மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மாகொல் பகைமுகத்த வெள்வேலான் என்பவன் யார்?

தேமொழி

Mar 18, 2017

ஐந்து வயதுவரை பேசும் திறனற்றவராக இருந்த குமரகுருபரர், தனது பெற்றோரால் திருச்செந்தூர் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, செந்தில் முருகனை வழிபட்ட பின்னர் பேசும்திறன் பெற்றார் என்றும், கந்தனைப் போற்றி “கந்தர்கலி வெண்பா” பாடலை இயற்றி முருகனைப் போற்றினார் என்றும் அவர் பற்றிய வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. “மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்” என்பதும் இவர் இயற்றிய மற்றொரு புகழ் பெற்ற நூல். மதுரைமன்னர் திருமலை நாயக்கரின் விருப்பத்திற்கு இணங்கக் குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டில் இயற்றிய “நீதிநெறி விளக்கம்” என்ற நீதிநூல் நூல் சங்கச் செய்யுட்களோடு ஒருங்குவைத்து எண்ணத்தக்கச் சொற்செறிவும் பொருட் செறிவுமுடைய நூல் என்றப் பெருமையையும் பெற்றது. இந்நூலின் பாடல்களுள் ஒன்று,

அரசன் நன்மதிப்பு:

மாகஞ் சிறுகக் குவித்து நிதிக்குவை

ஈகையின் ஏக்கழுத்தம் மிக்குடைய – மாகொல்

பகைமுகத்த வெள்வேலான் பார்வையில் தீட்டும்

நகைமு கத்த நன்கு மதிப்பு (நீதிநெறி விளக்கம் – 39)

இப்பாடலின் பொருள்: வானத்தையே குறைவாகக் காட்டக்கூடிய அளவிற்கு வானளாவிய பொருள் குவியலைக் குவித்திருக்கும் தலைவன், அவற்றை அள்ளிவழங்கும் ஈகைக் குணமும் பெற்றிருப்பதைக் கண்டு இனி நமக்குக் குறையொன்றும் இல்லை என்று கொள்ளும் பெருமிதம் பெரியது. அதனிலும், “மாகொல் பகைமுகத்த வெள்வேலான்” ஆகிய அத்தலைவன் தரும் செல்வதைவிடவும், அவன் தனது மலர்ந்த முகத்துடன் அருளும் பார்வை மூலம் பெற்றிடும் நன்மதிப்பு மேன்மைமிக்கது. சுருக்கமாக, ஈகைக்குணம் நிறைந்த தலைவனிடம் இருந்து பெறும் செல்வத்தைவிடவும் அவனது கருணையை, அன்பைப் பெறுவது சிறப்பானது என்பது பாடலின் கருத்து. “வெள்வேலான்” என்பதற்கு “ஒள்வேலான்” என்ற பாடபேதமும் உண்டெனத் தெரிகிறது.

இந்நூலுக்கு தெளிபொருள் விளக்கவுரை எழுதியவர்களுள் ஒருவர் மறைமலை அடிகளாரின் மாணவரான தி.சு. பாலசுந்தரம்பிள்ளை. “மாகொல் பகைமுகத்த வெள்வேலான்” என்று தலைவனைக் குறிக்கும் சொற்றொடருக்கு “தன் பகைவராகிய விலங்குகளையெல்லாம் கொல்லுந்திறனுடைய போர்க்களத்தில் ஒளிமிக்க வேலேந்திய அரசன்” என்று அவர் விளக்கம் தருகிறார்.

Siragu- u.ve.saaminaathaiyar2

இப்பாடலைப் பற்றி உ. வே. சாமிநாதையரும் தனது “என் சரித்திரம்” (பாகம் 4: அத்தியாயம் 76-100) நூலில் குறிப்பிடுவார். பாடலில் குறிப்பிடப்படும் ‘ஏக்கழுத்தம்’ என்ற சொல்குறித்து ஆய்வு செய்வார் உ. வே. சா. அப்பகுதியின் சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

