மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முத்தொள்ளாயிரம் ஒரு பார்வை

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Oct 20, 2018

 Siragu muththollaayiram2

உலா இலக்கியங்களுக்கு முன்னோடி முத்தொள்ளாயிரம் எனும்நூல். இது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்பாடல்கள் பெரும்பாலும் சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தர்களைப் பற்றியது.

இந்நூல் பெயர்க்காரணம் மூன்று வேந்தர்களைப் பற்றிய 900 பாடல்கள் என்றும், மூவேந்தருள் ஒவ்வொருவருக்கும் 900 பாடல்கள் என்ற இரு வேறு கருத்துகள் உண்டு. ஆக இந்த நூலின் மொத்த பாடல்கள் 2700 ஆக இருந்திருக்க வேண்டும், ஆனால் நமக்கு 108 பாடல்களே கிடைத்துள்ளன. புறத்திரட்டு என்பதில் இருந்துதான் இந்த 108 செய்யுள்களையும் தொகுத்துள்ளனர். இந்த பாடல்கள் பெரும்பாலும் கைக்கிளையில் அதாவது ஒருதலைக்காதல் கொண்டு பாடப்பட்டது. மூவேந்தர்களை எண்ணி அவர்கள். உலா வரும் போது அவர்களைக் கண்டு காதல் கொள்ளும் பெண்களின் மொழியாக இப்பாடல்கள் அமைந்துள்ளன. இந்த அடிப்படையைத்தான் பின்னாளில் பக்தி இலக்கியங்களில் ஆழ்வார் நாயன்மார் கையாண்டு உள்ளனர், கடவுளை தலைவனாக நினைத்து உள்ளம் உருகி பாடல்கள் எழுதினர் என்பது அறிஞர்களின் கருத்து.

ஒரு சில பாடல்களின் நயத்தை இங்கு காணலாம்:

வாமான் தேர்க் கோதையை மான் தேர் மேல்
கண்டவர் மாமையே அன்றோ இழப்பது,
மாமையின் பன்னுாறு கோடி பழுதோ என்
மேனியின் பொன்னுாறியன்ன பசப்பு.

இந்தப்பாடலில், கோதை என்பது இந்த இடத்தில் சேர மன்னனை குறிக்கும். சேர மன்னன்தன் தேரில் உலா வரும்போது அவனைக் கண்டபோது தலைவி தன் கருநிற மாமை அழகை இழந்துவிட்டாள். ஏனெனில் சேரனை சேர முடியா ஏக்கத்தால் அவள் மேனி பசலைகண்டது, என்றாலும் தன் மாமை நிறத்தை விட சேரன் மீது கொண்ட ஏக்கத்தால் வந்தபசலையை தலைவி போற்றுகின்றாள்.

Siragu muththollaayiram1

நாண் ஒரு பால் வாங்க நலன் ஒரு பால் உள் நெகிழ்ப்பக்,
காமரு தோள் கிள்ளிக்கு, என் கண் கவற்ற யாமத்து,
இரு தலைக் கொள்ளியின் உள் எறும்பு போலத்
திரிதரும் பேரும் என் நெஞ்சு.

இந்தப்பாடலில் சோழனைப் பற்றி தலைவி பாடுகின்றாள். நாணம் ஒரு பக்கம் இருந்தாலும் சோழனை அடைய மனது ஒருபக்கம் துடிக்கின்ற தன் நிலையை இரு தலைக் கொள்ளியுள் மாட்டிக்கொண்ட எறும்பு போன்று என தலைவி தன் நெஞ்சத்து தவிப்பினை கூறுவதாக புலவர் தகுந்த உவமையோடு விளக்கும் அழகியப் பாடல்.

காப்பு அடங்கு என்று அன்னை கடி மனையில் செறித்து
யாப்பு அடங்க ஓடி அடைத்த பின், மாக் கடுங்கோன்
நன்னலம் காணக் கதவம் துளை தொட்டார்க்கு,
என்னை கொல் கைம்மாறு இனி?

இப்பாடல்பாண்டிய மன்னன் பற்றியது. இந்தப் பாடலில் தலைவியை அன்னை கதவடைத்து பாண்டியனை காண முடியாதபடிச் செய்தாலும், கதவின் துளை வழியே அரசனை தலைவி காணுகின்றாள்; அதை எண்ணி கதவில் அந்த துளை செய்தவரை பாராட்டி என்ன கைம்மாறு செய்வேனோ என்கிறாள்.

தானேல் தனிக் குடைக் காவலனால் காப்பதுவும்
வானேற்ற வையகம் எல்லாமால், யானோ
எளியேன் ஓர் பெண் பாலேன், ஈர்ந் தண் தார் மாறன்
அளியானேல் அன்றென்பார் ஆர்.

இந்தப்பாடலில் மாறன் என்பது பாண்டியனையே குறிக்கும். இந்த உலகை, வானம் வரை உள்ளதன் வெண்கொற்றக் குடையால் காக்கின்றவன் ஆனால் என் நிலையை அவன் அறிந்து மனம் இறங்கினால் மட்டுமே உண்டு. என் நிலையை யார் அவனிடம் எடுத்துக்கூறுவது எனப் புலம்புகின்றாள்.

பேயோ, பெருந்தண் பனி வாடாய், பெண் பிறந்தா
ரேயோ, உனக்கு இங்கு இறைக் குடிகள் நீயோ
களிபடுமால் யானைக் கடுமான் தேர்க் கிள்ளி
அளியிடை அற்றம் பார்ப்பாய்.

இப்பாடலில் கிள்ளி என்பது சோழனைக் குறிக்கும். தலைவி வாடைக் காற்றின் மேல் சினந்து கிள்ளியின் காதலுக்காக ஏங்கும் தவிக்கும்போது நீஎன்ன வரி வசூலிக்கும் குணம் கொண்டு எனை வாட்டுகின்றாய் என அழகிய உவமையோடு புலவர் தலைவியின் காதல் துன்பத்தை பாக்களில் வடிக்கின்றார்.

பல திரைப்பட பாடல்களில் தற்காலக் கவிஞர்கள் வரை காதலின் தவிப்பை விளக்க வாடைக் காற்று உவமையை கையாள்வதை நாம் பார்த்திருக்கின்றோம்.

இப்படி 108 பாடல்களும் மூவேந்தர்கள் கொடைச்சிறப்பு, ஊர்ச்சிறப்பு, அவர்களின்போர்ச்சிறப்பு, தலைவியரின் ஒரு தலைக்காதல் என ஒவ்வொரு பாடலும் அமிழ்தாகஇனிக்கும்!


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முத்தொள்ளாயிரம் ஒரு பார்வை”

அதிகம் படித்தது