மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-3

கி.ஆறுமுகம்

Aug 22, 2015

puli thevar10புலித்தேவர் கோட்டையை தகர்க்க முடியாமல் தோல்வி அடைந்து திருச்சி திரும்பிய ஆங்கிலப்படைத் தளபதி கெரான் மற்றும் நவாப்பின் படையினர் அவமானத்தின் உச்சிக்கே சென்றனர். புலித்தேவரின் கோட்டையில் சிறு விரிசலைக் கூட ஆங்கிலேயரின் பீரங்கி குண்டுகள் ஏற்படுத்த முடியவில்லை. அவரின் கோட்டை மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்தது. புலித்தேவர் கோட்டையை பனை ஓலை, பனை நார், சுண்ணாம்பு, வரகு, குதிரை வாலி, கடுக்காய், பதநீர், முட்டை, பெரிய சிறிய கூழாங்கற்கள், கருப்பட்டி, தானியங்களின் வைக்கோல்கள், கம்பப் பசை மற்றும் பல்வேறு பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டது. அந்நாட்களில் நமது தமிழ் மன்னர்கள் கோட்டைகளை இம்முறையிலேயே கட்டினார்கள். எனவே தான் அந்நியனின் பீரங்கிக் குண்டுகளினாலும் சேதம் அடையாமல் நமது மன்னர்களின் வீரநெஞ்சம் போன்று, கோட்டை சுவரும் கம்பீரமாக நின்றது.

புலித்தேவர் அந்நியர்களை விரட்டி அடித்த செய்தி தென்னகம் எங்கும் காட்டுத் தீ போன்று பரவியது. புலித்தேவரின் புகழ் மற்ற பாளையங்களிலும் உயர்ந்தது. புலித்தேவர், மறவர் பாளையங்கள் அனைத்தையும் ஒரு அணியில் சேர்த்து, அந்நியர்களை நம் மண்ணில் இருந்து விரட்ட திட்டமிட்டார். தமது நெற்கட்டான் செவ்வல் கோட்டையை மேலும் வலிமை உடையதாக மாற்றினார். மேலும் ஊத்துமலை, பனையூர், வாசுதேவநல்லூர், கொல்லங்கொண்டான், களக்காடு போன்ற இடங்களில் கோட்டையைக் கட்டினார். இதில் களக்காடு இயற்கை பாதுகாப்பைக் கொண்டது, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்தது, இதன் அருகில் பேயாறு ஓடியது. கோட்டையின் அருகில் இருந்த அடர்ந்த காடுகளைத் தாண்டி கோட்டையை நெருங்குவது என்பது, அந்நியர்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

புலித்தேவர் அமைத்த கோட்டைகள் அனைத்தும் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டதாக அமைந்தது. கோட்டைச் சுவரில் பல கொத்தளங்கள் இருந்தது. சுவரில் துளைகள் இருந்தது. கொத்தளங்களில் இருந்த போர்வீரர்கள், இந்தத் துளையின் வழியாக எதிரிகளைப் பார்க்க முடியும், ஆயுதங்களைக் கொண்டு தாக்க முடியும். எதிரிகளுக்கு நமது வீரர்கள் எங்கு உள்ளார்கள் என்பது தெரியாது. கோட்டை சுவரில் பல கொத்தளங்களை அமைத்து, பல வீரர்கள் அங்கு கோட்டையை பாதுகாக்கும் பணியில் இருந்தனர். போர் செய்வதைக் குலத்தொழிலாகக் கொண்ட மறவர்கள், அந்நியர்கள் மீண்டும் படை எடுப்பார்கள் என்பதை அறிந்து போர் ஆயுதங்களை தயார் செய்தனர். பல ஆயுதங்களை புதியதாக உருவாக்கினார்கள். நம் தமிழ் மறவர்களிடம் வெள்ளையன் பயன்படுத்தியது போன்று அதி நவீன துப்பாக்கி, பீரங்கி குண்டுகள் இல்லை. போர் செய்வதைத் தொழிலாகக் கொண்ட நம் மறவர்கள் பயன்படுத்தியது ஈட்டியும், வேலும், வேல்கம்பும், வாளும், வல்லயமும், வளை தடிகளும் தான். அன்னியர் போர் முறையும், நம் தமிழர் போர் முறையும் முற்றிலும் வேறுபட்ட ஒன்று. புலித்தேவரின் வீரர்கள் போர் ஆயுதங்களைத் தயார் செய்து போர் பயிற்சியிலும் ஈடுபட்டனர். புலித்தேவர், மீண்டும் அந்நியரின் படை எடுப்பை தோற்கடிக்க மற்றும் அந்நியனை நம் மண்ணை விட்டே விரட்டியடிக்க, அனைத்து மறவர் பாளையங்களும் ஒரே அணியில் நிற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

