மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ம.பொ.சி. யின் வாசிப்பில் சிலப்பதிகாரம்

தேமொழி

Mar 2, 2019

siragu silappadhigaara thiranaaivu1

நூலும் நூலாசிரியரும்:

சிலப்பதிகாரத்தின் தனிப்பெருமை அது ஐம்பெருங்காப்பியங்களுள் தலையாயது என்ற சிறப்பு. அது பிறமொழி காப்பியங்களின் தழுவல் அன்று, தமிழகத்திற்கே உரித்தான இலக்கியம். தமிழகத்தின் ஒரு வரலாற்றுக் களஞ்சியம். தமிழினத்தின் பண்பாட்டுப் பெட்டகம். சாதாரண மக்களின் வாழ்வையும் காட்டும் வரலாற்று இலக்கியமாகத் தமிழுக்கு அமைந்த சிறப்பு சிலப்பதிகாரத்திற்கு மட்டுமே உண்டு.

சிலப்பதிகாரத்துடன் இணைத்து அடையாளம் காணப்படுபவர் சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) அவர்கள். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக 1950இல் பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களால் ‘சிலம்புச் செல்வர்’ என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. சிலப்பதிகாரம் குறித்து இவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 13. சிலப்பதிகாரத்தைக் கற்றுத் துறை போகிய ம.பொ.சி. அவர்கள் இந்நூலில், தாம் எழுதிய சிலப்பதிகாரம் குறித்த இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், அவர்தம் ‘செங்கோல்’ இதழில் வெளியான அவரது இலக்கியக் கட்டுரைகள் பல, பல்வேறு காலங்களில் அவர் ஆற்றிய சிலம்பு குறித்த சொற்பொழிவுகள் சில என ஒரு 34 கட்டுரைகளைத் தொகுத்து “சிலப்பதிகாரத் திறனாய்வு” என்ற தலைப்பில் அளித்துள்ளார். இந்நூலை மிகப் பொருத்தமாக, சிலப்பதிகாரத்தின் சிறப்பினை நிலைநாட்ட எழுநிலை மாடங்களோடு கூடிய புதிய பூம்புகாரை உருவாக்கிய தமிழக அரசின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்குக் காணிக்கையாக்கி இருக்கிறார் ம.பொ.சி.

இந்நூலில் உள்ள கட்டுரைகள் யாவற்றையும் அவற்றின் பொருண்மையின் அடிப்படையில் பகுத்துக் காண்பதின் மூலம் சிலம்புச் செல்வரின் சிலப்பதிகாரம் குறித்த பார்வையை எளிதில் தெளிவாக அறிய முடியும். இந்நூலின் கட்டுரைகள் பெரும்பாலும் சிலப்பதிகாரக் கருத்தாய்வுகள், இலக்கிய நயம் பாராட்டல், ஒப்பிலக்கிய ஆய்வுகள், இளங்கோ சிலம்பு எழுதியதன் நோக்கமென நூலாசிரியர் கருதுவது,  ம.பொ.சி. தம் ஆய்வின் வழி அவர் உருவாக்கிக் கொண்ட சிலம்பு குறித்த கோணங்கள், சிலப்பதிகார பாத்திரங்கள் குறித்த ஆய்வு முடிவுகள், கண்ணகியின் பாத்திரப்படைப்பின் சிறப்பு என்ற பிரிவுகளின் கீழ் அடக்கலாம். இக்கருத்துகளைத் தெரிந்துகொள்வதன் மூலம் சிலப்பதிகாரம் கற்க விரும்பும் எவருக்கும் சிலம்பு குறித்து தமிழறிஞர்களிடையே மாற்றுக் கோணங்கள் இருப்பதை அறியும் வாய்ப்பும் கிடைக்கும் என்பது திண்ணம்.

சிலப்பதிகாரத் திறனாய்வு:

