மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதல் சுதந்திரப்போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-9

கி.ஆறுமுகம்

Oct 3, 2015

puli thevar4கோட்டைச் சுவரை காத்து நின்ற மறவர் படை வீரர்கள் தங்கள் உயிரை நினைத்து அஞ்சாமல் போர் புரிந்தனர். வெள்ளையனின் பீரங்கி குண்டுகள் கோட்டைச் சுவரை துளைக்கும் போது ஏற்படும் ஓட்டையை, உடனுக்கு உடன் செப்பணிட்டு சுவரை சரி செய்தனர். சிலர் அச்சமயம் உடல் சிதறி இறந்தனர். சிலர் சுவரின் ஓட்டையை அடைக்க தங்கள் உடலைக் கொண்டு நின்றனர், அவர் இறந்ததும் மற்றொருவர் நிற்பார் இதுபோன்று கோட்டையைக் காத்து நின்றனர். இவர்களின் வீரத்தினைக் கண்டு வெள்ளையர்கள் நிலைகுலைந்தனர். பின்னர் புலித்தேவரை வெற்றிகொள்ள வேண்டுமெனில், அவரிடம் நட்புடன் இருக்கும் மற்ற பாளையங்களை வெற்றி பெற்று, பின்னர் இறுதியில் புலித்தேவரைத் தாக்க வெள்ளையர்கள் திட்டம் தீட்டினர்.

அதன்படி 1766ல் கொள்ளங்கொண்டான் பாளையத்தினைத் தாக்கி நீண்ட போருக்குப் பின் கோட்டையைக் கைப்பற்றினார்கள். பின் சேத்தூர் பாளையத்தினைத் தாக்கினார்கள், இந்தப் போரிலும் வெள்ளையர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கோட்டையைக் கைப்பற்றினார்கள். பின் 1767ம் ஆண்டில் நடைபெற்ற போர் புலித்தேவரின் இறுதிப்போர் எனக்கூறலாம். இந்த இறுதிப்போரில் வெள்ளையர்களின் படைக்குத் தளபதியாக இருந்தவன் டொனல்டு காம்பெல். இவன் பெரும் படையுடன் வந்து புலித்தேவர் கோட்டையைத் தாக்கினான். இந்த இறுதிப் போர் மிக நீண்ட நாட்கள் நடைபெற்றது. வெள்ளையர்கள் சக்தி வாய்ந்த பீரங்கிக் குண்டுகளை வீசியும், கோட்டைச் சுவரை ஒன்றும் செய்யமுடியாமல் திணறினர்.

pulithevar1மறவர்கள், கோட்டைச் சுவரின் கொத்தளங்களில் இருந்து கொண்டு கோட்டையைக் காத்து நின்றார்கள். இந்தப் போரில் புலித்தேவரின் படைவீரர்கள் கோட்டைச் சுவரில் காத்து நின்றதை டொனல்டு காம்பெல் பிரிட்டனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது பின்வருமாறு. “இந்தக் கோட்டைச் சுவர் வெறும் களிமண்ணாலும், வைக்கோலாலும் சேர்த்து கட்டப்பட்ட சுவர். ஆனால் இந்த சுவரில் நமது சக்தி வாய்ந்த பீரங்கி குண்டுகளினால் கூட சிறு விரிசலோ, அதிர்வுகளோ உண்டு பண்ண முடியவில்லை. மிக வலிமை வாய்ந்ததாக இந்தக் கோட்டைச் சுவர் உள்ளது. நாம் பல நவீன ஆயுதங்கள் கொண்டு போர் செய்கிறோம். இந்த தமிழ் மறவர்கள் ஈட்டியை மட்டும் வைத்துக்கொண்டு போர் செய்கின்றார்கள். அதுவும் சுமார் 18 அடி நீளம் உள்ள இந்த ஈட்டியை இவர்கள் உபயோகிக்கும் லாவகம். இதைக் கண்டு நாம் வியக்காமல் இருக்க முடியாது. இவர்களது வீரம் உலகில் உள்ள எந்த போர்வீரர்களிடம் இருக்காது.

இவர்கள் கோட்டைச் சுவரில் சிறு வழி மட்டும் தான் உள்ளது. அந்த வழியாக கதவை உடைத்துத்தான் உள்ளே செல்ல வேண்டும். அவ்வாறு நாம் உள்ளே சென்றால் நமக்கு பல உயிர்பலி ஏற்படும். இந்தத் தமிழ் மறவர்கள் உயிரைப் பற்றி சிறிதும் அச்சம் அடையவில்லை. இவர்கள் கோட்டைச் சுவரில் துளை உண்டானது, உடனே அந்தத் துளை சரிசெய்யப்படுகிறது. வேறு இடத்தில் அது போன்ற துளையில் சிலர் தங்கள் உடலைக் கொண்டு அடைத்து நிற்கின்றனர். குண்டு வந்து வீழ்ந்ததும் உடல் சிதறுகிறது, பின்னர் மற்றொருவர் வந்து நிற்கிறார். இறந்த உடல்களை அவர்கள் அப்புறப்படுத்தவும் இல்லை. மனித உடல் இரத்தமும் சதையும் சிதறுவதைக் கண்டு அச்சம் கொள்ளவும் இல்லை. ஒருவர் பின் ஒருவராக இறந்தாலும் கவலை சிறிதும் இல்லை, இறந்த உடல்கள் மீது குண்டு வீழ்ந்து அந்த உடல் சிதறினாலும் அவர்கள் கவலை அடையவில்லை. இது போன்று கோட்டைச் சுவரை, உலகில் வேறு எந்த படையினரும் காத்து நின்றிருக்க மாட்டார்கள்”.