“நாமகளிலம்பகம் 58-ஆம் செய்யுளில், “ஏத்தரு மயிற்குழா மிருந்த போன்றவே” என்னும் அடிக்கு, ‘மேல் நோக்குதலைத் தருகின்ற மயிற்றிரள் பொலிந்திருந்தனவற்றை யொத்த வென்க’ என்று நச்சினார்க்கினியர் உரையெழுதிவிட்டு, ‘ஏக்கழுத்தம் என்றார் பிறரும்’ என்று மேற்கோள் காட்டுகிறார். அந்தச் செய்யுளும் உரையும் அச்சாகும்போது ‘ஏக்கழுத்தம்’ என்ற சொல் எங்கே வந்துள்ளதென்று என் ஞாபகத்துக்கு வரவில்லை. அதை என் கைக் குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டேன் [...] நீதிநெறி விளக்கத்தில், “ஏக்கழுத்த மிக்குடைய மாகொல், பகை முகத்த வெள்வேலான் பார்வையில் தீட்டும், நகை முகத்த நன்கு மதிப்பு” (39) என்று வீரச் சிறப்புடைய ஓர் அரசனது பார்வையைக் குறிக்கிறார் குமரகுருபரர். அந்தச் செய்யுளிலும் எக்கழுத்தமென்றே பதிப்பிக்கப் பெற்றிருந்தது.”

“மாகொல் பகை முகத்த வெள்வேலான் பார்வையில்” என்பதற்கு “வீரச் சிறப்புடைய ஓர் அரசனது பார்வையை” குமரகுருபரர் குறிப்பிடுவதாக உ. வே. சா. வும் கூறுகிறார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமன்று, உ.வே.சா. அவர்கள் தாம் எழுதிய “நீதிநெறி விளக்கம்” குறிப்புரையில்(1939) “வெள்வேலானென்றமையின் அரசனென்பது கொள்ளப்படும். அவனது நன்குமதிப்பினால் பலருடைய பாராட்டும் நல்லுதவியும் பெறுதலின் ஈகையினுஞ் சிறந்த தென்றார்.” என்ற விளக்கமும் கொடுத்துள்ளார். இதனை நீதிநெறிவிளக்கம் மூலமும் உரையும் என்ற நூலை எழுதிய காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை (1943), அவர்களது நூல் மூலம் அறியலாம்.

தி.சு. பாலசுந்தரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர், காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை மட்டுமின்றி இந்தப் பாடலுக்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் பொருள் கூறிய சற்றொப்ப ஒரு 20 தமிழறிஞர்களும் “மாகொல் பகை முகத்த வெள்வேலான் என்பவன் வீரச் சிறப்புடைய ஓர் அரசன்” என்றுதான் பொருள் கொண்டிருக்கிறார்கள். இத்தகவலைக் காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை அவர்களின் நூல் காட்டுகிறது. காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை நீதிநெறி விளக்கம் நூலிற்கு விளக்கமுரைத்த பொழுது தமிழிலும் ஆங்கிலத்திலுமாக நீதிநெறி விளக்கம் பாடல்களுக்கு உரையெழுதியவர்களின் உரைகளைத் தொகுத்தளிக்கிறார்.

Siragu-makol6

காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை அவர்களுக்கு உரை எழுத உதவிய நூல்களை எழுதியவர்களாக அவரால் குறிப்பிடப்படுபவர்கள்:

தமிழ் உரைப்பதிப்புகள்:

1. காஞ்சிபுரம் சபாபதி முதலியார் (1835)

2. சி. முத்தைய பிள்ளை (1864)

3. கோ. இராசகோபால பிள்ளை (19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி)

4. ஏ. எஸ். ஜெகராவ் முதலியார் (1895)

5. சி. வை. தாமோதரம்பிள்ளை (19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி)

6. வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி)

7. அ. குமாரசாமிப் புலவர் (1902)

8. தி. சுப்பராயச் செட்டியார் (1928)

9. இளவழகனார் (1939)

10. உ.வே. சாமிநாதையர் (1939)

11. ஊ. புஷ்பரதச் செட்டியார் பதிப்பு (????)

ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்புகள்:

1. Rev. H. Stokes (1830)

2. C. Muthiah Pillai (1864)

3. Rev. S. Winfred (1914)

4. T.B. Krishnaswami Mudaliar (1937)

மாகஞ் சிறுகக் குவித்து நிதிக்குவை எனத் தொடங்கும் நீதிநெறி விளக்கம் – 39 ஆவது பாடல்களுக்கு இந்த உரையாசிரியர்கள் கூறிய பொருள்களையும் தொகுத்தளிக்கிறார் காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை (144 ஆம் பக்கம்). அப்பகுதியில், இவர்கள் யாவருமே ஒத்தாற்போல “மாகொல் பகை முகத்த வெள்வேலான் என்பவன் வீரச் சிறப்புடைய ஓர் அரசன்” என்றுதான் பொருள் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் இந்தக் குறிப்பில் இருந்தும் தெரிய வருகிறது.

