மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மொழியாக்கம் எனும் கலை!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Oct 6, 2018

siragu translate 2
எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்.
இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.
வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு
தெளியுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள்! மொழிப்பெயர்ப்பு என்பது ஒரு கலை என்கிறார் The Art of Translation நூலின் ஆசிரியர் தியோடோர் சேவொரி. தமிழ் மொழியை பொறுத்தவரையில் அது இன்றளவும் உயிர்ப்போடு இயங்கிக் கொண்டு வரும் செம்மொழி, சில நூற்றாண்டுகளுக்கு முன் வெறும் பக்தி மொழி என்ற நிலையில் மட்டுமே சுருங்கிவிட்ட அவல நிலையில் இருந்து, மீட்டெடுத்து அறிவியல் கருத்துகள் ஒரு மொழியில் உருவாக்கப்படும்போது தான் மக்களின் மொழியாக மக்களுக்கு தேவையான கருத்துகளை கூறும் மொழியாக நிலைக்கும் என்பதை வலியுறுத்திய இயக்கம் திராவிடர் இயக்கம். மேட்டிமை தமிழறிஞர்களின் வீட்டுப் பரனில் உறங்கிக்கிடந்த திருக்குறளைப் பொதுமறையாக மக்களிடம் தவழ விட்ட தலைவர் தந்தை பெரியார்! அன்று மக்களின் மொழியாக தமிழை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே மொழிபெயர்ப்பினை நாம் பார்க்க வேண்டும். நம் மொழியில் உள்ள இலக்கியங்கள் மட்டுமல்ல பிற மொழிகளின் இலக்கியங்களை மொழிபெயர்த்து மக்களிடம் கொண்டுசேர்க்கின்றபோது, பல மொழி பேசும் மக்களின் அனுபவங்களை நம் மொழியில் படித்து உணர முடிகின்றது. குறிப்பாக மற்ற நாடுகளில் உள்ள விஞ்ஞான கண்டுபிடிப்புகள், அவர்களின் அரசியல் சூழல், அந்த மக்களின் வாழ்வியல் என பலவற்றை படித்தறிந்து ஒப்புநோக்கி அறியும் வாய்ப்பு கிடைக்கின்றது.

siragu translate 3

ஆங்கிலத்தில் பேராசிரியர் முனைவர் ந. சுப்ரமண்யன் எழுதிய நூலான The Brahmin in the Tamil Country என்ற நூலை தமிழில் தமிழகத்தில் பார்ப்பனர்கள் என்று பேராசிரியர் மு. வி. சோமசுந்தரம் அவர்கள் எழுதிய நூலில் அணிந்துரை வழங்கிய போராசிரியர் ப. தைலாம்பாள் ரோமானிய அறிஞர் சிசேரோ மொழிப்பெயர்ப்பை மூன்று வகைப்படுத்துவது குறித்து எடுத்துக்காட்டுகின்றார். அவை 1. சொல்லுக்கு சொல் மொழி பெயர்த்தல் 2. பொழிப்புரை அளித்தல் 3. மூலக் கருத்தை உள்வாங்கிக்கொண்டு அதன் அடிப்படையில் தாமே படைத்தல். இவ்வகைப்பாடு திறனாய்வை எளிமைப்படுத்தவே ஏற்பட்டது. ஒன்றின் கூறுகள் மற்றதில் இருப்பது இயல்பு என்கிறார்.

ஜப்பான் நாட்டில் பிற மொழியில் உள்ள எந்த ஒரு நூலும் ஒரு சில வாரங்களில் மொழிபெயர்க்கப்பட்டு விடுகிறது. Translation is an industry என்கின்றனர் ஜப்பானிய நாட்டினர். ஏன் மொழிப்பெயர்ப்பு அவசியம் எனின்,

“ may have been right when he said “a person’s name is to that person the sweetest and most important sound in any language.” But the next sweetest sound is their native language.
என்கிறார் டேல் கார்னிகி.

ஒரு எழுத்தாளரின் அனுபவக்கதைகளை அந்தந்த மொழியில் படிக்கும் வாசகர்களுக்கு எழுத்தாளரின் மனநிலையை உணர்ந்து கொள்ள முடியும். தாய் மொழியில் மட்டுமே ஒரு கருத்தின் முக்கியக் கூறுகளை புரிந்து கொள்ள முடியும்.

தமிழ் மொழியைப் பொறுத்தவரை மேற்கத்திய நூல்களை மொழியாக்கம் செய்யும்போது அவர்கள். பண்பாடு சார்ந்த சொற்கள், சொலவடைகள், உவமைகள், உருவகங்கள் இவற்றுக்கு இணைச் சொற்களைக் கண்டு எழுதுவது மிகப் பெரிய சவால் தான். இந்த தடைகளை எல்லாம் தகர்த்துத் தான் மூல நூலின் கருத்துகள் சிதையா வண்ணம் மொழியாக்கம் செய்கின்றனர். மொழிபெயர்ப்பாளர்களுக்குத் தர வேண்டிய முக்கியத்துவம் ஒரு நூலின் ஆசிரியருக்கு இணையாக இருக்க வேண்டும் எனும் கருத்தும் இங்கும் வலியுறுத்தப்படுகின்றது.

பல மொழிகளை கற்று தமிழில் பிற மொழி நூல் செல்வங்களை கொணர்ந்து அறிவார்ந்த சமூகத்தை படைப்போம்; மொழிபெயர்ப்பு கலையை வளர்த்தெடுப்போம்!


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மொழியாக்கம் எனும் கலை!”

அதிகம் படித்தது