மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் காணலாகும் சமுதாய விழுமியங்கள்

முனைவர் மு.பழனியப்பன்

Dec 14, 2019

siragu melaanmai ponnusami3

கரிசல் மண் சார்ந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆவார். மேலாண்மறைநாடு என்ற சிற்றூரில் பிறந்து, ஓரளவிற்குப் பள்ளிக் கல்வி பெற்று, தன் இலக்கிய வாசிப்புத் திறனால் எழுத்தாளராக உருவானவர். தன் சிறுகதைப் படைப்புகளுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற இவர் தன் கதைகளில் பல சமுதாய விழுமியங்களை வெளிப்படுத்தியுள்ளார். கூலித் தொழிலாளர் தம் நேர்மை, போராடுபவர்களின் வெற்றி, பெண்களின் மேன்மை, மக்களிடம் காணப்படும் மனிதத்தன்மை போன்றன இவரின் கதைகளில் விழுமியங்களாக வெளிப்பட்டு  நிற்கின்றன. இவரின் கதைகளில் கரிசல் மண் சார்ந்த மனிதர்களின் தன்மைகள், கரிசல் மண் சாரந்த புழங்கு பொருள்கள், கரிசல் வட்டார வழக்குகள் போன்றன இயல்பாக அமைந்துள்ளன. இவரின் கதைகள் வழியாக சமத்துவமாக, தேமற்ற சமுதாயத்தை காணும் இவரின் விருப்பத்தை அறிந்து கொள்ளமுடிகின்றது.

மானாவாரிப் பூ, பூக்காத மாலை, மின்சாரப்பூ போன்றன இவரின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்புகள் ஆகும். மின்சாரப்பூ என்பது இவரின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற சிறுகதைத்தொகுப்பாகும். மின்சாரப்பூ தொகுப்பில் இடம்பெறும் கதைகளில் காணலாகும் சமுதாய விழுமியங்கள் குறித்த செய்திகளை இக்கட்டுரைத் தொகுத்து ஆராய்கிறது.

siragu melaanmai ponnusami2

சமுதாயத்தில் காதல் திருமணம் அதன் வழி வெளிப்படும் விழுமியங்களும்

தற்காலத்தில் காதல் திருமணம் என்பது செய்து கொள்வதற்கு முன்பும், பின்பும் போராட்டம் மிக்கதாக உள்ளது. இரு மனங்கள் இணைந்து ஒன்றாகும் இக்காதல் திருமணங்களைத் தடை செய்ய பல சமுதாயக் கட்டுப்பாடுகள் உள்ளன. இதனைக் காட்டிக் காதலைப் பிரிக்கவும், காதலைத் தடை செய்யவும் இக்காலத்தில் சமுதாய மாந்தர்கள் செயல்பட்டுவருகிறார்கள்.

இளஞ்சிறகுகள் என்றொரு கதை மேலாண்மை பொன்னுச்சாமியால் எழுதப்பெற்றுள்ளது. இதில் மூன்று காதல் சார்ந்த இணைகளை அவர் காட்டுகிறார். ராக்கன், கண்ணாத்தா ஒரு  இணை. சின்னப் பாண்டி மகன், அவன் காதலிக்கும் பெண் மற்றொரு இணை. வீட்டை விட்டு ஓடிவந்த இளவட்டங்கள் இருவர் இன்னொரு இணை. இந்த மூன்று அன்பின் வயப்பட்ட இணைகளை இணைத்து இளஞ்சிறகுகள் என்ற கதையைப் படைத்துள்ளார் மேலாண்மை பொன்னுச்சாமி.

ராக்கன், கண்ணாத்தா இருவரும் ஒரு பண்ணையில் ஒன்றாய் வேலை பார்த்தவர்கள். இருவருக்கும் காதல் மலர, இருவருக்கும் யாரும் இல்லாத நிலையில் இருவரும் இணைகிறார்கள். வாழ்வில் சிறு துண்டு நிலத்தை வைத்துக் கொண்டு அதில் விவசாயம் செய்த இப்போது வண்டி வைத்துப் பிழைப்பு நடத்தும் நிலையில் வெற்றி பெறுகிறார் ராக்கன்.

‘‘ஒண்ணுக்கும் ஆகாம ஒத்தை ஒத்தையா ரெண்டு மாடுக…. ஒண்ணு சேர்றப்ப….மண்ணைப் பொன்னாக்குற உழவு மாடுகளாகுது… மாடுக பட்ட பாடுகளாலே மண்ணு பொன்னாகுது. வாய்யா…வா. சாப்புடு…நாம அந்த மாடுகதான்” (மின்சாரப்பூ.ப. 90) என்று கண்ணாத்தா பேசும் சொற்றொடர்கள் ராக்கன், கண்ணாத்தா காதல் இணைவின் வெற்றிப் பெருமிதத்தைக் காட்டுகிறது.