மாகொல் பகை முகத்த வெள்வேலான்:

“மாகொல் பகை முகத்த வெள்வேலான்” என்பதற்கு, பகைவராகிய விலங்குகளையெல்லாம் கொல்லுந்திறனுடைய போர்க்களத்தில்ஒளிமிக்க வேலேந்திய அரசன்” என்ற பொருளில் பொதுவாக “வீரச் சிறப்புடைய ஓர் அரசன்” என்பதாகப் பொருள் கொள்வதைவிட “முருகன்” என்று பொருள் கொள்வதே சாலவும் பொருந்தும். போர்க்களத்தில் பகையாகிய மாமரத்தை அழித்து வெற்றியளித்த வேலைக் கொண்ட வெள்வேலான் என்பவன் முருகன். இது தொன்மத்தை அடிப்படையாகக் கொண்ட விளக்கம். கந்தபுராணக் கதையின்படி போர் நிகழும்பொழுது மாயவடிவம் கொண்டு மாமரமாகக் கடலில் ஒளிந்து கொண்ட சூரபதுமனை, வேலெறிந்து (சூரனாகிய) மாமரத்தை இருகூறாகப் பிளக்கிறான் முருகன் என்பது பலரும் அறிந்தகதை.

கந்தபுராணம் – கதைச் சுருக்கம்:

Siragu-makol7

வீரமகேந்திரபுரியை ஆண்டுவந்த சூரபதுமன் என்னும் அசுரன் தான் பெற்ற தவவலிமையினால் ஆணவம் மிகுந்து தேவர்களை சிறையிலிட்டு சித்திரவதை செய்து அதர்ம வழியில் ஆட்சிசெய்தான். வதைபட்ட தேவர்கள் வழக்கம் போல சிவனிடம் சென்று முறையிட்டனர். சூரபதுமன் பெற்ற தவவலிமையை அழிக்கும் ஆற்றலுள்ள வீரன் ஒருவனை உருவாக்கி, தேவர்களைத் துன்பத்தில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறக்க ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டு அவை ஆறு குழந்தைகளாக தோன்றின. ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்த அந்த ஆறு குழந்தைகளையும் அன்புடன் பார்வதி அணைத்து ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் உடைய ஒரு திருமுருகனாக உருவாக்கினாள். பார்வதி தனது சக்தியின் வடிவமான சக்திவேலை உருவாக்க, சிவன் அதனை முருகனுக்கு வழங்கி அருளி சூரபதுமனை அழிக்க இருவரும் ஆணையிடுகிறார்கள். பெற்றோர் இட்ட கட்டளையை ஏற்ற முருகனின் படை, சூரபத்மனை அழிக்க தெற்கு நோக்கி திருச்செந்தூர் வருகிறது. சூரபதுமனுக்கும் முருகனுக்கும் இடையில் கடுமையான போர் மூள்கிறது. அது பலநாட்கள் தொடர்கிறது. சூரபதுமனின் படை பெரும் அழிவுக்குள்ளாகிறது. தனது உறவுகளையும் படைகளையும் பெரிதும் இழக்கிறான் சூரன். இருப்பினும் அவன் ஆணவத்துடன் போரைத் தொடர்கிறான். போரில் தோல்வி உறுதி என்ற நேரத்தில் கடலின் நடுவில் மாமரமாக ஒரு மாயவுருவம் கொண்டு ஒளிகிறான். இருப்பினும் முருகனின் வேல் வீச்சிற்கு இலக்காகி மாமரம் பிளவுபட்டு இருபிரிவாகிறது. ஒன்றினை தனது மயில் வாகனமாகவும் மற்றொன்றைத் தனது சேவற்கொடியாகவும் மாற்றி ஆணவம் ஒடுங்கிய சூரனை மன்னித்து அருள் புரிகிறார் முருகன். கந்த புராணம் சொல்லும் இக்கதையைச் “சங்கரன் மகன் சட்டியில் மாவறுத்தான்” என்ற சொற்றொடர் மூலம் நகைச்சுவையுடன் சிலேடையாகக் கூறும் வழக்கமும் உள்ளது. “சங்கரனின் மகனாகிய முருகன் சஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனை இரண்டாக அரிந்தார்” என்பது இதன் பொருள். இந்த வெற்றித்திருநாள் கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

