மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-5

கி.ஆறுமுகம்

Sep 5, 2015

pulithevar FIபுலித்தேவர் அவர்களை, அவர்காலத்து புலவர்கள் பலர் புகழ்ந்து பல பாடல்களை பாடியுள்ளனர். அந்தப் பாடல்களை சில இன்றும் நெல்கட்டான் செவ்வல் பகுதி மக்களில் சிலர் பாடுவதை நாம் கேட்கலாம். புலித்தேவரின் வீரத்தினையும் பல்வேறு பாடல்களில் புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். இந்தப் பாடல்கள் மட்டும் இல்லாமல், கிராமங்களில் பாடும் நாட்டுப்புறப்பாடல்களின் மூலமும், திருவிழாக்களின் போது நடைபெறும் நாடகம், கலைநிகழ்ச்சி, தெருக்கூத்துகளிலும் புலித்தேவரின் வீரத்தினையும், அவர் ஆட்சி செய்ததையும், அவர் வெள்ளையனை புறமுதுகிட்டு ஓட ஓட விரட்டி அடித்ததையும், அவர் மக்களுக்கு செய்த நல்லாட்சி பற்றியும் இந்த திருநெல்வேலி சீமையில் இன்றும் பல கிராமங்களில் நாம் காண முடியும்.

புலித்தேவரின் தோற்றத்தினை புலவர்கள் பலர் அவர்களின் பாடல்களில் கூறியுள்ளதிலிருந்து சில,

புலித்தேவரின் தோல்கள் தேக்கு மரம் போன்றது.

அவரது முகம் அதிகாலை பொன் ஒளி வீசும் ஞாயிறு(சூரியன்) போன்று ஒளிரும் தெய்வீக முகம்.

அவர் நடந்தால் அதிரும் எதிரியின் பூமி.

கண்கள் சிவந்தால் உருளும் எதிரியின் தலைகள்.

அவரின் வால் வீச்சு புயல்காற்றை போன்று இருக்கும்.

அவரது கைகள் இரண்டும் மிக நீண்ட கைகளாக இருக்கும் உதவி என்று தஞ்சம் அடைந்தவர்களுக்கு வள்ளலாக இருப்பார்.

இவர் வீரம் புலியின் வீரம் போன்று இருக்கும்.

இவரது குரல் கேட்டதும் இடி ஓசை கேட்ட நாகம் ஓடுவது போல் எதிரிகள் ஓடுவர், நடுங்குவர்.

என்று புலவர்கள் இதுவரை வர்ணித்துள்ளனர்.

இவர் ஆட்சி செய்த காலத்தில் மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார். இவர் பல கோவில்களுக்கு பல நற்பணிகளை செய்துள்ளார். மக்கள் செல்லும் பாதை ஓரங்களில், மக்கள் இளைப்பாறுவதற்காக இரண்டு பக்கங்களிலும் பல மரங்களை வளர்த்தார். மக்கள் பயணத்தின் போது தங்கி ஓய்வு எடுத்துச் செல்வதற்கு பல மண்டபங்களையும், அவற்றில் பல அன்ன சத்திரங்களையும் அமைத்திருந்தார். மக்கள் பயணத்தின் போது ஏற்படும் நீர் தேவையையும், நீர் தாகத்தையும் தீர்ப்பதற்கு பல இடங்களில் சாலை ஓரங்களில் கிணறு வெட்டி நீர் கிடைத்திட ஏற்பாடு செய்திருந்தார். பல கிராமங்களுக்கு மக்கள் மற்றும் ஆடு, மாடுகளுக்கு பல கிராமங்களில் குளங்கள், கிணறு, கண்மாய்கள், ஊரணிகள் அமைத்து நீர் தேவையை சரிசெய்தார்.

