மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் பழங்குடியினர்

தேமொழி

Nov 29, 2014

மேற்குத் தொடர்ச்சி மலையில் பல பழங்குடியினர் வசித்து வருகிறார்கள். ஒரு சில பழங்குடியினர் தமிழகப் பகுதியிலும், மற்றும் சிலர் கேரளப்பகுதியிலும், கர்நாடகாப் பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.  இருளர்,  ஊராளி,  எரவாளர், கசவர்,  காடர்,  காட்டு நாயக்கர்,   காணிக்காரர்,  காவிலையர்,  குரும்பர், குன்றவர் கோட்டா,  கோத்தர், கோரக்கர்,  சோழ நாயக்கர்,   சோளகர்,  தொதுவர்,  தோடர்,  பணியர், பத்தி நாயக்கர், பளியர்,  மலசர்,  மலைக்குறவர்,  மாவலியர்,  முதுவர்,  வேடர்,  வேட்டுவர் எனப் பழங்குடியினர் அட்டவணைப் பட்டியல்  (Scheduled Tribes)  பல இனங்களைக் குறிப்பிடுகிறது. இந்திய அரசாங்கம் 1976 ஆம் ஆண்டின் கணக்கின்படி  75  பழங்குடி இனத்தவரை மிகவும்  பழமைமிக்க பழங்குடியினர் (PrimitiveTribal Groups / PTGs) என் வரையறுத்துள்ளது. எழுதப்படிக்கும் திறனுள்ள மக்கள் ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவாகவும், விவசாய நாகரிகத்திற்கும் முற்பட்டதான வாழ்வியல் நடவடிக்கைகளைக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் மிகவும் பழமைமிக்க பழங்குடியினராக இவர்கள் வகைப்படுத்தப்படுகிறார்கள்.

மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி  சற்றொப்ப மூன்று லட்சத்திற்கும் அதிகமாக பழங்குடியினர் கேரளப் பகுதியில் வசிக்கிறார்கள்.  இவர்களில் பெரும்பாலோர் மேற்குத்தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவில் வசிக்கிறார்கள்.   கேரளப் பகுதியில் மட்டும் முப்பத்து ஆறு அட்டவணைப் பழங்குடியினர் வசிப்பதாக கேரள மாநிலம் குறிப்பிடுகிறது.  இவர்களில் மிகவும் பழமைமிக்க பழங்குடியினராக கோரக்கர், காட்டு நாயக்கன், சோல நாயக்கன், குரும்பர்கள்,  காடர்கள் (Koraga; Kattunayakan; Cholanaickan; Kurumbar; Kadar) ஆகிய ஐந்து பழங்குடியினர் கருதப்படுகிறார்கள். இவர்கள் எண்ணிக்கையில் 20,000 திற்கும் குறைவானவர்கள், அத்துடன்  கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் ஒருவருக்கொருவர் வேறு பட்டவர்கள்.

காட்டு  நாயக்கர்கள்:

காட்டு நாயக்கன் பிரிவினர் வயநாடு, மல்லப்புரம் மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் வசிப்பவர்கள்.  இவர்கள் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம்  மாநில எல்லைகளும் சந்திக்கும் பகுதிகளில், பாலக்காட்டு கணவாய்க்கு வடக்கில் வசிப்பவர்கள். பெரும்பகுதியினர் (85%) வயனாட்டுப் பகுதியில் வசிப்பவர்கள். தமிழ்நாட்டின் பகுதியில் ‘காடு குரும்பர்’, ‘ஜேன்னு குரும்பர்’ என்றும், கேரளத்தில் ‘தேனுகுருமன்’ என்றும்  இவர்கள் அறியப்படுவார்கள்.  காட்டு நாயக்கன் என்றால் காட்டின் அரசர்கள் என்றும், தேனுகுருமன்,  ஜேன்னு குரும்பர் என்ற சொல்வழக்கின் மூலம்  தேன் சேகரிப்பவர்கள் என்ற பொருளிலும் வழங்கப்படுகிறார்கள்.

