மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மலர்கள்

சு. தொண்டியம்மாள்

Mar 23, 2019

siragu malargal1

மலர்கள் என்றாலே மங்கையர் சூடுவதும், மணம் தருவதும் மட்டுமல்ல. அதில் பல்வேறு குணங்கள், தன்மைகள் பொதிந்துள்ளன என்று சங்க இலக்கியங்களில் தங்கள் பாடல் வரிகளில் பதிவு செய்துள்ளனர் பண்டைத் தமிழ் புலவர்கள். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த அவர்கள் தங்கள காலத்தில் நிலவிய காலச்சூழல்களையும் இயற்கை தன்மையையும் குறிப்பிட்டுள்ளனர். அவ்வகையில் சங்க இலக்கியங்களில் குறிப்பாக நற்றிணையில் காணலாகும் மலர்கள் குறித்து இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

மலர்கள் என்பது செடி, மரம், கொடி ஆகிய தாவர வகையின் உறுப்பாகும். ஒவ்வொரு தாவரத்திலும் பல்வேறு வண்ணங்களில் காணப்படும். மலருக்கு ஏழுவகை பருவங்கள் உண்டு. அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் ஆகும். மலர்கள் தாவரங்களின் இனப்பெருக்க உறுப்பு. மலர்கள் மனித வாழ்க்கையில் எல்லா நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. சுப நிகழ்வு முதல் துக்க நிகழ்வு வரை முதல் இடம் பெறுவது மலர்கள்.

தமிழர்களின் சிறப்பாக ஒழுக்கத்தை கூறுவர். அவ்வொழுக்கம் அகவொழுக்கம், புறவொழுக்கம் என இரண்டாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளது. இவ்விரு ஒழுக்கங்களின் இன்றியமையா கூறாக மலர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைவன் தலைவி இருவரிடை முகிழ்க்கும் உறவையும் மேற்கொள்ளும் இல்வாழ்க்கையையும் பிறர்க்கு அறிவிக்கவொண்ணாப் பேரின்பத்தை அகம் என்பர். அந்த அகத்திணையை அன்பின் ஐந்திணையாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற திணைகளின் பெயர்களிலே பூக்களும் உள்ளன. அதனால்தான் சங்க கால புலவர்கள் கருப்பொருள்களில் ஒன்றாக மலரையும் சேர்த்துள்ளனர்.

குறிஞ்சி- வேங்கை, குறிஞ்சி, காந்தள்

முல்லை-முல்லை, தோன்றி, பிடவம்

மருதம்-தாமரை, குவளை, கழுதி

நெய்தல்-நெய்தற்பூ, தாழம்பூ

பாலை-குராம்பூ, மராஅம்பூ

குறிஞ்சி:

அரிய வகை மலர், 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் சிறப்புடையது.

வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல். . . . . . . . . . . . . . குருந்தம் வேங்கை புழகு

என 99 வகையான பூக்களை குறிஞ்சி பாட்டு (204) பாடல் விளக்குகிறது. இதே செய்தியை குறுந்தொகை 3வது பாடலில் மூன்றாவது வரியும் விளக்குகின்றது.

 

தாழை:

இம்மலரானது அதிக அளவில் மணம் பரப்பக் கூடியது. இது கடற்கரை பகுதியில் மட்டுமே இருக்கும். இது பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன.

‘‘முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்

தடந்தாள் தாழை முள்ளுடை நெடுந்தோட்டு

அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங்

கோடு வார்ந்தன்ன வெண் பூத்தாழை” (ந-203)

இதே செய்தி அகநானூறு பாடல்-130 கூறப்பட்டுள்ளது.

 

வேங்கைமலர்:

இம்மலரானது அறுவடை காலங்களில் மட்டுமே பூக்கும் என்பதை குறிப்பிட்டதன் மூலம் சங்க புலவர்கள் நிலவியல் அறிவை காணலாம்.

‘‘எந்தை வந்து உரைத்தனனாக அன்னையும்

நன்னாள் வேங்கையும் மலர்கமா இனி என (நற்றிணை-206)

என்பது வேங்கை மலர் பற்றிய குறிப்பு இடம்பெறும் பகுதியாகும்.