பதிகம் இளங்கோ பாடியதா? – சிலப்பதிகாரத்தின் முகப்புப் பதிகம் காப்பியக்கதையினை அறிமுகப்படுத்தும் ஒரு சுருக்கம். இப்பகுதியை இளங்கோ எழுதியதாக அதற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் முதற்கொண்டு கருதுகிறார்கள். ஆனால் அது தவறு என்பது ம.பொ.சி.யின் ஆய்வு முடிவு. “உரைசால் அடிகள் அருள,” “அவனுழையிருந்த தண்டமிழ்ச் சாத்தான்” போன்றவை பிறிதொருவர் கூற்றாக அமைந்துள்ளதைக் கொண்டு ‘பதிகம் எழுதியர் இளங்கோ அன்று’ எனக் கொள்ளவேண்டும் என்கிறார். உரை எழுதிய அடியார்க்கு நல்லாரே கூறிவிட்டார் என்று பின்வருபவரும் அதனை ஏற்றுக்கொள்வது சரியன்று என்பது இவர் தரும் விளக்கம். சேர சோழ பாண்டியர் குறித்த அரசியற் காப்பியம் சிலம்பு. அதன் மூலம் நல்லாட்சி குறித்த வழிகாட்டல் இளங்கோவின் நோக்கம். ஆனால், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் என்று பதிகம் காட்டும் கருப்பொருள் இளங்கோவின் கருப்பொருளிலிருந்து வேறுபடுகிறது. இந்த மூன்றும்தான் கருப்பொருள் என்றால் வஞ்சிக்காண்டமே எழுதத் தேவையில்லை. புகார் மற்றும் மதுரைக் காண்டங்களே இத்தேவையை நிறைவு செய்துவிடும். கதை நிகழும் அமைப்பிலும் சிலப்பதிகாரக் கதைபோக்குடன் பொருந்தா வகையில் முரண்பட்டே பதிகம் அமைகிறது. இப்பதிகத்தைக் காப்பியம் எழுதப்பட்ட காலத்திற்கும், அரும்பதவுரை எழுதப்பட்ட காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் வேறொருவர் பாடியுள்ளார் என்றே கருத இயலும் என்பது ம.பொ.சி.யின் முடிவு.

உரைபெறு கட்டுரை ஒரு இடைச் செருகலா? – பதிகத்தை அடுத்து இடம்பெறும் உரைபெறு கட்டுரையும் ஒரு இடைச்செருகல் என்கிறார் ம.பொ.சி. இப்பகுதி மற்ற உரைபகுதி போலில்லாமல் காப்பியத்திற்கு வெளியே அமைகிறது. அதுவும் நீர்படைக்காதையில் சேரன் வடதிசை சென்று திரும்புவதாகக் கூறப்படும் நிகழ்வுகளுடன் காலப்பொருத்தம் இன்றி அமைந்துள்ளது. சிலம்பில் இடைச்செருகலே இல்லை என்று கூறவழியில்லை. கண்ணகிக்கு நிகழ்ந்த அநீதியால் மதுரையில் பன்னிரு ஆண்டுகள் தொடர்ந்து பஞ்சம் ஏற்பட்டதால், அதனை நிவர்த்தி செய்ய ஆயிரம் பொற்கொல்லரைப் பலியிட்டான் பாண்டியன் வெற்றிவேல் செழியன் என்ற கருத்தே இடைச்செருகல் என்கிறார் இவர். தவறான கொலைக்கு வருந்தி உயிர்நீத்த பாண்டிய மன்னனின் வழி வந்தவர் எவரும், எவரோ ஒருவர் இழைத்த குற்றத்திற்காகக் குற்றம் எதுவும் செய்திராத பலரை, அத்தொழில் செய்வோர் என்ற ஒரே காரணத்திற்காகக் கொல்ல எண்ண மாட்டார், ஆகவே இதுவும் இடைச்செருகல் என்கிறார் ம.பொ.சி.

மாதவியினை வெறுத்து விலகி, கண்ணகியிடம் மீண்டும் திரும்பும் கோவலன், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசிடும் கணிகையர் தொடர்பால் பெற்றோர் எனக்களித்தப் பெருஞ் செல்வதைத் தொலைத்து வறியவனானேன் எனக் கூறி வருந்துகிறான். மீண்டும் வணிகம் செய்து பொருளீட்ட விரும்பும் அவனது உள்ளக்கிடக்கையைக் குறிப்பால் உணர்ந்த கண்ணகி தனது காற்சிலம்புகளைத் தந்துதவ முன்வந்து “சிலம்புள கொண்ம்” என முகமலர்ச்சியுடன் கூறுகிறாள். அவள் அவ்வாறு சிலம்புள கொள்ளுங்கள் என்று கூறுவதை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் உரையெழுத முற்பட்ட உரையாசிரியர் தான் வாழ்ந்த காலத்துக்குரிய புராணக்கதைகளின் தாக்கத்தில் புரிந்து கொண்டு, இச்செய்கை கண்ணகி என்ற பத்தினியின் பண்பு எனக் கருதி உரை எழுதியுள்ளார் என்பது ம.பொ.சி. யின் கருத்து. கணவனின் விருப்பம் பரத்தையர் தொடர்பு என்றாலும் அதனை ஏற்று உதவ முற்படும் புராணகால பதிவிரதையர் போலக் கண்ணகி உதவ முற்படுகிறாள் என உரையாசிரியர் பொருள்கொண்ட முறை பிழையானது என்கிறார். அது பொருந்தாப்பொருள். சங்ககால தலைவியர் கணவனின் பரத்தையர் தொடர்பைக் கடிந்து கொள்வதே வழக்கம். பொருள் கொடுத்து ஆதரிக்கும் ‘பத்தினித்தனம்’ அவர்களிடம் இருந்ததில்லை. “போற்றாவொழுக்கம் புரிந்தீர்” என கண்ணகி கோவலனை இடித்துரைக்கும் காட்சியை நினைவு கூர வேண்டும் எனக் கூறி அடியார்க்கு நல்லார் உரை காட்டுவது ஒரு பண்பாட்டுப்பிழை என ஏற்க மறுக்கிறார் ம.பொ.சி.

