மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Feb 25, 2017

Siragu Moovalur_ramamirtham2

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சுயமரியாதை இயக்க முன்னோடிகளில் ஒருவர். 1883-ஆம் ஆண்டு தந்தை கிருஷ்ணசாமிக்கும் தாய் சின்னம்மாளுக்கும் மகளாக இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். சில வருடங்களுக்கு முன் முன்னாள் தமிழ் நாட்டின் முதல்வர் கலைஞர் ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம்’ என்கிற திட்டத்தை அறிவித்தது நினைவிருக்கலாம். இவரின் புகழை பறைசாற்றும் விதமாகவே அந்தத் திட்டத்திற்கு இவர் பெயர் வைக்கப்பட்டது. ‘மூவலூர் மூதாட்டி’ என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் அவர்.

Siragu Moovalur_ramamirtham4

‘தேவதாசி’ என்னும் முறை, தமிழகத்தில் சோழர் காலம் தொட்டு இருந்து வந்தது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை மிகச் சிறு வயதிலேயே கடவுளுக்குக் காணிக்கையாக்குகிறோம் என்கிற பெயரில், கோயில்களுக்கு ‘நேர்ந்து விட்டு, அவர்களை ஊர்ப் பெரிய மனிதர்களின் ஆசை நாயகிகளாகவும், ஊராரை மகிழ்விக்கும் நடனப் பெண்மணிகளாகவும் ஆக்கியிருந்தது சமூகம். அவர்கள் ‘பொட்டு கட்டப்பட்டவர்களாகவும்’ ‘தேவரடியார்களாகவும்’ இழிவாகப் பேசப்படும் பிரிவினராகவும் வைக்கப்பட்டிருந்தார்கள். ‘நித்ய சுமங்கலி’ என்று பெயர் கொடுத்து, அவர்களைப் ‘புனிதப்படுத்தி’ ஏமாற்றினார்கள். உடலை விற்கும் தொழிலை அவர்களின் மீது திணித்து விட்டு, அதற்குச் சடங்குகளின் பெயரால் புனிதப் போர்வை போர்த்தினர் சனாதனம் பேசும் உயர்சாதியினர். இந்த அவலம் பல நூற்றாண்டுகளாக நடந்து வந்தது.

அந்த தேவதாசி சமூகத்திலே பிறந்து, அதனால் பாதிப்படைந்து, அந்தத் தளைகளை அறுத்து எறிந்து, அந்தக் கேடுகெட்டப் பழக்கத்தையே ஒழித்துக் கட்டும் வரை ஓயாமல் உழைத்தவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.

தேவதாசி சமூகத்தில் பிறந்தாலும், அவருடைய பெற்றோர்கள் அவரை அந்த இழிநிலைக்குத் தள்ளக் கூடாது என்றே உறுதியுடன் வளர்த்தார்கள். உறவினர்களும், வேறு சிலரும் ராமாமிர்தத்தின் தாய் தந்தையரிடம், ‘உங்கள் மகளுக்கு இசையும் நாட்டியமும் கற்றுக் கொடுங்கள், பிற்காலத்தில் அவள் அதை வைத்து நிறைய சம்பாதித்துக் கொடுப்பாள்’ என்று தொடர்ந்து வற்புறுத்திய போதும் அவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் கோபமுற்ற சமூகம், ராமாமிர்தத்தின் தந்தையை ஒதுக்கி வைத்தது. பொருளாதார ரீதியில் அவரைத் தனிமைப்படுத்தியது. நாளடைவில் அவர்கள் அடுத்த வேளை உணவுக்குக்கூட வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

ராமாமிர்தத்தின் தந்தையான கிருஷ்ணசாமி வாழ்க்கையில் வெறுப்புற்று, மனைவியையும், மகளையும் காப்பாற்ற முடியாமல், குடும்பத்தை விட்டு விலகி எங்கோ காணாமல் போனார். நிர்க்கதியாக நடுத்தெருவில் நின்ற தாய் சின்னம்மாள் உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லோர் வீட்டுக்கும் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு நடையாய் நடந்தார். யாரும் உதவிக்கு வரவில்லை. ஆதரவற்ற நிலையில், தன் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேறு வழியின்றி, ஒரு தேவதாசியிடம் 10 ரூபாய் பணத்துக்கும், பழைய புடவைக்கும் தன் மகளை விற்றார் சின்னம்மாள். அப்போது சிறுமி ராமாமிர்தத்தின் வயது ஐந்து. அதன் பிறகு, அக்குழந்தையின் வாழ்க்கைப் பாதையே மாறிப் போனது.

