மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மழை ஏன் பெய்கிறது? (சிறுகதை)

மா.பிரபாகரன்

May 11, 2019

siragu rain

மரம் செடிகொடிகளின் இலைகளில் மழைத்துளிகள் துளிர்த்து இருந்தன. வீசியவாடைக் காற்றில் அத்துளிகள் சிறுசாரலாய் முகத்தில் தெறித்தன. நந்தினி தன் வீட்டுக் கொல்லையில் இருந்தாள். அவள் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தாள். எட்டு வயது சிறுமி அவள். சற்றுமுன் பெய்தமழையின் குளிர்ச்சி கொல்லை எங்கும் நிறைந்திருந்தது. நந்தினிக்கு திடீரென்று “மழை ஏன் பெய்கிறது?” – என்ற சந்தேகம் வந்தது.

மேகத்தேரில் பவனி சென்று கொண்டிருந்த வருண பகவான் நந்தினியைப் பார்த்தார். அவர் அவள் முன்னே தோன்றினார். வருணனின் பேரழில் தோற்றம் அவளை வணங்கச் செய்தது. நந்தினி அவரிடம் “தாங்கள் யார்?”–என்று கேட்டாள். “நான் வருணன்! மழையின் கடவுள்!”–என்றார் அவர். சற்றுமுன் தன் மனத்தில் எழுந்த சந்தேகத்தை அவரிடம் கேட்டாள்.

“மழை பெய்தால் உனக்கு எப்படி இருக்கிறது?”–கேட்டார் வருணன்.

“மழை பெய்தால் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது!”–நந்தினி சொன்னாள்.
“அதற்காகத் தான் மழை தருகிறேன்!”–என்ற வருணன் நந்தினி தனது பதிலில் திருப்தி அடையவில்லை என்பதைப் புரிந்துகொண்டார்.

“கருணை, கொடை, அருள், அமுது இந்த நான்கு வார்த்தைகளுக்கும் பொருள் தெரிந்து கொண்டுவா! நான் ஏன் மழை தருகிறேன் என்பதைச் சொல்கிறேன்!”–என்றவர் அங்கிருந்து மறைந்து போனார்.

“அம்மா கருணைனா என்னம்மா?”–நந்தினி அம்மாவிடம் கேட்டாள். “கருணைனா அன்பு!”–என்றார் அம்மா. அம்மாவின் பதில் நந்தினிக்குப் போதுமானதாக இல்லை. ஒரு நாள் அவள் பால்கனியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அம்மாவும் உடன் இருந்தார். போர்டிகோவில் நின்ற மாமரத்தின் கிளையில் காகம் ஒன்று தனது குஞ்சுகளுக்கு இரை தந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

“எதுக்காகமா காக்கா குஞ்சுகளுக்கு இரை ஊட்டுது?”–கேட்டாள் அவள்.

“குஞ்சுகளால இரை தேட முடியாதுல? அதான் அம்மா காகம் குஞ்சுகளுக்கு இரை கொடுக்குது! காகம் குஞ்சுகளை வளர்க்குது!”–என்றார் அம்மா.

“காகம் குஞ்சுகளை வளர்க்கல! காகத்தோட கருணை குஞ்சுகளை வளர்க்குது!”–என்ற நந்தினியை அம்மா ஆச்சரியத்துடன் பார்த்தார்.

ஒரு நாள் நந்தினி அம்மாவோடு கோவிலுக்குச் சென்றிருந்தாள். அங்கே வெளிப்பிரகார மண்டபத்தில் பெரியவர் ஒருவர் பக்தர்களுக்கு அன்னதானம் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

“இவர் ஏன்மா அன்னதானம் செய்யுறாரு?”–நந்தினி கேட்டாள்.

“இவர் செல்வந்தர்! அதுனால அன்னதானம் செய்யுறாரு!”–என்றார் அம்மா.

“செல்வந்தரா இருந்தா அன்னதானம் தரனுமாமா!”–கேட்டாள் நந்தினி.

