மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மீக்கூறல்

தேமொழி

Jul 18, 2020

siragu thirukkural2

“மீக்கூறல்” என்றால் புகழ்ந்து கூறுதல் என்பது அதன் பொருள். சங்க இலக்கியங்களில் காணப்பெறும் இச்சொல் இந்நாட்களில் வழக்கில் இருப்பதாக அறிய முடியவில்லை. மீக்கூறல் என்றால் அகராதி என்ன பொருள் தருகிறது என்று பார்ப்போமெனில் ஒருவரைப் பற்றி உயர்வாகக் கூறுதல் என்று, அதாவது பாராட்டுதல், அல்லது அவர் பெருமையை வியந்து கூறல் என்ற பொருள் இருப்பதை அறியமுடிகிறது. சங்க இலக்கியங்களில் புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றிலும் திருக்குறளிலும் இடம் பெறும் இச்சொல்லை இடத்திற்கு ஏற்ப என்ன பொருளில் கூறப்படுகிறது என்ற மீள்பார்வை செய்வதன் மூலமாக, இச்சொல் ஒருவர் அடைந்துள்ள உயர்நிலையை உள்ளவாறே உயர்த்திப் பேசல் என்ற பொருளில் வருகிறதா, அல்லது தகுதி இல்லாதவரை மிகைப்படுத்திப் போற்றும் பொருளில் வருகிறதா என ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம்.

“மீ” என்ற ஓரெழுத்து ஒருமொழி ஓர் உயர்நிலையைக் குறிப்பது. ஆகவே, மீ + கூறுதல் = உயர்வாகக் கூறுதல், புகழப்படுதல், போற்றுதல். மீக்கூறு (புகழ்), மீக்கூறல் (புகழ்தல்), மீக்கூற்றம் (புகழ்ச் சொல்), மீக்கூற்று (புகழ்), மீக்கூறுவோர் (புகழ்வோர்), மீக்கூறும் (புகழும், புகழப்படும்), மீக்கூறுதல் (உயர்வாகக் கூறுதல்) என்ற பொருளில் அமைகின்றது. ஆக, அகராதி தரும் விளக்கப்படி,

“மீக்கூறல்” என்ற சொல்லிற்குக் கொண்டாடல், புகழ்தல், வியத்தல் ஆகிய பொருளையும்,

“மீக்கூறு” என்பதற்குப் புகழ், புகழ்ச்சி, மீக்கூற்றம் ஆகிய பொருள்களையும் (கழகத் தமிழ் அகராதி- ப.765) கொள்ளலாம்.

வள்ளுவர் தமது இறைமாட்சி அதிகாரத்தில், குடிமக்கள் அணுகுவதற்கு எளியவராகவும் இன்சொல் கூறுபவராகவும் உள்ள மன்னரின் ஆட்சியை மக்கள் புகழ்ந்து கூறுவார்கள் என்று கூறுகிறார்.

     காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

     மீக்கூறும் மன்னன் நிலம்

(வள்ளுவர் அதிகாரம்: இறைமாட்சி, குறள் எண்:386)

இங்கு, புகழப்படும் சிறப்பைப் பெறுவார் மன்னவர் என்று உயர்வாகப் பேசப்படும் ஒரு நிலையை மீக்கூறும் என்ற சொல் குறிப்பது தெளிவாகிறது. இது உண்மையாக அப்பண்பு பெற்றிருக்கும் ஒருவர் மக்களிடம் பெறும் பாராட்டு. அது உள்நோக்கத்துடன் தகுதி அற்ற ஒருவர் குறித்துக் கூறும் பொய்யுரை அன்று.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் குறித்த செப்பேட்டுக் குறிப்புகளும் தொல்லியல் தடயங்களாக நமக்குக் கிடைக்கிறது. அவைமட்டுமன்றி, சங்கப் பாடல்களில் பத்துப்பாட்டு எட்டுத்தொகை பாடல்களுக்கும் பாட்டுடைத்தலைவனாக (மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை) இலக்கியங்கள் வழியும் இவனை நாம் அறிகிறோம். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சிறந்த வீரனும் அரசனும் மட்டுமல்ல ஒரு சிறந்த புலவனும் கூட என்று காட்டும் புறப்பாடல் ஒன்று உண்டு (புறநானூறு – பாடல்: 72. இனியோனின் வஞ்சினம்!).

