மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ராஜலட்சுமி

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Nov 10, 2018

siragu rajalakshmi1
ராஜலட்சுமி முதலும் அல்ல இறுதியும் அல்ல என்பதே இந்தச் சமூக அமைப்பின்  குற்றம். 12 வயது சிறுமியை கழுத்தறுத்து கொல்லத் துணியும் மனம், கவ்வியிருக்கும் சாதி இருளுக்கு சாட்சி; பெற்றத் தாய் முன் அவர் மகளை கழுத்தறுக்கும் இந்த சாதிய ஆணாதிக்க மரபில் என்ன நியாயத்தை இந்தச் சட்டமும் நீதியும் வழங்கிட முடியும்? சட்டங்கள் கடுமையானதாகவே உள்ளன. ஆனால் தண்டனை பல நேரங்களில் ஆதிக்க சாதியினருக்கு வலிக்காமல் இருக்கின்ற காரணத்தால் சட்டங்கள் ஏட்டளவில் மட்டுமே நியாயங்களை செப்புகின்றன. இந்த மண்ணில் தேடினாலும் சமூக நீதி கானல் நீர் என்பதை தொடர்ந்து கொண்டிருக்கும் இது போன்ற பல சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

சிறுமியிடம் பாலியல் வன்முறை, அதை வீட்டில் அந்தக் குழந்தை சொன்னக் காரணத்தால் கழுத்தறுத்து கொலை. வேடிக்கையான சமூக அமைப்பு அல்லவா? ராஜலட்சுமியின் தாய் தன் மகளின் முண்டம் தனியே துடிப்பதை கண்டு விம்மி விம்மி அழுவதைத் தவிர வேறு வழியில்லா நிலை, ஒடுக்கப்படும் மக்களின் நிலையே அது தானே? சாதியை தூக்கி தலைமேல் வைத்துக்கொண்டு கண்டங்கள் தாண்டும் தண்டங்களுக்கு இவர்களின் பகட்டு சாதி கொலை செய்யத் தூண்டுகிறது என்ற உண்மை உரைக்கப்போவது இல்லை.  இதை சாதிக் கோணத்தில் பார்க்க முடியாது வெறும் சிறுமியை பாலியல் தொல்லை தந்ததாக மட்டுமே பார்க்க இயலும், என அரிதான முத்துகள் உதிர்க்கும் கனவான்கள், அந்த கொலைகாரன் பறத் தேவடியா என ராஜலட்சுமியின் தாயை தள்ளிவிட்டு, மகள் கழுத்தை அறுத்ததை வசதியாக மறந்துவிடுகின்றனர். 21 ஆம் நூற்றாண்டில் தான் தமிழ்நாடு இருக்கின்றதா? பழம் பெறுமை பேசுவது, அதில் சாதியை நிலை நிறுத்துவது, என சாதியம் மீண்டும் தலைதூக்குவது, நாம் 10 நூற்றாண்டுகள் பின்னோக்கி நகர்கிறோம் என்றே பறைசாற்றுகின்றன.

1929 ஆம் ஆண்டு முதலாம் சுயமரியாதை மாநாட்டில் பெயருக்குப் பின் சாதியை போடக்கூடாது என்று சொன்ன மண்ணில், அதை நிறைவேற்றிக் காட்டிய மண்ணில் தான் மீண்டும் முகநூல் வாயிலாக பலர் பெயருக்குப் பின் சாதியை வெட்கம் இன்றி போட்டுத்திரிகின்றனர்! எல்லோருமே ஆண்ட பரம்பரை எனும் பிம்பத்திற்குள் சிக்கி நிகழ்கால அரசியலை சனதானத்திற்கு பலியாக்கிக் கொண்டிருக்கின்றனர். சனாதனத்தின் கொடுக்கு கொட்டில் இருந்து முழுதும் வெளிவர தமிழ்நாட்டு மண் நடத்திய போராட்டம் வெறும் 100 ஆண்டிற்குள்ளாக நீர்த்துப் போகச் செய்யும் செயல்கள் ஒருபோதும் உதவப்போவதில்லை. திராவிடர் இயக்கங்கள் கல்வி நீரோடை அனைத்துச் சமூக மக்களுக்கும் தடையின்றி கிடைக்க வேண்டும் என பாடுபட்டது, அதன் பலனை அடைந்த மக்களே இன்று நடுவண் அரசோடு சனதானக் கூட்டு வைத்து தங்கள் சாதிகளின் பெருமைகளை நிலை நாட்டினால் போதும் என நினைக்கும் விசித்திர மனப்போக்கில் எங்கனம் சமூக நீதியை மீட்டெடுப்பது?

தினம் தினம் இந்த கொலைகள் தொடர்கதைகளாக, செய்தித்தாள்களின் விற்பனைக்கு செய்திகளாக மட்டுமே இந்தச் சமூகமும்,  ஊடகமும் கடந்து விடுகின்றன. ஒரு திரைப்படத்தைப் பற்றி பல பக்கங்கள் விமர்சனம் வைக்க நேரம் இருப்போர் கூட ராஜலட்சுமிகளின் மரணத்தை ஒரு ஓரமாக பெட்டிச் செய்தியாக மட்டுமே கருத்து தெரிவிக்கின்றனர். ஊடகங்கள் கூட ராஜலட்சுமிக்கு நீதி வேண்டும் என்ற நோக்கில் விவாதங்களை முன்னெடுப்பதில்லை. எப்போதும் போல் மனது கேட்காமல் கத்திக் கொண்டிருக்கும் ஒரு சிறு கூட்டம், அந்த கூட்டத்தின் நா வறண்டு போகும் போது மற்றொரு ராஜலட்சுமி இந்த சாதிய சமூகத்தில் பலியிடப்படுகின்றாள் என்பதே கசப்பான உண்மை!


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ராஜலட்சுமி”

அதிகம் படித்தது