மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மெ. சண்முகம் எழுதிய தமிழ்ப் பிள்ளைத்தமிழ் நூல் குறித்த விமர்சனம்.

முனைவர் மு.பழனியப்பன்

Apr 9, 2022

siragu pillaithamil

தமிழ் மொழி நாளும் நாளும் வளர வேண்டுமானால் புதிய புதிய படைப்புகள் தமிழுக்கு வந்து சேரவேண்டும். தமிழில் புதிய படைப்புகள் தோன்றுவது என்பது ஒருவகை வளர்ச்சி என்றாலும், தமிழ் மொழியின் பெருமையை வெளிப்படுத்தும் தமிழ்ப் படைப்புகள் தோன்றுவது என்பது மற்றொரு வகையான வளர்ச்சி. தமிழுக்குத் தூது பாடப்பெற்றிருக்கிறது. தமிழுக்குப் பிள்ளைத்தமிழ் பாடப்பெறாத குறையைப்  போக்குவண்ணம் புதிய படைப்பு ஒன்று தமிழ் பிள்ளைத்தமிழ் என்ற பெயரில் கவிஞர் மெ. சண்முகம் அவர்களால் எழுதப்பெற்றுள்ளது.

தமிழைப் பெண்பிள்ளையாகக் கருதி அவர் பிள்ளைத்தமிழ் பாடுகிறார். தற்காலத்துக்கு ஏற்ற நிலையில் இந்தப் பிள்ளைத்தமிழ் பாடப்பெற்றுள்ளது.  தமிழ் உயிர் பெற்று  பெண் பிள்ளையாக வளருவதை இந்தப் பிள்ளைத்தமிழ் பாடுகின்றது. பெண்பாற் பிள்ளைத்தமிழ் என்ற நிலையில் அமையும் இப்பிள்ளைத்தமிழ் பல புதுமைகளையும் கொண்டுள்ளது. பன்னிரு எழுத்துக்களையும் ஒவ்வொரு பருவத்திற்கும்  பயன்படுத்தி காப்புப் பருவப் பாடல்கள் அனைத்தும் ‘அ‘ என்ற  உயிர் முதல் எழுத்தில் தொடங்கப்பெற்றுள்ளது. இதுபோன்று மற்ற உயிர் எழுத்துகளை முதலாக வைத்து ஒவ்வொரு பருவமும் பத்துப் பத்துப் பாடல்களைக் கொண்டு அமைக்கப்பெற்றுள்ளமை பெருஞ்சிறப்பு. அதிலும் ‘ஔ‘ என்ற எழுத்தை அதிகம் பயன்படுத்திய கவிஞர் மெ. சண்முகம் ஒருவராகவே இருக்கமுடியும். ‘ஔதாரி, ஔசீர, ஔடதம், ஔடும்பரம், ஔதாவில், ஔவை, ஔதசி, ஔசித்தி, ஔவியம், ஔபரிதிகம் என்று ஔ என்ற எழுத்தில் இத்தனைத் தமிழ் சொற்கள் இருப்பதைத் தமிழ் உலகிற்கு வெளிக்காட்டியுள்ளார்.

மிகத் தெளிவாக பிள்ளைத்தமிழ் இலக்கணங்களை ஆராய்ந்து அவற்றில் எவ்வகையில் புதுமை சேர்க்க இயலுமோ, தமிழுக்குப் பெருமை சேர்க்க இயலுமோ அதையெல்லாம் எண்ணி எண்ணிப் பிள்ளைத்தமிழ் பாடியிருக்கிறார் கவிஞர் மெ. சண்முகம். பெண்பாற்பிள்ளைத்தமிழின் வடிவத்தில் இரு பருவங்களை இணைத்துப் பிள்ளைத்தமிழ் வகையின் வளர்ச்சிக்கு அடிகோலியுள்ளார் கவிஞர் மெ.சண்முகம். கணினிப் பருவம், செம்மொழிப் பருவம் என்று இரு புதிய பருவங்களை இணைத்து அவர் புதுமை புரிந்துள்ள விதம் அருமை.

