மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முன்னேறத் தயங்காதே !

செல்வக்குமார் சங்கரநாராயணன்

Jun 4, 2016

work1

“படிச்சு முடிச்சாச்சு வேலை தான் இல்லை“ என்ற இந்த வாசகத்தை இப்பொழுது அடிக்கடி கேட்க நேரிடுகிறது. சரி இதற்கு தரமற்ற கல்லூரிகள் ஒரு புறம் காரணமாக இருந்தாலும், மாணவர்களும் மறு காரணமாக இருக்கிறார்கள். சரியான வழிகாட்டுதல்கள் என்பது ஒரு பத்து வருடங்கள் முன்பு மிகக் குறைவு. ஆனால் இக்கால கட்டத்திலோ வழிகாட்டுதல் மிகுந்து காணப்படுகிறது. சமூக வலை தளங்களிலும், சமூக ஆர்வலர்களும் வழிகாட்டும் அமைப்பை உருவாக்கி பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகின்றனர். அதே போல அயல் நாட்டில் வேலை, படிப்பு என்று நமது மாணவர்களின் பார்வை அமைப்பும் சற்றே விரிந்துள்ளது.

மாணவர்கள் என்பது மண்ணுக்குள் கிடக்கும் வைரம். அவரை யாராவது பட்டை தீட்டினால்தான் ஒளிர்வார்கள். ஆனால் பட்டதாரி என்பவன் ஏற்கனவே  பட்டை தீட்டப்பட்டவன், இருந்த போதிலும் அவன் ஒளிராமல் போவதற்கு யார் காரணம்? அவனே தான் காரணம். சுற்றியிருக்கும் மாசுகளைத் துடைத்து அகற்றினால்தான் ஒளியின் வீரியமும் ஒளிரும் தரமும் மேம்படும்.

work7

பெரும்பாலானவர்கள் படித்தோம் என்ற கடமையை அழகாக முடித்துவிட்டு யாராவது வேலை வாங்கித்தருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருந்து காத்திருந்து வேலையைக் கோட்டை விடுகிறார்கள். சுய மதிப்பை உணர்ந்தவருக்கு இந்த பிரச்சனை இல்லவே இல்லை. இப்பொழுது ஏராளமான வேலை வாய்ப்புத் தளங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கிறது. அவற்றில் நீங்கள் என்ன விதமான வேலையை விரும்புகிறீர்கள் என்று கூறிவிட்டால் போதும், இவ்வளவு ஏன் உங்களுக்கு எந்த இடத்தில் எந்த நகரத்தில் வேலை வேண்டும் என்றெல்லாம் கூட நீங்களே தேர்வு செய்து தகவல் அளிக்கலாம். அப்படி தகவல் அளிக்கும் பட்சத்தில் உங்கள் மின்னஞ்சல் மூலமாகவும், உங்கள் அலைபேசி எண் மூலமாகவும் நீங்கள் உடனுக்குடன் தகவல்களைப் பெற்றுக் கொண்டே இருப்பீர்கள். இவற்றை சரிவர செய்தாலே போதும் வேலை பற்றிய கவலை போயே போனது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

work3

அடுத்தது, உங்களை முன்னேற விடாமல் தடுப்பவை எவை எவை என்று கண்டறியுங்கள். அதை பற்றிய சிந்தனைத் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். உதாரணமாக நீங்கள் ஒரு தேர்விற்கு படிக்க வேண்டும் என்று வைத்துக் கொண்டால், நீங்கள் அதில் முழுக்கவனத்துடன் படித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். படித்தால்தான் வெற்றி என்பது தெரிந்த ஒன்று. அதே போல் அதைச் செய்தால் தான் உங்களுக்கு வெற்றியும் கிடைக்கும் எனும் பட்சத்தில், அதைச் செய்யவிடாமல் தடுப்பது எவை என்பதை ஒரு தாளில் பட்டியலிடக் கற்றுக்கொள்ளுங்கள். பிறகு அவற்றைக் களைவதில் எந்த பாரபட்சமும் காட்டாதீர்கள்.

work8

நண்பர்களிடம் இருந்து சற்று விலகி இருங்கள். குறுஞ்செய்திகளை இருவிதமாக ஆய்வாளர்கள் பிரிக்கின்றனர். ஒன்று Message, மற்றொன்று Chatting. Message என்பது தகவல்களைப் பரிமாறுவது. அது எப்படி என்றால், “நாளை அலுவலகத்திற்கு வரமாட்டேன் உயர் அதிகாரியிடம் தெரியப்படுத்தவும்” அல்லது “நாளை நாம் குறித்த நேரத்தில் கல்லூரிக்குச் செல்ல வேண்டும்“ என்பதைப் போல தேவையான தகவல்களைப் பரிமாறுவது தான் Message. Chatting என்பது நமது நேரத்தை அப்படியே அரித்து உண்ணும் கெட்ட பழக்கம் கொண்டது. தினமும் பேசப்படும் தேவையற்ற உரையாடல்கள் தான் இந்தச் Chatting என்பது. ”Hello” வில் ஆரம்பித்து “Bye” யில் முடிவதற்குள் நண்பர்களுக்குள் பரிமாறப்படும் விளையாட்டு வேடிக்கை உரையாடல்கள் தான் இவை. பொதுவாக அரட்டை என்பது குறைந்து இருபது நிமிடம் முதல் இரண்டு மணி நேரம் வரை இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதற்கு எதற்கு ஆராய்ச்சியாளர்கள்? நாமே அதை நன்கு அறிந்தவர் தான். நண்பர்களுடன் எப்பொழுதாவது அரட்டை அடிப்பதில் தவறில்லை, எப்பொழுதும் அதையே வேலையாகக் கொண்டு இயங்குவதால் தான், பிற அத்தியாவசிய வேலையைப் பற்றி சிந்தனை வரவே மாட்டேன் என்கிறது.

உங்களுக்கு எது தேவை?, எதில் நீங்கள் செல்ல வேண்டும்?, எந்தப் பாதை உங்களுக்கானது என்பதை முழுக்க முழுக்க நீங்கள் மட்டும்தான் அறிவீர்கள். தடைகள் எவை எவை என்பதை ஒவ்வொரு நாளும் ஆலோசனை செய்து பட்டியலிட்டு அதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து உங்கள் இலக்கில் கவனம் செலுத்துங்கள், அடுத்தடுத்த வெற்றிகள் உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறது. தோல்விகளைக் கண்டும் அஞ்சாதீர்கள், ஏனென்றால் முயற்சி செய்தால் தான் அந்தத் தோல்வி கூடக் கிடைக்கும். முன்னேற முயற்சியுங்கள்.


செல்வக்குமார் சங்கரநாராயணன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முன்னேறத் தயங்காதே !”

அதிகம் படித்தது