மறவர் படையில் உயிர் இழந்தவர்கள் அதிகம், வெள்ளையர்கள் படையில் உயிர் பலி குறைவாக உள்ளது. இந்தப் போர் நடைபெறும் போது மழை பிடித்துக் கொண்டது, மிக நீண்ட மழையாக இருந்தது. எதிரிகள் கோட்டையை விட்டு வெளியேறி சென்றுவிடக் கூடாது என்பதற்காக இரவில் மிகத் தீவிர கண்காணிப்பில் வெள்ளையர் இருந்தனர். மிக நீண்ட போராக இருந்த இந்தப் போரில், கோட்டைச் சுவர் சிறிது சிறிதாக உடைந்தது. வெள்ளையர்கள் கோட்டையைக் கைப்பற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையில், மிகத் தீவிரமாக குண்டுகளை வீசுகின்றனர். கோட்டையைக் கைப்பற்றுகின்றனர் இறுதியில். கோட்டையின் உள் சென்று புலித்தேவரைக் கைது செய்து விட முடியும் என்ற நினைப்பிலும், நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மகிழ்ச்சியிலும் கோட்டையில் நுழைகின்றனர் வெள்ளையர்கள். ஆனால் கோட்டையில் புலித்தேவர் இல்லை. இது வெள்ளையர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.

puli thevar2இந்த வீரர்கள் எப்படி தப்பிச் சென்றார்கள், இந்தக் கொட்டும் மழையிலும் நாம் இரவு பகலாக கண்காணித்தும், இவர்களைத் தப்பிக்க விட்டுவிட்டோமே என்று வெள்ளையர்கள் எண்ணினார்கள். புலித்தேவர் இரவில், மழையில் வெள்ளையர்கள் கண்ணில் படாமல் மின்னல் வேகத்தில் மேற்கு மலைத் தொடர்ச்சியை நோக்கி காட்டுக்குள் சென்று விட்டார். அந்த காட்டுக்குள் வெள்ளையர்கள் செல்வது கடினம், செல்லும் பாதை மிகவும் கரடுமுரடான காட்டுப் பாதை, அடர்ந்த காடு. அதில் புலித்தேவரைத் தேடி கைது செய்வது வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமான காரியமாக இருந்தது. காட்டுக்குள் சென்ற புலித்தேவர் அங்கு இயற்கையாக அமைந்த ஒரு குகையில் தங்கியிருந்தார். அந்த குகையானது உள்ளுக்குள் பலர் அமர்ந்து ஆலோசனை செய்வதற்கு தகுந்த இடம் போன்றும், அரசர் அமரும் சிம்மாசனம் போன்ற ஒரு பாறையும் உள்ளுக்குள்ளே இருந்தது. அதில் புலித்தேவர் தனது வீரர்களுடன் தங்கியிருந்தார். அங்கிருந்து கொண்டு, படையைத் திரட்டிக் கொண்டு போருக்குத் தயாராக வேண்டும் என்று பலர் புலித்தேவருடன் அடுத்த கட்டப்போரின் செயல்பாடுகளைப் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த குகையை இன்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் நாம் சென்றால் பார்க்க முடியும்.

குகையில் இருந்து கொண்டு வீரர்கள் போர் பயிற்சி செய்ய தொடங்கினார்கள். இவர்களுக்கு உணவை ஊர் மக்கள் கொடுத்தனர். கிராமத்து மக்கள் காட்டுப் பகுதிக்கு ஆடு மாடு மேய்த்தல், காட்டு விறகு எடுக்க செல்லுதல் போன்ற வேலைக்கு காட்டுக்குச் செல்லுவது போன்று காட்டுக்குள் செல்லும் போது, அவர்கள் ஒரு பனை ஓலை பெட்டியில் சோற்றை வைத்து எடுத்துச் செல்லுவார்கள். காட்டுக்குள் சென்று ஒரு பாறையின் மீது அந்த சோற்றுப் பெட்டியை வைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்து விடுவார்கள். வீரர்கள் பகல் முழுவதும் குகையினுள் இருந்துவிட்டு, இரவில் குகையை விட்டு வெளிவருவார்கள். சோற்றுப்பெட்டி உள்ள பாறைக்கு வந்து சோற்றுப்பெட்டியை எடுத்துக்கொண்டு குகைக்குச் சென்று அனைவரும் உணவு அருந்துவார்கள்.

-              வேட்டை தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல் சுதந்திரப்போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-9”

அதிகம் படித்தது