நகர நம்பியர் திரிதரு மன்றத்திலிருந்த கோவலன், மாதவியின் மாலையை விற்க வந்த கூனியிடம் இருந்து அதனைப்பொருள் கொடுத்துப் பெற்று மாதவியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறான். இந்தக் கூனியை மாதவியின் தோழி வசந்தமாலை எனப் பல உரையாசிரியர் கருதினாலும் ம.பொ.சி. யின் பார்வையில் இவர்கள் இருவராகவே தெரிகின்றனர். அதற்குத் தனது காரணத்தையும் முன்வைக்கிறார். கண்ணகியுடன் மதுரைக்குச் செல்லும் பயணத்தில், இடையில் காட்டு வழியில் வசந்தமாலை உருவில் கானுறை தெய்வம் தோன்றி கோவலனை மயக்க முற்படுகிறது. ஆனால் கூனியாக இருப்பது மயக்கும் தோற்றமல்ல என மறுக்கிறார் ம.பொ.சி.

காலையில் தான் அன்புடன் தழுவி விடைகொடுத்த கோவலனை, மாலையில் உயிரற்றவனாகக் கொலையுண்டு குருதி வெள்ளத்தில் அவன் கிடப்பது கண்டு கடுந்துயருற்றாள் கண்ணகி என்று குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள். இந்த இடத்தில் காலநிரலை அவர் கவனிக்கத் தவறிவிட்டிருக்கிறார். முதல்நாள் காலையில் விடைபெற்ற கோவலனை, கதையின்படி அன்று மாலையே கொலையுண்ட கோவலனை, மறுநாள் மாலைதான் கொலைக்களத்தில் கண்ணகி காண நேர்கிறது. குறிப்பாக, கோவலன் கொலையுண்ட மறுநாள் காலைதான் கண்ணகிக்கு அவன் இறந்த செய்தியே கிடைக்கிறது. இதனை இளங்கோ கவனிக்கத் தவறி ஒரேநாளில் நடந்த நிகழ்வுகள் போலக் குறிப்பிட்டது பிழை என்றும் சுட்டுகிறார் கவனத்துடன் காப்பியத்தை ஆய்வு செய்த  ம.பொ.சி.

இக்கருத்தை, இளங்கோவில் வரிகளில் பிழை சுட்டிய பிறகு ம. பொ.சி. எதிர்கொண்ட எதிர்ப்புகளும் ஏராளம் என்பதை அவர் குறிப்பிடுகிறார். “நமது பக்திக்குரிய காப்பிய மேயாயினும், திறனாய்வு நடத்துங்கால், பக்தியினின்று விலகி, அறிவுக்கொண்டு மட்டுமே ஆராய வேண்டும், காப்பியத்திற்கு மட்டுமேயன்றி அதனை யாத்துக் கொடுத்த கவிஞரைப் பற்றிய திறனாய்வுக்கும் இதுவே இலக்கணமாகும்,” என்கிறார். மேலும், பழைய காப்பியத்தையோ, காப்பியக் கவிஞரையோ பக்தியுடன் போற்ற வேண்டுமென்றால், அதிலே எனக்குக் கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால், பக்தியானது இலக்கியத் திறனாய்வுக்குத் தடையாக இருந்துவிடக் கூடாது. இருந்துவிட்டால், தமிழ் இலக்கியம் வளர்ச்சி பெற முடியாது,” என்கிறார். (பக்கம்: 139) இது ஆய்வாளர் அனைவரும் நினைவிலிருத்த வேண்டிய ஒரு பாடம் எனில் அது மிகையன்று. ஆய்வுக்கட்டுரைகளில் நீண்ட கட்டுரையாகவும் இது அமைந்துள்ளது.

