மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

யாழினியும் மகிழனும்

செல்வக்குமார் சங்கரநாராயணன்

Sep 17, 2016

siragu-yaaliniyum1

யார் இந்த யாழினியும், மகிழனும்? எங்கிருக்கிறார்கள்? அவர்கள் என்ன காரணத்திற்காக தற்பொழுது உங்கள் முன் தோன்றி இருக்கிறார்கள்? என்ற எண்ணங்கள் உங்களைச் சுற்றி கவராயம் இல்லாமல் வட்டம் போட்டுக்கொண்டு இருக்கும். அவர்கள் ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்தவர்கள்தான், அவர்களைப் பற்றி பிறகு பார்க்கலாம். இப்பொழுது வாருங்கள் கற்பனையில் சற்றே  பிரேசில் நாடு வரைக்கும் சென்று வரலாம்.

siragu-yaaliniyum3

பிரேசில் என்று சொன்னவுடனே அனைவருக்கும் நினைவிற்கு வருவது ரியோ-டி-ஜெனிரோ தான். ஏனென்றால் அந்த அளவிற்கு பழக்கப்பட்டு, அடிக்கடி சென்று வந்த மதுரை போலவோ, நெல்லை போலவோ நமக்குள் ஒன்றறக் கலந்துவிட்டது என்றே சொன்னாலும் மிகையில்லை. அதற்கான காரணம் ஒலிம்பிக் விளையாட்டையே சாரும். எத்தனை நாடுகள், எவ்வளவு விளையாட்டுகள், என்ன என்ன ஆரவாரம் பார்ப்பதற்கே பரவசம் தான். அங்கே விளையாடுபவர்களை விட, இங்கே அதைக் காண்பவர்கள் படும் உணர்ச்சிவசம்தான் மேற்கோள். இருக்கையின் முன் வந்து கண்களை அகல விரித்து அந்த ஓரிரு நிமிடங்கள் இவர்களும் அவர்களுடன் சேர்ந்து ஓடவோ, தாவவோ ஆரம்பித்து விடுகிறார்கள்.

தற்பொழுதும் அப்படித்தான் அங்கே மாற்றுத்திறனாளி நண்பர்களுக்காக பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் விளையாடுபவர்கள்தான் உண்மையில் கதாநாயகன், கதாநாயகிகள். இவர்களை அச்சில் வார்க்கப்பட்ட தன்னம்பிக்கை என்று சொன்னாலும் தகும் என்பேன். அதில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு என்ற இளைஞர் உயரம் தாண்டுதலில் முதலிடம் பெற்று தங்கத்தையும் பெற்று நம்மை அங்கே பிரகாசிக்க வைத்துவிட்டார். அது பாராட்டுதலுக்கும் பெருமைக்கும் உரிய விடயம்.

siragu-yaaliniyum4

ஒலிம்பிக்கில் இவர் உயரம் தாண்டி முடித்ததும் அந்த ஆங்கில வர்ணனையாளர், தங்கவேலு என்று  ஆங்கிலத்தில் அழகுற ஒரு தமிழ்ப் பெயரை உச்சரிக்கிறார், சற்றே எனக்கு சிலிர்த்து விட்டது. ஒரு உலக அரங்கில் தமிழன் பெயர் பறை சாற்றப்படுகிறது. அதை வேறொரு மூலையில் நின்று கேட்கும் நமக்கு தமிழன் என்ற உந்துதலும் பெருமையும் இன்பத் தேன் போல் வந்து பாய்கிறது. அன்று உங்களுக்கும் இதே செய்தியைக் கேட்டவுடனும், படித்தவுடனும் ஒரு இனம் புரியாத நெகிழ்ச்சி உண்டாயிருக்கும். அது அவர் தமிழன் என்பதையும் தாண்டி அவர் பெயரும் தமிழ்ப் பெயராய் இருந்தது என்பது தான்.