முருகக்கடவுள் கடலில் நின்ற மாமரத்தை வெட்டிய செய்தியினை சங்க காலப் பாடல்கள் முதற்கொண்டு பலபாடல்கள் குறிக்கின்றன. பத்துப்பாட்டில் முதற்பாட்டான நூல் “திருமுருகாற்றுப்படை” ( திரு – முருகு – ஆற்றுப்படை; அழகிய முருகனை அடைவதற்கு வழிப்படுத்துவது என்பது பொருள்). முருகனின் அருள்பெற்ற புலவன் ஒருவன், முருகன் அருளைத் தேடிச்செல்லும் மற்றொருவனுக்கு முருகன் இருக்கும் இடங்களுக்குச் செல்லும் வழிகளை எடுத்துக் கூறி முருகனிடம் வழிப்படுத்துவது இத்திருமுருகாற்றுப்படை. இதனை எழுதிய நக்கீரர்,

“இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை

அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி

அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர்

மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத்து

எய்யா நல்இசைச் செவ்வேல் சேஎய்”(திருமுருகாற்றுப்படை, 57-61)

என்று குறிப்பிடுகிறார். இதன் பொருள், மனிதனும் விலங்குமாக (குதிரையாக) இரண்டு பெரிய உருவங்கள் இணைந்து, பெரிய ஒரு உருவினைக் கொண்ட சூரபதுமன், மாமர உருவினை எடுத்து, கவிழ்ந்த பூங்கொத்துக்களுடன் கீழ் மேலாக முருகனுக்கு அஞ்சிக் கடலில் நின்றான். அவனை முருகன் வதம் செய்து கொன்று சேவல் கொடியாகக் கொண்டான் என்பதாகும்.

பழங்காலத்தில் இருந்து வழங்கி வந்த எந்த ஒரு கதைக்கும், காலப்போக்கில் மக்களால் பல விளக்கங்கள் அளிக்கப்பெறும் என்று கூறி, இதற்கு மேலும் சிறந்ததொரு விளக்கம் தருவார் திருமுருகாற்றுப்படைக்கு விளக்கம் எழுதிய கி. வா. ஜகந்நாதன். பழங்கால மன்னர்கள் தங்களுக்கு “காவல்மரம்” என்று ஒரு குறிப்பிட்ட மரத்தைப் போற்றிப் பாதுகாத்து வருவார்கள். வெற்றி பெற்ற மன்னன், தோல்வியடைந்த மன்னனின் காவல் மரத்தை அழிப்பதை வெற்றிக்கு அறிகுறியாகக் கொள்வான். எதிரியின் காவல் மரத்தை அழித்து அந்த மரத்திலிருந்து வெற்றிமுரசு செய்வான். சங்க காலத்து நூல்களில் காவல் மரங்களைப் பற்றிய செய்திகள் பல உள்ளன. “பெண் கொலை புரிந்த நன்னன்” என்ற பழியேற்ற நன்னன் என்பவனது காவல் மரமும் மாமரம்தான். ஆற்றுநீரில் அடித்துவரப்பட்ட அவனது காவல் மாமரத்தின் கனியை உண்டதை அவமதிப்பாகக் கருதியே, அதனை உண்ட ஒரு பெண்ணைக் கொன்று தீராப் பழியை நன்னன் அடைந்தான். மன்னர்களின் காவல்மரம் அவர்களது “குலக்குறி.” அதனை அவமதிப்பது வெற்றி பெற்ற மன்னனின் நோக்கமாக இருக்கும். பதிற்றுப்பத்தில் நெடுஞ்சேரலாதன் பகைவர்களின் கடம்ப மரத்தை வெட்டிய செய்தி இடம்பெற்றுள்ளது.

கடிமரம் தடியும் ஓசைதன் ஊர் (ஆலத்தூர் கிழார், புறநானூறு 36. நீயே அறிந்து செய்க!)

கடிமரம் தடிதல் ஓம்புநின் நெடுநல் யானைக்குக் கந்தாற்றாவே (காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், புறநானூறு 57. காவன்மரமும் கட்டுத்தறியும்!)