ஆம்பல் மலர்:

மாலையில் பூக்கும் இம்மலரானது வானத்தில் வெள்ளி பூத்தது போல் காட்சியளிக்கும். இப்பூவின் வடிவமானது கொக்கின் தலையை போல் அமைந்திருக்கும். இச்செய்தியை நற்றிணை 100 வது பாடலும் குறுந்தொகை 117 . 122 பாடலில் 1, 2 அடிகள் எடுத்து இயம்புகின்றன.

 

செருந்தி:

இளவேனிற் காலத்தில் மலர்ந்து மணம் வீசக் கூடிய மலர்களின் செருந்தியும் ஒன்று. இம்மலர்கள் பொன்னிற வண்ணத்துடன் காட்சியளிக்கும்.

இதனை,

‘‘அமே வாழி, தோழி, பாசிலைச்

செருந்தி தாய இருங்கழச் சேர்ப்பன

தான் வரக் காண்குவாம் நாமே

மறந்தோம் மன்ற நாணுடை நெஞ்சே” (ஐ-12) என்ற பாடலடிகள் வெளிப்படுத்தும்.

 

ஞாழல்:

‘‘புலிநகக் கொன்றை” என்று கூறப்பெறும். இத கடற்கரையில் மிகுதியாக மலர்ந்திருக்கும். பெரும்பான்மை இடங்களில் புன்னையையும் ஞாழலையும் சேர்த்தே வழங்குவர். இளவேனிற் காலத்தில் மலரும் இம்மலர் பொன்னிற வண்ணத்தை உடையது. இது மகளிர் மேல் படரும் சுணங்கிற்கு உவமையாகக் கூறப்பெறுகிறது.

இதனை

‘‘ஞாழற் பூவின் அன்ன சுணங்கு” (ஐ-149)

என்ற பாடலடி புலப்படுத்தும். ஞாழல் மலர் மிகச் சிறியதாகச் சிறுவெண் கடுகினைப் போலவும் ஆரல் மீனின் முட்டையைப் போலவும் இருப்பதாகக் கூறுவர். ஞாழல் மரத்தின் மலர்கள் கடற்கரையின் மணல்மேட்டில் பரவிக் கிடக்கின்றன என்பது அவரின் தாவரவியல் பதிவாகும்.

 

மௌவல்:

மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லிகை, பன்னீர்ப்பூ எனவும் வழங்குகின்றனர். இது வீட்டில் வளர்க்கப்படும் மரம். இந்த மலரின் அரும்புகள் மகளிரின் பல்வரிசைக்கு உவமையாகக் காட்டப்பட்டுள்ளன. இப்பூ வருடத்திற்கு இருமுறை பூக்கும். மலர்கள் மிகுந்த வாசனையை கொண்டது.

‘‘மனைநடு மௌவல் ஊழ்முசை” -நற்றிணை-115

‘‘மனைமரத்து எல்லுறு மௌவல் நாறும்”-குறுந்தொகை-19

‘‘சிறுகுடி மெல்லவல் மருங்கில் மௌவலும் அரும்பின-நற்-122

‘‘மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை வாழ்ப்ப”-க-27

‘‘மணமௌவல் முகை அன்ன மாவீழ் வார் நிரை வெண்பல்”-க-14

‘‘மனை இள நொச்சி மௌவல் வால்முகைத் துணை நிரைத்து

அன்ன மாவீழ் வெண்பல்-அக-21

என்ற பாடலடிகளில் இப்பூ பற்றிய பதிவுகள் அமைந்துள்ளன.

 

தும்பை:

‘‘தும்மை துழா அய்” என்று கபிலர் இதனைக் குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிடுகின்றார். தும்பை ஒரு செடி வெற்றிடங்களில் தழைத்துக் கிளைத்து வளரும். தும்பை மலர் தூய வெண்ணிறமானது. தும்பைச் செடி –தாவரவியல்படி துழாய்ச் செடிக்குடும்பத்தைச் சேர்ந்தது. தும்பைப் பெயர் பல செடிகளுடன் இணைத்துப் பாடப்படினும் சிறுதும்பை, பெருந்தும்பை மலைத்தும்பை ஆகியவை மட்டுமே தும்பை இனத்தவையாகும்.

