மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

துன்பத்துள் வீழும் கன்னியாகுமரி ரப்பர் விவசாயிகள்

சு.நாகராஜன்

Jul 16, 2016

Siragu rubber article2

”ரப்பர்” குமரி மாவட்டத்தின் முக்கியமான தொழில் வளங்களில் ஒன்று. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு, தோவாளை தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் ரப்பர் சாகுபடி அதிகளவில் நடைபெறுகின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ரப்பர் உலகத்தரம் வாய்ந்தது என்பதால் குமரி ரப்பருக்கு சர்வதேச மார்க்கெட்டில் எப்போதுமே கடும் கிராக்கிதான். ஆனால் அண்மைக்காலமாக ரப்பரின் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் சென்று கொண்டிருக்கின்றது. இந்த சோகம் தனிக்கதை.

குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. ஓர் ஆண்டில் மட்டும் குமரி மாவட்டத்தில் இருந்து முப்பதாயிரம் டன் ரப்பர் உற்பத்தியாகிறது. சொந்தமாக ரப்பர் தோட்டம் வைத்திருப்பவர்கள், அவர்களால் பணி அமர்த்தப்பட்ட பணியாளர்கள், அரசு ரப்பர் தோட்டங்கள் அதன் பணியாளர்கள் என நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ரப்பர் பயிரை நம்பியே வாழ்கின்றன. குமரி மேற்கு மாவட்ட மக்களின் பொருளாதாரத்திற்கு கை கொடுப்பதிலும் ரப்பர் பயிரே முக்கியத்துவம் பெறுகிறது. எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கும் போதே, தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் என்று ஒரு இடி இவர்கள் மேல் இடிக்க, இடிந்து போய் கிடக்கிறார்கள் குமரி மாவட்ட ரப்பர் சாகுபடியாளர்கள்.

என்ன பிரச்சினை ரப்பர் பயிர் செய்பவர்களுக்கு? ’’ ரப்பர் பயிரின் ஆயுட்காலம் 15 முதல் 25 ஆண்டுகள் தான். 7வது ஆண்டில் இருந்து ரப்பரில் பால் வர ஆரம்பிக்கும். 25 ஆண்டுகள் முடிந்ததும் அதன் பிறகு மரத்தை வெட்டி விட்டு மறுநடவு தான் செய்ய வேண்டும். ஆனால் குலசேகரம் சுற்றுவட்டார கிராமங்களில் முதிர்ந்த மரங்கள் அப்புறப்படுத்தப்படாமல் இருக்கிறது. புதிய மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டும், நடப்படாமல் தோட்டத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இதில் தான் சிக்கலும் ஆரம்பிக்கின்றது.

Siragu rubber article9

பொதுவாக மரங்களை வெட்டி விற்பனை செய்யும் பகுதிகளில் அதை தடை செய்யும் விதத்தில் கானகத்தை காக்கும் நோக்கத்தில் தான் தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றுவார்கள். ஆனால் இது ரப்பர் பயிர் செய்யும் சூழலுக்கு பொருந்தாது. ரப்பரை பொறுத்தவரை அடிக்கடி மறுநடவு செய்ய வேண்டிய பயிர். ஒரு மரத்தை முறித்த மறுநாளே புதிய மரத்தை நடவு செய்து விடுவோம். நிலைமை இப்படி இருக்க எங்களை வதைக்கும் இப்படி ஒரு சட்டம் எதற்கு? என்கின்றனர் சாகுபடியாளர்கள்.

1982 ல் விளவங்கோடு தாலுகாவின் சில பகுதிகள், 1989-ல் கல்குளம், தோவாளை தாலுகாவின் சில பகுதிகள், 2002-ல் தோவாளை தாலுகாவின் பிற பகுதிகள் என்று கொஞ்சம், கொஞ்சமாக அறிவித்து மாவட்டத்தில் பரவலான விவசாய நிலங்களை தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்து விட்டார்கள். ஆனால் இச்சட்டம் நடைமுறை படுத்தப்படாமல்தான் இருந்தது. கடந்த 10.08.2010-ல் அப்போதைய ஆட்சியர் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவித்தார். இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகளின் சொத்துக்கள் முடங்கிப்போயுள்ளன.