ஆகிய பாடல்களின் “கடிமரம் தடியும்”, “கடிமரம் தடிதல்” என்ற வரிகளுடன் “மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத்து” என்ற திருமுருகாற்றுப்படை பாடலின் வரியை இங்கு ஒப்பிட்டு நோக்கலாம். எனவே சூரன் என்னும் மன்னனின் காவல் மரமான மாமரம், முருகன் என்ற பகையரசனால் வெட்டப்பட்டது என்பதாகக் கொள்ளலாம். “பகையரசனுடைய காவல் மரத்தைத் தடிவது போல முருகன் தன் பகைவனாகிய சூரனது காவல் மரத்தைத் தடிந்து வெற்றியை நிலை நாட்டினன் என்பது பழைய மரபுக்கு ஒத்த செய்தி. எப்படியிருப்பினும் முருகப்பெருமான் மாமரத்தை வெட்டி வெற்றி பெற்றது பழமைக்கும் புதுமைக்கும் பொதுவான செய்தி” எனத் தனது விளக்கத்தில் குறிப்பிடுகிறார் கி. வா. ஜகந்நாதன்.

“மாகொல் பகை முகத்த வெள்வேலான்” என்ற நீதிநெறி விளக்கம் பாடலின் அடிக்கு இணையாக, குறிப்பாக, “மா” “கொல்” “வெள்வேலான்” என்ற சொற்களைக் கீழ்க்காணும் கலித்தொகை, சிலப்பதிகாரப் பாடல்களும் கொண்டு அமைந்திருப்பதைக் காணலாம்:

உரவு நீர் மாகொன்ற வெள்வேலான் (கலித்தொகை – பாலைக்கலி பாடல்கள், கலித்தொகை பாடல் – 27: 15) என்றும்,

உரவுநீர் மாகொன்ற வேலேந்தி (சிலப்பதிகாரம் – வஞ்சிக் காண்டம் – குன்றக்குரவை, 24-பாட்டுமடை 7) என்றும்,

மாக்கடல் கலக்குற மாகொன்ற மடங்காப் போர் வேல் வல்லான் ( கலித்தொகை பாடல் – 104: 134) என்றும்,

(உரவு நீர்மா = கடல்நீரிடையே மாமரம் உருவில் நின்ற சூரபதுமன்; வெள்வேலான் = முருகன்)

கடலின்கண் மா மரமாய் நின்ற சூரபதுமனைக் கொன்ற வேலை ஏந்திய முருகனைப் போற்றுவதைக் குறிக்கும் இவ்வரிகள், குமரகுருபரர் எழுதிய “நீதிநெறி விளக்கம்” வரிகளான “மாகொல் பகை முகத்த வெள்வேலான்” என்பதற்கு மிக நெருக்கமாகவே அமைந்துள்ளன.

இவைமட்டுமின்றி மேலும் பல பாடல்களில் மாமரமாக நின்ற சூரனை முருகன் வேல்கொண்டு அழித்த கதை இடம்பெற்றுள்ளதை கீழ்க்காணும் பாடல் வரிகளும் காட்டி நிற்கின்றன.

கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி குளமாய்ச் சுவற முதுசூதம் குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு (திருப்புகழ் – 39)

வதிருவார்க் கொக்கின் களவுயிர் குடித்த அரிலை நெடுவே லறுமுகக் குளவன் (கல்லாடம் – செய்யுள் 98: 52-53)

கீழ்மே னின்றவக் கொடுந்தொழிற் கொக்கின் கூறிரண் டாய வொருபங் கெழுந்து மாயாப் பெருவரத் தொருமயி லாகி (கல்லாடம் – முருகக் கடவுள் வாழ்த்து)

மாக்கடல் முன்னி அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும் சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக் கடுஞ்சின விறல்வேள் (பதிற்றுப்பத்து, 2: 3-4) என்றும்,

தீஅழல் துவைப்ப திரிய விட்டெறிந்து நோயுடை நுடங்கு சூர்மா முதல் தடிந்து (பரிபாடல், செவ்வேள் 5 : 3-4) என்றும்,

