மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மேரிலாந்து “காக்கிஸ்வில் நண்பர்கள் குழு” ஏற்பாட்டில் களைகட்டிய “அமெரிக்காவில் உழவர் திருவிழா!”

மகேந்திரன் பெரியசாமி

Jan 16, 2016

Parai Puliyaattam Silambu

உலகுக்கெல்லாம் உணவு படைக்கும் உழவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் அவர்களுக்கு நன்றி போற்றும் விதமாகவும், மண்மணம் மாறாத பாரம்பரிய மரபுவழியில் கொண்டாடப்படுவதே நமது பொங்கல் பண்டிகை.

தமிழகம் தாண்டி பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், அமெரிக்காவில் வாசிங்டன்/பால்டிமோர் அருகில்  மேரிலாந்து மாகாணத்தில் இருக்கும் காக்கிஸ்வில் நண்பர்கள் குழுவினர் இணைந்து, அத்தகு உழவர்களின் பெருமையை நமது அடுத்த தலைமுறையினர்க்கும், தமிழர்கள் அல்லாத வேறு மொழி பேசும் இந்திய அன்பர்களுக்கும், அமெரிக்காவில் வசிக்கும் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த வெளிநாட்டு நண்பர்களுக்கும் நமது பண்பாட்டு விழுமியங்களை, பாரம்பரிய மகத்துவங்களை, பல்வேறு கலைவடிவங்களை அறிமுகப்படுத்தவும், அவற்றின்பால் அவர்களை ஆற்றுப்படுத்தவும் நோக்கம் கொண்டு  ‘உழவர் திருவிழா’வை சென்ற சனவரி 9ஆம் நாளன்று வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Guestsநுழைவு வாசலின் முகப்பிலேயே விழாக்குழுவினர்கள் இந்தியாவிலிருந்து வரவழைத்திருந்த மணக்கும் மல்லிகைப்பூச் சரங்களை வாங்குவதற்குப் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

அந்தக் கூட்டத்தைத் தாண்டி, அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலிருந்து 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்க ஏறத்தாழ 500 பேர் பக்கத்து வாசிங்டன், வர்ஜீனியா, டெலவேர்,   நியூஜெர்சி மற்றும் பென்சில்வேனியாவிலிருந்து மேரிலாந்து தமிழ் மக்கள் மாணவச் செல்வங்களுடன் பங்கேற்றனர்.

Kids Pallaanguzhiதிருவிழா பார்வையாளர்கள், அரங்கத்துக்குள் நுழைந்தபோது, அமெரிக்காவிலேயே வசித்து வந்தாலும், ஓர் ‘உழவர் கிராமத்துக்குள்’ நுழைந்தது  போன்ற உணர்வை, அரங்கம் முழுதும் அமைத்திருந்த வண்ணமயமான தோரணங்களும், பல்வண்ண முக்கோணக்கொடி வளைவுகளும், அலங்கார ஓவியங்களும், கண்காட்சி அரங்கங்களும் ஏற்படுத்தின.

மங்களகரமான நாகஸ்வரம்-மிருதங்க இசை அரங்கத்துக்குள் வழிந்து ஓட, தமிழகப் பாரம்பரிய உடைகளில் இருந்த விருந்தோம்பல் குழுவினர் இன்முகத்துடன் கைகூப்பி, வணக்கம் சொல்லி, அரங்கத்துக்குள் இருந்த இருக்கையில் அமர அனுப்பிய வண்ணம் இருந்தனர்.

வழக்கமான சடங்குகளுக்காக நிகழும் வரவேற்புரை போன்று எதுவும் இல்லாமல், யாரும் எதிர்பார்க்காத விதத்தில், பறையிசை முழங்க, தலைப்பாகை கட்டி,   நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பல்வேறு கலைஞர்கள் அணிவகுக்க, தமிழகத்தில் இன்னும் சில கிராமங்களில் உயிர்ப்புடன் இருக்கும் “தண்டோரா” அறிவிப்புடன் உழவர் திருவிழா இனிதே துவங்கியது..

Rope pullingவில்லுப்பாட்டு உட்பட, கோலாட்டம், ஒயிலாட்டம், விவசாய மகளிர் கும்மி, கரகாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், சிலம்பாட்டம், அரங்கை அதிரவைத்த பறையிசை முழக்கம், குறத்தி நடனம்,  குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்ற பொங்கல் விழா, பார்த்துப் பார்த்து தேர்வு செய்த சிறப்புப் பாரம்பரிய கிராமியக் கலை நிகழ்ச்சிகளை, திரளாகக் கூடியிருந்த பார்வையாளர்கள் கவரும் விதமாக இருந்தது. அனைத்து நிகழ்வுகளையும் பெரும்பாலும் தாமாகவே கற்றுக்கொண்டு பங்கேற்பாளர்கள் அரங்கேற்றியிருந்தனர். திரைப்படப் பாடல்களின் ஆதிக்கம் இல்லாது கலை நிகழ்ச்சிகள், கலாச்சார விழுமியங்கள் அமைத்தது சிறப்பம்சமாக இருந்தது.
நிகழ்ச்சித் தொகுப்பிலும், அடுத்த தலைமுறையினருக்கு நமது பாரம்பரிய மரபு விழுமியங்களை நாடக வடிவில் புரியும்படி கூறும்வண்ணம், சுவையுடன் படைத்தளிக்கும்  புதிய அணுகுமுறையை விழா ஏற்பாட்டாளர்கள் கையாண்டிருந்தனர்.