இளங்கோவின் நோக்கம்:     

அண்ணன் சேரன் செங்குட்டுவன் இருக்கையில் தம்பி இளங்கோ அரசாள்வார் என்ற நிமித்திகன் கூற்றை ஏற்காது அதை முறியடிக்கும் நோக்கில் அரசைத் துறந்தார் “குணவாயில் கோட்டத்து அரசு துறந்திருந்த குடக்கோச் சேரல்”. ஆனால் நல்லரசு அமைத்து மக்களைக் காக்கும் கடமையைத் துறந்தாரில்லை. தனது காப்பியம் மூலம் அரசர்க்கு அரசியல் நெறி புகட்டி என்றும் அழியாப் புகழ் அடைந்தார் இளங்கோ. புவியரசைத் துறந்தார் கவியரசாக வாழ்ந்தார்; இளங்கோ அரச உரிமையைத் துறந்தார் ஆனால் அரசக் கடமையைத் துறக்கவில்லை என்று கூறும் ம.பொ.சி. வரலாற்று நாயகனான இளங்கோவின் செயலை இக்காலத்தின் வரலாற்று நாயகனான காந்தியின் அணுகுமுறையுடன் ஒப்பிடுகிறார்.

இளங்கோ சிலம்பில் சமயச் சார்பின்றி பண்டைய தமிழகத்தில் நிலவிய அனைத்துச் சமய வழிபாடுகளையும் பதிவு செய்துள்ளார். அறமற்ற அரசாட்சி, ஒழுக்கம் தவறிய பண்பினால் நாடு நலிவுறும் என்பதே இளங்கோ காட்ட விழைவது. பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் என்று மகளிரின் கற்பு வாழ்வினை போற்றும் காப்பியம் சிலம்பு எனக் கூற்றுவதை ம.பொ.சி. ஏற்கவில்லை. பொதுவாக மனித வாழ்வின் ஒழுக்க நெறியை வலியுறுத்தும் நூல் என்றும், ஆணுக்கும் கற்பு அவசியமென்பதே சிலம்பு கூறும் செந்நெறி என்று ஆணின் ஒழுக்கத்தையும் சிலம்பு வலியுறுத்துவதாகக் கூறுகிறார் (பக்கம்: 51).

வையத்துள் வாழ்வாங்கு வாழும் மனிதர் ஒருவர், நாட்டு மக்களும் அவர்களை ஆளும் அரசர்களும் வணங்கும் அளவில் உயர்ந்து தெய்வ நிலையை அடையலாம் என்பதற்குக் கண்ணகியின் வாழ்வைக் காட்சிப்படுத்துகிறார். பெண்ணை காப்பியத் தலைவியாக்கி, நூலில் முதலில் அவளை அறிமுகப்படுத்தி இலக்கிய உலகில் ஒரு புதிய பாதையை வகுக்கிறார் இளங்கோ. பல சமயங்களைச் சமமாகக் காட்டினாலும், நூலின் காப்பு பகுதி என்று எந்த ஒரு கடவுளையும் காட்டாது இயற்கையையும், நாட்டையும் போற்றிப் பாடிய இளங்கோ நூலின் இறுதியில் கண்ணகி என்ற பெண்ணை தெய்வ நிலைக்கு உயர்த்தி “தெய்வந் தெளிமின்” என்று காட்டி முடிக்கிறார்.

இளங்கோவை ‘ஐக்கியத் தமிழகத் தந்தை’ என்று பாராட்டுகிறார் ம.பொ.சி. தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டிருந்த மூவேந்தர்களையும் தமிழக மக்களையும் ஒருங்கிணைப்பதுவும், நல்லாட்சி நிலவும் தமிழகமுமே இளங்கோவில் அரசியல் நோக்கம் என்றும் காட்டுகிறார்.

சிலம்பு குறித்து ம.பொ.சி. யின் கோணங்கள்:

siragu silappadhigaara thiranaaivu2

கதையின் நிகழ்வுகள் மீது அது சரியா தவறா என்ற கோணங்களும் ம.பொ.சி.க்கு உண்டு என்பதைப் பல இடங்களில் காட்டுகிறார். யாரோ ஒரு பொற்கொல்லர் செய்த குற்றத்திற்காக, பாண்டிய மன்னன் பொற்கொல்லர் பலரைப் பழிவாங்கிய செயலை மட்டுமல்ல; மன்னவனின் பிழைக்காக மதுரையைத் தீக்கிரையாக்கிய கண்ணகியின் செயலும் ம.பொ.சி.க்கு ஏற்புடையதாக இல்லை, தீப்பந்தம் தீர்ப்பாகாது என்கிறார்.

