மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மாசுக் கட்டுப்பாடு நிறுத்தி வைப்பு

இராமியா

Aug 31, 2019

 siragu maasu kattuppaadu3

நீடித்த நிலையான வளர்ச்சிக்கான உலக நிறுவனமும், ஆற்றல், சுற்றுச்சூழல், தண்ணீருக்கான குழுவும் (International Institute for Sustainable Development and Council for Energy, Environment and Water)இந்தியாவில் உள்ள அனல் மின் நிலையங்களினால் ஏற்படும் மாசுகள் பற்றி ஆய்வு செய்து ஓர் அறிக்கையை 6.8.2019 அன்று புதுதில்லியில் வெளியிட்டது.

அனல் மின் நிலையங்களின் செயல்பாட்டால் கந்தக டையாக்சைட் (Sulphur dioxide), நைட்ரஸ் ஆக்சைட் (Nitrous oxide) ஆகிய காற்று மாசுகள் வெளிவருகின்றன. இந்த மாசுகளை முறையாகக் கட்டுப்படுத்தாவிட்டால் மக்களுக்கு நுரையீரல் நோய் ஏற்பட்டு 3,00,000 முதல் 3,20,000 பேர்கள் வரை அகால மரணம் அடைவார்கள் என்றும், மேலும் இந்த நோய்களுக்கு சிகிச்சை செய்யும் செலவுரூ.5.1 கோடி ஆகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் “பதறிப்போன” இந்திய அரசு உடனே இம்மாசுகளைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும் என்று 2017ஆம்ஆண்டு ஒரு சட்டத்தை இயற்றியது. இச்சட்டப்படி அனல் மின் உற்பத்தி நிலையங்கள் அனைத்தும் 2017ஆம்ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பாகவே முறையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாசுகள் வெளியாவதைத் தடுக்க வேண்டும்.

எவ்வளவு வலித்தாலும், எப்படி எப்படித் துடித்தாலும் உழைக்கும் மக்கள்தானே சட்டவிதிமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டும்? முதலாளிகளை அப்படி எல்லாம் சட்டத்திற்குக் கட்டுப்படும்படி வற்புறுத்த முடியுமா? இச்சட்டவிதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றால் எவ்வளவு செலவாகும் என்று முதலாளிகள் கணக்கிட்டுப் பார்த்தனர். இயந்திரங்கள் புதியனவாக இருந்தால் ஆண்டுக்கு ரூ.73,176 கோடி செலவாகும் என்றும், இயந்திரங்கள் பழையனவாக இருந்தால்ரூ.86,135 கோடி செலவாகும் என்றும் நிதி நிபுணர்கள் தெரிவித்தனர். இதனால் முதலாளிகளுக்குக் கிடைக்கும் இலாபம் 10% குறையும் என்றும் அந்த நிதி நிபுணர்கள் தெரிவித்தனர். அதுமட்டும் அல்ல; மின்சாரத்தின் விலையை உயர்த்தி இலாபம் குறைவதைத் தடுக்க தற்போது உள்ள பொருளாதாரச் சூழ்நிலை இடம் தராது என்றும் அவர்கள் தெரிவித்தனர். முதலாளிகள் எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்பார்கள்.ஆனால் முதலீட்டுக்குக் கிடைக்கவேண்டிய இலாபம் குறைவதை மட்டும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். ஆகவே “நீங்களாவது, உங்கள் சட்டமாவது” என்று கூறி மாசுத்தடுப்புச் சட்டவிதி முறைகளைச் செயல்படுத்தவே இல்லை.

இந்தச் சூழலில்தான் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான உலக நிறுவனம் அந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. 3,20,000 மக்கள் அகால மரணம் அடைவார்கள் என்பதையும், ரூ.5.1 கோடி வீண் மருத்துவச் செலவு ஏற்படும் என்பதையும் அறிந்தபோது இந்திய அரசு “பதறிப்போனது”. ஆனால் இந்தச் சட்டத்தைச் செயல்படுத்தினால் முதலாளிகளுக்கு இலாபம் குறையும் என்று அறிந்தபோது மூர்ச்சையே அடைந்து விட்டது. உடனடியாக 2022ஆம்ஆண்டுவரை இச்சட்டத்தைச் செயல்படுத்த வேண்டாம் என்று ஆணை பிறப்பித்து விட்டது.

இச்செய்தியை அரசியல்வாதிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் படிக்கிறார்கள். அவர்களில் முதலாளிகளையும், முதலாளித்துவ அறிஞர்களையும், முதலாளித்துவ மனச்சாய்வு கொண்டவர்களையும் விட்டுவிட்டு, பொதுவுடைமைக் கட்சியினரை மட்டும் எடுத்துக்கொள்வோம். அவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?

முதலாளித்துவ அமைப்பில்– அதாவது எந்த ஒரு உற்பத்தியையும் இலாபத்தை அடிப்படையாக வைத்தே செய்ய முடியும் என்ற அமைப்பில்– ஒரு அரசு இப்படித்தான் நடந்து கொள்ளமுடியும்; அந்த அரசுக்கு மக்கள் மாள்வதைவிட, மக்கள் நோயால் துன்புறுவதைவிட, முதலாளிகளின் முதலீட்டுக்குக் கிடைக்கவேண்டிய இலாபம் குறைாமல் இருப்பதுதான் முதன்மையாகப்படும். இதுவே சோசலிச அரசாக இருந்தால்– அதாவது இலாபத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், மக்களின் தேவைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பொருள் உற்பத்தி செய்யவேண்டும் என்ற அரசு இருந்தால்– அந்த அரசு இம்மி அளவும் தயக்கம் இன்றி மாசுக்கட்டுப்பாடு விதிமுறைகளைச் செயல்படுத்தமுடியும்.

இந்த வேறுபாட்டை மக்களிடையே விளக்கி, மக்களை சோசலிச புரட்சிக்கு அணி திரட்டாமல் இருக்கும் பொதுவுடைமைக் கட்சிகளை என்னவென்று சொல்வது?


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மாசுக் கட்டுப்பாடு நிறுத்தி வைப்பு”

அதிகம் படித்தது