“அப்படிலாம் இல்ல! பிறருக்கு கொடுக்கனும்ங்குற நல்ல எண்ணம் கொண்ட யார் வேனும்னாலும் செய்யலாம்! அன்னதானம் மட்டுமில்லை! ஒவ்வொருத்தரும் அவங்களால முடிஞ்ச எந்த உதவியும் செய்யலாம்! தாத்தாவுக்கு மூக்குக் கண்ணாடி தேவைப்படுறப்ப நீ அதைத் தேடி எடுத்துக் கொடுக்குறது கூட ஒரு விதத்துலகொடைதான்!”–என்ற அம்மா தொடர்ந்து“ இவர் கடவுள் அருளால செல்வந்தரா இருக்காரு! பிறருக்குக் கொடுக்கனும்ங்குற கொடையுள்ளமும் இருக்கு!”–என்றார் அம்மா. நந்தினி கடவுளின் அருள் கொடையுள்ளம் என்ற வார்த்தைகளை மனத்தில் பதித்துக் கொண்டாள்.

தினமும் காலையில் அம்மாதான் சென்று பால் வாங்கிவருவார். அன்றைக்கு அவர் கை வேலையாக இருந்ததால் நந்தினி போனாள். கறந்த பாலின் வெதுவெதுப்பு பாத்திரத்தில் தெரிந்தது. அம்மா பாலைக் காய்ச்சி சூடாக அவளுக்குப் பருகக் கொடுத்தார்.

“எதுக்காகமா நான் தினமும் பால் சாப்பிடனும்!”–கேட்டாள் நந்தினி.

“உன்னை மாதிரி சின்னக் குழந்தைகளுக்கு பால் நல்லது! பால் அமுது!”–என்றார் அம்மா. அமுது என்ற வார்த்தையை மனத்தில் இருத்திக் கொண்டாள் நந்தினி.

ஒரு மழைநாள் பொழுதில் வருணனை அழைத்தாள் நந்தினி, வருணன் வந்தார்.

“என்ன நான் சொன்ன வார்த்தைகளுக்குப் பொருள் தெரிஞ்சுக்கிட்டுவந்தியா?”–கேட்டார் அவர்.

“ஆமா! கருணை உயிர் வளர்க்கும்! அருள் நலம் பயக்கும்! கொடை வாழ வைக்கும்! அமுது பசி,பிணி போக்கும்!”– என்றாள் நந்தினி, அவள் சொன்ன பதில் வருணணை ஆச்சரியப்பட வைத்தது.

“எதை வைச்சு இப்படிச் சொல்ற நந்தினி?” –கேட்டடர் அவர். நந்தினிதான் கண்ட காட்சிகளை காகம் குஞ்சுகளுக்கு பரிவுடன் இரை ஊட்டியதையும் செல்வந்தர் பக்தர்களுக்குச் சிரத்தையுடன் அன்னதானம் வழங்கியதையும் சொன்னாள். பால் அமுது என்றாள். வருணன் அவள் முதுகில் செல்லமாகத் தட்டிக் கொடுத்தபடி பேச ஆரம்பித்தார்.

“பசு முதலில் தன்னைக் காத்துக் கொள்கிறது! அது தன்னை வளர்ப்பவர்க்கு பால் தருகிறது! தன் கன்றிற்கும் பால் ஈனுகிறது! அதனால்தான் அதை அமுது ஈனும் காமதேனு என்கிறோம்! அதேபோன்று கருணை மனம் கொண்டவர்கள் கொடையுள்ளம் கொண்டவர்கள் பிறர் துன்பம் கண்டு பொறுக்கமாட்டார்கள்! தங்களால் இயன்ற உதவிகளை வறியவர்க்குச் செய்வார்கள்! அத்தகைய நல்லவர்கள் பெற்ற செல்வம் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்! அள்ள அள்ளக் குறையாத பொக்கிஷம் போன்றுதானே! இந்த பூமிக்கு வளத்தைத் தருவது நீர்! நீரின்றி அமையாதுலகு என்று கேள்விப்பட்டதில்லையா நீ? ஆதனால்தான் நான் நீரை மழையாகத் தருகிறேன்! நல்லவர்கள் எப்போதும் சுபிட்சமாக வாழ வேண்டும் என்பதற்காக மழை நான் தரும் அருள்கொடை! இப்போது புரிகிறதா மழை ஏன் பெய்கிறது என்று!”–என்றார் வருணன். “புரிகிறது!” – என்று தலை ஆட்டினாள் நந்தினி.


மா.பிரபாகரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மழை ஏன் பெய்கிறது? (சிறுகதை)”

அதிகம் படித்தது