இளவரசனின் தேர்க்காலில் கொல்லப்பட்ட பசுவின் கன்றுக்கு நீதியளிப்பதற்காக, தனது மகனின் மீது தேரேற்றிக் கொன்று அறத்தை நிலைநாட்டிய சோழ மன்னனின் கதை கண்ணகியால் பாண்டிய மன்னனிடம் கூறப்படுகிறது. ‘கறவை முறை செய்த காவலன்’ என சோழன் சிலம்பில் குறிப்பிடப்படுகிறான். இக்கதை நிகழ்வது புகார் என்றும், பெரியபுராணம் காட்டுவது போலத் திருவாரூர் அல்ல என்றும், சங்ககாலத்தில் திருவாரூர் சோழநாட்டின் தலைநகர் என்ற தகுதியிலும் இல்லை என்று காட்டி பெரியபுராணம் கூறும் கருத்தை மறுக்கிறார் ம.பொ.சி.

தொடர்நிலைச் செய்யுளில் இசைப்பாடல்களையும், நாலடி வெண்பாக்களையும் இலக்கியத்தில் முதலில் வழங்கியவர் இளங்கோ அடிகளே. சிலம்பில் உள்ள 15 வெண்பாக்களிலும் வழக்குரை காதையின் இறுதியில் இடம்பெறும் 3 வெண்பாக்களும் நெஞ்சையள்ளும் விதத்தில் சிறப்பானவை என்பது ம.பொ.சி. யின் கருத்து.

இயல் இசை நாடகம் கொண்ட முத்தமிழ் எனப்பெயர் பெற்றாலும் தமிழில் காட்சிப்படுத்தும் நாடகங்கள் இன்றும் இருந்திட, படிக்கக்கூடிய நாடகங்கள் வளராத குறைக்கு மக்களுக்கு அவ்வகை நாடகங்களில் ஆர்வமின்மையே காரணமாக இருக்கக்கூடும் என்பது ம.பொ.சி. யின் கோணம். நாடகக் காப்பியத்தைத் துவக்கிய இளங்கோவிற்குத் தொடர்ந்து விழா எடுத்த ம.பொ.சி. அவ்வாறு விழா எடுத்துப் பாராட்டப்பட வேண்டியவர் இளங்கோ என்றும் கூறுகிறார்.

சட்டக்கல்லூரி மாணவர் விழாவில் பேசும் வாய்ப்பு அமையும்பொழுது வழக்குரை காதையில் கண்ணகி, பாண்டியன் ஆகியோர் வழக்கும் தீர்ப்பும் குறித்து அன்றும் இன்றும் என்று ஒப்பிட்டு அலசுகிறார். அத்துடன் மக்களுக்குப் புரியும் வண்ணம் அவர்களது தாய்மொழியில் நீதிமன்ற நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்ற கருத்தை வற்புறுத்தவும் தவறவில்லை.

தமிழகத்தின் தமிழிலக்கியவாதிகள் 1950 களில் பத்திரிக்கைகள் வழி நிகழ்த்திய, பண்டைக்காலத் தமிழரின் திருமணத்தில் மணமகளுக்கு மணமகன் தாலி அணிவிக்கும் முறை இருந்ததா என்ற விவாதத்தில் ம.பொ.சி. தாம் காட்டிய சிலப்பதிகாரச் சான்றுகளை இறுதி கட்டுரையில் முன்வைக்கிறார் (பக்கம்: 400). கண்ணகி-கோவலன் திருமணத்திலே மணமகளுக்கு மணமகன் தாலி அணிவிக்கும் சடங்கு நிகழ்ந்ததை ஐயத்திற்கு இடமின்றி அறிய முடிவதாகவும் கூறி முடிக்கிறார்.

சிலப்பதிகாரத்தில், குறிப்பாக, அதன் முதல் இரு காண்டங்களான புகார் மற்றும் மதுரைக் காண்டங்களைச் சிறிதே கற்பனை கலந்த உண்மை வரலாற்று நிகழ்வுகள் கொண்ட பகுதிகளாகக் காணும் ம.பொ.சி., வஞ்சிக் காண்டத்தின் செங்குட்டுவனின் வடபுலப் படையெடுப்பு என்பது இளங்கோவின் கற்பனையே என்கிறார் (பக்கம்: 355).  ஆனால் கண்ணகி வழிபாட்டைச் செங்குட்டுவன் துவக்கி வைத்தான் என்பதை ஏற்றுக் கொள்கிறார். வஞ்சிக் காண்டம் இளங்கோவின் கற்பனை என்றாலும் அதில் ஏற்கக்கூடிய சில வரலாற்று நிகழ்வுகளும் உள்ளன என்பது இவரது கோணம்.

