மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மெல்லின மேகங்கள் (கவிதை)

மகேந்திரன் பெரியசாமி

Jun 23, 2018

siragu megangal1

 

மேகங்கள்-

நட்சத்திர முட்டைகளை

அடைகாக்கும்

குளிர்ப்பதனக் கூடுகள்-

 

வான் கடல் எங்கும்

உள்ளே புகுந்து

வெண்மணல் பரப்பிய

பேரழகுக் கடற்கரைகள்-

 

தொங்கும் தூரத்து

வெள்ளி மலைக் குன்றுகள்!

 

அந்தரத்தில் தொங்கிச் செல்லும்

சர்க்கஸ் கூட்டத்தின்

யானைப் பரிவாரங்கள்-

 

கொஞ்சம் இருட்டு

கலந்து செய்த

கரையும் சிலைகள்

விரையும் மலைகள்-

 

மிதந்தே நகர்கின்ற

கருப்பு வெள்ளைத் பூந்தோட்டங்கள்-

காலை மாலை வேளையில் மட்டும் வண்ணங்கள் பூக்கும் பூங்காவனமாய்-

 

வானம் வரைந்து காட்டும்

முப்பரிமாண ஓவியங்கள்-

கறுப்பு வெள்ளைக் களஞ்சியங்கள்!

 

வான்புத்தகத்தின் முதல் அட்டைப்படம்- வானம் தினம்தினம் போடும்

முகநூல் சுவர்ப் பதிவுகள்-

பதில்கள் பதியும்

விருப்பப் பொத்தான்கள்-

அதற்கு

இறைந்து கிடக்கும் கருத்துக் குவியல்கள்

 

கடலுக்கும் வானுக்கும்

தொடர்ந்து பயணிக்கும்

படகுப் போக்குவரத்துக் கழகங்கள்-

 

பூமியைக் குளிக்க வைக்க

வானமே பொருத்திய பூநீர்த் தூவிகள்-

 

திரவப்பூ மழை நீர்

சுரக்கின்ற கருப்பைகள்-

 

மழைக் குட்டிகள் ஈனுகின்ற

மகப்பேறு மதில்கள்-

 

மேக மோக சூழ் சுமந்து

வேர்களின் விலாசங்கள் தேடும்

மழை நீர் விழுதுகள்-

யாகம் நடத்தும்

சொர்க்கத்தின் புகைகள்-

 

வான் நடத்தும் மாநாட்டைக்

கண்டுகளிக்க கடல் தாண்டி

வருகை தந்த மாநாட்டுப் பிரதிகள்-

 

நட்சத்திரங்கள் உடுத்திய கிழிசல் நிறைந்த பட்டுப் புடவைகள்-

 

நகரும் நவீன  நீச்சல் குளங்கள்..

நீந்தும் ஆமைகள்-

தாவும் குதிரைகள்-

விண்ணெங்கும் வியாபித்த

ஜுராசிக் பூங்காக்கள்!

 

நிலவுப் பெண் உடுத்திய

மடித்து வைக்காத

துவைத்த துணிமணிகள்-

 

வானத்து தேவதை

உறங்கி எழுந்ததில்

கலைந்து கிடக்கும்

 

மிருதுவான மெத்தைகள்-

 

வான் கடலுக்குள் நுழைந்த

வன மிருகச்சாலைகள்-

 

சூரியனும் நிலவும்

கண்டு மறைந்து (hide and seek)

தேடி விளையாடும்

மறைவுகள் நிறைந்த

சிறுவர் பூங்காக்கள்!

 

வானத்தின் வாசல்

அணிந்து கொண்ட

கலை எழில் திரைத்துணிகள்-

 

சூரியனும் நிலவும்

பகிர்ந்து விளையாடி

வானெங்கும் இறைத்த

விளையாட்டு பொம்மைகள்!

 

காண்பதற்கு மெல்லினப்

பதுமையாய் இருப்பினும்-

உயிர்கள் வாழ

பயிர்கள் தழைக்க

வல்லினமாய் மாறி

மின்னொளி எழுப்பி

இடியிசை முழங்க

கனமழை வரம் அருள்

மெல்லின மேகங்கள்!

 

ஆழ்ந்து  நாமெல்லாம்

அரை நிமிடம் சிந்திப்போம்-

உனக்கும் எனக்கும்

உயிர்க் காற்றை யார் தந்தார்?

ஆக்ஸிஜனை அடைகாக்க

தேர்ந்தெடுத்த மரப் பசுமை!

 

நாம் தினம் தினம் உண்ணும்

சுவாசக் காற்றை

மேக அன்னைதான்

பூமிக்கு அனுப்பி

மரங்களை வளர்த்து

மேகங்கள் விதைப்போம்-

 


மகேந்திரன் பெரியசாமி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மெல்லின மேகங்கள் (கவிதை)”

அதிகம் படித்தது