மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வசிக்க உகந்த ஊர் – சிறுவர் சிறுகதை

மா.பிரபாகரன்

Apr 18, 2015

vasikka ugandha oorஅந்தப் புறாக்கள் கூட்டத்திற்கு வனம் பாதுகாப்பில்லாத இடமாகி விட்டது. வல்லூறுகள் உயிர்கொல்லி மிருகங்கள் என்று அனைத்து விதத்திலும் அவைகளுக்கு ஆபத்து மிகுந்து விட்டது. அதனால் அந்தப் புறாக்கள் வசிப்பதற்குப் பாதுகாப்பான வேறொரு இடம் தேடி புலம்பெயர்ந்து செல்வது எனத் தீர்மானித்தன. ஒருநாள் காலையில் அவைகள் அனைத்தும் அந்த வனத்தை விட்டு கூட்டமாக வெளியேறின. புத்திசாதூர்யமும் உடல்வலிவும் கொண்ட வயதில் மூத்த ஆண்புறா ஒன்று அந்தக்கூட்டத்தை வழிநடத்திச் சென்றது. அந்தப்புறாக்கள் முதலில் ஒரு ஊரைக் கடந்து சென்றன. அப்போது மற்றபுறாக்கள் தலைமைப்புறாவிடம் “இந்த ஊர் நமக்கு வசிக்க உகந்த இடமா?”- என்று கேட்டன.

“இந்த ஊரில் ஆறு இல்லை! வயல்வரப்புக்களில் இறைந்து கிடக்கும் தானியங்களைக் கொறித்து விட்டு ஆற்றுநீரில் கணுக்கால் நனைய நின்றபடி தலையை மட்டும் நீரில் அமிழ்த்தி ஒரு மூக்குக் குளியல் போடுவோமே…? அந்த சுகம் இங்கே கிடைக்காது! அதுவுமிமல்லாமல் நீர்வளம் இல்லாத ஊரில் வேறு என்னவளம் இருக்க முடியும்? வேண்டாம் நமக்கு இந்த ஊர்! ”- என்றது தலைமைப்புறா.

அடுத்ததாக அந்தப்புறாக்கள் வேறு ஒரு ஊரைக் கடந்து சென்றன. அப்போது மற்றபுறாக்கள் தலமைப்புறாவிடம் “இந்த ஊர் நமக்கு வசிக்க உகந்த இடமா?”- என்று கேட்டன.

“இந்த ஊரில் கோவில் இல்லை! கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று கேள்விப்பட்டதில்லையா நீங்கள்?, கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கும் மக்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்? கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கும் மக்கள் நற்பண்புகள் அற்றவர்களாக இருப்பார்கள்! வேண்டாம் நமக்கு இந்த ஊர்!”- என்றது தலைமைப்புறா.

அந்தப்புறாக்கள் தொடர்ந்து பறந்து சென்றன. அடுத்ததாக அவைகள் ஒரு ஊரைக் கடந்து சென்றன.

“இந்த ஊர் நமக்கு வசிக்க உகந்த ஊரா?”- கேட்டன மற்ற புறாக்கள்.

“இந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லை! தங்களுக்குக் கல்விகற்க வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை நமது சந்ததிகளாவது படிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்! தங்கள் குழந்தைகளுக்காக ஒரு தொடக்கப்பள்ளியைக் கூட இந்த ஊர் மக்களால் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை! கல்வியறிவு அற்ற மக்கள்; எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்? கல்வியறிவு அற்ற மக்கள் மூடர்களாகவும் முரடர்களாகவும் இருப்பார்கள்! வேண்டாம் நமக்கு இந்த ஊர்!”- என்றது தலைமைப்புறா.

அந்தப்புறாக்கள் தொடர்ந்து பறந்து சென்றன. அவைகள் வேறு ஒரு ஊரைக் கடந்து சென்றன. அப்போது மற்ற புறாக்கள் “தலைவரே! இந்த ஊர் நமக்கு வசிக்க உகந்த ஊரா?”- என்று கேட்டன.