இந்த நெடுஞ்செழியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வழி வந்தவன். இவன் மிகச் சிறுவயதிலேயே அரச பொறுப்பை ஏற்கும் சூழல் உருவாகிறது. வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பகைவர் கூட்டம் அவன் நாட்டைக் கைப்பற்றப் படை எடுக்கிறது. ஓரிருவர் அல்ல. பெருவேந்தர்களான சோழர், சேரர், பல குறுநில மன்னர்கள் உட்பட எழுவர் புதிதாய் முடிசூட்டப்பட்ட இளைஞன் மீது கூட்டமாகப் போர் தொடுக்கிறார்கள். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை, திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள் மற்றும் பொருநன் ஆகிய எழுவரும் தலையாலங்கானம் என்னும் இடத்தில் இவனை எதிர்த்துப் போர் செய்தனர். அப்பொழுது அவன் அவர்களை வெல்வேன், இல்லாவிட்டால் என் மக்கள் என்னைக் கொடுங்கோலன் எனத் தூற்றட்டும் என்று வஞ்சினம் கூறுகிறான். நாடு மீக் கூறுநர் நகுதக் கனரே. அதாவது நெடுஞ்செழியனின் இந்த நாட்டைப் புகழ்ந்து கூறுபவர்கள் நகைப்பிற்குரியவர்கள், இவன் இளையவன் என்று எனது மனம் வருந்துமாறு இழிவாகப் பேசும் இப்பகைவர்களை வெல்வேன், அவர்களது முரசுகளையும் கைக்கொள்வேன் என்கிறான்.

     “நகுதக் கனரே, நாடு மீக் கூறுநர்;

     இளையன் இவன் என உளையக் கூறி”

(தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், புறநானூறு – பாடல்: 72. இனியோனின் வஞ்சினம்!)

தலையாலங்கானத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தப் போரில் வெற்றி வாகை சூடியதால் இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்றும் சிறப்பிக்கப்பட்டான். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுடன் போரில் ஈடுபட்ட சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை தோல்வியடைந்து பாண்டியனால் சிறை செய்யப்பட்டான். இவை இரண்டும் ஒரே போரா அல்லது வெவ்வேறு போர்களா என்பது தெரியவில்லை. பின்னர் துணிவுடன் அந்த சிறைக்காவலை வென்று, தப்பித்து தனது நாட்டிற்குச் சென்று மீண்டும் மக்கள் புகழ ஆட்சி செய்தான். இந்த நிகழ்வும் மற்ற ஒரு புறப்பாடலில் (புறநானூறு – பாடல்: 17. யானையும் வேந்தனும்!) குறுங்கோழியூர் கிழார் என்ற புலவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேரன் தப்பிச் சென்றதைக் குழியில் விழுந்த யானை தனது முயற்சியால் தப்பி தனது இனத்தைச் சேர்வதுடன் ஒப்பிட்டுப் பாடுகிறார் புலவர். அப்பாடலிலும் ‘மீக்கூறல்’ என்ற சொல் வருவதைக் காண முடிகிறது.

     நீடுகுழி அகப்பட்ட

     பீடுஉடைய எறுழ்முன்பின்

     கோடுமுற்றிய கொல்களிறு

     நிலைகலங்கக் குழிகொன்று

     கிளைபுகலத் தலைக்கூடியாங்கு

     நீபட்ட அருமுன்பின்

     பெருந்தளர்ச்சி பலர்உவப்பப்

     பிறிதுசென்று மலர்தாயத்துப்

     பலர்நாப்பண் மீக்கூறலின்

     உண்டாகிய உயர்மண்ணும்

(குறுங்கோழியூர் கிழார், புறநானூறு – பாடல்: 17. யானையும் வேந்தனும்!)

பெரிய குழி இருப்பதை அறியாது அதில் விழுந்த யானை, தனது வலிமையான தந்தத்தால் அக்குழியைத் தூர்த்துத் தன்னை விரும்பும் சுற்றத்தோடு சென்று வாழ்ந்ததைப்போல, உனது வலிமையாலும் துணிவாலும் பகைவரின் சிறையிலிருந்து தப்பி வந்த நிகழ்வு உன் சுற்றத்தாரால் புகழ்ந்து கூறப்படுகிறது என்பதை ‘தாயத்துப் பலர்நாப்பண் மீக்கூறலின்’ என்று கூறிப் பாராட்டுகிறார் புலவர்.