இந்த காட்டு நாயக்கன் பழங்குடியில் சோழ  நாயக்கன் என்றும் பத்தி நாயக்கன் என்றும் இரு பிரிவினர் உள்ளனர். சோழ நாயக்கர்கள் மலையின் உயர்ந்த பகுதிகளிலும், பத்தி நாயக்கர்கள் பள்ளத்தாக்கில் மலையடிவாரக் காடுகளிலும் வசிக்கிறார்கள். சோழ நாயக்கர்களை  சோளிக்கர் என்றும், பத்தி நாயக்கர்களை பத்திக்கர் என்றும் அழைக்கப்படுவதுமுண்டு. காட்டு நாயக்கன், சோழ நாயக்கன் மற்றும் பத்தி நாயக்கன் என மூன்று வகையினருமே பேசுவது ஒரே மொழி, இவர்கள் பேசும் திராவிட மொழி கன்னட மொழியுடன் தொடர்பு கொண்டதாக இருக்கிறது.

காட்டு  நாயக்கர்கள் குடியிருப்பு “குடி” என்று அழைக்கப்படுகிறது. அடித்தளமற்ற, எளிய குடிசையின் சுவர்கள் மூங்கில்களால் அமைக்கப்பட்டு, மண் குழைத்துப் பூசப்பட்டும், புல்லால் கூரை வேயப்பட்டும் இருக்கும்.  இவர்கள் உணவு தேடுவது, சேகரிப்பது, காட்டு வேலை, தோட்ட வேலை, சிறு விவசாயக் கூலி வேலை போன்றவற்றில் ஈடுபடுவார்கள். தங்கள் இனத்திற்குள் மட்டுமே திருமண உறவு முறை கொள்வதும், குழுவிற்கு தலைவனை “மூப்பன்” என்றழைப்பதும் இவர்களது வழக்கம். மூப்பனே மதச் சடங்குகளை முன்னின்று நடத்தி வைப்பார்.

மூதாதையர்களை வணங்குவதுடன், நிலவு, சூரியன், இந்துக்கடவுள்கள் ஒரு  சிலரையும் வணங்குகிறார்கள்.  தங்கள் குடியில் “தெய்வ மன” என்ற என்ற ஒரிடத்தை வழிபாடிற்காக ஒதுக்குகிறார்கள். நாடோடிகளாக வாழ்வதால் சொத்துரிமை போன்றவை இவர்கள் வழக்கிலில்லை.  மூப்பன்  தலைவராகவும், அவரில்லாத பொழுது  அவரது இளைய சகோதரரும் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்கள். இளைய சகோதரரும் இல்லாத பொழுது வாரிசுரிமை மூப்பனின் மூத்த மகனுக்குப் போகிறது. இவர்களுடையது தந்தை வழிச் சமூக அமைப்பு. இருபது விழுக்காட்டினர் எழுதப்படிக்க தெரிந்தவர்களாக இருந்தாலும் பெரும்பாலோர், குறிப்பாக காட்டின் உட்பகுதியில் வசிப்பவர் பள்ளி செல்ல விரும்புவதில்லை. இவர்களில் இருந்து சோழ நாயக்கர்களும், பத்தி நாயக்கர்களும் தனித்தனி குழுவாகிவிட்டனர்.  பெரும்பாலும் இவர்கள் வசிக்கத் தேர்ந்தெடுக்கும் இடங்களால் வேறுபடுகிறார்கள்.

சோழ நாயக்கர்கள்:

கேரளாவின் மல்லப்புர மாவட்டப்பகுதியில் வசிக்கும் சோழ நாயக்கர்கள் தங்கள் குடியிருப்புப் பகுதியை “செம்மம்” என்றும் தலைவரை “செம்மக்காரன்” என்றும் அழைக்கிறார்கள். இவர்களும் தாங்கள் பிரிந்து வந்த காட்டு நாயக்கர்களைப் போன்றே மூதாதையர் வழிபாட்டு முறையையும், பிற தெய்வங்களையும் வணங்குகிறார்கள். ஒரு குடிசையை வழிபாட்டிற்காக ஒதுக்கி அதை “தெய்வபுரம்” என்றும் அங்கு வழிபாட்டு தெய்வங்களை வைக்கும் இடத்தை “தெய்வக்கோட்டம்” என்றும் அழைக்கிறார்கள். செம்மக்காரன் சமயச்சடங்குகளை முன்னின்று நடத்துகிறார்.  நாடோடி வாழ்க்கையையும், சொத்துரிமை தேவையற்ற வாழ்வையும் கடைபிடிக்கிறார்கள். வேட்டையாடுவது, உணவு சேகரிப்பது, மீன் பிடிப்பது   இவர்களது குடும்பத்தொழில். பத்து விழுக்காட்டிற்கும் குறைவானவரே எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள்.