ராக்கன் சின்னப் பாண்டி வீட்டைக் கடந்து ஒரு முறை போகும்போது அங்கு ஒரு சிறு சலசலப்பு நிகழ்ந்ததைக் காண்கிறார். என்ன என்று விசாரித்ததில் சின்னப் பாண்டி மகன் காதல் வயப்பட்டு ஒரு பெண்ணொடு ஓட திட்டமிட அது வெளிவர அவனை எல்லோரும் ஒரு வழிக்குக் கொண்டுவர முயற்சிப்பது தெரியவந்தது. இவரும் தன் பங்கிற்கு அவனுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

siragu melaanmai ponnusami1

‘‘சின்னஞ்சிறுசுக…. தூரதேசத்துலே ஆதரவுக்கு சொந்த பந்தமில்லாம என்னடா செய்வீக? உங்களுக்குச் சண்டை சத்தம் வந்தா… யார் தீர்த்து வைப்பாக? ஆயிரம் ரெண்டாயிரம் தேவைப்பட்டா யார் குடுத்து ஒதுவுவாக… யாராச்சும் உங்கள அடிக்க வந்தா யார் உங்கள காப்பாத்துவாக? எதுக்குடா? இந்தப் பொல்லாப்பு..பேசாம… பெத்தவுக சொல்ற புத்திமதியைக் கேட்டு….மாமா மகளைக் கல்யாணம் பண்ண சரின்னு சொல்றா” (ப. 92)என்று சின்னப்பாண்டி மகனின் காதலை முறிக்கிறார் ராக்கன். இவர் காதல் திருமணம் செய்தவர் என்பது இங்குக் கவனிக்கத்தக்கது.

சின்னப்பாண்டி மகன் ஒருவழியாக சம்மதித்து மாமா மகளைத் திருமணம் முடிக்கும் நாள் வந்தது. அன்று சின்னப்பாண்டி மகன் திருமணம் வேண்டாம் என்று ஓடிப்போய்விடுகிறான். இந்நிகழ்ச்சி அறிந்து ராக்கன் வருத்தப்படுகிறார். தானும் சேர்ந்து தவறு செய்துவிட்டோமோ என்று வருந்துகிறார்.

‘‘ஒறவு மொறையை ஒதுக்கி வைச்சுட்டு… நீரும் கண்ணாத்தாவும் ஒண்ணாச் சேர்ந்து, ஒழைப்பாலே அன்பாலே ஒகோன்னு ஆகியிருக்க முடியுதே… நீரே…என்னை மட்டும் ஒறவு மொறை காலடியிலே வுழுந்துகிடன்னு சொல்லலாமா? ஞாயமா? ஒமக்கே இது உத்தமமா? “ (ப.92)  என்று சின்னப்பாண்டி மகன் கேட்பது போல அவருக்கு பிரமை ஏற்படுகிறது. இதுபோன்று பல கேள்விகள் அவரைத் துன்புறுத்துகின்றன. உனக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா என்று எண்ணி ராக்கன் அலைப்புறுகிறார்.

இன்னும் சில நாள்களில் ஒரு இளமை இணை இவர் வண்டி ஓட்டி வரும் பக்கம் ஆதரவு தேடி வருகின்றன. அவர்களை விரட்டிக் கொண்டு கும்பல் ஒன்று வருகிறது. இந்நேரத்தில் தன் வண்டிககுள் அவர்களை மறைத்துவைத்து ராஜபாளையத்தில் கொண்டு வந்துப் பத்திரமாகச் சேர்ந்து அவர்களுக்கு அறிவுரை சொல்கிறார்.

‘‘இங்க பாரு… ஒழைப்பை நம்புறவனுக்கு எல்லா ஊரும் நம்ம ஊருதான். எல்லா மனுசரும் நம்ப ஒறவு முறைதான்… நீங்க ரெண்டு பேரும் அன்பாக மட்டுமே வாழ்ந்தீங்கன்னா…. எந்த தூர தேசத்துலேயும் ஒழைச்சு ஒத்துமையா வாழ்ந்துர முடியும். நல்லபடியா வாழ்ந்து காட்டுங்க…” (ப. 98) என்ற ராக்கனின் காதலை வளர்க்கும் பேச்சு சின்னப்பாண்டியின் மகனிடத்தில் அவர் காதல் திருமணத்தை எதிர்த்துக் கேட்ட கேள்விகளுக்குப் பதிலாக அமைகின்றது என்பதை இரு சொற்றொடர்களை இணைத்துக் காணுகையில் உணர இயலும்.