‘‘கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே?

தும்பை மாலை இளமுலை

நுண் பூண் ஆகம் விலங்கு வோளே!

தும்பை மலர் மருந்தாகவும் பயன்படும். இதன் மலர்களை நல்லெண்ணெயில் காய்ச்சித் தலையில் தேய்த்துக் குளிக்க ஒருபக்கத் தலைவலி குணமாகும். கொத்தோடு ஆடவரும், மகளிரும தும்பைப் பூவை அணிவதும் உண்டு என்பது சங்கப் பாடல்களின் வழிப் புலனாகிறது.

குவளை:

குவளை என்பது பொதுவாகச் செங்குவளையாகும், இதனைச் செங்கழுநீர் எனவும், நீலோற்பவம் எனவும் கூறுவர். “தண்யக்குவளை” என்ற கபிலரின் கூற்றுக்கு (கு-63)

‘‘குளிர்ந்த குளத்தில் மலர்ந்த செங்கழுநீர்” என்று உரை கூறியுள்ளார் நச்சினார்ககினியர்.

செங்குவளை, தாமரை, ஆம்பல் முதலிய கொடிகள் சுனையில் வளர்வன. இலைகள் நீர்மட்டத்தின் மேலே காணப்பெறும் இலை மட்டத்திற்குச் சற்று உயரமாக வளர்ந்து பூக்கும் இயல்பினம்(அ-180)

 

 நெய்தல்:

கடலைச் சார்ந்த உப்பங்கழியிலும் தண்ணீர் நிலைகளிலும் வளரும் இயல்புடையது நெய்தற் கொடி. நெய்தல் நிலத்துச் சுனை மலராகிய நெய்தலைப் புலவர் பெருமக்கள் வியந்து பாடியுள்ளனர். நெய்தல் அல்லி இனத்தைச் சார்ந்தது. ஒழுங்கான இருபாலான மலர்களாகக் காணப்பெறும். நீண்ட மலர்க் காம்பின் நுனியில் தனி மலராக வளரும்.

நீலநிறமுள்ள பெரிய நெய்தல் மலர் செங்கழுநீர்ப் பூவைப் போன்றது. நெய்தல் முகை, திருகு அமைப்பில் அகலிதழ்களை மூடிக் கொண்டிருக்கும். இதனை நெய்தல் மூக்கு என்பர்.

‘‘வள் இதழ் நெய்தல் வருத்த மூக்கு இறுபு” (ந-372)

 

பீர்க்கம் பூ:

பாரம், பீரம், பைங்குருக்கத்தி என வரும் குறிஞ்சிப்பாட்டில் (92) உள்ள பீரம் என்பதற்கு நச்சினார்க்கினியார் ‘‘பீர்க்கம்பூ” என்று உரை கூறியுள்ளார். பீர்க்கு ஒரு கொடியாகும். இது மஞ்சள் நிறமான பூக்களை உடையது. பீர்க்கங்கொடி தழைத்துப் புதர் போலப் படரும். இது கார் காலத்தில் பூக்கும். இலைகள் தனித்துப் பிளவுகளுடன் காணப்பெறும். பால் வேறுபாடுள்ள தனித்தனிப் பீர்கமக் மலர்கள் மஞ்சள் நிறமானவை. பீர்க்கம் பூ மணமற்றது என்பர்.

‘‘முனை கவர்ந்து படப்பையில் படரும். ஆனால் மனையிலும் மன்றத்திலும் படரவிடக்கூடாது. மனையில் பீரம் முளைத்தால் அது பாழ்மனை என்றுபொருள்படும். என்ற கருத்து இப்பாடலில் குறிப்பிடப்பெற்றுள்ளது.

 

புன்னை:

நெய்தல் நிலத்து மரமாகப் புன்னை குறிக்கப் பெறுகிறது. புன்னைமரம் கடற்கரை ஓரங்களிலும் உப்பங்கழியிலும் வளரும். புன்னை வேர்கள் கடல் அலைகளால்  அரிக்கப் பெறுவதையும் கிளைகள் வளர்ந்து நிற்பதையும் பல புலவர்கள் குறித்துள்ளனர்.