கடுஞ்சூர் மாமுதல் தடிந்தறுத்த வேலடு போராள (பரிபாடல், செவ்வேள் 9: 70-71) என்றும்,

நீர்நிரந் தேற்ற நிலந்தாங் கழுவத்துச் சூர்நிரந்து சுற்றிய மாதபுத்த வேலோய் (பரிபாடல், செவ்வேள் 18: 3-4) என்றும்,

பாரிரும் பெளவத்தினுள்புக்குப் பண்டொரு நாள் சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே (சிலப்பதிகாரம் – வஞ்சிக் காண்டம் – குன்றக்குரவை, 24-பாட்டுமடை 8 ) என்றும்

குறிப்பிடப்படுதலைக் காணலாம். சிலபாடல்களில் குறிப்பிடப்படும் “கொக்கு” என்பதும் மாமரத்தையேக் குறிக்கும். மாமரத்திற்கு “நீர் நாய்” என்ற பெயருமுண்டு. நீர் நாயின் மேல் தோல் அமைப்பும், நிறமும் மாமரத்தோடு ஒத்திருத்தலின், மாமரம் நீர்நாய் எனப்பட்டது. எனவே கடலில் வாழும் நீர்நாய் போல தோற்றமளித்து ஏமாற்ற சூரன் மாமர உருவம் எடுத்து கடலில் ஒளிந்தான் எனக் குறிப்பிட்டார்களோ? என்ற ஐயத்தையும் முன்வைக்கிறார் முனைவர் சுந்தர சண்முகனார்.

பல பாடல்களில் இந்த அளவு பரவலாக அறிந்த கந்தபுராணக் கதைவரிகளைக் கொண்ட குமரகுருபரர் எழுதிய “நீதிநெறி விளக்கம்” பாடல் வரிகளுக்கு அதற்கு விளக்கவுரை எழுதிய தமிழறிஞர்கள் (இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள தமிழறிஞர்கள் மட்டும் எனக் கொள்க) கந்தபுராணக்கதையின் தொடர்பினைக் காட்டவில்லை.அத்துடன் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள தமிழறிஞர்கள் யாவரும் “மாகொல் பகை முகத்த வெள்வேலான்” என்பதற்கு “மாமரமாய் கடலுள் ஒளிந்த சூரனைக் கொன்ற முருகன்” என்று பொருள் கொள்வதைத் தவிர்த்த காரணமும், அதற்குப் பதிலாக “பகைவராகிய விலங்குகளையெல்லாம் கொல்லுந்திறனுடைய போர்க்களத்தில் ஒளிமிக்க வேலேந்திய அரசன்” என்ற பொருளில் பொதுவாக “வீரச் சிறப்புடைய ஓர் அரசன்” என்பதாகப் பொருள் கொண்டதன் நோக்கத்திற்குக் காரணம் யாதெனவும் தெரியவில்லை.

___________________________

உதவிய நூல்கள்:

[1] நீதிநெறி விளக்கம் – மூலமும் திரு.தி.சு.பாலசுந்தரம் பிள்ளை அவர்கள் உரையும், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு.

http://tamilvu.org/library/l6700/html/l6700ind.htm, http://www.tamilvu.org/slet/l6700/l6700per.jsp?sno=39

[2] என் சரித்திரம் – பாகம் 4 (அத்தியாயம் 76-100), உ.வே.சாமிநாதையரவர்கள். http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0548_02.html

[3] நீதிநெறிவிளக்கம் மூலமும் உரையும், காழி, சிவ. கண்ணுசாமி, 1943, பக்கம் 142-144. https://ta.wikisource.org/s/7hle

[4] திருமுருகாற்றுப்படை விளக்கம்; கி. வா. ஜகந்நாதன், இரண்டாம் பதிப்பு: மார்ச்சு, 1978. பக்கம் 87-88. https://ta.wikisource.org/s/nm5

[5] மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள், முனைவர் சுந்தர சண்முகனார்,முதல் பதிப்பு: 1989 , பக்கம் 123. https://ta.wikisource.org/s/7x3h

[6] திருப்புகழ், கல்லாடம், பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, சிலப்பதிகாரம், புறநானூறு ஆகிய நூல்களின் மூலமும் உரையும் கொடுத்துதவிய “இணையக் கல்விக்கழகத்தின் இணையத்தளங்கள்”


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மாகொல் பகைமுகத்த வெள்வேலான் என்பவன் யார்?”

அதிகம் படித்தது