இவ்வகையில் காதல் திருமணம் செய்தவர்கள் வெற்றி பெறுவது கடினம் என்பதும், அவர்களின் வெற்றி அவர்களின் அன்புப் பிணைப்பில் உள்ளது என்றும், காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் வேற்று ஊரில்தான் வாழ முடியும் என்பதும் காதலால் பிணைந்தவர்களே அதற்கு எதிராகக் குரல் தரமுடியும் என்பதும் விழுமியங்களாகப் பெறப்படுகின்றன.

தொங்குக் கிடாயும், நம்பிக்கையும், வாழ்வும்

மாரியம்மா முத்துவீரன் சாமிக்கு ஒரு கடாய் வெட்டுவதாக நேர்ந்திருந்தாள். தன் மகள் உடல் நலமில்லாமல் இருந்தபோது, அவள் நலம் பெற வேண்டும் என்பதற்காக வேண்டிய வேண்டுதல் இதுவாகும். இதற்காக எல்லா தயாரிப்புகளும் சரியாக இருந்தன. ஆட்டினை முத்துவீரன் சாமிக்கு வெட்டி அதை அங்கேயே சமைத்துத் தன் உறவினர்கள், பக்தர்களுக்கு வழங்கவேண்டும் என்பது இந்த வேண்டுதல் முறையாகும்.

 ‘‘வந்திருக்கிற சனம் பூராவுக்கும் கறிச்சோறு, மேல் கண். நல்லது பொல்லதுக்குத் தயான் கண்ணில் தட்டும். ரெண்ட துண்டு கிடைப்பதே பெரிது. பிள்ளைகளுக்கு விட்டுக் கொடுத்துவிட்டுச் சப்புக் கொட்டணும். இன்றைக்கு பொதுஇடம். பெருங்கூட்டம். கோவில் மொட்டையடிப்பு, ஆசை தீர ஒரு பிடி பிடித்துவிடலாம். கூட ரெண்டு கரண்டி கேட்டு வாங்கி மாட்டி விடலாம். கறி தின்றே வாழ்ந்துவந்த ஆதியிலும் ஆதியான பாட்டன், பூட்டன்மாரிடமிருந்து சங்கிலித்தொடராக உயிருக்குள் பின்னிப் பிணைந்து வருகிற மன ருசிப்பசி. மரபணு மூலமாய் வரும் கவுச்சிதாகம்” (ப. 73) என்ற நிலையில் கிடாய் வெட்டு தொடர்பான சிந்தனைகளை வெளியிடுகிறார் மேலாண்மைப் பொன்னுச்சாமி. கடவுள் உண்டு இல்லை என்ற விவாதம் கிடாய் உண்டு என்பதால் ஒரு முடிவிற்கு வந்துவிடுகிறது.

இந்தக் கிடாய் வெட்டுக்காக எல்லாரும் காத்துக்கிடக்க, கிடாய் வெட்ட வெந்த பூசாரி சரிவர முழவதும் வெட்டாமல் ஆட்டுத்தலை தனியே விழாமல், தொங்குகிடாயாகிவிடுகிறது. இதில் அனைருக்கும் வருத்தம். குறிப்பாக மாரியம்மாவிற்குப் பெரிதும் வருத்தம். தன் நேர்த்திக்கடனை கடவுள் ஏற்கவில்லை என்று அவள் வருத்தம் கொண்டாள்.

மற்றொரு பூசாரி சொன்னதன் அடிப்படையில், மீண்டும் அடுத்த ஆண்டு ஒரு கிடாய் வெட்ட, ஆவன செய்யப்பட்டது. ஆனால் அப்போது உயிர்ப்பலி கூடாது என்று அரசு ஆணையிட்டுவிடுகிறது. இதன் காரணமாக மாரியம்மாவின் வேண்டுதல் நிறைவேறாமல் ஆகிவிடுகிறது.

 ‘‘நம்ம கோவில்ல நம்ம கிடாயை நாம வெட்டுறதுலே கவர்மெண்டு என்னத்துக்கு குறுக்க வரணும்?

பரம்பரையா வெட்டி வர்றொம்லே? யாரையும் கெடுக்கலே. யாருக்கும் கெடுதல் செய்யலே. கறி சாப்புடாத ஆளுகளைக் கூட  கௌரவம் பண்ணித்தானேடா… வந்துருக்கோம்?” (ப.80)

‘‘கசாப்புக் கடைக, பிராய்லர் கடைக எல்லாம் ஒயின் ஷாப்புக மாதிரி எல்லா எடத்திலேயும் இருக்குல்லே? அதெல்லாம் உயிர்ப்பலி இல்லையா? (ப.81)  என்ற நிலையில் மாரியம்மாவின் புலம்பல் அமைகிறது.

மேலாண்மை பொன்னுச்சாமி அடிப்படையில் கம்யூனிச சிந்தாந்த நோக்குடையவர் என்றபோதும் மக்களின் வழிபாட்டில், நம்பிக்கையில் விருப்பம் உடையவராக விளங்கியுள்ளார் என்பதை இக்கதை காட்டுகிறது. மேலும் அரசாங்கம் மக்களின் மத நம்பிக்கைகளில் தலையிடுவது தேவைதானா என்ற கேள்வியையும் இக்கதை முன்வைக்கிறது.