            இதனை,

            ‘‘புணரி திளைக்கும் புள் இதழ் கானல்

            இணர் வீழ் புன்னை ஏக்கர் நீழல்” (கு. 299)

என்ற பாடலடிகள் உணர்த்தும். இதில் புன்னை மரத்தின் தழைத்த இலைகளையும் , முத்துப்போன்ற வெள்ளிய அரும்புகளையும், அழகிய மலர்களையும் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். புன்னை இலைகள் கரும்பச்சை நிறத்தில் காணப்பெறுவதால் மரமே நீலநிறமாகக் காட்சி அளிக்கும். இந்நிறமாற்றத்தை வியந்த புலவர்கள் தம் செய்யுள்களில் அக்காட்சியை அழகுற எடுத்துக் காட்டியுள்ளனர்.

இலக்கியங்களில் மிகுந்த அளவில் இடம்பெறுவது புன்னையாகும். புன்னையைப் பாடிய பல்லோருள்ளும் புலவர் உலோச்சனார் முகச் சிறந்தவர். இவர் தாவரவியலாருக்கு இணையாகப் புன்னையின் அழகினைப்பன்முக  நோக்கில் காட்டுகிறார். புன்னையின் கரிய கிளைகள் இரும்பைப் போன்ற வளமையுடையன. இதன் கரும்பச்சை இலைகள் நீலநிறத்தின வெள்ளி போன்ற பூங்கொத்தின் தாது பொனனிறமுடையது. அதில் புலியின் புள்ளி போன்ற அழகிய வரி வண்டுகள் மொய்க்கும் என நற்றிணை-249 பாடலடிகளில் கூறப்பட்டுள்ளது.

இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை

நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும்

வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்

பொன்னின் அன்ன நறுந் தாது உதிர

புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல்

வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇ.

என்ற பாடலடிகள் மூலம் விளங்கும்.

அகத்திணையில் மூன்று விதமாக புணர்ச்சிகள் கூறப்பட்டுள்ளது. பூத்தரு புணர்ச்சி, களிறு புணர்ச்சி, புனல் தரு புணர்ச்சி என்பன அவையாகும்.  இதில் பூவை கொடுத்து தலைவன் தலைவியை புணரும் புணர்ச்சியே சிறப்பாக கூறப்பட்டுள்ளது.

புறத்திணை:

ஒரு ஆண்மகனின் வீரம், கொடை, போர் திறம் போன்ற சிறப்புகளை பற்றி கூறுதல் புறத்திணையாகும்.

வெட்சி, வஞ்சி, உழஞை, தும்பை, வாகை, காஞ்சி என்ற திணைகளில் வீரர்கள் பகைநாட்டு மன்னர்களிடம் போரிடச் செல்லும் போது அந்தந்த திணைக்குரிய மலர்களை மாலைகளாக சூடி செல்வார்கள். வெற்றி பெற்றதும் அதனைக் கொண்டாடுவதற்கும் அத்திணைக்குரிய மலர்களையே சூடி மகிழ்வார்கள். வீரத்தின் அடையாளமாகவும் சங்க இலக்கியங்களில் மலர்கள் இடம்பெற்றுள்ளன.

புறப்பொருள் வெண்பாமாலையில் பூவை சிறப்பித்து கூறும் வகையில் ‘‘பூவை நிலை” என்ற துறையே கூறப்பட்டுள்ளது.

இவ்வாறாக பண்டைத் தமிழ்புலவர்கள் தங்களின் இலக்கியங்களில் மலர்களைப் பதிவு செய்துள்ளனர். அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும். அது எந்தெந்த இடங்களில் வளரும் தன்மையுடையன. அவை எவ்வாறு நோய் தீர்க்கும் மருந்தாகவும், ஒப்பனைக்கு பயன்படும் பொருளாகவும் இருந்துள்ளன என்பதனை இக்கட்டுரை வாயிலாக அறிய முடிகிறது.


சு. தொண்டியம்மாள்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மலர்கள்”

அதிகம் படித்தது