புலவர் மார்க்கண்டேயனார் எழுதிய புறநானூற்றுப் பாடலில் (புறநானூறு – பாடல்: 365. நிலமகள் அழுத காஞ்சி!) இவ்வுலகில் போற்றத்தக்க அருஞ்செயல்கள் பல செய்து புகழ் ஈட்டி வாழ்ந்த மன்னர்கள் பலரும் மறைந்துவிடத் தான் மட்டும் இன்னமும் இறவாமல் இருக்கின்றோமே என்று நிலமகள் வருந்துவதாகக் கருத்து புனையப்படும் பாடலில்,

     பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்

     முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும்

     விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற

     உள்ளேன் வாழியர் யான்எனப் பன்மாண்

     நிலமகள் அழுத காஞ்சியும்

     உண்டென

(மார்க்கண்டேயனார்; புறநானூறு – பாடல்: 365. நிலமகள் அழுத காஞ்சி!)

இங்கு மீக்கூறல் புகழ் என்ற பொருளில் காட்டப்படுகிறது.

அடுத்துக் காட்டப்படும் இரு பாடல்களும் அவ்வாறே இறந்த மன்னரின் புகழ் குறித்து புலவர்கள் இருவர் வருந்திப் பாடும் புறநானூற்றுப் பாடல்களே. முதலில், தனது மக்களுடன் மனவேற்றுமை கொண்டு அவர்களுடன் போர்தொடுக்க முற்பட்டு, பின்னர் அதைக் கைவிட்டு வடக்கிருந்து உயிர்துறந்த கோப்பெருஞ்சோழன் பற்றிய பாடல் ஒன்று.

கோப்பெருஞ்சோழனின் மறைவு குறித்து வருந்தும் புலவர் பொத்தியார் எழுதிய பாடலில் (புறநானூறு – பாடல்: 223. நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்!).

     பலர்க்கு நிழலாகி, உலகம் மீக் கூறித்

     தலைப்போகு அன்மையிற் சிறுவழி மடங்கி

     நிலைபெறு நடுகல் ஆகிய …

(புலவர் பொத்தியார், புறநானூறு – பாடல்: 223. நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்!)

பலருக்கு நல்வாழ்வு தந்து ஆதரித்து, உலகத்தார் உனது செயலைப் போற்றிப் புகழுமாறு நீ செய்து வந்த மக்கள் பணியை முற்றிலும் செய்து முடிக்க வழியின்றி வடக்கிருந்து உயிர் துறந்து இவ்வாறு சிறிய இடத்தில் ஒரு நடுகல்லாக உனது வாழ்வை முடித்துக் கொண்டாயே மன்னா, என்று கையறு நிலையில் புலவர் பொத்தியார் புலம்புகிறார். மன்னரின் சிறப்பை மக்கள் போற்றுவதை மீக்கூறல் என்கிறார் புலவர்.

இவ்வாறு புலவர் பொத்தியார் போன்றே மற்றொரு புலவரான பேரெயில் முறுவலார் என்பவர் மற்றொரு புறநானூற்றுப்பாடலில் (புறநானூறு – பாடல்: 239. இடுக சுடுக எதுவும் செய்க!) நம்பி நெடுஞ்செழியன் என்ற பாண்டிய நாட்டைச் சார்ந்த ஒரு பகுதியை ஆண்ட குறுநில மன்னர் ஒருவர் மறைந்த பிறகு பாடும் கையறு நிலைப் பாடலில், அவரும் மன்னரின் புகழைக் குறிப்பிடுகையில் மீக்கூறல் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

     செற்றோரை வழிதபுத்தனன்;

     நட்டோரை உயர்புகூறினன்;

     வலியரென வழிமொழியலன்;

     மெலியரென மீக்கூறலன்;

     பிறரைத்தான் இரப்பறியலன்;

     இரந்தோர்க்கு மறுப்பறியலன்;

     வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்;

(புலவர் பேரெயில் முறுவலார்; புறநானூறு – பாடல்: 239. இடுக சுடுக எதுவும் செய்க!)