சிலம்பின் கதாபாத்திரங்கள் குறித்து ம.பொ.சி. யின் பார்வை:

“ஒருமா மணியாய் உலகுக்கு ஓங்கிய திருமாமணி” என இளங்கோ புகழும் கண்ணகியின் பாத்திர அமைப்பை இலக்கிய நயம் பாராட்டுகிறார். கற்பு தெய்வமாகக் காட்டப்படும் கண்ணகி தமிழரின் களவியல் நெறிப்படி திருமணத்திற்கு முன்பே கோவலனைக் காதலித்தவள் அல்ல என்றும் கருதுகிறார். காவலன் கண்ட கடுங்கோபக் கண்ணகியை அவன் அரசனுக்கு விவரிக்க முற்படுகையில், வாயிலில் வந்துள்ளவள் கொற்றவை, காளி, பத்ரகாளி, பிடாரி, துர்க்கை போன்ற தோற்றம் கொண்டவளாகக் கணவனை இழந்தவள் கையில் சிலம்புடன் நிற்கிறாள் என்று பதறிக் குழறிக் குறிப்பிடுவதில் இளங்கோ காட்சிக்கேற்ப எழுதிய வரிகளை வியக்கிறார் ம.பொ.சி. அவ்வாறே கண்ணகியை உடல் அழகை வர்ணிக்கையில் இளங்கோ கடைப்பிடிக்கும் கண்ணியத்தை மெச்சுகிறார்.

கோவலனின் மரணத்திற்குக் காரணமாக இருந்த, அரசியின் சிலம்பைத் திருடி பொய்யுரைத்த பொற்கொல்லனை ஒரு குலத்தவராகக் குறிப்பிட முற்பட்டது பிற்கால வழக்கு என்பது ம.பொ.சி. யின் கருத்து. இயற்பெயர் கொடுக்கப்படாது தொழிற்பெயரால் ‘பொற்கொல்லன்’ என்று மட்டுமே இளங்கோவால் காட்டப்பட்ட ஒருவரை, பிற்காலத்து நூல்கள் ‘வஞ்சிப்பத்தன்’ என்று பெயர் சூட்டி, பிறப்பு அடிப்படை சாதியாகக் காணத் துவங்கியுள்ளார்கள் என்பதும் இவர் கருத்து. நல்லோர் தீயோர் எத்தொழிலிலும் உள்ளனர். கெடுமதி கொண்ட பொன்வேலை செய்த ஒரு பொற்கொல்லனால் கண்ணகி கணவனையிழந்தால் என்பது மட்டுமே சிலம்பின் மூலம் நாம் கொள்ள முடியும் என்கிறார் ம.பொ.சி.

சிலப்பதிகாரம் குழந்தைகளற்ற காப்பியமாக, கோவலனின் மகள் மணிமேகலையும் வெறும் பெயரளவில் குறிப்பிடும் வகையிலேயே சிலம்பில் காட்டப்படுகிறது.வருணப்பிரிவுகளை சிலம்பு காட்டினாலும், பிரிவினரிடையே பேதங்கள் இருந்ததைக் காண இயலவில்லை. காப்பியத்தில் வரும் தேவந்தி என்னும் கண்ணகியின் பார்ப்பனத்தோழி உட்பட கௌசிகன், மாங்காட்டு மறையோன், மாடல மறையோன் ஆகியோர் அந்தணராகக் காட்டப்பெறுகின்றனர். அதில் தேவந்தி வணிக குலப் பெண்ணான கண்ணகியின் கோயில் பூசாரி என்ற பொறுப்பையும் ஏற்பதைப் பேதமின்மைக்குச் சான்றாகக் காட்டுகிறார் ம.பொ.சி.

