மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முன்னோர் வழிபாடு குறித்த சமூகப்பண்பாட்டு ஆய்வு

தேமொழி

Jan 22, 2022

siragu munnor vazhipaadu

தனது சமூகப்பண்பாட்டு ஆய்வுநூல்கள் வரிசையின் 6ஆவது நூலாக தமிழர்களின் கதிரவன், காலதேவன், நாகர் வழிபாடுகளை விளக்கி ‘முன்னோர் வழிபாடு’ என்ற நூலை எழுதியுள்ளார் முனைவர் செ. இராஜேஸ்வரி. இதற்கு முன்னர் இவ்வரிசையில் பண்பாட்டு நகர்வுகள் தமிழ் நாட்டில் இருந்து ஜப்பானுக்கு, பெண்தெய்வ வழிபாடு, தேவேந்திரன், மருதநிலப் பெண்தெய்வங்கள், இருநிலத்தில் திருமுருகன் போன்ற நூல்களின் மூலம் நமது சமூகப் பண்பாட்டின் பல்வேறு கோணங்களை ஆய்வுக் கோணத்தில் அணுகியவர் முனைவர் இராஜேஸ்வரி. மேலும் மற்றுமொரு சமூகப் பண்பாட்டுப் புலத்தை ஆய்வு கோணத்தில் அணுகி அவர் அறிந்ததை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒரு சிறந்த முயற்சி.

தமிழர்களின் பொங்கல் வழிபாட்டுக்கும், இந்தியர்களின் வழிபாட்டுக்குரிய கடவுளாகவும் கதிரவன் இடம் பெற்றிருந்தது என்ற விளக்கங்களையும் கடந்து, கதிரவன் வழிபாடு ஒரு வேளாண் சமூகத்தின் இயற்கை வழிபாடாகத் துவங்கி உலகம் முழுவதும் வெவ்வேறு நாடுகளில் உள்ள பண்டைய வழிபாட்டில் இடம் பிடித்தது என்பதைச் சான்றுகள் காட்டி விளக்குகிறார். நிறுவனமயமான பெருஞ்சமயங்கள் மக்களைக் கவரும் நோக்கில் கதிரவன் வழிபாட்டை எவ்வாறு தங்களுக்குள் உள்வாங்கிக் கொண்டன என்பதன் மூலம் உலகம் முழுவதும் மனித இனம் வழிபாட்டு முறைகளின் பரிணாம வளர்ச்சி ஒரேகோட்டில் சென்றுள்ளது என்பதை நாம் அறிய முடிகிறது.

இயற்கை வழிபாட்டில், வளமையின் அறிகுறியாக நாகத்தை உலகம் முழுவதும் பழங்குடியினர் வழிபட்டுள்ள ஒற்றுமை என்பதும் தொன்மையானது. பழங்குடித் தமிழர்கள் நாகர்கள் என அழைக்கப்பட்டது தொன்மை மரபு. பிடாரன் பிடாரி என அழைக்கப்பட்ட நாக இனத் தெய்வங்கள் பின்னர் தமிழர் மண்ணில் சிவனாகவும், காளியாகவும் உருமாற்றம் பெற்றனர் என்பதையும்; நாக வழிபாட்டில் காணப்பெறும் பற்பல நம்பிக்கை அடிப்படையிலான வழிபாடுகளையும் சடங்குகளையும் நூலின் மூலம் அறிய முடிகிறது.

காலத்தைக் கணக்கிட்டு வாழ்க்கையை முடித்துவைக்கும் காலன் அல்லது எமன் என்ற கருத்தாக்கத்திற்கு இணையான உருவாக்கமும் வழிபாடும் சடங்குகளும் கூட உலகம் முழுமையும் தொல்குடிகளிடம் வழங்கி வந்துள்ளமையைக் காண முடிகிறது. காலனின் பண்பு, சார்பு நிலையற்று அறத்தின் அடிப்படையைக் கொண்டதாகவும் எங்கும் கருதப்பட்டுள்ளது. மறைந்த தங்கள் முன்னோர்களையே குலதெய்வங்களாகக் கருதி வழிபட்ட முன்னோர் வழிபாடும் உலகம் முழுமையும் தொல்குடிகளிடம் உண்டு என்பதையும், தொல்காப்பியத்திலும் அது குறித்த செய்திகள் இருப்பதையும் நூலில் தொகுத்துள்ளார் முனைவர் செ. இராஜேஸ்வரி.