puli thevar9புலித்தேவர் ஆணையிட்டால் அதனை ஏற்று புலித்தேவரின் தலைமையில் போர் செய்யத் தயார் என்ற நிலையில் மறவர் பாளையங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்தன. ஊத்துமலை, சேத்தூர், தலைவன் கோட்டை, கொல்லங்கொண்டான், வடகரை, சுரண்டை, ஊர்க்காடு, சிங்கம்பட்டி, நடுவக்குறிச்சி போன்ற பாளையங்கள் அனைத்தும் புலித்தேவருக்கு அந்நியனை எதிர்க்க வாக்குறுதி கொடுத்தனர். இதனை அடுத்து மதுரை பாளையங்கள் புலித்தேவரின் அணியில் சேர்ந்தது மற்றும் திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்டவர்மனும் புலித்தேவரின் அணியில் சேர்வதாக அறிவித்தார். 1755ல் நடந்த போரில் புலித்தேவரிடம் தோற்று உயிர் பிழைத்தால் போதும் என்று புறமுதுகுகாட்டி, போருக்கு பயன்படுத்திய ஆயுதங்களை அப்படியே போட்டுவிட்டு திருச்சிக்கு ஓடிய கெரான் மற்றும் நவாப்பின் படையினரிடம் இருந்து நவாப்புக்கும் கெரானிடம் இருந்து சென்னைக்கும், இங்கிலாந்துக்கும் கடிதம் சென்றது. அந்தக் கடிதத்தில் “புலித்தேவரின் வீரத்திற்கு முன் நம் ஆயுதங்கள் போதாது, வீரர்களும் போதாது இன்னும் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் பல வீரர்கள் கொண்டு புலித்தேவரை வெற்றிகொள்ள முயற்சிக்கலாம்” என்று தெரிவித்திருந்தனர்.

திருச்சியில் இருந்த வெள்ளையர்களுக்கு, தம்மை விரட்டியடிக்க மற்ற பாளையங்களை ஒரே அணியில் திரட்டுகிறார் புலித்தேவர் என்ற செய்தி கிடைத்ததும், உடனே சென்னை மற்றும் ஆற்காடு நவாப்புக்கு உடனடி அவசர செய்தியாக புலித்தேவரின் முயற்சிகள், திட்டங்கள் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்து, ஆற்காடு நவாப் வெள்ளையனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அது புலித்தேவரின் முயற்சிகள், அனைத்தையும் முளையிலேயே அறுத்து விட வேண்டும், இல்லையெனில் நாம் தோற்பது உறுதி. நாம் இதற்கு உடனடி தீர்வு எடுக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள். புலித்தேவரின் அணியில் மேற்கு மறவர் பாளையங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இருந்தன. கிழக்கு பாளையங்கள் புலித்தேவரின் அணியில் சேரவில்லை தனித்து இருந்தனர். இதனை அறிந்த நவாப்பும் வெள்ளையர்களும் கிழக்கு பாளையக்காரர்களுக்கு பதவி, பணம் என்று ஆசை வார்த்தைகளைக் காட்டி, புலித்தேவரை போரில் வெற்றி கொள்வதற்கு தங்களுக்கு உதவ வேண்டும் என்று பேரம் பேசினார்கள்.