பத்தி நாயக்கர்கள்:

பத்தி நாயக்கர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறைவு, இவர்கள் கேரளத்தின் மல்லப்புரம், நிலம்பூர் பகுதியில் வசிக்கிறார்கள்.  இவர்களை மக்கட்தொகை கணக்கெடுப்பில் தனியே பிரித்து கணக்கெடுக்காமல் காட்டு நாயாக்கர்களுடன் சேர்த்துவிடுவது வழக்கமாக உள்ளது. முப்பதிலிருந்து அறுபது பேர் கொண்ட இவர்களது குடியிருப்பில் இருப்பவர் அனைவருமே ஒருவருக்கொருவர் இரத்தத் தொடர்பாலோ அல்லது மணவுறவாலோ உறவினர்கள்தான். இவர்களும் சோழ நாயக்கார்களைப் போல தங்கள் தலைவரை “செம்மக்காரன்” என்றுதான்  அழைக்கிறார்கள். வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், காட்டுவேலை போன்ற கூலிவேலைகளில்  ஈடுபடுகிறார்கள்.

பத்தி நாயக்கர்களின் பழங்கதை:

முன்னொரு காலத்தில் ஏழு பத்திநாயக்கர் சகோதரர்கள் தங்கள் சகோதரியுடனும், அவர்களுடைய  மனைவிகளுடனும் வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள் அந்த சகோதரி தாகத்திற்கு தங்கள் அண்ணியர்களிடம் நீர் கேட்டாள். யாருக்கும் தர மனமில்லை. ஒவ்வொருவரும், “சுத்தமான நீர் இல்லை”, “குழந்தை மூக்கை சிந்தி நீரில் போட்டுவிட்டது, குடிக்க இயலாதநீர்” என்பது  போன்று ஆளுக்கொரு நொண்டிச் சாக்கு கூறி நீர் கொடுக்க மறுத்தனர்.

எனவே அந்தப் பெண் கிணற்றிற்கே சென்று நீர் இறைக்கத் தொடங்கினாள். அப்பொழுது “நீரை எடுக்காதே” என்ற குரல் கேட்டது. மறுமுறை பாத்திரத்தை நீரில் முக்கியபொழுதும் அதே எச்சரிக்கைக் குரல் கேட்டது.  வெறுப்புடன் அதைப் புறக்கணித்து மீண்டும் மூன்றாவது முறையாக  நீரெடுக்க முனைந்தாள். இப்பொழுது   ஒரு பெரிய நாகம் அவள் முன் தோன்றியது.  “என்னை எப்படி அழைப்பாய்?” என்று கேட்டது.  “நான் உன்னை அண்ணா என்று கூப்பிடுவேன்” என்றாள் அந்தப் பெண்.  பாம்பு நீர் கொடுக்க மறுத்தது.  மீண்டும் அதேக் கேள்வியைக் கேட்டது அந்தப் பாம்பு.  அவள் மாமா என்று அழைக்க விரும்புவதாகக் கூறினாள். மீண்டும் அதே கேள்வி பாம்பிடம் இருந்து எழுந்தது.  இப்போழ்து சித்தப்பா என்று கூப்பிடுவேன் என்றாள்  அப்பெண். பாம்பு நீர் கொடுக்கவில்லை. முடிவில் வெறுப்படைந்த அந்தப் பெண், “பிறகு உன்னை எப்படித்தான் நான் அழைக்க வேண்டும், நீயே சொல்” என்றாள். என்னை உன் கணவன் என்று அழைக்க வேண்டும் என்றது பாம்பு. நாக்கு மிகவும் வறண்டுவிட்டதால், அவள் சரி என்று அந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளவும், பாம்பும் குடிக்க நீர் கொடுத்தது.