சிலம்பில் மாதவியின் தாயாக சித்திராபதி காட்டப்படவில்லை, இருப்பினும் இதன் இரட்டைக் காப்பியமான மணிமேகலையில் மாதவியின் தாயாக சித்திராபதி இடம் பெறுகிறார். கணிகை குலப்பெண்ணின் தாய்க்கிழவியாக, பொருள் நோக்கில் ஆண்களுக்கு வலைவீசும் பெண்களுக்கு உதவும் இதுபோன்ற பாத்திரம் முதலில் மணிமேகலையில்தான் துவங்குகிறது என்கிறார் இவர். மணிமேகலை தரும் குறிப்பின் உதவி கொண்டே மாதவியின் தாய் சித்திராபதி என பிற்காலத்தில் அனைவரும் சிலம்பின் கதையிலும் எழுதத் துவங்கினர். சிலப்பதிகாரமோ சித்திராபதி என்ற பாத்திரத்தையே குறிப்பிடவேயில்லை. சிலம்பில் சங்க இலக்கிய நடைமுறையை ஒட்டி பரத்தையின் தோழி பாத்திரத்தில் வசந்தமாலை மட்டுமே உள்ளாள். மணிமேகலை காலத்தில் கணிகையருக்கு உதவும் வகையில் தாய்க்கிழவி இருப்பதைக் காட்டும் வகையில் இலக்கிய மரபு மாற்றம் பெற்றுவிட்டது. ஆதலால், சிலம்பும் அதன் தொடர்ச்சியான மேகலையும் வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்ட இலக்கியங்கள் என்கிறார் ம.பொ.சி. சிலம்பின் பதிகம் கூறும் செய்திகள் பிற்சேர்க்கை என்று இவர் கொண்டிருக்கும் கருத்தும் இதன் தொடர்பாக இங்கு நினைவு கூரத்தக்கது.

இலக்கிய நயம் பாராட்டல்:     

siragu silappadhigaara thiranaaivu3

சிலம்பின் வரிகளை மீண்டும் மீண்டும் சுவைத்து மகிழ்ந்த ம.பொ.சி. க்கு பொருளீட்டச் சென்ற கோவலன் அக்காலத்துப் பண்பாட்டின் வழமைக்கு மாறாகக் கண்ணகியையும் உடன் அழைத்துச் செல்லும் நோக்கிற்கு மறைபொருளும் புரிகிறது. பொருளிழந்து வறியவனான கோவலனுக்குப் பொருளீட்டிய பிறகு மீண்டும் புகார் செல்ல தன்மானம் இடம்தராத நிலையில், மீண்டும் நாடு திரும்பும் எண்ணமே இல்லாத காரணத்தால் மனைவியையும் உடன் அழைத்துச் செல்கிறான் என்கிறார். அத்தகைய தன்மானம் மிக்கவனை இவன் கள்வன் எனச் சுட்டியபொழுதே அவன் உயிர் நீங்கிவிட்டது காவலர் அவன் உடலைத்தான் கொன்றனர் என்று இளங்கோ மறைமுகமாகக் காட்டுவதையும் நமக்கு அறியத் தருகிறார்.

சிலம்பின் சிறப்பு, அதைப் படிப்போர் பலரையும் கவர்வது வழக்குரை காதை. மன்னவனின் தீர்ப்பிலும் குற்றம் கண்டு நீதிகேட்ட ஒரு சராசரி பெண்ணின் துணிச்சலை முன்னிறுத்தும் பகுதி இது. இக்காதையின் சிறப்பு அது நாடக இலக்கியத்துக்குள்ள முழு இலக்கணத்தோடு அமைந்திருக்கும் நேர்த்தி என்கிறார் ம.பொ.சி. இப்பகுதியே சிலம்பு என்ற காப்பியத்தின் இதயப் பகுதி என்கிறார். அத்துடன் ம.பொ.சி. வழக்குரை காதையைக் குறளின் பொருளதிகாரம் காட்டும் அறவழி வாழ்க்கை குறித்த குறள்கள் தரும் பொருளோடு ஒப்பீடு செய்துள்ள ஒப்பிலக்கிய கட்டுரை, இலக்கிய ஆர்வமுள்ளோர் படிக்க வேண்டிய ஒரு அருமையான கட்டுரை. இளங்கோவைத் தமிழின் முதல் நாடகப் பேராசிரியர் என்றும் போற்றுகிறார்.

