மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முகநூலில் விளம்பரங்கள் செய்யலாமா?

சிறகு நிருபர்

May 2, 2015

facebook3முகநூல் என்று அழைக்கப்படும் Facebook-ஐ பயன்படுத்தாத இளைஞர்களே இல்லை என்று ஆகிவிட்டது. இந்தியா முழுக்க அனைத்து வயதினரும் முகநூல் கணக்கு துவங்கி தங்களது நண்பர்களுடன் இணைந்து உறவாடி தகவல் பரிமாறிக்கொள்கின்றனர். செய்திகளை அறிந்து கொள்வதற்கும் கேளிக்கைக்கும், பொழுதுபோக்கிற்கும் பயன்படும் முக்கிய ஊடகமாக முகநூல் ஆகிவிட்டது. தினசரி சில மணி நேரங்கள் வரை முகநூலில் தமது நேரத்தை செலவு செய்யும் நபர்கள் அனேகம். இவ்வாறு ஒரு ஊடகம் புகழ்பெறுகிறது என்றால் வணிகர்களும் வியாபாரிகளும் தங்களுடைய பொருள் விற்பனைக்கு அந்த ஊடகத்தில் விளம்பரம் செய்ய முயற்சிப்பார்கள். அந்த வகையில் முகநூல் நிறுவனமே விளம்பரம் செய்வதற்கு ஏராளமான வசதிகளை செய்து தந்துள்ளது.

முகநூலில் வரிகள், படங்கள், காணொளிகள் என்று மூன்று வகையான உள்ளீடுகள் பயனர்களால் செலுத்தப்படுகிறது. மேலும் தனிநபர், குழு, பக்கம் என்று மூன்று வகையான கணக்குகள் முகநூலில் இயங்குகிறது. இவற்றை சரியான முறையில் பயன்படுத்தினால் எந்த ஒரு நிறுவனமும் தங்களது பொருட்களை சிறப்பாக விளம்பரம் செய்து முகநூல் ஊடகத்தைக் கொண்டு பயன்பெறலாம். முகநூலில் என்னென்ன வகையான விளம்பரங்கள் செய்வதற்கு வசதிகள் உள்ளன என்று பார்ப்போம்.

கீழ்காணும் விடயங்களை முகநூலில் பணம் செலுத்தி விளம்பரப்படுத்தலாம்.

  1. செய்திகள், படங்கள், காணொளிகள் (Post)
  2. முகநூல் பக்கம் (Facebook Page)
  3. இணையதளம் (Websites)
  4. நிகழ்வுகள் (Events)
  5. அலைபேசி செயலிகள் (Mobile apps)

மேலே சொல்லப்பட்ட ஒவ்வொன்றுக்கும் விளம்பரம் செய்ய வழிமுறைகள் வேறுவேறாக உள்ளன. அவற்றைப் பின்பற்றி செய்துவிட்டு கடன்அட்டை மூலமாக முகநூல் நிறுவனத்திற்கு பணத்தை செலுத்தி விடலாம். எத்தனை பேருக்கு விளம்பரம் சென்று சேர்ந்திருக்கின்றது, அதில் எத்தனை பேர் சுட்டியை அழுத்தி ஆர்வத்துடன் பார்த்தனர், எவ்வளவு பணம் செலவாகியிருக்கிறது, செலவுக்கான நுண்ணிய விபரங்கள் போன்றவை முகநூல் நிறுவனத்தால் தெளிவாக விளம்பரம் செய்பவருக்கு தரப்படுகிறது. இணையத்தின் பயன்பாடு அதிகம் இருக்கக்கூடிய நகரங்களில் முகநூல் விளம்பரம் நல்ல வரவேற்பைப் பெறுகிறது.

அடிப்படையாக முகநூல் என்பது புகைப்படங்கள் சார்ந்த ஊடகம் என்பதால் படங்களை விளம்பரத்துக்கு பயன்படுத்தும் எந்த ஒரு நிறுவனமும் முகநூல் விளம்பரங்களை தமது வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். உதாரணமாக நகைக்கடைகள், துணிக்கடைகள், அழகுசாதனங்கள் போன்ற பொருட்களை விற்கும் நிறுவனங்கள் எளிதாக தமது புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டு பரப்புரை செய்யலாம். சிறந்த பொருட்களின் அழகிய படங்களை எடுத்து முகநூல் நிறுவனத்திற்கு விளம்பரக் கட்டணம் செலுத்தி மக்களிடையே பரப்புரை செய்யலாம். முக்கியமாக முகநூலில் விளம்பரம் செய்யும் கட்டணம் தற்போது மிகவும் குறைவாக உள்ளது. இந்தியாவில் அதிக விழிப்புணர்ச்சி இல்லாததனால் கட்டணங்கள் குறைக்கப்பட்டு உள்ளன. இதனைப் பயன்படுத்தி ஏராளமான நிறுவனங்கள் மக்களிடையே பொருட்களை கொண்டு சேர்த்து வருகின்றன. சிறு நிறுவனங்கள் தனிநபர்கள் போன்றோர் கூட குறைந்த பட்சம் நூறு ரூபாய் செலவிலேயே தமது விளம்பரங்களை துவக்கலாம்.

இத்தகைய விளம்பரங்கள் எத்தனை நாட்கள் செய்யப்படவேண்டும், ஒரு நாளுக்கு உச்சபட்ச விளம்பர செலவுத்தொகை, எந்த பாலினத்திற்கு விளம்பரம் காட்டப்படவேண்டும், எந்த வயதினருக்கு காட்டப்படவேண்டும், எத்தகைய ஆர்வம் கொண்டோருக்கு காட்டப்படவேண்டும், எந்த நகரத்தில் மட்டும் காட்டப்படவேண்டும் என்றெல்லாம் தனித்தனியாக உள்ளீடு செய்வதற்கு முகநூலில் வசதிகள் உள்ளன. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு விளம்பரங்களை கொண்டு சேர்க்க முடியும். முகநூலை கணிணியில் மட்டும் பார்ப்பவர்களுக்கென்று விளம்பரம் செய்ய இயலும், அதே போல அலைபேசியில் பார்ப்பவர்களுக்கும் அல்லது இருவருக்கும் விளம்பரம் செய்யமுடியும். இவ்வாறு எளிமையான வகையில் ஏராளமான வசதிகள் முகநூல் நிறுவனத்தால் செய்யப்பட்டிருக்கின்றன.

தமக்கு இவ்வகை விளம்பரம் உகந்ததா என்று ஆய்வு செய்து நிறுவனங்கள் இவ்வசதியை பயன்படுத்தி வளர்ச்சி பெறலாம். வரும் கட்டுரைகளில் மேலும் விரிவாக விளம்பரம் செய்யும் முறைகளையும் உத்திகளையும் பார்க்கலாம்.


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முகநூலில் விளம்பரங்கள் செய்யலாமா?”

அதிகம் படித்தது