Siragu Moovalur_ramamirtham5

ஆடல், பாடல் என்று பல கலைகள் அவருக்குக் கற்றுத் தரப்பட்டது. குழந்தையும் குமரியானாள். அறுபது வயது பணக்காரக் கிழவனுக்கு அம்மையாரை திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், அந்தக் கொடுமையைக் கண்டு பொங்கி எழுந்த ராமாமிர்தம். ‘கிழவனை மணக்க மாட்டேன்’ என்று அறிவித்தார். அத்தனை எதிர்ப்புகளையும் காலில் போட்டு மிதித்தார். தனக்கு இசையும், நாட்டியமும் பயிற்றுவித்த இளைஞர் சுயம்புப் பிள்ளையை மணப்பேன் என்று சூளுரைத்து, அதைச் செய்தும் காட்டினார். ராமாமிர்தம் _ சுயம்புப் பிள்ளையின் திருமண வாழ்க்கையைக் குலைக்கச் சதி செய்தனர். ஒரு இளம் பெண்ணை ராமாமிர்தம் கொலை செய்துவிட்டதாகச் சொல்லி ராமாமிர்தத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டது. ராமாமிர்தம் கலங்கிடவில்லை. கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட அதே பெண்ணை, உயிருடன் அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். யாரெல்லாம் அந்தப் பெண்ணை மறைத்து வைத்துக் கொடுமைப்படுத்தினர் என்பதை அம்பலப்படுத்தி, அவர்களுக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்தார்.

அதற்குப் பிறகு தேவதாசி முறையையே அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்று, அதற்காகப் போராடத் தொடங்கினார் ராமாமிர்தம். இதனால் பல இன்னல்களைச் சந்தித்த போதும், அவருடைய லட்சியத்துக்கு உறுதுணையாய் நின்றார், அவருடைய கணவர் சுயம்புப் பிள்ளை.

1917 ஆம் ஆண்டு முதல் மயிலாடுதுறை பகுதியில் தனது போராட்டத்தைத் துவங்கினார் ராமாமிர்தம். தேவதாசிப் பெண்களிடம் சென்று ‘இந்த இழிவான வாழ்க்கையில் இருந்து விடுபடுங்கள்’ என்று கூறினார். அவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘நாகபாசத்தார் சங்கம்’ என்கிற அமைப்பை ஆரம்பித்தார். (பிற்பாடு அது இசை வேளாளர் சங்கமாக மாறியது) அவர்களைக் கொண்டு இரண்டு பெரிய மாநாடுகளையும் கூட்டினார். இதனால் அவர் சந்தித்த எதிர்ப்புகள் ஏராளம். பெரும் அரசியல் தலைவர்கள், ஜமீன்தார்கள், மைனர்கள், காவல் துறையினர், உயர் வகுப்பினர், ரவுடிகள் என்று பல தரப்பினரும் ராமாமிர்தத்தின் போராட்டத்தை நசுக்கவே முயன்றார்கள். தேவதாசி இனத்தவரும், அவருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பிறகு காங்கிரசு இயக்கத்தில் சேர்ந்தார். அப்போது காங்கிரசு கட்சியில் இருந்த பெரியார், தி.ரு.வி.க, வரதராஜுலு போன்றவர்கள் தேவதாசி முறை ஒழிப்புக்காகக் குரல் கொடுத்து வந்தனர். இட ஒதுக்கீடு பிரச்சினையில் பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேறியபோது அவர்களுடன் சிங்காரவேலர் போன்றவர்கள் காங்கிரசில் இருந்து வெளியேறினார்கள். அவர்களுடன் அம்மையாரும் வெளியேறினார். அதற்குப் பிறகு, பெரியார் தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோற்றுவித்த போது அதில் பங்கு கொண்டு பெரும் பங்காற்றினார். ‘குடியரசு’ இதழில் ராமாமிர்தத்தின் அனல் பறக்கும் கட்டுரைகள் தொடர்ந்து வெளி வந்தன.

