மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முடிவில்லா முகாரி! (கவிதை)

ராஜ் குணநாயகம்

Jun 4, 2016

mugaari1

மலையகம்

குட்டித்தீவிலே

ஒரு எழில் கொஞ்சும் மலைநகரம்

கந்தகப்பூமியிலே

ஒரு அதிசய குளிர்ப்பேழை!
உயரத்தில்-மலை மீது

உயரத்தில் வாழ்வதால்

மலையகத்தார் என்கின்றனர்

எங்கள் வாழ் நிலையோ

பொருளாதார தாழ் நிலத்தில்………….

எங்கு பார்த்தாலும்

பசுமையாய் புன்னகைத்திடும்

தேயிலைத்தோட்டங்கள்

எங்கள் லயன் வீடுகளோ

தோட்டம் ஏதும் இல்லாத

நீண்ட அடிமை வாழ்வின் சாட்சிக்கூடங்கள்!
mudivillaa mugaari1

மலையில், குளிரில்

தேயிலை கொழுந்துகள்

பறித்து பறித்தே

தேய்ந்துபோனது எங்கள் கைரேகைகள்

இருந்தும்

நாங்களோ

தேசத்தின் பொருளாதாரத்தின்

வலது கைகள்………………

கூடை கூடையாய்

கொழுந்துகள் சுமந்தே

கூனிப்போனது எங்கள் முள்ளந்தண்டுகள்

இருந்தும்

எங்களால்

நிமிர்ந்துகொள்கிறது

தேசத்தின் பொருளாதாரம்!

 

இத்தீவிலே

வெள்ளையன் வந்துதானே

கிறிஸ்தவம் வந்தது

அண்டை நாட்டு வியாபாரிகள் வந்துதானே

இஸ்லாம் வந்தது…………….

எவ்வாறு

நாம் மட்டும்

வந்தேறு குடிகளானோம்

குடியுரிமை பறிக்கப்பட்டோம்

வாக்குரிமை பறிக்கப்பட்டோம்

நாடற்றவர்களானோம்

வீடற்றவர்களானோம்

காந்தி தேசம்

புத்தன் தேசம்

இரண்டும் சேர்ந்து செய்த வஞ்சனையில்

நாடு கடத்தப்பட்டோம்

ஏன்

சொந்தமாய் ஒரு பரப்பு நிலம் கூட இல்லாத

தோட்ட தொழிலாளிகளாலானோம்

ஓ………

தமிழராய் பிறந்ததுதான்

எம் சாபமோ!
mudivillaa mugaari2

சாதீய தமிழனின்

சாதிய சிறைகளுக்குள்

எங்கள் உணர்வுகள்!
பேரினவாதிகளின்

காலடியில்

எங்கள் சுதந்திரங்கள்!
மொழி உரிமையும்

சம உரிமையும்

ஊமையாகவே அழுகிறது

துப்பாக்கிகளுக்கு பயந்து!
தொழிற்சங்கங்களின்

பணப்பைகளுக்குள் பங்கிடப்படும்

எங்கள் வியர்வைத்துளிகள்!
அரசியல்வாதிகளின்

அரசியல் சதுரங்கத்தில்

எங்கள் வாழ்வின் எதிர்காலம்!
தேர்தல் என்று வந்துவிட்டால்

அள்ளி வீசப்படும் வாக்குறுதிகள்

வானுயர தொட்டுவிடும்……

கேட்டும் கேளாதிருந்தால்

திரிசங்கு சொர்க்கம் கூட

அமைத்திடும் கற்பனை வெள்ளம்!
மீண்டும் மீண்டும் தொடரும்

வாக்குறுதி எனும் தொடர் நாடகம்

தேர்தல் காலத்து

முடிவில்லா தொடர்கதைகள்

விடையில்லாமல் தொடரும்

எங்கள் வாழ்க்கையெனும் விடுகதை!
வெள்ளையன் அன்று போட்ட

அடிமை விலங்கு

நூற்றாண்டுகள் கடந்தும்

இன்னும் நீங்கவில்லை

இறக்கிவைக்கப்படாத சிலுவைகள்!

 

நாம் பாவிகளானால்

இறைவா

எமக்காய் சிலுவை சுமந்திட

மீண்டும் வாரீரோ!
இங்கே

இதயமில்லா மனிதர்களுக்குத்தான்

கண்களுமில்லை

இறைவா

உனக்குமா கண்களில்லை………….
எங்கள் கால்களுக்கோ

என்றும் ஓய்வுமில்லை

எங்கள் விழிகளிலோ

இனியும் ஈரமில்லை!
mugaari fi

இங்கே

நல்லாட்சியும்

வெறும் சொல்லாட்சிதான்

ஜனநாயகம் என்பதுவும்

பொய் முகமூடிதான்

குள்ளநரிக்கூட்டத்தின்

கண்கட்டி வித்தைகள்தான்

புதிய மொந்தையில் பழைய கள்!
கண்ணகியின் சாபம்

மதுரையை எரித்தது

பாஞ்சாலியின் கோபம்

கௌரவர்களை வதம் செய்தது

சீதையின் கண்ணீர்

இலங்கை வேந்தனை துவம்சம் செய்தது………..

 

எம் கண்ணீரின் சாபம்

ஏகாதிபத்தியங்களையும்

ஒடுக்குமுறைகளையும்

அழிதொழித்திடாதோ

இக்கலியுலகில்!
என்று ஓயுமோ-எங்கள்

முடிவில்லா முகாரி…………………

-ஈழன்-


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முடிவில்லா முகாரி! (கவிதை)”

அதிகம் படித்தது