“இந்த ஊரில் வயல்வெளிகள் எல்லாம் புதர் மண்டிக் கிடப்பதைப் பாருங்கள்! ஊர்மக்கள் எல்லாம் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து சினிமா அரசியல் என்று வெட்டி அரட்டை பேசி பொழுதை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள்! உழைப்பில் நம்பிக்கை இல்லாத மக்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்? உழைப்பில் நம்பிக்கை இல்லாத மக்கள் தாங்கள் பொருளீட்ட கடுமையான குற்றங்களையும்கூடச் செய்யத் தயாரானவர்களாக இருப்பார்கள்! வேண்டாம் நமக்கு இந்த ஊர்!”- என்றது தலைமைப்புறா.

அந்தப்புறாக்கள் தொடர்ந்து பறந்து சென்றன. அடுத்ததாக அவைகள் மற்றொரு ஊரைக் கடந்து சென்றன. அந்த ஊரில் தலைவர் இதுவரைச் சொல்லிக்கொண்டு வந்த, அவர் எதிர்பார்த்த அனைத்து விசயங்களும் இருப்பதைப் புரிந்து கொண்டன. தாங்கள் வசிக்கப்போகும் ஊர் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும் என்று அவைகள் தங்களுக்குள் பேசிக்கொண்டன. அவைகள் தலைமைப்புறாவிடம் “இது நாம் வசிக்கப் போகும் ஊர்தானே?”- என்று கேட்டன.

“இந்த ஊர்ல நிறையத் தொழிற்சாலைகள் இருப்பதைப் பாருங்கள்! அதனுடன் சுத்தகரிக்கப்படாத கழிவுகள் ஆறு ஏரி குளம் என்று அனைத்து நீர்நிலைகளையும் மாசுபடுத்துவதைப் பாருங்கள்! இதனால் நோய்வாய்ப்பட்ட மக்களை நம்பி நிறைய மருத்துவமனைகள் கடைவிரித்திருப்பதையும் பாருங்கள்! சுற்றுச்சூழலில் அக்கறை இல்லாத இந்த ஊர்தான் நாம் வசிப்பதற்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாத மகா மோசமான ஊராக இருக்க முடியும்! வேண்டவே வேண்டாம் நமக்கு இந்த ஊர்!”- என்றது தலைமைப்புறா.

அந்தப் புறாக்கள் தொடர்ந்து பறந்து சென்றன. இன்னும் எத்தனை ஊர்களை இப்படிக் கடந்து செல்ல வேண்டுமோ என்ற ஏக்கத்துடன் அவைகள் தலைமைப்புறாவைப் பின் தொடர்ந்தன. அடுத்ததாக ஒரு ஊரைக் கடக்கும் போது தலைமைப்புறாவின் முகம் மலர்ந்தது. அந்த மலர்ச்சி மற்ற புறாக்களையும் தொற்றிக்கொள்ள அவைகள் கேட்டன.

“இந்த ஊர் நமக்கு வசிக்க ஏற்ற இடமா?”

“ஆம்!”- என்ற தலைமைப்புறா தொடர்ந்து பேசியது.

“இந்த ஊரில் நீர்வளத்திற்கு ஆறு இருக்கிறது! மக்களின் நல்லொழுக்கத்திற்கு கட்டியம் கூறும் ஆலயம் இருக்கிறது! சிறுவர்கள் கல்வி பயில ஏராளமான பாடசாலைகள் இருக்கிறது! ஊரைச்சுற்றி செழுமையான வயல்வெளிகள் இருக்கிறது! மிகவும் முக்கியமாக உழைப்பில் நம்பிக்கை கொண்ட, உயர்சிந்தனை கொண்ட மக்கள் இருக்கிறார்கள்! அவர்கள் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பிலும் அக்கறை காட்டுகிறார்கள்! இதுதான் நாம் வசிக்க உகந்த பாதுகாப்பான ஊர்!”- என்றது தலைமைப்பபுறா. தலைவரின் இந்த முடிவு நீண்டதூரம் பறந்து வந்த களைப்பையும் மீறி மிகுந்த உற்சாகத்தைத் தந்தது அந்தப் பறவைகளுக்கு. அவைகள் அனைத்தும் உடனடியாக அந்த ஊரின் நடுவே கம்பீரமாக எழுந்துநின்ற கோவிலின் பெரிய கோபுரத்தின் மாடங்களில் சென்றுத் தஞ்சம் புகுந்தன.


மா.பிரபாகரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வசிக்க உகந்த ஊர் – சிறுவர் சிறுகதை”

அதிகம் படித்தது