“மக்கள் முக்கிய நிகழ்வுகளை தொன்மக் கதைகளின் மூலம் சமயத்தில் வைத்துப் பாதுகாக்கின்றனர்” என்றும் “கருத்தியல்கள்தான் வண்ணத்தையும் வடிவத்தையும் தெய்வங்களுக்கு அளிக்கின்றன” என்றும் ஆசிரியர் இந்நூலில் சமயவழிபாட்டின் சாரத்தைக் குறிப்பிடுவது மக்களின் வழிபாட்டு முறைகளைச் சுருக்கமாக சுட்டுகிறது எனலாம்.

அச்சத்தின் காரணமாகவோ அன்பின் காரணமாகவோ, அல்லது கைவிட மனமற்ற பழக்க வழக்கங்களின் காரணமாகவோ தொன்றுதொட்டு வழிவழியாக வந்த மரபு வழிபாடுகளும் அவற்றின் சடங்குகளும், இந்நாட்களில் அறிவியல் விளக்கங்களுக்குப் பிறகு மதிப்பிழக்கும் நிலை பகுத்தறிவு பாதையில் நிகழும் இயல்பான ஒரு மாறுதல். ஆனால், எதனையும் எவரையும் நிலையில் உயர்த்துவதற்கோ, அல்லது அவர்களைத் தரம் தாழ்த்தும் ஒரு நிலைக்குத் தள்ளுவதற்கோ அவர்கள் மீது தங்களின் நோக்கத்திற்கு தக்கவாறு கதைகள் புனையப்பட்டால் போதுமானது. சாதாரண மக்களை அப்புனைவுகள் சென்றடைந்துவிட்டால் குறிக்கோள் நிறைவேறிவிடும் என்பது வழிபாட்டின் வரலாற்றின் மாறுதல்களுக்கு மற்றொரு காரணமாகவும் நிறுவன சமய வளர்ச்சியின் அடிப்படையாகவும் இருந்துள்ளது. இவற்றின் ஊடே மக்களும் தங்கள் பண்டைய வழிபாட்டு முறைகளைக் காலத்திற்கு ஏற்ப மாற்றினாலும் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து கொண்டிருப்பதும் வியப்பளிக்கிறது.

இவ்வாறாக வழிபாட்டுக் கருத்தாக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும், மறைவும் என்பதன் அடிப்படையைத் தெளிவாக அறிந்தவருக்கு நூல் முழுவதும் அதற்கான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. விளக்கங்களுடன் அவற்றுக்கேற்ற படங்களும் கைகோர்த்து நூலைச் சுவைமிக்கதாக மாற்றியுள்ளது. முன்னோர் வழிபாடுகளைப் பற்றிய பண்டைய தொன்மக் கதைகளையும் குறிப்புகளையும் கொண்ட தொகுப்பாகவும் உருவெடுத்துள்ள இந்த நூல், மானுடவியல் கோணத்தில் வழிபாட்டின் வளர்ச்சியையும் பரவலையும் அறிய விரும்புவோருக்கு இன்றியமையாத நூலாகும்.

மொழிபெயர்ப்பு நூல்கள், கவிதைத் திறனாய்வு நூல்கள், சிறுகதைகள், எம். ஜி. ஆர். பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் என்று தொடர்ந்து 40 நூல்களுக்கும் குறையாமல் ஏறக்கனவே பலநூல்களை வெளியிட்டு தமது எழுத்துப்பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் முனைவர் செ. இராஜேஸ்வரி இந்த நூலின் மூலம் சமூகப்பண்பாட்டுக் களத்தில் அரிய தகவல்கள் தரும் மற்றொரு நூலை அளித்துள்ளது பாராட்டத்தக்கது.

நூல் விவரம்:

தலைப்பு: முன்னோர் வழிபாடு

நூலாசிரியர்: முனைவர் செ. இராஜேஸ்வரி

பொருண்மை: சமூகப்பண்பாட்டு ஆய்வு

விலை: ரூ. 200

வெளியீடு: – மே 2021, சந்திரோதயம் பதிப்பகம்

3/422, திருவள்ளுவர் தெரு, தினமணி நகர், மதுரை-18.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முன்னோர் வழிபாடு குறித்த சமூகப்பண்பாட்டு ஆய்வு”

அதிகம் படித்தது