மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதல் சுதந்திர போராட்ட மாவீரர் பூலித்தேவர் – பகுதி-8

கி.ஆறுமுகம்

Sep 26, 2015

pulithevar1ஒண்டி வீரன் குதிரையை, குதிரை லாயத்தில் இருந்து விடுவித்து புறப்படும்போது, அங்கு குதிரையின் சத்தம் கேட்டு வெள்ளையர்களின் வீரர்கள் வருகிறார்கள். அவர்கள் வந்த உடனே ஒண்டிவீரன் அவர்கள் கண்களில் படாமல் இருப்பதற்காக அங்கிருந்த வைக்கோல்களை தன் மீது போட்டுக்கொண்டு தரையில் படுத்து மறைந்து கொண்டார். அங்கு வந்த வெள்ளையர்கள், இந்த ஒரு குதிரை மட்டும் எப்படி குதிரை லாயத்திலிருந்து கயிற்றை அவிழ்த்து இங்கு வந்தது, இதனை இழுத்துச்சென்று கட்டிவிட வேண்டும் என்று குதிரையை இழுக்கின்றனர். ஆனால் உடனே, எதற்கு இந்த இரவில் அங்கு செல்ல வேண்டும், அதற்குப் பதில் இந்தத் தரையிலேயே ஒரு குதிரை லாயத்தை அரைந்து அந்த கம்பில் குதிரையைக் கட்டிவிட எண்ணுகிறார்கள். வெள்ளையர்களில் ஒருவன் ஒரு ஈட்டி போன்று கூர்மையான ஒரு கம்பை எடுத்து வருகிறான். அந்த கம்பை அழுத்தி வைத்து அடித்து தரையில் இறக்கின்றார்கள். ஆனால் அந்தக் கம்பு தரையில் செல்வதற்கு முன் ஒண்டி வீரன் கையைத் துளைத்துக் கொண்டு தரையில் செல்லுகிறது. பின்னர் அந்த வெள்ளையர்கள் குதிரையை அந்தக் கம்பில் கட்டிவிட்டு செல்லுகிறார்கள்.

அவர்கள் கம்பை அடித்து தரையில் செலுத்தும்போது, தனது கையை துளைத்துக் கொண்டு கம்பு செல்கிறது, ஆனால் இதன் வலியை ஒண்டி வீரன் சிறிதும் பொருட்படுத்தவில்லை, அவர் வலியில் துடிக்கவும் இல்லை, சத்தம் கூட போடவில்லை. எந்த வித அசைவும் இன்றி அவர் தரையில் படுத்திருந்தார். வெள்ளையர்கள் சென்றதும் எழுந்த ஒண்டி வீரன் தன் கையைத் துளைத்திருந்த கம்பை பிடித்து இழுத்து வெளியே எடுத்து அதனை தூரமாக வீசி எறிந்துவிட்டு, அந்த குதிரையின் மீது ஏறி நெற்கட்டான் செவ்வல் பகுதி வந்து புலித்தேவரை சந்தித்து தான் சொன்னதை செய்து விட்டதாக பெருமிதம் கொண்டார். புலித்தேவர் இவர் வீரத்தினை பெரிதும் பாராட்டுகிறார். அப்போது புலித்தேவர் ஒண்டி வீரனின் கையை கவனிக்கின்றார். கை கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. என்ன இது என்று கேட்டு பதறுகிறார் புலித்தேவர். ஒண்டி வீரன் நடந்ததைக் கூறுகிறார். உன் வீரமும், நாட்டுப்பற்றும் நாம் யார் என்று வெள்ளையர்களுக்கு உணர்த்தியிருக்கும் என்று ஒண்டிவீரனைப் புகழ்ந்தார் புலித்தேவர்.

pulithevar ii1759ம் ஆண்டு நெற்கட்டான் செவ்வல் பகுதியின் மீது போர் தொடுத்த யூசுப்கான் படுதோல்வி அடைந்து திரும்பினான். அவன் மீண்டும் புலித்தேவரை போரில் வெற்றி கொள்ள நினைத்து, அந்த ஆண்டில் வாசுதேவ நல்லூர் மீது போர் தொடுக்கிறான். இந்தப் போரிலும் புலித்தேவர் யூசுப்கானை அடித்து விரட்டுகிறார். யூசுப்கான் மீண்டும் தோல்வி அடைந்து திரும்புகிறான். யூசுப்கான் எப்படியாவது புலித்தேவரை போரில் வெற்றி கொள்ள வேண்டும் என்று, மீண்டும் 1760ம் ஆண்டில் வாசுதேவ நல்லூர் மீது போர் தொடுக்கிறான். இந்தப் போரிலும் யூசுப்கான் புலித்தேவரிடம் தோல்வியை சந்திக்கிறான். யூசுப்கானின் கோபம் உச்சத்தில் இருந்தது. எப்படியாவது புலித்தேவரை போரில் வெற்றிகொள்ள என்ன செய்வது என்று வெள்ளையர்களுக்கு கடிதம் எழுதினான். யூசுப்கானுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. யூசுப்கான் மீண்டும் 1761ம் ஆண்டில் நெற்கட்டான் செவ்வல் மற்றும் வாசுதேவநல்லூர் மீது போர் தொடுக்கிறான். இந்தப் போரிலும் யூசுப்கான் தோல்வியை சந்திக்கிறான். புலித்தேவர் போரில் வெற்றி பெறுகிறார். இதனால் புலித்தேவரை வெற்றி கொள்ள வேண்டுமெனில் அதற்கு தகுந்த ஆலோசனைகள் கூறுமாறு யூசுப்கான் வெள்ளையர்களுக்கு கடிதம் எழுதினான்.