Rope pulling adultsவண்ணமயமான அரிய பல கலைகளை அரங்கேற்றியதுடன் சிந்தனையும் சிரிப்பும் கூடிய பொங்கல் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர். “புலம்பெயர்ந்த வாழ்க்கையில் நாம் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?” என்னும் தலைப்பில் நிகழ்ந்த அருமையான பட்டிமன்றத்தின் நடுவராக, வர்ஜீனியாவிலிருந்து வந்திருந்த வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. ஜான் பெனடிக்ட் அவர்கள் விறுவிறுப்பாக நடத்திக்கொடுத்தார்.

பெற்றது மிகுதி என்ற அணியினர் வேலை வாய்ப்பு, குழந்தைகளின் கல்வி, பல்வேறு விளையாட்டுகள், பெண்களின் விடுதலை, சுயமரியாதை, எந்த வேலையும் செய்யலாம், விஞ்ஞான வளர்ச்சிகள் வாழ்க்கையின் பங்காகி விடுவது, உற்றார் உறவினருக்கு உதவ முடிவது என்று அடுக்கினர்.

இழந்தது என்ற அணி சுவையான உடனே தயாரித்த உணவுகள், சுற்றத்தாரின் நெருக்கம், அன்பு, உறவாடுதல், சிறு சிறு நெஞ்சைத் தொடும் அனுபவங்கள், நல்லது கெட்டதிற்கு உடனே போக முடியாத நிலை, குடும்பத்துடன் உறவாட முடியாத எப்போதும் பறக்கும் வாழ்க்கை என்று அடுக்கினர்.

நடுவர் வாசிங்டன் ஜான் பெனடிக்ட் கல்வி, பெண்களின்  வாழ்க்கை முறை, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் இவையெல்லாவற்றையும் எடுத்துச் சொல்லி பெற்றதே மிகுதி என்பதைத் தீர்ப்பாகச் சொன்னாலும், இழந்ததை ஈடுகட்டமுடியாது என்று தீர்ப்பளித்தார்.

Pallaanguzhiசிறுவர்-சிறுமிகளுக்கான பயிலரங்கம் பம்பரம், பல்லாங்குழி, கோலிக்குண்டு, பொங்கல் வாழ்த்து அட்டைகள் தயாரிப்பது ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அமைந்திருந்தது.  பல்வேறு குழந்தைகள் விளையாட்டுகள் குழந்தைகளுக்குச் சொல்லித்தரப்பட்டன.  பெற்றோர்களுக்கே மறந்துபோன விளையாட்டுகளை ஆர்வத்துடன் அனைவரும் ஆடி மகிழ்ந்தனர். உரி அடித்தல், சாக்கு ஓட்டம், கயிறு இழுத்தல், கரும்பு உடைத்தல் உட்பட பார்வையாளர்கள் பெரியவர்கள், பெண்கள், சிறுவர்-சிறுமிகள் என பலரும் ஆர்வத்துடன் பங்கேற்ற பாரம்பரிய வீர விளையாட்டுகளால் அரங்கம் களை கட்டியது. நிழற்படம் எடுத்துக்கொள்ள ஏதுவான ஒளிப்பட அரங்கம் அமைத்து குடும்பத்துடன் ஒளிப்படங்கள் அமைத்திருந்ததும் அனைவராலும் விரும்பப்பட்டது.

Karumbu Udaikkum Pottiநான்கு நாள் பொங்கல் திருவிழாவை கண்களுக்கு முன் கொண்டுவரும் விதமான சிறப்புக் கண்காட்சி ஒன்றையும் விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். கண்காட்சி அரங்கத்தில் சூரிய உதயம், பொங்கல் அடுப்பு, கரும்பு, கோலங்கள், காளை மாடுகள், குழந்தைகள் மகிழும் திருவிழா அரங்கு என்று கிராமச் சூழ்நிலையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

வாழை இலையில் அனைவருக்கும் அறுசுவை விருந்து:

Vazhai Ilai Virundhuமிகவும் சிறப்பாக அனைவர்க்கும் வாழை இலையில் உணவு சர்க்கரைப் பொங்கல், காரப் பொங்கல், இட்லி, சாம்பார், சட்னி, வடை, புளிசாதம், தயிர்சாதம், லட்டு என்று சுவையான உணவுகள் தமிழக விருந்தோம்பல் முறையில் பரிமாற்றப் பட்டு வந்திருந்த அனைவரும் மகிழ்வுடன் உண்டு களித்தனர்.

வந்திருந்த அனைவரது ஆடல், பாடல், கொண்டாட்டத்துக்குப்பின், ஒவ்வொருவருக்கும் வீட்டுக்கு எடுத்துச்செல்ல இந்தியாவில் இருந்து இதற்காகவே கொண்டுவரப்பட்ட  தேன்மிட்டாய், கம்மர்கட்டு, எள்ளு உருண்டை, இஞ்சி மரப்பா, உப்பு சீடை உட்பட தீனிப்பொட்டலங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுக்கப்பட்டன.

Vazhai Ilai Virundhu Serving70க்கும் மேலான “காக்கிஸ்வில் நண்பர்கள் குழு” ஏற்பாடு செய்து, தன்னார்வலர்களின் பலநாட்களின் அயராத உழைப்பால் வந்திருந்த ஒவ்வொரு திருவிழா பார்வையாளர்களும், தமது ஊரிலேயே பொங்கல் கொண்டாடியதைப் போல மகிழ்ந்து விடைபெற்றதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.


மகேந்திரன் பெரியசாமி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மேரிலாந்து “காக்கிஸ்வில் நண்பர்கள் குழு” ஏற்பாட்டில் களைகட்டிய “அமெரிக்காவில் உழவர் திருவிழா!””

அதிகம் படித்தது