இந்த சட்டத்தின் படி சார்பதிவாளர் அலுவலகங்களில் குறிப்பிட்ட சர்வே எண் கொண்ட சுமார் 75000 ஏக்கர் சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் முடக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் பெரும்பான்மை ரப்பர் விவசாயம் தான். ரப்பர் மரம் தொடர்ந்து 30 ஆண்டுகள் வரை நல்ல பலனை தரும். அதன் பிறகு மகசூல் குறைந்து நின்று விடும். இதனால் குறிப்பிட்ட கால இடைவெளியில் ரப்பர் மரங்களை முறித்து விட்டு மறுநடவு செய்வார்கள். ஆனால் தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி மரங்களை முறிக்கவோ, மறுநடவு செய்யவோ மாவட்ட வனக்குழுவின் அனுமதியைப் பெற வேண்டும். விவசாயிகள் தங்கள் பெயரில் உள்ள சொத்துக்களை விருப்பப்படி பயன் படுத்தவோ, திருமணம், கடன், மருத்துவத் தேவை போன்றவற்றிற்காக விற்கவோ முடியாது. இந்த உரிமைகள் எதுவும் இல்லாமல் எங்கள் சொத்து என்று சொல்லிக் கொள்வதில் என்ன பொருள் இருக்கிறது?

Siragu rubber article6

இதே போல் குமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் என்பது குமரி மக்களின் நெடுநாள் கோரிக்கை. இதற்கு இத்தொகுதியில் இருந்து வெற்றி பெற்று மத்திய அமைச்சராக உள்ள பொன். ராதாகிருஷ்ணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமரி ரப்பர் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இதைப் பற்றிப் பேசிய முன்னோடி ரப்பர் விவசாயிகள். இந்தியாவிலேயே குமரி மாவட்டத்தில் தான் இயற்கை ரப்பர் விளைகிறது. இந்தியா முழுவதுக்கும் ரப்பர் நாற்றும் இங்கிருந்து தான் செல்கிறது. ரப்பர் பயிர் அதிகமாக சாகுபடி நடைபெற்றாலும் ரப்பருக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டால் தீர்வு சொல்வதற்குக் கூட இங்கு ஒரு ஆராய்ச்சி மையம் இல்லை.

ரப்பர் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தி அதுவும் கிடப்பில் கிடக்கிறது. இங்கு ரப்பருக்கான ஆராய்ச்சி மையம் தேவை என்பது 40 ஆண்டு கால கனவாகவே தொடர்கிறது. கடந்த 2004-ம் ஆண்டு ஜோதி நிர்மலா ஆட்சியராக இருந்த போது குமரி மாவட்டத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையம் அமைக்க தக்கலையை அடுத்த வேலிமலைப் பகுதியில் 230 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் அந்தத் திட்டம் பின்னால் கிடப்பில் போடப்பட்டது. இந்த திட்டம் ஒரு பக்கம் இருக்க தி.மு.க இதில் புதிய செயல்திட்டம் ஒன்றை முன்வைத்தது.

தி.மு.க அரசு ரப்பர் தொழிற்சாலை என்கிற விசயத்தை சில மாற்றங்கள் செய்து குமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா தொடங்குவதாக அறிவித்தது. கடந்த தி.மு.க ஆட்சியில் இதற்காக நாகர்கோவில் அருகில் உள்ள செண்பகராமன் புதூர் கிராமத்தில் நிலமும் கையகப்படுத்தப்பட்டது. அதுவும் இன்று வரை கிடப்பில் கிடக்கிறது. குமரி மாவட்டத்தில் 35 சதவிகித மக்கள் ரப்பர் தொழிலை சார்ந்தே இருக்கிறார்கள். தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் இருக்கை செய்வதற்கு ஏராளமான ரப்பர் தேவைப்படுகிறது. இப்போது குமரி மாவட்டத்தில் கிடைக்கும் ரப்பர் கேரள மாநிலத்திற்குச் செல்கிறது. விவசாயிகளுக்கு விலை நிர்ணயத்திலும் இதனால் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கிறது.

இதையெல்லாம் களைய இங்கே ரப்பர் தொழிற்சாலை அமைவது மட்டுமே தீர்வாக இருக்கும். குமரி மாவட்ட மக்கள் நாற்பது ஆண்டுகளாக ரப்பர் தொழிற்சாலை கனவில் இருக்கின்றனர். ரப்பருக்கு விலையில்லாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில் இந்தத் தொழிற்சாலை அமைந்தால் உள்ளூரிலேயே நல்ல விலை கிடைக்கும்.

விலை இறங்குமுகம் – விவசாயிகள் கவலை முகம்.

Siragu rubber article7

ரப்பரின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்வதால்தான் விலை வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும் அவலக்குரல் எழுப்புகின்றனர் கன்னியாகுமரி விவசாயிகள்.