இந்தக் கடிதப் போக்குவரத்தினை கால்டுவெல் திருநெல்வேலி சரித்திரம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார் மற்றும் நாட்குறிப்புகளின் தந்தை என அழைக்கப்படும் அனந்த நாராயணன் என்பவரின் நாட்குறிப்பு பதிப்புகளிலும் புலித்தேவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளது.

puli thevar9புலித்தேவரை கப்பம் கட்ட வைக்கவும், போரில் வெல்ல முடியாமலும், வெள்ளையர்களும், ஆற்காடு நவாப்பு மற்றும் யூசுப்கான் ஆகிய அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். ஆனால் வெள்ளையன் பிரித்தாளும் கொள்கையை கையில் எடுத்து புலித்தேவரின் கூட்டமைப்பில் இருந்த ஜமீன்களை, பாளையக்காரர்களைப் பிரிக்க திட்டம் தீட்டினர். திருவிதாங்கூர் ராஜாவிடம் வஞ்சகமாகப் பேசி புலித்தேவருக்கு எதிராக செயல்பட தூண்டிவிட்டனர். நீங்கள் இது போன்று செயல்பட்டால் உங்களுக்கு பல சலுகைகள் கிடைக்கும் என்று அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி மாற்றினார்கள்.

1767ம் ஆண்டில் டொனால்டு கேம்பல் என்ற வெள்ளைய தளபதி வாசுதேவ நல்லூர் கோட்டை மீது போர் தொடுத்தான். இந்தப் போரிலும் புலித்தேவர் சிறிதும் தனது வீரத்துக்கு பங்கம் இல்லாமல் போர் செய்தார். போர் பல நாட்கள் கடந்தும் நடந்தது. போரின் போது மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. வெள்ளையர்களின் பீரங்கி குண்டுகள் கோட்டை சுவரின் மீது பட்டதும் சுவரில் சிக்கிக் கொண்டது. சுவர் களிமண் மற்றும் நார் மற்றும் பல பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்தது. கோட்டைச் சுவரில் குண்டு சென்று எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருந்தது. பின்னர் கோட்டைச் சுவரில் சிறிது சிறிது துளை ஏற்பட்டது. வெள்ளையர்களுக்கு கோட்டை சுவரின் ஓட்டை தெரியும், ஆனால் ஓட்டை சிறிது நேரத்தில் அடைபட்டு விடும். ஓட்டை இருந்த இடத்தில் பீரங்கி குண்டு வந்து விழுந்தவுடன் அங்கு இரத்தமும் சதையும் தெரிந்திடும். இதனைக் கண்டு வெள்ளையர்கள் இது எப்படி சாத்தியப்படும். கோட்டைச் சுவரில் இருந்து இரத்தம், சதை தெரிகிறது என்று வியந்தனர்.

நம் தமிழ் மறவர்கள் உயிருக்கு அஞ்சாதவர்கள். புலித்தேவரின் மறவர் படை வீரர்கள் ஒவ்வொருவரும் ஒருவர் பின் ஒருவராகச் சென்று கோட்டை சுவர் துளை இருந்த இடத்தில் நின்று ஓட்டையை அடைத்து நின்று கோட்டையை தன் உயிர் துறந்து காப்பாற்றினார்கள். இதனைக் கண்ட டொனால்டு கேம்பல் பிரிட்டனுக்கு கடிதம் எழுதினான், “தமிழ் மறவர்கள் உயிருக்கு அஞ்சாமல் அவர்கள் கோட்டையை காத்து நின்றனர். உலகில் இதுபோன்று செய்து நாம் பார்த்திருக்க மாட்டோம்.

-வேட்டை தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல் சுதந்திர போராட்ட மாவீரர் பூலித்தேவர் – பகுதி-8”

அதிகம் படித்தது