pulithevar iபுலித்தேவர் மிகச் சிறந்த ஒரு ஆன்மீகவாதியும் கூட. இவர் கோவில்களுக்கு பல நற்பணிகளை செய்துள்ளார். பல கோவில்களுக்கு குளங்களை வெட்டி அமைத்து ஏற்பாடு செய்தார். இன்றும் சங்கரன் கோவில் சென்றால், அங்கு கோமதி அம்மன் கோவிலில் இவர் அமைத்த தெப்பக்குளம் மற்றும் குளத்தின் நடுவில் இவர் அமைத்த மண்டபத்தையும் பார்க்கலாம். கோவில்களுக்கு பொன், பொருள் விளைநிலங்களை மானியமாகக் கொடுத்துள்ளார். பல கிராமங்களில் கோவிலின் திருப்பணிக்காக என்று பட்டயம் கொடுத்துள்ளார். இவர் சங்கரன் கோவிலில் உள்ள கோமதி அம்மன் சன்னதிக்கு, பல திருப்பணிகளை செய்தும், பல பொன், பொருள், நிலம் என்று பட்டயம் எழுதிக் கொடுத்துள்ளார். இது போன்றே கரிவலம் வந்த நல்லூரில் உள்ள பால் வண்ணநாதர் கோவிலுக்கும் பல நற்பணிகளைச் செய்துள்ளார். அங்கு கோவிலுக்கு கோட்டை சுவர்களையும் அமைத்திருந்தார், கோவிலுக்குத் தேர் கொடுத்துள்ளார். கோவிலில் பணி புரிபவர்களுக்கு பல தானங்கள் செய்துள்ளார். திருநெல்வேலி சீமையில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவிலுக்கும் திருப்பணிகளை புலித்தேவர் செய்துள்ளார். கோவில்களின் திருப்பணி மற்றும் சிறப்பாக பணி செய்ய பல நஞ்சை நிலங்களை மானியமாகக் கொடுத்துள்ளார் புலித்தேவர். சங்கரன்கோவில் தென்கிழக்கில் கீழ நீலிதநல்லூரில் உள்ள கோயிலுக்கும் மாவீரன் புலித்தேவர் பல திருப்பணிகளைச் செய்துள்ளார். மதுரை சொக்கநாதர் ஆலயத்திற்கும் பல திருப்பணிகளைச் செய்து, பொன் பொருட்களை வழங்கியுள்ளார். சீவலப்பேரி அருகிலுள்ள மருவாத்தலை என்னும் ஊரிலுள்ள மலை உச்சியின் மீது உள்ளமுடையார் கோவில் உள்ளது. இது புலித்தேவரின் குலதெய்வமாகும். இதற்கும் பல திருப்பணிகளைச் செய்துள்ளார். இங்குள்ள கல்வெட்டில் அதன் விவரங்கள் உள்ளது. புலித்தேவர் இறைபக்தி மிகுந்தவர், சங்கரன் கோவிலில் உள்ள கோமதி அம்மன் ஆலயத்தில் தனி அறை ஒன்றை அமைத்து அதில் அமர்ந்து தியானம் செய்துள்ளார். புலித்தேவரின் திருப்பணிகள் இவை.

pulithevar iiiபுலித்தேவருடன் போரிட்ட மருதநாயகம் ஆங்கிலேயரின் மற்றும் நவாப் படைகளுக்குத் தலைமை ஏற்று, மாவீரன் மறவர்குல புலித்தேவரை போரில் எதிர்த்தவர். இவரும் ஒரு தமிழர், சற்று இவரைப் பற்றியும் பார்ப்போம். மருதநாயகம் 1725ம் ஆண்டில் பனையூர் (Panaiyur) என்ற கிராமத்தில் பிறந்தார். இந்த கிராமம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. இவர் பிறக்கும் போது இந்துவாக இருந்தவர். வெள்ளாளர் பிரிவினைச் சார்ந்த ஒரு சாதாரண விவசாயியின் மகனாகப் பிறந்தவர். இவர் தனது சொந்த கிராமத்தை விட்டு விட்டு பாண்டிச்சேரிக்கு வந்தார். அங்கு பாண்டிச்சேரி ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்தார். அங்கு பணியில் இருக்கும் போது, மான்ஸ்டர் ஜாக் என்பவருடன் நட்பாகப் பழகினார். இந்த பிரஞ்சு நண்பர் மான்ஸ்டர் ஜாக் என்பவர் மருதநாயகத்திற்கு கல்வியைக் கற்பித்தார். நன்றாகக் கல்வியைக் கற்ற மருதநாயகம் நன்னடத்தையினால், பிரஞ்சு அரசுடன் மிக நெருங்கி பழகும் வாய்ப்புகள் கிடைத்தது. இவரின் அறிவுத்திறனையும் வீரத்தினையும் பார்த்த பிரஞ்சு அரசு இவரை மதுரைக்கு மாற்றியது. அங்கிருந்த பிரஞ்சு அரசின் படைத்தளபதியாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

மருத நாயகத்திடம் பிரஞ்சு நண்பராக இருந்தவர் மான்ஸ்டர் ஜாக். இவர் பாண்டிச்சேரியின் ஆளுநர் மாளிகையில் இருந்தார். இவர் பாண்டிச்சேரி சட்டம் அமைப்பில் இருந்தவர் இங்கு இருந்த Marchand. இவர் மான்ஸ்டர் ஜாக் சட்டப் பிரிவில் துணை அமைப்பாளராக இருந்தவர் இவர். இவரும் மருதநாயகத்துடன் நட்பு கொண்டார். மருதநாயகம் மதுரையில் இருந்த பிரஞ்சு படையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். இந்த பிரஞ்சு அரசு, மதுரை நாயக்கர்களை அடக்குவதற்கும், முறையாக தென்பகுதிகளில் வரி வசூல் செய்யவும் மருதநாயகத்தினைப் பயன்படுத்திக்கொண்டனர். இங்கு சிறப்பான பணி செய்திருக்கும்போது, மருதநாயகத்தின் மீது ஒரு திருட்டு பழி வந்து சேருகின்றது. இதனால் மனம் கலங்கிய மருதநாயகம் பாண்டிச்சேரி மற்றும் பிரஞ்சு அரசின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறுகின்றார்.

-வேட்டை தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-5”

அதிகம் படித்தது