Siragu-Moovalur_ramamirtham8

தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவதற்காக சட்ட மன்றத்தில் வாதாடிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கும் நல்ல நட்பு இருந்தது. தேவதாசி முறை ஒழிப்புச் சட்ட தீர்மானத்தை காங்கிரசில் இருந்த சனாதனவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். அதில் முக்கியமானவர் ‘தீரர்’ சத்தியமூர்த்தி. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அந்தச் சட்டத்தைக் கொண்டு வரத் தீர்மானம் இயற்றியபோது, ‘தேவதாசி முறை தொடர்ந்து நடக்க வேண்டும்.. இல்லாவிட்டால் பாரம்பரியம் மிக்க இந்தியக் கலாசாரம் சீரழிந்து விடும்’ என்று ஆவேசப்பட்டார். அப்போது முத்துலட்சுமி அம்மையார் தந்தை பெரியாரிடம் ஆலோசனை பெற்று இவ்வாறு கூறினார். ‘அவர்கள் தேவதாசி முறை தொடர வேண்டும் என விரும்பினால், இதுவரை எங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருந்து விட்டனர். இந்தியப் பண்பாட்டைக் காக்க, இனிமேல் உங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருக்கட்டும்’ என்றார். அதிர்ச்சியில் வாயடைத்து நின்றனர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட சனாதனவாதிகள். பல போராட்டங்களுக்குப் பிறகு, 1947 ஆம் வருடம், உலக அரங்கில் இந்தியாவுக்கு அவமானமாய் விளங்கிய தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்காவில் கறுப்பின அடிமைகள் அனுபவிக்கும் துயரங்கள் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துவந்தாலும், அதைப் பற்றி அமெரிக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கறுப்பின அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கு வழிகோலிய உள்நாட்டுப் போருக்கு தொடக்கமாகவும் அமைந்தது ஹாரியட் பீச்சர் ஸ்டோவ் அம்மையார் எழுதிய ‘அங்கிள் டாம்ஸ் காபின்’ என்ற நாவல். அதே போன்று ‘தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்’ என்கிற நாவலை 1936 ஆம் ஆண்டு வெளியிட்டார் ராமாமிர்தம் அம்மையார். அது தேவதாசிகளின் பரிதாப வாழ்வையும், சொந்த அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டது. விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட இந்த நாவலை ஒரு வரலாற்று ஆவணம் என்றே சொல்லலாம். இந்த நாவலைப் பற்றிய ராமாமிர்தம் அம்மையாரே குறிப்பிடுவது என்னவென்றால், ‘புழுங்கிய மனதில் தோன்றிய எனது உணர்ச்சியின் பயனாக எழுந்தது இந்நாவல்’, என்கிறார்.

தேவதாசி முறை ஒழிக்கப்பட்டாலும் ரகசியமாகப் பல இடங்களில் அந்த முறை தொடர்ந்து நடந்து வந்தது. அங்கெல்லாம் நேரடியாகச் சென்று, விசாரணை நடத்திப் பல பெண்களை விடுவித்தார். அண்ணா, சிவாஜி கணேசன், டி.வி.நாராயணசாமி போன்றோர் நடித்த நாடகங்களில் தாயார் பாத்திரத்தில் தொடர்ந்து நடித்து, எழுத்து மூலமும் கலை மூலமும் புரட்சியை செய்தார் அம்மையார்.

Siragu Moovalur_ramamirtham1

மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் சுமார் 50 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு அவர் வாழும்போதே பெற்ற விருது அறிஞர் அண்ணா தி.மு.க சார்பில் 1956 ஆம் ஆண்டு வழங்கிய விருதுதான். சுயமரியாதை இயக்கத்திற்காக உழைத்தவர்களுக்குத் தி.மு.க சார்பில் விருதுவழங்கிச் சிறப்பிக்க அண்ணா முடிவு செய்தார். இதற்கு அவர் முதலில் தேர்வு செய்த பெயர் மூவலூர் அம்மையார் பெயர்தான்.

அம்மையாரின் கடைசி ஆண்டுகள் மயிலாடுதுறையிலேயே கழிந்தன. முதுமையிலும் சுறுசுறுப்புக்குக் குறைவில்லை. கண்பார்வை மங்கிவிட்டபோதும் தமது வேலைகளைத் தாமே செய்து கொண்டதுடன் சிறு சிறு வேலைகளிலும் ஈடுபட்டார். சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட புரட்சிப் பெண்மணி 1962 – ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27-ஆம் நாளில் தமது 70-ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

“தாசிகளுக்குப் புத்திசாலித்தனமான ஆராய்ச்சி கிடையாது. பொருள் தேடும் ஆராய்ச்சியும் தாசிகளுக்குக் கிடையாது. பொருள் தேடும் பேராசையால் யார் எப்படிச் சொன்னாலும், அப்படியே நடப்பார்கள். ஆனால், எவ்வளவு சாமர்த்தியமாக அவர்கள் பொருள் தேடினாலும் கடைசி காலத்தில் இளிச்சவாய்த்தனமாய் யாரிடத்திலாவது கொடுத்துவிட்டுக் கஷ்டப்படுவார்கள். எந்தத் தாசியாவது கடைசி காலத்தில் சுகமாயிருக்கிறாளா?” என்று தனது நாவலில் ஓரிடத்தில் வேதனையோடு சொல்கிறார் ராமாமிர்தம்.

இன்றைக்குத் தேவதாசி முறை சட்டத்தால் ஒழிக்கப்பட்டுவிட்டது என்றாலும் இன்றும் தமிழ்நாட்டில் வேலூர், காரைக்குடி பகுதியில் உள்ள சில சாதியினர் தேவதாசி முறையை கடைப்பிடிக்கின்றனர். விராலிமலையில் தேவதாசிகள் உள்ளனர், புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்பழக்கம் நடைமுறையில் உள்ளது. திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் உள்ளது என்பதே வேதனை. இதனை முற்றிலும் ஒழித்திட என்ன செய்யப்போகிறோம்?


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்”

அதிகம் படித்தது