காப்புப் பருவத்தில் சிலப்பதிகார ஆசான் இளங்கோவடிகள் பின்பற்றிய இயற்கை வாழ்த்தினை இவரும் பின்பற்றியுள்ளார். பத்து தெய்வங்களைக் காக்கச் சொல்லிப் பிள்ளைத்தமிழில் காப்புப்பருவம் பாடுவது இயல்பு. இவர் இயற்கைப் பொருள்களையே காக்கச்  சொல்லிப் புதுமை கண்டுள்ளார். கதிரவன், நிலவு, மழை, காற்று, புவி, கடல், மலை, நெருப்பு என்று இயற்கைப் பொருள்களெல்லாம் தமிழைக் காக்க வரிசையாக நிற்கின்றன. தமிழைக் காக்க முத்தமிழே வருகிறது. தமிழைக் காக்கத் தமிழ்ச் சான்றோர்கள் வருகிறார்கள், மூவேந்தர்கள் வருகிறார்கள். இப்படிக் காப்புப் பருவத்திலேயே தன் புதுமை எண்ணங்களைக் கவிஞர் மெ. சண்முகம் தந்துள்ளார்.

இதுபோன்று தமிழ் தூங்க அவர் தரும் கட்டில் வரிசை அருமை. பளிங்குக்கட்டில், சந்தனக்கட்டில், தங்கக்கட்டில், கயிற்றுக்கட்டில், வெள்ளிக்கட்டில் என்று தமிழைத் தாலாட்ட கவிஞர் வீட்டில் அத்தனைக் கட்டில்கள் இருக்கின்றன. மேலும் காஞ்சிபுரம் பட்டுச் சேலை, காரைக்குடி கண்டாங்கிச் சேலை, தர்மாபுரம் பட்டு, ஆரணிப் பட்டு போன்ற பட்டுவகைகளும் தமிழுக்குத் தொட்டில் கட்டுகின்றன. கவிஞர் காரைக்குடியைச் சார்ந்தவர் என்பதால் காரைக்குடியின் கண்டாங்கியும் தமிழைத் தாங்குகிறது.

கவிஞர் ஓடாப் புலியார் வீடு என்ற அடையாளக் குறிப்பினைக் கொண்ட பரம்பரை சார்ந்தவர். அந்த முத்திரையும் இப்பிள்ளைத்தமிழில் இடம்பெறுகிறது.

‘‘ஓடாப்பு லியாம்த மிழேஓடும் புலியாம்

                        அக்கணி னிமீதுப யணித்த

            தேடிப்போ ராடிப் பார்பிடித் துத்தன்

                        இணையிலா முதற்கணி னிக்குப்

            பாடமா  னறவள் ளுவர்பெயர்  கொண்ட

                        புகழ்திக ழும்கைக்க ணினிவாழ்

            தமிழேத மிழேக ணிணித்தமி ழேநீ

                        திறனாய்ந்த ழைத்திடு வாயே!” (பா. 4)

என்னும் பாடலில் ஓடாப்புலி முத்திரை வருகிறது. ஓடும் புலி எனக் கணினிக்கு அடை பிறக்கிறது. கணினிப் பருவமும் இப்பாடலால்  சிறக்கிறது.

தமிழுக்குத் துறைதோறும், துறைதோறும் பெருமை சேர்க்கும் படைப்பாளர்கள் வரிசையில் இக்காலத்தில் பிள்ளைத்தமிழ் எழுதித் தமிழ் வளர்ப்பதில் தன்னிகரில்லா இடம் பெறுகிறார் ஓடாப்புலி மெ. சண்முகம்.

தானாக பாப் புனையும் ஆர்வமும், ஆற்றலும் பெற்ற அறிவியல் மாணவர் மெ. சண்முகம். இவரின் கவிப்புலமைக்குப் புலவர் ஆ. பழநி, கவிஞர் அர.சிங்கார வடிவேலன் போன்ற கவிஞர்கள் வழியமைத்துத் தந்துள்ளனர். அவர்களின் வழியில்  அரிய புதுமை மிக்க நற்கவிதை நூலை  கவிஞர் மெ. சண்முகம்  அவர்கள் படைத்தளித்துள்ளார். அவரின் கவியாற்றல் பெருகித் தமிழ் செழிக்கட்டும்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மெ. சண்முகம் எழுதிய தமிழ்ப் பிள்ளைத்தமிழ் நூல் குறித்த விமர்சனம்.”

அதிகம் படித்தது