இந்த முறை புலித்தேவரை எதிர்கொள்ள சுதேசி படை என்ற ஒன்றை உருவாக்கினார்கள். இது நவாப்பும், வெள்ளையனும் ஏற்படுத்திய திட்டம். இந்த சுதேசி படைக்கு தலைமை ஏற்று போருக்குப் புறப்பட்டவன் கான்சாகிப் என்ற யூசுப்கான். இவனே மருதநாயகம் என்றும் குறிப்பிடப்படுகிறான். தமிழனான மருதநாயகம், யூசுப்கானாக மாறி அந்நியரின் கைப்பாவையானான். இவன் தமிழ் மறவர் புலித்தேவரை வெற்றிகொள்ள பெரும் படையுடன் போருக்குத் தயாரானான். அந்நியரின் திட்டம் நம் தமிழனைக் கொண்டு நம்மையே வெல்ல வேண்டும் என்பது. நமக்கு உள்ளேயே போர் செய்ய வேண்டும், ஏனென்றால் அவனால் நம் புலித்தேவரிடம் நேருக்கு நேர் போர் செய்ய முடியவில்லை, தோற்றும் உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடிய அனுபவம் அவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும். புலித்தேவரை நேருக்கு நேர் சந்தித்து, அவர்களால் எத்தனை அதிநவீன ஆயுதங்கள் பயன்படுத்தினாலும் வெற்றிகொள்ள முடியாது. நம் உயிர் போவது நிச்சயம் என்று அவர்களுக்குத் தெரியும். எனவேதான் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள தங்களின் கைப்பாவையான மருதநாயகத்தினை புலித்தேவருக்கு எதிராக போர்களத்தில் இறக்கினார்கள்.

puli thevar8.pngஆற்காடு நவாப்பின் படைத்தளபதி மாசுப்கான் 1755ல் திடீரென்று களக்காடு கோட்டையைத் தாக்கினான். இந்தக் கோட்டை திருவீதாங்கூர் மன்னன் மார்த்தாண்டவர்மனுக்கு சொந்தமாக இருந்தது. ஆற்காட்டு நவாப்பின் பிரதிநிதியாக திருச்சியில் இருந்தவர் முடோமியா என்பவர். களக்காடு பகுதியை திருவீதாங்கூர் மன்னருக்கு விற்றிருந்தார். அவருக்கு விற்கும் அதிகாரமும் இருந்தது. மாசுப்கானின் திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத திருவீதாங்கூர் மன்னன், தாக்குதலை நினைத்து செய்வதறியாது திகைத்தார். அப்போது மன்னருக்கு உதவி செய்ய நெற்கட்டான் செவ்வல் பகுதியிலிருந்து புலித்தேவர் புலியின் வேகமாகப் பாய்ந்து சென்றார் தன் படையுடன். புலித்தேவர் செல்லுவதற்குள் மாசுப்கான் களக்காடு கோட்டையை கைப்பற்றிவிட்டான்.

புலித்தேவரின் படையுடன் மன்னனின் படை சேர்ந்தது. மாசுப்கானின் படை வீரர்கள் புலித்தேவரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சிதறி ஓடினார்கள். தோல்வி அடைந்த மாசுப்கான் நெற்கட்டான் செவ்வல் பகுதியைத் தாக்க திட்டமிட்டான். இவனுக்கு உதவி செய்ய வெள்ளையனிடமிருந்து இவர்களுக்கு உணவு வழங்குகிறது என்ற செய்தி புலித்தேவருக்குக் கிடைத்தது. உடனே தனது ஆட்களை அனுப்பி உணவு வரும் பாதையை மறைத்து, உணவு செல்லாமல் தடை செய்ய உத்தரவிட்டார், அதன் படியே புலித்தேவரின் ஆணையை வெற்றியாக அவரின் வீரர்கள் செய்து முடித்தனர்.

புலித்தேவர் திருவில்லிப்புத்தூர் கோட்டையை கைப்பற்றிட திட்டமிட்டார். மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் இந்த திருவில்லிபுத்தூர் கோட்டை மையமாக இருந்தது. மிகவும் முக்கியமான கோட்டையாகவும் கருதப்பட்டது. எனவே இதனைக் கைப்பற்றிட நினைத்தார் புலித்தேவர். கோட்டையை ஆற்காட்டின் நவாப்பின் சகோதரர், வீரர்களுடன் ஒரு சில ஆங்கிலேயர்களையும் வைத்து பாதுகாத்துக் கொண்டிருந்தார் புலித்தேவர் வரும் செய்தி தெரியாமல்.

-வேட்டை தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-3”

அதிகம் படித்தது