பகைவரை அவர்களின் சுற்றம் முதற்கொண்டு கிளையோடு வேரறுத்தவன், ஆனால் நண்பர்களைப் புகழ்ந்து போற்றியவன். வலிமையானவர் ஒருவர் என்று அவரிடம் பணிந்து பேசமாட்டான், ஆனால் தன்னைவிட வலிமை குறைந்த ஒருவரிடம் தனது புகழைக் கூறிக் கொண்டிருக்கவும் மாட்டான், தனக்கென்று எதையும் யாரிடம் இரந்து கேட்க மாட்டான், ஆனால் அவனிடம் இரப்போருக்கு அளிக்காமல் இருக்கவும் மாட்டான். வேந்தர்கள் கூட்டத்தில் தனது புகழை நிலைநாட்டியவன் அவன் என்று நம்பி நெடுஞ்செழியனைப் புகழ்ந்து கூடுகிறார். இத்தகைய மேன்மையான ஒருவன் மறைந்துவிட்டான் அவனைப் புதைப்பதோ அல்லது எரிப்பதோ எதைச் செய்தால்தான் என்ன என்று மனம் வெதும்புகிறார். இதில் மன்னன் தற்பெருமை பேசமாட்டான் என்பதைக் குறிப்பிட மீக்கூறல் செய்வது அவன் வழக்கமன்று என்று கூறுகிறார் புலவர்.

தற்புகழ்ச்சி உடையாரைப் புகழ்தல் கூடாது என்ற கருத்தை முன்வைக்க விரும்பும் முன்றுரையரையனார் எழுதிய பழமொழி நானூறு பாடல் ஒன்றும்,

     தாயானும் தந்தையா லானும் மிக(வு)இன்றி

     வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல்

     நோயின்(று) எனினும் அடுப்பின் கடைமுடங்கும்

     நாயைப் புலியாம் எனல்.

(முன்றுரையரையனார் எழுதிய பழமொழி நானூறு பாடல்)

திறமையுள்ளவர் என்று பெற்றெடுத்த தாய் தந்தையரால் நற்சான்று அளிக்கப்படும்படி நடக்காமல் தானே தன் செயல்களை வியந்து பாராட்டிக் கொண்டிருக்கும் ஒருவரை, மற்றவரும் அவ்வாறே போற்றுவதில் சிறப்பில்லை. அது அடுப்பருகே சோம்பி முடங்கிக் கிடக்கும் நாய் ஒன்றைப் புலி என்று புகழ்வதற்கு ஒப்பாக அமைந்துவிடும் என்று கூறுகிறது. இங்கு வாயின்மீக் கூறும் செய்யலான தற்புகழ்ச்சி விரும்பத்தக்கதல்ல, ஊக்குவிக்கக் கூடிய செயல் அல்ல எனச் சுட்டப்படுகிறது.

பெரியாழ்வார் எழுதிய “திருமாலிருஞ்சோலை எம்பெருமானை மீக்கூறல்” என்று பெருமாளைப் புகழும் காலத்தால் பிந்திய இலக்கியம் தவிர்த்து, பெரும்பாலும் மீக்கூறல் அரசன் குறித்த புகழ் என்பதுடன் மட்டும் பயனிலிருந்திருப்பதும் தெரிகிறது. பெருவீரச்செயல்காட்டிப் பகைவரோடு போர் செய்தலைக்கூறும் தும்பைத்திணைக்கு விளக்கம் கூறும் சபாபதி நாவலர் “தும்பைத்திணையாவது-ஒருவேந்தன் தன் வலியினை உலகம் மீக்கூறல் வேண்டி” மேற்செல்லும் ஒரு செயலாக விவரிக்கும் பொழுது மீக்கூறல் என்பதை அவரது திராவிடப் பிரகாசிகை (1976) நூலில் எடுத்தாள்கிறார். இலக்கிய வழக்கில் பெருமை மிக்க தக்கார் ஒருவரை ஏத்துதல், தகுதியுள்ளவரைப் போற்றுதல், பாராட்டாக உயர்த்திக்கூறல், உள்ளது உள்ளவாறாகவே உயர்வாகப் பேசுதல் என்ற பொருளில்தான் மீக்கூறல் இடம் பெறுதலைக் காண இயல்கிறது. மிகுத்துக்கூறல், மிகைப்படுத்துதல் அல்லது மிகைப்படப் பேசுதல் என்ற பொருள் கொள்ள வழியில்லை என்பதும் புரிகிறது.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மீக்கூறல்”

அதிகம் படித்தது