கறுப்பு மக்களின் வழிபாட்டுப் பண்பாடே கையறு நிலையில் புலம்பவதைப் போலிருந்தது மாரியம்மாவின் அழுகை என்று இக்கதை முடிகிறது. இக்கதையின் வழியாக தொங்கு கிடாய் என்ற கிராமத்து நம்பிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் கடவுள் பெயரால் பசி போக்கும் பணியைச் செய்து வருவது சமுதாய விழுமியமாகக் கருதத்தக்கது.

மனித நேயமும் பணமயமும்

இன்றைய சமுதாயத்தில் மனித நேயம் மறக்கடிக்கப்பட்டு வருகிறது. பணநேயம் அதிகரித்து வருகிறது. இதனை வெளிப்படுத்தும் ஒரு கதையாக சிதைவுலகம் என்ற கதை அமைகிறது. கருப்பையா என்ற கதா பாத்திரம் இக்கதையில் ரூபாய் இரண்டாயிரத்திற்கு வழியில்லாமல் யாரிடம் கடன் கேட்பது என்று அலைகிறது. மதினி ஊருக்குச் சென்று அவளிடம் பணம் பெற்றுக் கருப்பையா திரும்புகிறார்.

அவர் திரும்பும் வழியில் செந்தட்டி என்ற உறவினப் பையன் ஒருவன், உழைக்காமல் ஏய்த்துப் பிழைக்கும் தன்மை உடைய அவன், இவரைத் தடுத்து நிறுத்தி காசு கேட்கிறான். அவனுக்கு பதினைந்து ரூபாய் எடுத்துத் தந்து இரண்டாயிரத்தில் கழிவாக்கிக் கொள்கிறார்.

இதன்பின் அவர் தார்ச்சாலையில் மிதிவண்டியில் தன் ஊருக்குத் திரும்பும் நிலையில் ஒரு இளைஞன் குடிபோதையில் மயங்கிக் கிடக்கிறான். அவனைத் தூக்கி மற்றொருவர் உதவியுடன் அவன் ஊரில் சேர்த்துவிடுகிறார். அவருக்கு மனதில் மகிழ்ச்சி. ஒரு நல்ல காரியம் செய்தோம் என்று.

அடுத்தநாள் அந்த குடித்து மயங்கிக் கிடந்த இளைஞன் இவரிடம் வந்து ‘நேத்து நீங்கதானே என்னை…? நல்ல காரியந்தான் பண்ணுனீக. என் சட்டைப்பையிலே, ஆயிரத்து எழுநூத்தி நாப்பது ரூவா வைச்சிருந்தேன். அதையும் குடுத்துட்டீகன்னா…. ரொம்ப நல்லதா போயிரும்” (ப. 1110 என்று கேட்கிறான். இவர் மறுக்க ஒரே கூப்பாடாகிவிடுகிறது.

 ‘‘நல்லதுக்குக் காலமில்லையா? ஒதுங்கி வந்திருந்தால் வம்பு தும்பு இல்லாமற் போயிருக்குமா, இரக்கப்பட்டு நெருங்கியவனுக்கு எடுத்துச் சுமந்தவனுக்கு இந்தத் தண்டனையா? இதென்ன காலத்தின் கோலமே இதுதானா?” (ப.111) என்று தன்னை நொந்து கொள்கிறார் கருப்பையா.

மனித நேயம் வியாபாரமாக ஆக்கப்படுகிற சூழலை இந்தக் கதை தெளிவாக எடுத்துரைக்கிறது.

இக்கட்டுரையில் ஆய்விற்காக எடுத்துக்கொள்ளப்பெற்ற மூன்று கதைகளும், சமுதாயத்தில் மனித நேயம் மாண்பாகப் போற்றப்பெற்று வளர்க்கப்பட வேண்டும் என்ற நிலையில்  எழுதப்பெற்றுள்ளன. மனிதர்கள் தம் வேலைகளை மட்டும் கவனிக்கும் சூழலை இக்கதைகள் மறைமுக ஆதரிக்கின்றன. எனினும் பிறர் வேலைகளில் அல்லது பிறர் நலனில் தலையிடும்போது சிக்கல்கள் தோன்றுகின்றன. அச்சிக்கல்களை எதிர்கொண்டு வெற்றி பெறும் மனிதர்கள் வெற்றியாளர்கள் ஆகிறார்கள் என்பது இக்கதைகள் தரும் சமுதாய விழுமியம் ஆகும்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் காணலாகும் சமுதாய விழுமியங்கள்”

அதிகம் படித்தது