யாழினி, அமிழ்தினி, மகிழன், கபிலன் என்ற நம் தமிழில் உள்ள பெயருக்கு இணையான, கேட்பதற்குச் சுவையான பெயர்கள் எம்மொழியிலும் கிடையாது. அதிலும் இந்த பாரதி என்ற பெயரை ஆண்களுக்கும் சூட்டலாம், பெண்களுக்கும் சூட்டலாம் அவ்வளவு அழகாய் இருக்கும் வாய் நிறைய சொல்லி அழைக்கும் பொழுதுகளில். ஆனால் இப்பொழுது குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்கள் எல்லாம் வட இந்தியப் பெயர்களாகவும், வெளிநாட்டுப் பெயர்களாகவும் மாறி வருவது வேதனைக்குரிய விடயம். இதில் மற்றுமொரு கொடுமை என்னவென்றால், அவர்கள் அழகிற்காக இப்பெயரை சூட்டினார்கள் என்பது தான். தமிழில் உள்ள பெயர்களை விடவா அவை அழகு!. இது மாற்றத்தக்க விடயம் மற்றும் அதே சமயத்தில் அதை சீர்படுத்தும் பொறுப்பும், கடமையும் நம்மிடம் மட்டும் தான்  இருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் மறந்துவிடக்கூடாது.

siragu-yaaliniyum5

நீங்கள் யோசித்துப்பாருங்கள், எங்காவது தமிழர் அல்லாத பகுதிகளில் வாழும் யாரேனும் தத்தம் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கிறார்களா என்று?, இல்லை என்பது தான் பதிலாய் இருக்கும். எல்லோரும் அவர்தம் மொழியில் பெயர் வைத்து அவர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அழகுற அடுத்தத் தலைமுறைக்கும் எடுத்துச் செல்கிறார்கள். நாம் தான் அதை விடுத்து சின்னஞ்சிறு செயல்களாலும் கூட நம் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை விட்டு ஒதுங்கத் துவங்கியிருக்கிறோம். முதலில் பெயரில் தான் ஆரம்பிக்க வேண்டும், தமிழில் இருக்கும் அழகான பொருள் வாய்ந்த பெயர்கள், அழைப்பதற்கும் எவ்வளவு தித்திப்பாய் இருக்கும் என்று நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது.

உலகில் எந்த நாட்டிலாவது அவர்களின் மொழி அவர்கள் பெயரில் வழங்கி வருகிறதா? எவருக்காவது ஆங்கிலம் என்றோ, மலையாளம் என்றோ, போடோ என்றோ, ஸ்பானிஷ் என்றோ பெயர் வைத்து கண்டதுண்டா?. ஆனால் இங்கே பாருங்கள் நம் நாட்டில் தமிழ், முத்தமிழ், தமிழரசன், தமிழினி, செந்தமிழ்ச் செல்வன்  என்று எவ்வளவு பெயர்கள். பழங்காலந் தொட்டே தமிழர் தமிழை தனது உயிருடன் சேர்ந்து நினைத்திருக்க வேண்டும் என்பதற்கு இதை விடச் சான்று வேறு எதுவும் தேவையில்லை என்றே நினைக்கின்றேன்.

Siragu-ellaam-kodukkum-tamil1

உங்கள் குழந்தைகளுக்கும், உங்களுக்குத் தெரிந்தவர்கள் குழந்தைக்கும் அழகிய  தமிழில்தான் பெயரை வைத்திடல் வேண்டும் என்பதை வாழ்வின் இலட்சியமாகக் கொண்டதாலும் தவறில்லை. இப்பொழுது தெரிந்திருக்கும் தானே அந்த மகிழனும், யாழினியும் யாரென்று. இனி உங்கள் வீட்டிலும் அவ்விதப் பெயரால் இன்பத்தில் திளைப்பீர்கள்!. நம் மொழி நம்மை நம்பித்தான் இருக்கிறது, நாம் அதனை நம்பித் தான் இருக்கிறோம். இப்பொழுது அதன் துணைகொண்டுதான் நீங்கள் இதைப் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

தமிழில் பெயர் வைப்போம் ஏனென்றால்
அடுத்தத் தலைமுறையும், தமிழும் நம் கையில்!


செல்வக்குமார் சங்கரநாராயணன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “யாழினியும் மகிழனும்”

அதிகம் படித்தது