அவள் நீரை அருந்தியதும் அவளை தன்மேல் ஏறி அமரச் சொன்னது.  அவளை அழைத்துக் கொண்டு ஏழு மலைகளைத் தாண்டி, மலைப்பாறையில் உள்ள தனது குகைக்கு அழைத்துச் சென்றது. குகையை அடைந்ததும் தனது புதுமனைவி உண்ண உணவேதும் அங்கு இல்லாததால் ஒரு மூட்டை அரிசியைக் கொண்டுவந்து கொடுத்தது அந்தப் பாம்பு. மேலும் உனக்கு  என்ன வேண்டும் என்று பாம்பு கேட்க, அவள் சமைப்பதற்கு சில செப்புப்பாத்திரங்களும் கரண்டிகளும் வேண்டும் என்றாள். அவற்றையும் பாம்புக்கணவன் கொண்டு வந்து கொடுத்தது. இது போல மனைவி கேட்பதையெல்லாம் ஒரு நல்ல கணவன் போல கொண்டு வந்து கொடுத்து அன்புடன் தனது மனைவியைப் பேணியது அந்தப் பாம்புக்கணவன்.

ஒரு வாரத்திற்கும் மேலாக தனது சகோதரியைக் காணாத ஏழு சகோதர்களும் அவளை எல்லா இடத்திலும் தேடிக் கொண்டிருந்தார்கள். முடிவில் பாம்பின் குகையில் தங்கள் தங்கையைக் கண்டார்கள். பாம்பு குகையில் இல்லாத நேரமாகப் பார்த்து தங்கள் தங்கையை அழைத்துச் சென்றுவிட்டார்கள். பாம்பு தங்கள் தங்கையைத் தேடி வருவதை தடை செய்வதற்காக, வரும் பாதைகளில் எல்லாம் அரிவாள் பலவற்றை நட்டு வைத்துவிட்டு சென்றார்கள். கர்ப்பமாக இருந்த தங்கைக்கு பல வண்ணங்களில் பாம்புக் குழந்தைகள்/குட்டிகள் பிறந்தன.  சகோதரர்கள் அவற்றை நெருப்பில் போட்டு கொன்றுவிட்டார்கள். ஒரே ஒரு பாம்புக்குட்டி மட்டும் எப்படியோ தப்பியோடி அருகில் உள்ள பலாமரத்தில் ஏறி ஒளிந்துகொண்டது.  வளர்ந்ததும் தனது தாயுடன் சேர்ந்துகொள்ள விரும்பியது.

இதற்கிடையில் குகைக்குத் திரும்பிய பாம்புக்கணவன் தனது மனைவியைக் குகையில் காணாமல் திகைத்தது. மனைவியைத் தேடத் துவங்கியது. வழியில் சகோதரர்கள் நட்டு வைத்த அரிவாள்களினால் அதன் உடல்  துண்டாகியது. தனது காதல் மனைவியின் நினைவிலேயே அவளைத் தேடிய பாம்பிற்கு தனது உடல் சிதைந்தது கூடத் தெரியவில்லை. மனைவியை அடைந்து அவள் மடியில் விழுந்து இறந்த பொழுது அதன் தலை மட்டுமே அவள் மடியில் விழுத்தது.

காலங்கள் ஓடின. பலாமரத்தில் இருந்த பாம்புக்குட்டியும் வளர்ந்தது.  அந்தச் சகோதரர்களுக்கு அந்தப்பாம்பு அதன் அம்மாவை சேரக் காத்திருப்பது தெரிந்துவிட்டது. அவர்கள் அந்தப் பாம்பை ஏமாற்ற முடிவெடுத்தார்கள்.  ஒரு முயலுக்கு பெண்வேடமிட்டு குடிசையில் வைத்தார்கள்.  அந்தப் பாம்பும் அந்த பெண் வேடத்தில் இருந்த முயலை அதன் அன்னை என நினைத்து ஏமாந்தது. முயல் தாவித் தாவி சென்றபொழுது பாம்பும் அதனைப் பின் தொடர்ந்தது.  முயல் மரத்தில் ஏறிக் கிளைக்குக் கிளை தாவியோடியது. தாவிக்குதித்து நிலாவின் காலடியில் போய் நின்றது. பாம்பும் தாவி முயலின் காலைக் கவ்வியது. முயல் நிலாவில் இருந்ததால் பாம்பு நிலாவையும் சேர்த்துக் கவ்வியது.  இவ்வாறு பாம்பு தனது தாயாகக் கருதி நிலவில் இருந்த முயலையும் நிலவையும் சேர்த்துக் கவ்வியதால் சந்திரக் கிரகணம் ஏற்பட்டது.

