nations Organisation). You know UNO. I know you know UNO. But I know UNO better than you know UNO”

Siragu annaa2

எப்போதும் தான் பேச இருக்கும் கூட்டத்துக்குத் தாமதமாகத்தான் வருவார். “முன்னால் வந்தால் அடுத்தவரைப் பேசவிடாமல் செய்துவிடுகிறார்கள். அதனால், ஊருக்கு வெளியில் நின்று, அனைவர் பேச்சையும் கேட்டுவிட்டுக் கடைசியில் வருகிறேன்” என்பார்! என்னே அண்ணாவின் நற்பண்பு??!!.

அண்ணாவின் மனிதநேயம் எதையும் எதிர்ப்பார்க்காதது. ஒரு முறை போப்பாண்டவரைச் சந்தித்த அண்ணா, கோவா விடுதலைக்குப் போராடி போர்ச்சுக்கல் சிறையில் இருக்கும் மோகன் ரானடேவை விடுதலை செய்யக் கேட்டார். விடுதலையான ரானடே, அண்ணாவுக்கு நன்றி சொல்ல சென்னை வந்தார். ஆனால், அண்ணா இறந்து போயிருந்தார்.

அண்ணா மறைவின் போது திரண்ட கூட்டம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற கூட்டம்; 1806 பிரிட்டன் துணை தளபதி நெல்சன், 1907 எகிப்து குடியரசுத் தலைவர் கமால் அப்துல் நாசர், ஆகியோருக்குக் கூடிய கூட்டத்தை அடுத்து அதிகம் கூடியது அண்ணாவுக்குத்தான்!


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மறக்க முடியுமா? அறிஞர் அண்ணா !!”

அதிகம் படித்தது