இந்திய அளவில் கேரளாவில் தான் அதிக அளவில் ரப்பர் சாகுபடி நடைபெறுகின்றது. அதனை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் ரப்பர் சாகுபடிக்கு ஏற்ற காலநிலை நிலவுவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 25000 ஹெக்டேர் பரப்பில் ரப்பர் சாகுபடி செய்யப்படுகின்றது. அதில் 5000 ஹெக்டேர் பரப்பு அரசு ரப்பர் கழகத்திற்குச் சொந்தமாக உள்ளது. மீதமுள்ள 20000 ஹெக்டேரில் சிறு, குறு விவசாயிகள் தொடங்கி, பெரு முதலாளிகள் வரை பல்வேறு தரப்பினரும் ரப்பர் உற்பத்தி செய்கின்றனர்.

இந்திய அளவில் ரப்பருக்கான விலை கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ரப்பர் சந்தையில்தான் நிர்ணயிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ரப்பரின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்தே வருகின்றது. தொடர் விலை வீழ்ச்சிக்கு தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது தான் காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர் ரப்பர் சாகுபடியாளர்கள்.

இது குறித்து இவ்விவகாரத்தில் ஆதி முதல் அந்தம் வரை தெரிந்த ஒருவர் கூறும் போது, “குமரி மாவட்டத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 300 டன் ரப்பர் உற்பத்தியாகின்றது. அதில் 6 டன் வரை தான் அரசு ரப்பர் கழகத்தில் இருந்து கிடைக்கின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரப்பர் தொழிலை சார்ந்து உள்ளனர். ரப்பரின் விலை இப்போது வெகுவாக வீழ்ந்து விட்டது. ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்களுக்கு இதனால் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. லாபம் இல்லை என பால்வெட்டும் தொழில் முடங்கிக் கிடக்கின்றது.

Siragu rubber article5

மத்திய அரசு ரப்பர் இறக்குமதி செய்வதற்கு வரி விலக்கு அளித்துள்ளது. தாய்லாந்து நாட்டில் இருந்து 3 லட்சம் டன் ரப்பர் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக அளவு நடைபெறும் ரப்பர் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் கனரக ரப்பர் தொழிற்சாலை தேவை என்ற கோரிக்கை கிடப்பில் கிடக்கின்றது. ரப்பர் தொழிற்சாலை தொடங்கப்பட்டால் அரசுக்குத் தேவையான டயர் உள்ளிட்டவை இங்கேயே தயார் செய்ய முடியும். வியாபாரிகளுக்கு சந்தை வாய்ப்பு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என பலதரப்பிலும் உதவியாய் இருக்கும். தாய்லாந்து நாட்டில் விவசாயத்திற்கு ஏராளமான மானியங்கள் கொடுப்பதும், அவர்களின் பருவநிலை குறைவான செலவில் சாகுபடி செய்யவும் சாதகமாக அமைகின்றது.” என்றார்.

உலக அளவில் ஆட்டோமொபைல் துறையின் சரிவும் ரப்பரின் விலையை வீழ்ச்சியடையச் செய்ததாகவும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரப்பர் பால் வெட்டு தொழிலாளர்களுக்கு ரப்பரின் விலை 250 ரூபாய் இருந்த போது கொடுத்த அதே கூலியைத்தான் இப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இதே நிலை நீடித்தால் ரப்பர் விவசாயமே அழியும் சூழல் ஏற்பட்டு விடும். ரப்பர் இறக்குமதிக்கு வரி விதிக்க வேண்டும். உலகமயமாக்கலுக்குப் பின்பு உலக சந்தையைப் பொறுத்து தான் ரப்பருக்கு விலை உள்ளது. உலக அரங்கில் ரப்பர் விலை வீழ்ச்சி அடைந்தாலும் உலகச் சந்தையின் விலையில் இருந்து இந்திய அரசு கிலோவுக்கு 30 ரூபாய் கூடுதலாக கொடுக்க வேண்டும். என்கின்றனர் ரப்பர் விவசாயிகள். விவசாயிகளின் துன்பத்தை நமது சமூகமும் அரசும் எப்போது கருத்திற் கொள்ளும்.

A narrow focus is more interesting than http://www.essayprofs.com/ broad-based generalizations

சு.நாகராஜன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “துன்பத்துள் வீழும் கன்னியாகுமரி ரப்பர் விவசாயிகள்”

அதிகம் படித்தது