சகோதர்கள் வந்து கூப்பிட்டதும் அன்பான கணவனையும் விட்டு வீடு திரும்புகிறாள் சகோதரி. தனது கணவன், குழந்தைகள் உயிர் விடுவதற்கும் அந்தப் பெண்ணே உடந்தையாகவும் இருக்கிறாள். இவ்வாறு கதையில் காணப்படும் இந்தச் சகோதர-சகோதரி உறவு,  பத்தி நாயக்கர் பழங்குடியில் கணவன்-மனைவி, தாய்-குழந்தை உறவை விட முக்கியத்துவம் பெற்றிருப்பதைக்  கூறுவதாக  சமூகவியல்  ஆய்வாளர்கள் காட்டுகிறார்கள்.

பத்தி நாயக்கர் பழங்குடியில் தாய்மாமன் உறவும், அத்தை (தந்தையின் சகோதரி) உறவும் மிகவும் முக்கியத்துவம் பெற்றது.  சகோதரியின் வாழ்வில்  சகோதரனுக்கு/அண்ணனுக்குப்  பொறுப்பு மிக அதிகம். தனது சகோதரி மணவிலக்கு பெற்றாலோ, கணவனை இழந்தாலோ அவளுக்கு ஆதரவு தருவது சகோதரனே. தனது சகோதரி இறந்தால் அவள் குழந்தைகளுக்கும் சகோதரனே பொறுப்பேற்று வளர்ப்பான். தனது சகோதரி மகனுக்கு திருமணத்தை முன்னின்று நடத்துவது, சகோதரியின் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவது போன்று முக்கிய கடமைகள் சகோதரனுக்கு உண்டு.

அதைப்போலவே சகோதரிக்கும் சகோதரன் வாழ்வில் நடக்கும் நிகழ்சிகளில் முக்கியப் பங்கு உண்டு. அத்துடன் அவளுக்கு சகோதரனின் மகளின் வாழ்விலும்  முக்கியக் கடமைகள் உண்டு. சகோதரனின் மகள் பருவம் அடைந்தால் சடங்குகளை அத்தையாக முன்னின்று நடத்துவாள். சகோதரனின் குழந்தைக்கு முதல் முறை சோறூட்டுவதும் அவளே. சகோதரனின் மகள் திருமணத்தில் அவளது அத்தை வழங்கும் சேலைதான் அணிவிக்கப்படும். திருமணச் சடங்கில் மாப்பிள்ளை தனது மனைவியின் அத்தைக்கு தனது தலையணையின் கீழ் பணம் விட்டுச் செல்வான். இந்த அளவு சகோதர சகோதரி உறவு முக்கியம் பெற்றிருப்பது அவர்களது பழங்கதை வழியாகவும் வெளிப்படுவதாகவே சமூகவியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

படங்கள்:

http://www.quazoo.com/q/Cholanaickan

References:

[1] The Primitive Tribal Groups of Kerala: A Situational Appraisal, Seetha Kakkoth

Department of Anthropology, Kannur University Centre at Palayad, Thalassery, Kannur

District 670 661, Kerala, India, © Kamla-Raj 2005 Stud. Tribes Tribals, 3(1): 47-55 (2005)

http://tinyurl.com/Seetha-Kakkoth

[2] Kinship and Tribal Lore, Seetha Kakkoth, Research Officer – Anthropology

Kerala  Institute  for  Research,  Training  and Development  Studies  of Scheduled  Castes  &

Scheduled Tribes (KIRTADS), Chevayur, Kozhikode.

Indian Folklife, Volume 2, Issue 3, January – March 2003 , pp. 22-24

Indian Folklife  Regd. No. R.N. TNENG / 2001 / 5251, ISSN 0972-6470

indianfolklore.org/journals/index.php/IFL/article/download/613/749

 


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் பழங்குடியினர்”

அதிகம் படித்தது