சிலப்பதிகாரம் நூல் நயம் பாராட்டுதல் மட்டுமின்றி அதன் கருத்துகளைக் குறளுடனும் ஒப்பிட்டு ஒப்பிலக்கிய ஆய்வு செய்யும் ம.பொ.சி., அவ்வாறே கம்பருடன் இளங்கோவை ஒப்பிட்டு ஆராய்கிறார். கண்ணகியையும் சீதையையும் ஒப்பிடுகிறார். இரு காப்பியங்களும் சொல்லும் கருத்துக்களை ஒப்பிட்ட பின்னர், தமிழிலக்கியத்தின் இலக்கிய அணிகலன்களான இந்நூல்களின் ஒற்றுமைப் பண்பும் மரபு வழி மதிப்பீட்டிற்கும் பிறகு ம.பொ.சி.எடுக்கும் முடிவு: தமக்கு முன்னோரான இளங்கோவைப் போற்றி அவர் வகுத்த நெறியினைப் பின்பற்றியுள்ளார் கம்பர் என்பதே. சங்ககாலப் பாடல்களில் இராமர் சீதை குறித்த கதைகள் இருப்பினும், இராமர் திருமாலின் அவதாரமாகக் காட்டப்பட்டதில்லை. இராமனைத் திருமாலாக, வழிபடும் தெய்வமாகத் தமிழருக்கு முதலில் அறிமுகப்படுத்தியவர் இளங்கோவே. கம்பரும் அதே வழியில் தொடர்ந்தார் எனச் சுட்டுகிறார் ம.பொ.சி. அசோகவனத்துச் சீதையும் கண்ணகி போன்றே கொடுங்கோலன் ஆட்சி செய்யும் நகரைக் கொளுத்துவதில் தவறில்லை என்ற நோக்கில் பேசும் ஒற்றுமை சிந்திக்கற்பாலது.

முடிவுரை:

கற்பு நெறியை ஆண் பெண் இருவருக்கும் பொதுவில் வைக்க விரும்பிய பாரதியின் முன்னோடி இளங்கோ என்று கூறும் ம.பொ.சி., இளங்கோவின் பாதையில் சென்றால் அங்கே வள்ளுவரை, கம்பரை, தொல்காப்பியரை, பாரதியை சந்திக்கலாம். இளங்கோவின் பாதை தமிழினத்தின் தேசியப்பார்வை என்று வியந்தோதுகிறார்.

சிலப்பதிகாரம் எழுதப்பட்டு சுமார் ஒரு ஆயிரம் ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகே அதற்கு எழுதப்பட்ட உரைநூல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. பலநூற்றாண்டுகள் கொண்ட நீண்ட இடைவெளியில் தமிழகத்தின் வழக்காறுகள் மாறியுள்ளன. தொழில்முறைகள் பிறப்பு அடிப்படை சாதிகளாக மாற்றம் பெற்றன. உரையாசிரியர்கள் தங்கள் சூழ்நிலையின் தாக்கத்தில் பொருள் கொண்டு செய்த உரைகளை அவ்வாறே ஏற்றுக் கொள்வது ஏற்புடையதல்ல. நூலின் கதையோட்டத்திற்குப் பொருந்தா வகையில் முரணாக அமையும் கருத்துகள் இடைச்செருகலாக நுழைந்திருக்க வாய்ப்புண்டு என்ற கவனத்துடன் சிலப்பதிகாரத்தை கற்கவும் ஆராயவும் முற்படுவோர் கவனமாக இருக்கவேண்டும் என்பதே ம.பொ.சி. யின் ஆய்வுக்கோணங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன. இலக்கிய ஆய்வுகள் செய்ய விரும்புவோருக்கு ம.பொ.சி. யின் கட்டுரைகள் நல்ல வழிகாட்டி.

கண்ணகியின் கதை குறித்தும் சிலப்பதிகாரம் குறித்தும் அறியாத தமிழர் இருக்க வழியில்லை. சிலப்பதிகாரத்தைக் கரைகண்டவர், ஆய்வு நோக்கில் அலசியவர் என்ற தகுதியில் சிலம்புச் செல்வர் எனப் பாராட்டப் பட்ட ம.பொ.சி., சிலப்பதிகாரம் மீது கொண்டிருந்த கருத்துகளை அறிந்து கொள்ளவும், நாமும் சிலப்பதிகாரத்தை ஒரு மாற்றுக் கண்ணோட்டத்துடன் ஆய்வு நோக்கில் அணுகவும் இந்த நூல் உதவி புரியும் என்பதில் ஐயமில்லை. ‘சிலப்பதிகாரத் திறனாய்வு’ [1973] என்ற இந்நூல் இவரது மற்றொரு ஆய்வு நூலான ‘சிலப்பதிகார ஆய்வுரை’ [1979] என்ற நூலையும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

நூல் குறித்த தகவல்:

சிலப்பதிகாரத் திறனாய்வு

சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சிவஞானம்

அழகாய் அம்மன் பதிப்பகம்

முதற் பதிப்பு: 2012

பக்கங்கள் : 400

விலை: ரூ. 175-00


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ம.பொ.சி. யின் வாசிப்பில் சிலப்பதிகாரம்”

அதிகம் படித்தது